தேப்பெருமாநல்லூரில் நாகம் வழிபடுதல் |
அதிசயம் அநேகம் நடைபெற்ற கோயில்களில் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள தேப்பெருமாநல்லூரும் ஒன்று. கடந்த 2010 ம் ஆண்டில் இங்குள்ள விசுவநாத சுவாமி கோயிலில் உள்ள வில்வமரத்திலிருந்து வில்வத்தைப் பறித்து வந்து கருவறையின் கோமுகம் வழியாக நுழைந்து இறைவனின் திருமுடிமீது ஒரு நாகமானது அர்பணித்ததைப் படம் எடுத்து வெளியிட்டிருந்தார்கள். அதைக் கண்டவுடன் வெளியூர் அன்பர்கள் ஏராளமாக வரத் துவங்கினர். சூரிய கிரகணத்தின்போது இவ்வாறு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இது வழக்கமாக நடைபெறுவது என்றாலும், மக்கள் மத்தியில் பிரபலம் அடையத் துவங்கியது அந்த ஆண்டு முதல் தான்! அப்போதெல்லாம் கிரகணத்தன்று வழக்கத்திற்கு மாறாகக் கோயில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்றும் தற்போது மூடி வைக்கப்படுவதாகவும் அறிகிறோம். ஆனால் கிரகணம் முடிந்து கோயிலைத் திறந்தால் சன்னதியில் பாம்புச் சட்டைகள் காணப்படுவதாகக் கூறுகின்றனர்.
இது ஒரு புண்ணிய பூமி எனலாம். எனவே புண்ணியம் செய்தவர்க்கே இங்கு வந்து தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது. கிழக்கு நோக்கிய இவ்வாலயத்தின் எதிரே திருக்குளம் காணப்படுகிறது.
சுவாமிக்கு விசுவநாதர் என்றும் அம்பிகைக்கு வேதாந்த நாயகி என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. ஆண்டு முழுவதும் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் திருமேனியின் மீது விழுகின்றன. சுவாமிக்கு ருத்ராக்ஷ கவசம் அணிவிக்கப்படுகிறது. மேலும், ருத்திராக்ஷத்தால் அர்ச்சனை செய்யப்படுகிறது. சுவாமிக்கு ருத்ராக்ஷேசுவரர் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இத்தலத்தை வழிபடுவோர்க்கு மறு பிறப்பு இல்லை என்றும் தல வரலாற்றால் அறியலாம். பிரளய காலத்தில் மகா கணபதியே பிரமனுக்கு இத்தலத்தின் மகிமையைக் கூறியது, அம்பிகையே வேத மந்திரங்களின் பெருமையை வெளிப்படுத்தி, வேதாந்த நாயகி ஆனது, பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களும் இங்கு அமைந்தது, யாளி முகம் கொண்ட மகரந்த மகரிஷி, அகஸ்தியரின் அறிவுரைப்படி,ருத்ராக்ஷத்தால் இறைவனை அர்ச்சித்து சாப விமோசனம் பெற்றது, மேதா தக்ஷிணா மூர்த்தியே அன்னதான மகிமையை உரைத்தது ஆகிய வரலாறுகளைத் தல புராணத்தில் காணலாம்.
ஆலயத்தின் பல பகுதிகளில் சுதைச் சிற்பங்கள் மிகுந்து காணப்படுகின்றன. அவற்றில் படமெடுக்கும் பாம்பின் உருவமும் காணப்படுகிறது. மூலவரது கருவறை கோமுகத் துவாரத்தின் அருகில் நாகம் படமெடுத்து ஆடுவது போன்ற சுதைச் சிற்பம் காணப்படுகிறது. இதன் வழியாகத்தான் நாகப்பாம்பு உள்ளே நுழைவதாக அறிகிறோம்.
சுவாமியை நோக்கியவாறு உள்ள நந்தி அழகான வேலைப்பாடு உடையது. பிரதோஷ வழிபாடு இவருக்குச் சிறப்பாக நடை பெறுகிறது.
சுவாமிசன்னதிக்குச் செல்லும் வழியில் ராகுவுக்கும் கேதுவுக்கும் ஒரு சன்னதி இருக்கிறது. இருவரும் அருகருகே நின்று காட்சி அளிக்கின்றனர். வேதாந்த நாயகியின் சன்னதி தெற்கு நோக்கியது. சுவாமியின் கோஷ்டத்தில் மேதா தக்ஷிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்.
ஊர்ப்பெயருக்குக் காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும், இறையருளால் ஓரளவு ஊகிக்க முடிகிறது. தேப்பெருமான் என்பது தேவாதி தேவனாகிய சிவபெருமானைக் குறிப்பது. " தே உறைகின்ற இடைமருது ஈதோ" என்று திருஞான சம்பந்தர் வாக்கில் வருவது காண்க. இந்தப்பகுதியில் பழமை வாய்ந்த பல ஊர்கள் நல்லூர் என்ற அடைமொழியால் வழங்கப்படுவதால் ( திரு நல்லூர், திருக் கலைய நல்லூர், மணவாள நல்லூர், அவளிவணல்லூர் ஆகிய தலப் பெயர்களை நோக்குக) இதற்கும் தேப்பெருமா(ன்) நல்லூர் என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்.
இந்த ஊரில் வேத விற்பன்னர்கள் பலர் வாழ்ந்தனர். தேப்பெருமாநல்லூர் அன்னதான சிவம் என்ற பெரியவர் சிவத்தலங்கள் பலவற்றிற்குச் சென்று ஏராளமான அன்னதானம் செய்தவர். இவரது பெருமையைக் காஞ்சி காமகோடி பெரியவர்கள் கூறுவதுண்டு.
அதிசயங்கள் வெளிப்படும் நேரத்தில் தான் வெளிவரும். அப்படி வெளிவராவிட்டால் மகிமை இல்லை என்று ஆகி விடாது. ஒவ்வொரு ஊருக்கும் தனிச் சிறப்பும் சாந்நித்தியமும் நிச்சயம் உண்டு என்பதை நாம் உணர வேண்டும். எனவே, பரிகாரத்தையோ, அதிசயத்தையோ நாடிச் செல்பவர்கள் அத்தலங்களின் அருகிலுள்ள புராதனமான தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும். அப்படித் தரிசித்துக் கொண்டே வந்தால், பக்குவ நிலை தானாகவே ஏற்பட்டு விடும். இறைவன் எங்கும் நீக்கமற இருப்பதைக் கண் கூடாகக் காணும் பேறும், அவன் தாள் மலர்களை வணங்குவதால் சித்தித்து விடும்.