![]() |
ஆதி கும்பேசுவரர் ஆலயம் |
சிவபரத்துவத்தைக் காட்டும் தலையாய தலங்களுள் கும்பகோணம் எனப்படும் குடந்தை நகர் தனிச் சிறப்பு வாய்ந்தது. ஒரு சமயம் பிரளயத்தால் உலகம் அழியும் தருணத்தில், பிரம தேவன் சிவபெருமானிடம் சென்று, வேதமும் சிருஷ்டி பீஜமும் அழிந்து விட்டால் தன்னால் படைப்புத் தொழிலைச் செய்யாமல் போய் விடுமாதலால் அவற்றைக் காப்பாற்றி அருளுமாறு வேண்டினான். அவனது வேண்டிகோளுக்கு இரங்கிய பெருமானும், சிருஷ்டி பீஜத்தை அவனிடம் தந்து அதனை அமிர்தமும் மண்ணும் சேர்ந்த ஒரு குடத்தில் இட்டு, அக்குடத்தின் மீது மாவிலை,தேங்காய்,வில்வம்,பூணூல் ஆகியவற்றை இட்டு, அமுதத்தால் தெளித்த பின்னர் ஓர் உறியில் வைத்து, அதை மேரு மலையில் வைக்கும்படிக் கட்டளையிட்டு அருளினார். , அதன்படியே பிரமனும் அமுத குடத்தை மேருவில் வைத்து விட்டுத் திருவருளை வேண்டி நின்றான். சிவபிரானது திருவருளால் பிரமன் மீண்டும் படைப்புத் தொழிலைக் கைவரப்பெற்றான்.அப்போது பிரமன் தொடங்கி வைத்த மாசிமகத் திருவிழாவே தற்போதும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
![]() |
கலயநல்லூர்(சாக்கோட்டை) |
கும்பகோணத்திற்குப் பஞ்ச குரோசத் தலங்களாகத் திருவிடைமருதூர், திருநாகேசுவரம், திருத் தாரேசுவரம்(தாராசுரம்) , திருப்பாடலவனம் ( கொரநாட்டுக் கருப்பூர்) , திருவேரகம் (சுவாமி மலை) ஆகிய தலங்கள் கும்பகோணப் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. கும்பேசுவரர் கோயிலில் இருந்து சுவாமியும் அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி பஞ்ச குரோசத் தலங்களுக்கு எழுந்தருளுவர்.
குடவாசலில் மாசி மக விழா |
குடவாசலைத் தரிசித்த பிறகு கும்பகோணம் திரும்பி வரும் பாதையில் உள்ள சாக்கோட்டை என்னும் ஊரில் மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ள கலய நல்லூர் சிவாலயத்தை தரிசிக்கலாம்..சுந்தர மூர்த்தி சுவாமிகளின் அருமையான தேவாரப்பதிகம் கொண்ட தலம் இது. அமிர்த கலச நாதராகவும் அமிர்த வல்லியாகவும் சுவாமியும் அம்பிகையும் சன்னிதி கொண்டுள்ளனர்.
![]() |
நாகேசுவரர் ஆலயம்,குடந்தைக் கீழ்க் கோட்டம் |
குடந்தையில் பொற்றாமரைக்குளத்தின் அருகில் உள்ள சோமேஸ்வரரர் ஆலயம், அமுத கும்ப ஆதாரமான தறி விழுந்த இடம். சந்திரனுக்கு அருளியதால்,இறைவன் சோமேஸ்வரர் எனப்படுகிறார். வியாழ பகவான் வழிபட்டதால் வியாழ சோமேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
மகாமகத் தீர்த்தத்தின் கீழ்க் கரையில் அமுதகும்பத்தின் தேங்காய் விழுந்த இடமான அபிமுகேசுவரம் அமைந்துள்ளது. மகாமகத்தில் நீராட வந்த நவ கன்னிகைகளுக்கு மேற்கு முகமாகக் காட்சி அளித்ததால் சுவாமிக்கு அபிமுகேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.
மகாமகக் குளத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள கௌதமேசுவரர் ஆலயம், கும்பத்தின் பூணூல் விழுந்த இடம். அதனால் சுவாமிக்கு யக்யோபவீதேசுவரர் என்றும் கௌதம முனிவர் வழிபட்டதால் கௌதமேசுவரர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.
சிவபெருமான் வேட உருக்கொண்டு, அமுத குடத்தின் மீது அம்பு ( பாணம் ) போட்ட இடம் பாண புரீசுவரம் ஆனது. இங்குள்ள அம்பிகை சோமகலாம்பிகை எனப்படுகிறாள்.
மேற்கண்ட தலங்களைத் தவிர, இந்நகரில், காசி விசுவநாதர், கம்பட்ட விசுவநாதர் ,ஏகாம்பரேசு வரர் ,மீனாக்ஷி சுந்தரேசுவரர், காளஹஸ்தீசுவரர் ஆலயங்களும் சிறப்பு வாய்ந்தவை.
ஆண்டுதோறும் இத்தலத்தில் மாசி மாதத்தில் மாசி மக பிரமோத்சவம் பத்து நாட்கள் நடைபெறும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியிலும், சந்திரன் கும்ப ராசியிலும் வரும் மாசி மகப் பௌர்ணமி தினத்தன்று கங்கை முதலான ஒன்பது நதிகளும், மகா மகக் குளத்தில் தங்கள் பாவங்கள் தீர வேண்டி நீராட வருவதால், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் லட்சக் கணக்கில் வந்து நீராடி, இறையருளைப் பெறுவது நெடுங் காலமாக நடைபெற்று வருகிறது. சித்திரை மாதத்தில் ஆதி கும்பேசுவரரும் மங்களாம்பிகையும் பல்லக்கில் எழுந்தருளி, சாக்கோட்டை, கலயநல்லூர், தாராசுரம்,திருவலஞ்சுழி,சுவாமி மலை,கொட்டையூர் , மேலக் காவேரி முதலிய சப்த ஸ்தானங்களுக்கு விஜயம் செய்வர்.
சொக்கநாதப்புலவர் இயற்றிய கும்பகோணப் புராணத்தைத் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் அச்சிட்டுள்ளது.(வெளியீடு எண்: 132) அதில் இத்தலத்தின் சிறப்பைக் கூறுமிடத்தில், நமது பிறவியாகிய சேற்றைத் தனது புகழாகிய நீரால் கழுவித் தூய்மை ஆக்கி, தாயைப்போன்ற தயாவுடன் கருணை பாலித்து, முக்தியாகிய பயிரை வளர்க்கும் கழனி போன்று விளங்குவதும் ,அழிவில்லாததும் ஆகிய உத்தம பூமி குடந்தை மாநகரம் என்று இப் புராணம் எடுத்துரைக்கக் காணலாம்.
கும்பகோணத்தைத் தரிசித்தாலும்,நினைத்தாலும், அதன் பெயரைக் கூறினாலும்,அங்குள்ள தீர்த்தங்களில்நீராடினாலும் பாவங்கள் நீங்கப்பெற்று முக்தி கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது. சிருஷ்டிக்கு ஆதாரமாக விளங்குவதும் சிவபரத்துவத்தை உணர்த்துவதுமான குடந்தை நகரிலுள்ள கும்பேசுவரர் ஆலயத்தையும் அப்புராணத்துடன் தொடர்புடைய பிற கோயில்களையும் தரிசித்து இம்மை மறுமைப்பலன்களை அடையலாம்.