சப்த மங்கையர் தோற்றம்; சாமுண்டியாகிய காளியானவள், சண்ட,முண்ட, ரக்தபீஜ அரக்கர்களை வதம் செய்வதற்கு எல்லாத் தேவர்களும் உறுதுணையாக இருந்தனர். ஒவ்வொருவரிடத்திலிருந்தும் ஒரு சக்தி உற்பவித்தாள்.:பிரமனிடம் தோன்றியவள் நான்கு முகம் கொண்ட பிராஹ்மி என்பவள். கைகளில் அக்ஷ மாலையும் கமண்டலமும் தாங்கியவளாக ஹம்ச வாகனத்தில் அமர்ந்தவளாகத் தோன்றினாள். மகேச்வரனிடத்தில் தோன்றியவள் மாகேச்வரி. திரிசூலத்தை ஏந்தியும்,சந்திரனைத் தரித்துக் கொண்டும் தோன்றியவள் இவள். குமரக் கடவுளின் சக்தியாக வேலை ஏந்திய கௌமாரி வெளிப்பட்டாள். விஷ்ணுவிடம் தோன்றிய சக்தியான வைஷ்ணவி, சங்கு -சக்கரம்- கதை ஏந்தியவள். வராகமூர்த்தியிடம் வாராஹி தோன்றினாள். இந்திரனது சக்தியாக வஜ்ஜிரப்படையுடனும் ஆயிரம் கண்களுடனும் இந்த்ராணி வெளிவந்தாள். எல்லா சக்திகளும் இணைந்ததுபோல் சாமுண்டி வெளிப்பட்டருளினாள். இவ்வாறு சப்த கன்னியரும் காளி தேவிக்குத் துணையாக இருந்து போர் புரியச்சென்றனர். அதற்கு முன்பாக ஒவ்வொருவரும் ஒவ்வோர் தலத்தில் சிவபூஜை செய்து சிவனருள் பெற்றனர்.
சப்தமங்கைத் தலங்கள்: சப்த மங்கையரும் காளி
தேவிக்குத் துணையாகப் போருக்குச் செல்வதன்முன் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான சிவ
தரிசனம் பெற்றனர். அவ்வாறு தரிசனம் பெற்ற தலங்கள் எழும் “சப்த மங்கைத் தலங்கள்”
எனப்படுகின்றன. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள
ஐயம்பேட்டையைச் சுற்றி இத்தலங்கள் அமைந்துள்ளன.பார்வதி தேவியும் சப்த கன்னியர்
பெற்ற தரிசனத்தைக் காண விழைந்தாள். அத்தரிசனங்களாவன: நெற்றிக் கண் தரிசனம்,
கங்காதேவி தரிசனம், திரிசூல தரிசனம், பாத தரிசனம், உடுக்கை தரிசனம், மூன்றாம் பிறை
தரிசனம், நாக தரிசனம் என்ற ஏழும் ஆகும். சக்கரமங்கை ( சக்கரப்பள்ளி ),
அரிமங்கை(ஹரிமங்கை), சூலமங்கை(சூலமங்கலம்), நந்திமங்கை(நல்லிச்சேரி),
பசுபதிமங்கை(பசுபதி கோவில்), தாழமங்கை மற்றும்
, திருப்புள்ளமங்கை ஆகிய இந்த ஏழு தலங்களையும், வட திசையிலிருந்து வந்த நாத
சன்மா - அனவித்தை என்ற தம்பதிகள் வழிபட்டுப்
பேறு பெற்றனர்.
சக்கரப்பள்ளி
சப்த மாதர்களில் ஒருவளான பிராஹ்மி பூஜித்த இத்தலம்
அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ளது. சக்கரவாகப்பறவை தவமிருந்து இறைவனைப்
பூஜித்தபடியால், சுவாமிக்கு சக்ரவாகீச்வரர் என்றும் தலத்திற்கு சக்கரப்பள்ளி
என்றும் பெயர்கள் வந்தன. கோவில் சுவற்றில் ஈசனை சக்கரவாகப்பறவை பூஜிக்கும் காட்சி
அமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் திருமுடியைத்தேடி பிரமன் சக்கரவாகப் பறவையாக
வடிவெடுத்துப் பறந்து சென்றும் காணமுடியவில்லை.தன் பிழைக்கு வருந்தி பிரமன்
பூசித்துப் பழி நீங்கியதாக வரலாறு.
