Saturday, December 5, 2020

ருத்ர பீடங்கள் (தொடர்ச்சி)

                                                                     ருத்ர பீடங்கள் (தொடர்ச்சி)            

                                                                சிவபாதசேகரன்

2 . ஸோம பீடம்: திருநாங்கூருக்குள் அமைந்துள்ள ஸ்ரீ சந்த்ராக்ஷி சமேத ஸ்ரீ அம்ருத புரீசுவரர் கோயில்.

 முற்றிலும் அமைதியான இடம் மட்டுமல்லாமல் மனதுக்கு அமைதியையும் கொடுக்கும் ஆலயமாக  விளங்குகிறது. இது மார்க்கண்டேயர்  வழிபட்டது. திருக்கடவூரைப் போலவே இங்கும் அன்பர்கள் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றை செய்து கொள்ளலாம். சந்திரனும் வழிபட்ட தலம் . 


அம்பிகைக்கு சந்த்ராக்ஷி என்ற நாமம் இருப்பதை , சந்திரன் வழிபட்டதால் ஏற்பட்டது என்கிறார்கள். சந்திர கிரகப் பரிகாரமும் இங்கு செய்யப்படுகிறது. பூர்ண சந்திரனைப் போன்ற முகம் மட்டுமல்லாமல் அழகு வாய்ந்த கண்களை உடையவள் என்றும் பொருள் கொள்ளலாம்.

 3 மஹாதேவ பீடம்: இத்திருக்கோயிலும்  நாங்கூருக்குள்  அமைந்துள்ளது. நம்பிற் பிரியாள் உடனுறை நம்புவார்க்கன்பர் என்பன சுவாமி -அம்பாள்  திருநாமங்கள் .  இவை வடமொழியில் ஸ்ரீ பக்தவத்ஸலாம்பிகா சமேத ஸ்ரீ பக்தவத்ஸலேசுவரர் என்று வழங்கப் படுகின்றன.


 இங்குள்ள ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சன்னதி விசேஷமானது. 

4 &5 பீம மற்றும் பவ பீடங்கள்:இதே கோயிலின் பிராகாரத்தில் நான்காவதாக நாம் இங்கு குறிப்பிடும் பீம பீடத்தின் மூர்த்தியான ஸ்ரீ காமாக்ஷி சமேத ஸ்ரீ கைலாஸ நாதர் , மற்றும் திருமேனி கூடத்திலிருந்த ஐந்தாவது பீடமாக நாம் குறிப்பிடும் பவ பீடத்தின் மூர்த்தியான ஸ்ரீ சௌந்தர நாயகி சமேத ஸ்ரீ சுந்தரேசுவரர் ஆகிய சிவ லிங்கங்களை மட்டும் இங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். 


அந்த இரண்டு பீடங்கள் இருந்த கோயில்கள் சிதிலமாகி விடவே , மூல லிங்கங்களை மட்டும் இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவ்விரு ஆலயங்களையும் முன்பிருந்த இடங்களில் நிறுவி, நித்திய பூஜை நடைபெறச் செய்வது சைவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளுள்  அவசியமானதொன்றாகும்.

6 ஸர்வ பீடம்: ஸ்ரீ நற்றுணை நாயகி சமேத ஸ்ரீ நாகநாத சுவாமி ஆலயம், செம்பதனிருப்பு .


சீர்காழி- திருவெண்காடு சாலையில் உள்ள ஊரில் அமைந்துள்ள சிவாலயம். ஆதியில் கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த கோயில் பிற்காலத்தில் பழுது பார்க்கப்பட்டுள்ளது. ஆதியில் இருந்த கோயிலில்  விமான கலசம் கருங்கல்லால் அமைக்கப் பட்டிருந்தது  என்று கூறுகிறார்கள். வாஸுகி என்ற நாகம் பூஜித்ததால் சுவாமிக்கு நாகநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. சாப விமோசனத்திற்காக வாஸுகி , சிவ பெருமானை ஆற்று நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டுப் பின்னர் இத்தலத்திற்கு அருகிலுள்ள காத்திருப்பு என்ற தலத்திற்குச் சென்று ஸ்ரீ ஸ்வர்ணபுரீசுவரரை வழிபட்டவுடன் பாவம் நீங்கப் பெற்றது. இக்கோயிலின் ஸ்தல விருக்ஷம் , வில்வம் . தீர்த்தம், மணிகர்ணிகை ஆறு.

7 பாசுபத பீடம்: நாங்கூருக்குச் சற்று வெளியே இருந்த கோயில் சிதிலமடைந்து விடவே, புதியதாகக் கோயிலைக் கட்டியுள்ளனர்.


 இக்கோயிலில் சுவாமி, ஸ்ரீ நயன வரதேசுவரர் என்றும் அம்பிகை, ஸ்ரீ நளினாம்பிகை என்றும் வழங்கப்படுகின்றனர். கண் பார்வை சீராக வேண்டிப் பலர் இங்கு வருகிறார்கள்.

8. ஸத்யோஜாத பீடம் : காத்திருப்பு என்ற ஊரில் அமைந்துள்ள இக் கோயிலின் மூலவர் ஸ்ரீ ஸ்வர்ணபுரீசுவரர் என்றும் அம்பிகை, ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை  என்றும் வழங்கப்படுகின்றனர். வாசுகி என்ற நாகம் சிவபூஜை செய்து சாப விமோசனம் பெற்ற தலம். வாசுகியின் திருவுருவம் வெளிப் ப்ராகாரத்தில் இருப்பதைத் தரிசிக்கலாம்.


ஆதி காலத்தில் தண்டகாரண்யம் எனவும் புராண காலத்தில் பராச வனம் என்றும் இத்தலம் அழைக்கப்பட்டது.காத்யாயன மகரிஷி குழந்தை வேண்டித் தவம் செய்த இடமாதலால் காத்யாயனர் இருப்பு என்று வழங்கப்பட்டு, அதுவே நாளடைவில் காத்திருப்பு என்றாகி விட்டது. மஹாவிஷ்ணு, மகாபலியை வெல்ல வேண்டி சிவபூஜை செய்த தலம் . பின்னர் விஷ்ணுவானவர், குபேரனைக் கொண்டு கோயிலை நிர்மாணித்தார் என்று புராணம் கூறுகிறது. 


நிதாகர் என்ற சித்தர் இங்கு வழிபட்டுப் பல சித்திகளை அடைந்தார். காக புஜண்டரும் வழிபட்டுப் பேறு பெற்றார். சுந்தரருக்குப் பெருமான் பொன் வழங்கியதாகவும் தல புராணம் கூறும். இங்கு வன்னி மரமும் வேப்ப மரமும் இணைந்து ஸ்தல விருக்ஷங்களாகக் காட்சி அளிக்கின்றன. மேலும் ஹேரண்டர்,அகத்தியர்,கார்கி, கௌதமர், கபிலர் ஆகியோரும் வழிபட்டுள்ளனர்.  மூன்று நிலைக் கோபுரத்தின் வெளியில் திருக்குளம் அமைந்துள்ளது.

 9  அகோர பீடம்: ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ ஆரண்ய சுந்தரேசுவரர் கோயில், கீழைத் திருக்காட்டுப்பள்ளி.


திருவெண்காடு  ஸ்வேதாரண்யேசுவரர் கோயிலிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. மேற்கு பார்த்த சந்நிதி. விநாயகரை நண்டும், சுவாமியை இந்திரன்,பிரமன்,திருமால் ஆகியோரும் வழிபட்ட சிறப்புடைய தலம். விருத்திராசுரனைக் கொன்ற பழி தீர தேவேந்திரன் இங்கு வந்து வழிபட்டான். ப்ராகாரத்திலுள்ள இரட்டை லிங்க சன்னதியை வழிபட்டால் மோக்ஷம் சித்திக்கும் எனக் கூறப் படுகிறது.