காசியிலிருந்து யாத்திரையாக வந்த நாதசன்மா – அனவித்தை
தம்பதியர்க்கு வேதநாயகி என்ற பெயர் கொண்ட இத்தலத்து அம்பிகை, சிறுமியாகக் காட்சி
அளித்தாள் பெண்களின் ஏழு பருவங்களில் முதலாவது பேதைப் பருவம். இது சிறுமி வடிவைக் குறிப்பது. பக்தர்களைக் காக்க
விரைந்து வருபவளாகத் தனது வலது திருப்பாதத்தைச் சற்று முன் நோக்கி
வைத்திருக்கிறாள் அம்பிகை.
திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற இந்த ஆலயம்
பழமையானது. வாயிலில் ராஜ கோபுரம் இல்லை. ப்ராகாரக் கோஷ்டத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தியின்
சிரத்தின் மீது ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. அதற்கும் மேல் ஆலமரம்.உள்ளது.
பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்
சூடினார் படுதலை துன் எருக்கு அதனொடும்
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப்பள்ளியே. – சம்பந்தர் தேவாரம்
சப்த ஸ்தானப் பல்லக்கு விழா: பங்குனி மாதம்
சித்திரை நக்ஷத்திரமன்று சக்கரப் பள்ளி கோவிலில் இருந்து புஷ்பப் பல்லக்கில்
சக்கரவாகீச்வரரும் வேத நாயகியும் எழுந்தருள வெட்டிவேர் பல்லக்கில் நாதசன்மா –
அனவித்தை தம்பதிகளும் தொடருகின்றனர். இப்பல்லக்குகள், புறப்பட்டு சப்த மங்கைகளில்
உள்ள மற்ற ஆறு தலங்களுக்கும் சென்று திரும்புகின்றன.
அரிமங்கை
நன்றி: shaivam.org |
அய்யம்பேட்டை ரயிலடிக்கு மேற்கில் சுமார் ஒரு
கி.மீ. தொலைவில் உள்ள இத்தலம் ஒரு காலத்தில் நெல்லி வனமாக இருந்தது. அங்கிருந்த
அரிநெல்லி மரக் கனியை மட்டும் உண்டு, இங்குள்ள சத்திய கங்கை தீர்த்தத்தில் நீராடி,
திருமாலை ஒருகாலத்திலும் பிரியாதிருக்கும் வரம் வேண்டிசிவபிரானைப் பூஜித்து
வந்தாள் மகாலக்ஷ்மி.. சப்த மங்கையரில் ஒருவளான மாகேச்வரி வழிபட்ட இத்தலத்தை பார்வதி தேவி வழிபட்டவுடன், அம்பிகைக்குத் தனது
சிரத்தின் உச்சியில் கங்கை பொங்க அற்புத தரிசனம் காட்டினார் பெருமான். அதுவே
தற்போது சத்திய கங்கை தீர்த்தமாகத் திகழ்கிறது. விஷ்ணுவும் இந்த முர்த்தியை
வழிபட்டதால் சுயம்பு மூர்த்தியான சுவாமிக்கு, ஹரிமுக்தீச்வரர் என்ற பெயர்
ஏற்பட்டது. தேவி ஞானாம்பிகை எனப்படுகிறாள். தனிச் சன்னதியில் ஸ்ரீதேவி- பூதேவி
சமேதராய் உதீட்சராஜப் பெருமாள் காட்சி தருகிறார். காசி தம்பதியர்க்கு ஞானாம்பிகை,
பெதும்பை(பள்ளி)ப் பருவத்தவளாகக் காட்சி அளித்தாள்.
கோயிலின் தல விருக்ஷம் நெல்லி மரம். சற்று மேடான இடத்தில்
அமைந்துள்ள சிறிய ஆலயம் இது. .
சூலமங்கை
கும்பகோணம்- தஞ்சாவூர் இருப்புப்பாதையில் உள்ள
பசுபதிகோயில் ரயிலடிக்கு அண்மையிலும், ஐயம்பேட்டையிலிருந்து சுமார் ஒரு கி.மீ.
தொலைவிலும் இத் திருக்கோயில் அமைந்துள்ளது. ராஜ கோபுரத்துடன் கூடிய பெரிய ஆலயம்
இது. அகன்ற ப்ராகாரத்தையும் உள் மண்டபத்தையும் கொண்டது. திருவிழாக்களில் முக்கிய
அங்கம் வகிக்கும் அஸ்திர தேவர் இங்கு சிலாரூபத்தில் சுமார் 4 ½ அடி உயரத்தோடு நுழைவாயில் அருகில்
காட்சி அளிக்கிறார். பின்னால் சூலம் பொலியக் கைகூப்பியவராகக் காட்சியளிக்கிறார்
அஸ்திர தேவர். கஜாசுரனை சிவபெருமான் வென்று,அவனது (யானைத்) தோலைப் போர்த்ததால் அவருக்குக்
கிருத்திவாசர் என்ற பெயர் ஏற்பட்டது. இங்கு இறைவன் கிருத்திவாகேஸ்வரர் எனப்படுகிறார். இவரிடம்
சூலதேவர் வரம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
சப்தமாதர்களில் கௌமாரி வழிபட்ட தலம் இது. அன்னை
பராசக்தியும் இங்கு வந்து இறைவனை நோக்கித் தவம் செய்தபோது, தனது கரத்தில் சூலம்
ஏந்தியவராக சுவாமி அவளுக்குக் காட்சி அளித்தார். வட நாட்டிலிருந்து வந்த நாதசன்மா –
அனவித்தை தம்பதிகளுக்கு அம்பிகை மங்கைப்பருவத்தினளாகத் தரிசனம் தந்தாள். தேவாரத்
திருப்பதிகம் இத்தலத்திற்குக் கிடைக்காவிடினும், அப்பர் பெருமான் வாக்கில்
இத்தலப்பெயர் எடுத்தாளப்பட்டுள்ளதால்,இதனைத் தேவார வைப்புத்தலம் என்பர்
.
நறையூரில் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம்
நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி
சோமேச்சரம்
உறையூர் கடல் ஒற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர்
ஏடகத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாய நாதனையே
காணலாமே.
--திருநாவுக்கரசர் தேவாரம்
இங்கு கோஷ்டத்திலுள்ள தக்ஷிணாமூர்த்தி ஆலமரம்
இல்லாமல் ஜடாமுடியுடன் தரிசனம் தருகிறார். சுவாமி சுயம்பு மூர்த்தி. கவசம்
சார்த்தப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டுக்கள் உள்ளன.
தை அமாவாசையன்று வரும் சூலவிரதம் இங்கு சிறப்பாகக்
கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்து, மகாவிஷ்ணுவானவர் , காலநேமி என்ற
அசுரனை வென்றார். பிரமன் தனது கடுமையான வயிற்றுவலி நீங்கப்பெற்றான்.சூல விரதம்
மேற்கொள்வதால், எதிரிகளின் தொல்லைகளும், நோய்களும், வறுமையும், தோஷங்களும் நீங்கப்பெறலாம்.
நந்திமங்கை
( நல்லிச்சேரி )
( நல்லிச்சேரி )
நந்திகேச்வார் பரமேச்வரனைப் பூஜை செய்து, பெருமானது
பாத தரிசனம் பெற்ற தலமாதலால் நந்தி மங்கை எனப்படுகிறது. சப்த கன்னிகைகளுள் வைஷ்ணவி
தேவி இத்தலத்து ஈசனை வழிபட்டுப் பேறு பெற்றாள். அகிலாண்டேச்வரி என்ற பெயருடன்
அம்பிகையும் இங்கு வந்து தவம் செய்து ஈச்வரனது பாத தரிசனம் பெற்றதாகத் தல புராணம்
கூறுகிறது. காசியிலிருந்து வந்த தம்பதிகளுக்கு அம்பிகை கன்னிகை வடிவில் காட்சி
கொடுத்தாள்.பாத தரிசனம் பெற்ற அம்பிகை தனது அம்சமாக அலங்காரவல்லி ஆனாள்.