பிரமதேவன் இங்கு பத்து சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகத் தல புராணம் கூறுகிறது. ஒரு முனிவரால் நண்டாக ஆகுமாறு சபிக்கப் பெற்ற கந்தர்வன் ஒருவன், இங்கு வந்து விநாயகரை வழிபட்டுச்  சாபம் நீங்கப்பெற்றான், இங்குள்ள கணபதிக்கருகில் நண்டு உருவம் உள்ளதைக் காணலாம். எனவே, நண்டு விநாயகர் என்றும் கற்கட கணபதி என்றும் பிள்ளையார் அழைக்கப்படுகிறார். மஹாகாள முனிவரும் ஆரண்ய முனிவரும் இங்கு கோயில் கொண்டுள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். இவர்களது திருவுருவத்தை ஆலய சுவற்றில் சிற்பமாகக் காணலாம். தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் வழக்கமான சனகாதி முனிவர்களுடன் பிரமனும்,விஷ்ணுவுமாக மொத்தம் அறுவர் , ஆலமர் பெருமானிடம் உபதேசம் பெறுவதைக் காணலாம்.இவர் ராஜயோக தக்ஷிணா மூர்த்தி எனப்படுகிறார். கோளிலித் தலமானதால் இக்கோயிலில் நவக்கிரக சன்னதி கிடையாது. சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள கடலின் ஓசை இந்த சன்னதிக்கருகில் கேட்கிறது. முக்கிய விழாக்கள் அனைத்தும் இக்கோயிலில் நடைபெறுகின்றன. நாற்புறமும் தீர்த்தங்களைக் கொண்டு இந்த ஆலயம் விளங்குகிறது.

இத்தலத்துப் பெருமான் மீது திருஞானசம்பந்தர் ஒரு தேவாரத் திருப்பதிகம் பாடியுள்ளார். அதில் ஒரு பாடல் வருமாறு:

 “ பிறையுடையான் பெரியோர்கள் பெம்மான்

பெய்கழல் நாடொறும் பேணியேத்த

மறையுடையான் மழு வாளுடையான்

வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட

கறையுடையான் கனலாடு கண்ணால்

 காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளி

குறையுடையான் குறட்  பூதச் செல்வன்

குரைகழலே கைகள் கூப்பினோமே  “

 த்விதள விமானத்துடன் சுவாமி விமானம் அழகுறக் காட்சியளிக்கிறது. மூலவர் சுயம்பு வடிவில் அருட் காட்சி வழங்குகின்றார். பன்னீர் மரம் ஸ்தல வ்ருக்ஷமாகவும், அம்ருத தீர்த்தம் ஸ்தலத்தின் தீர்த்தமாகவும் அமைந்துள்ளன.     

10. ருத்ர பீடம்: ஸ்ரீ சுந்தர நாயகி சமேத சுந்தரேசுவரர் ஆலயம்,  திருக்கலிக்காமூர் ( அன்னப்பன் பேட்டை)


திருவெண்காட்டுக்கு 5 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயத்தை சீர்காழி- திருவெண்காடு சாலையில் உள்ள மங்கை மடம் என்ற ஊருக்குச் சென்று, அங்கிருந்து , திருநகரி,கொனயாம்பட்டினம் செல்லும் வழியில் சுமார் 3 கி. மீ சென்று அடையலாம். சீர்காழியிலிருந்து கொனயாம்பட்டினம்  செல்லும் நகரப்பேருந்து இத்தலத்தின் வழியாகச் செல்கிறது.

பராசர முனிவர் வழிபட்ட தலம். தனது தந்தையைக் கொன்ற உதிரன் என்ற அரக்கனை இம்முனிவர், ஒரு யாகம் செய்து அழித்தார். அதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டுப்  பாவ நீக்கம் பெற்றார்.


மீனவன் ஒருவன் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது வலையில் அம்பிகையின் விக்ரஹம் ஒன்று சிக்கவே அதனை வெளியே எடுத்தபோது கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டான். அந்த விக்ரகத்தை கலிக்காமூர் கோயிலில் கொண்டு சேர்த்துப் பிரதிஷ்டை செய்வித்தவுடன் அவனது வயிற்று உபாதை நீங்கியது. இக்காரணத்தால் அம்பிகை கடலுக்குச் சென்று தீர்த்த வாரி நடைபெறுவது வழக்கமானது. மாசி மகத்தில் கடலுக்குச் சென்று சுவாமி தீர்த்தவாரி செய்கையில் அருகிலுள்ள தென் திருமுல்லைவாயில் சுவாமியும் இணைந்து தீர்த்தவாரி செய்வதும் வழக்கம்.

கோயில் சிறிது. திருப்பணியாகிப் புதுப் பொலிவுடன் காணப்படுகிறது. ராஜ கோபுரம் இல்லை. பிராகாரத்தில் செல்வ ஸித்தி விநாயகரும், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யரும் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில் துர்க்கை எட்டுக் கரங்களுடன் விளங்குகின்றாள். சுவாமி சுயம்பு மூர்த்தி. சன்னதி வாயிலின் இருபுறமும் இரண்டு விநாயகர்களைக் காணலாம். திருஞானசம்பந்தர் அருளிய ஒரு தேவாரத் திருப்பதிகம் இந்தத் தலத்தின் மீது உள்ளது. அதில் வரும் ஒரு பாடல்:

“தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுதேத்தக்

காவியின் நேர்விழி மாதர் என்றும் கவினார் கலிக்காமூர்

மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால்

ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே.”

இப்பகுதி,வில்வக் காடாக விளங்கியதால் இக்கோயில் விருக்ஷமும் வில்வ மரமே. தீர்த்தமானது , சந்த்ர தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது.

11. வாமதேவ பீடம்: ஸ்ரீ யோகாம்பிகா சமேத ஸ்ரீ யோகநாத சுவாமி ஆலயம், மங்கைமடம்.


திருவெண்காட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆலயம். மேற்குப் பார்த்த சந்நிதி. கிழக்கு வாயில் வழியாக நுழைகிறோம். தக்ஷ சம்ஹாரம் ஆன பிறகு, ஸதி தேவி சரீரத் தியாகம் செய்திடவே, கோபமுற்ற கயிலாய நாதன் தாண்டவம் ஆடி, சினம் தணிந்த பின் சனகாதியர்க்கு உபதேசிக்கும் குருமூர்த்தியாக ஆலின் கீழ் யோகாசனத்தில் அமர்ந்தார். இத் தலத்து மூலவர் அதன் காரணமாக யோகீசுவரர் என்றும்,அம்பிகை யோகாம்பிகை என்றும் வழங்கப்படுகின்றனர். ப்ராகாரத்திலுள்ள  தக்ஷிணாமூர்த்தியும் யோக நிலையில் காணப்படுகிறார். கிழக்குப் பிராகாரத்தில் விநாயகர், ஞானப்பூங்கோதை, முருகன்,மகாலக்ஷ்மி சன்னதிகள் இருக்கின்றன. துர்க்கை மேற்குப் பார்த்தபடி காட்சி தருகிறாள்.மேற்கு பிராகாரத்தில் பைரவர்,சூரியன் ஆகிய மூர்த்திகளையும் தரிசிக்கலாம். பலா விருக்ஷமும் பிராகாரத்தில் இருக்கிறது. சூரியனது கிரணங்கள் சுவாமியின் மீது படும் நாட்களில் சூரிய பூஜை நடைபெறுகிறது. சதாசிவ பிரம்மேந்திரர் சிறிது காலம் இங்கு வசித்ததாகக் கூறப்படுகிறது.

12 பிராண பீடம்: ஸ்ரீ அதுல்ய குசாம்பிகா சமேத ஸ்ரீ ஐராவதேசுவரர் கோயில், பெருந்தோட்டம் .


சீர்காழி-திருவெண்காடு சாலையில் மங்கைமடம் என்ற ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. சோழர் காலத்துத்  திருப்பணியைக் கொண்டது. கல்வெட்டுக்களில் இத்தலம் அத்தீச்வரம் என்று காணப்படுகிறது.ஐராவதமாகிய யானை (அத்தி) வழிபட்டதால் இப்பெயர் வந்தது.

ஒரு சமயம், இந்திரனது சபைக்குத் துருவாச முனிவர் , கயிலை நாதனது பிரசாதத்தை அவனுக்கு அளிக்கும் விருப்பத்துடன் எழுந்தருளினார். ஆனால் இந்திரனோ தேவலோக மங்கையர்களின் நடனத்தைக் கண்டு களித்திருந்து, முனிவரையும் அவர் தந்த பிரசாதத்தையும் மதியாமல், தனது ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். அந்த யானை அதனைத் தனது கால்களால் நிலத்தில் தேய்த்தது. இதைக் கண்டு சினமுற்ற துருவாச முனிவர் இந்திரன்,தனது பதவியை இழப்பான் என்றும் அவனது வெள்ளை யானையானது காட்டானையாக ஆகி பூவுலகில் பிறக்கும் என்றும் சாபமிட்டார்.


காட்டு யானையாக மாறிய ஐராவதம் பல தலங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபட்டு வந்தபோது இத்தலத்தை அடைந்து, நந்தவனப் பூக்களால் பெருமானை அர்ச்சித்து வழிபட்டு வந்தது. அப்பூந்தோட்டம், நாளடைவில் பெருந்தோட்டம் என்று மக்களால் வழங்கப்பட்டது. பின்னர் அந்த யானை, திருவெண்காட்டுக்குச் சென்றும் இறைவனை வழிபட்டது. இதனைத் திருஞானசம்பந்தர், தனது திருவெண்காட்டுப் பதிகத்தில்,

“ அடைந்து அயிராவதம் பணிய மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும்” என்று அருளியமை காண்க.   

கர்பக்ருஹ சுவற்றில் ஐராவதம் சிவபூஜை செய்யும் காட்சி, கற்சிற்பமாக உள்ளதைக் காணலாம்.  பிராகாரத்தில் விநாயகர்,முருகன்,மகாலக்ஷ்மி சன்னதிகள் உள்ளன. இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு வாய்ந்த மூர்த்தியாக வாதாடும் விநாயகர் தனிச் சன்னதி கொண்டு மேற்குப் பார்த்த வண்ணம் அருள் பாலிக்கிறார்.   

பெருந்தோட்டத்தில் உள்ள மற்றொரு சிவாலயமான கைலாஸ நாதர் கோயிலையும் அன்பர்கள் தரிசிக்கலாம்.

நிறைவுரை: நாங்கூரிலும் அதன் அருகிலுமாக உள்ள ருத்ர பீடங்களைப் பற்றி அறியாதவர்களுக்கும் , அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இல்லாதவர்களுக்கும் என்றாவது பயன்படலாம் என்ற எண்ணத்தில் அந்தக் கோயில்களைப் பற்றி எழுதலானோம். அப்படியாவது சிலர் இக்கோயில்களைத் தரிசிக்கச் செல்லலாம் என்ற எண்ணத்தின் விளைவே இது. அவ்வாறு தரிசிக்கச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் அக்கோயில்கள் யாவற்றிலும்  ஒரு கால பூஜையே நடைபெறுகிறது என்பதையும் அர்ச்சகர்கள் ஏழ்மையிலும் , ஆதரவற்ற நிலையிலும் பூஜையை விடாமல் செய்கிறார்கள் என்பதையும்  கருத்தில் கொண்டு , தரிசனம் செய்துவிட்டு அத்துடன் திரும்பி விடாமல், அக்கோயில்களின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்றவரை உதவிக் கரம் நீட்டியும் , அர்ச்சகர்களை ஆதரித்தும்  சிவ புண்ணியம் பெற வேண்டுகிறோம்.

2 comments:

  1. நான் அறியாத , அறிந்து கொள்ளாத தகவல்கள். இந்த பகுதி வைணவ திருத்தலங்கள் நிறைந்தது என்று இதுவரை நினைத்திருந்தேன். பொக்கிஷமான சிவாலயங்களும் எண்ணற்று உள்ளன. உங்கள் முயற்சிக்கும் தொண்டுக்கும் நமஸ்காரம்.

    ReplyDelete
  2. திருவெண்காடு அருகில் இவ்வளவு சிறந்த கோவில்கள் உள்ளனவா!

    இவை குறைந்த பட்சம் சம்பந்தப்பட்ட அரசு இலாகாக்கள் பட்டியல்களிலாவது உள்ளனவா?

    தங்கள் தொண்டு சிறப்பானது

    ReplyDelete