காசியைப்போலவே அருகில் மயானமும் அதன் எதிரில் ஒரு சிவ சன்னதியும் உள்ளன. இந்த
ஆலயத்தின் ஸ்தல விருக்ஷமாக நாவல் மரம் அமைந்துள்ளது. கோவிலின் அருகில் தேவகாத
தீர்த்தமும் சுவாமி சன்னதிக்கு அருகில் ஒரு கிணறும் உள்ளன.
வயல்கள் சூழப்பெற்று இந்த ஆலயம் பொலிவுடன்
விளங்குகிறது.சுவாமி சன்னதி மேற்கு நோக்கியது. சுவாமிக்கு ஜம்புகேச்வரர் என்ற
நாமம் வழங்கப்படுகிறது. அம்பாள் தெற்கு நோக்கியவாறு நின்ற கோலத்தில் காட்சி
தருகிறாள். வாயிலில் இரட்டை விநாயகர்கள் உள்ளனர். நந்திதேவர் சிவபெருமானை
வழிபடுவதாகப் புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.அழகிய வண்ண ஓவியங்கள் வௌவால்
மண்டபத்தில் தீட்டப்பட்டுள்ளன. விஷ்ணு துர்க்கை சன்னதி விசேஷமானது. இத் தலத்தில் சூரிய பூஜை நடைபெறுகிறது.
அய்யம்பேட்டையிலிருந்து சுமார் மூன்று கி.மீ.
தொலைவில் இத்தலம் உள்ளது.
பசு (பதி) மங்கை
( பசுபதி கோவில்)
கோச்செங்கட்சோழ நாயனார் கட்டிய மாடக் கோயில்களுள்
இதுவும் ஒன்றாகும். சப்த மாதர்களில் வாராகி வழிபட்டு ,ஈசனின் தமருகத்திலிருந்து
(உடுக்கை) எழும் ஆதி நாதத்தைக் கேட்டு உய்ந்தாள். அதிலிருந்தே பிரபஞ்சங்கள் யாவும்
உற்பத்தி ஆவதையும் அறிந்தாள். அதே தரிசனத்தை இங்கு வந்து வழிபட்ட அம்பிகையும்
கண்டு,பேரானந்தப்பட்டாள். நாத சன்மா – அனவித்யா தம்பதிகள் இங்கு வந்து, பால்வள
நாயகியையும் பசுபதி நாதரையும் வழிபட்டபோது, அம்பாள் அவர்களுக்கு அரிவை எனப்படும்
தாய்ப் பருவத்தில் காட்சி தந்து அருளினாள்.
பிரதான வாயிலில் ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி
அளிக்கிறது. வெளிச் சுவற்றில் பசு இறைவன் மீது பால் சொரிந்து வழிபடும் ஐதீகப்
புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. உச்சிஷ்ட கணபதி, பசுபதீச்வரர், பால்வள
நாயகி ஆகிய மூவரது சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.
காமதேனுவும்,அகத்தியரும் சுவாமியை வழிபட்டுப் பூஜித்துள்ளனர்.
தஞ்சை – கும்பகோணம் பேருந்து வழியிலுள்ள பாபநாசத்தை ஒட்டி
இத்தலம் அமைந்துள்ளது.
தாழமங்கை
சப்த மாதர்களில் இந்திராணி வழிபட்ட தலம் தாழமங்கை.
தஞ்சாவூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையில் பசுபதி கோயிலுக்கு அண்மையில் சாலை ஓரமாகவே
ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு வந்த இந்திராணி, சந்திரமௌலீச்வரனான இறைவனை
நோக்கித் தவம் செய்து, அவனருள் பெற்றுக் காளிதேவிக்குத் துணையாக அசுரர்களிடம்
போரிடச் சென்றாள் என்பது வரலாறு. மங்களத்தைத் தரவல்ல மஞ்சள்,குங்குமம்,சந்தனம்
ஆகியவற்றின் உற்பத்திக்கு ஆதி வித்தாக இருந்து ஸ்ருஷ்டிக் காலத்தில் அம்பிகை
விளங்கிய அற்புதத் தலம் இது. ராஜராஜேச்வரி என பெயருடன் அம்பாள் இங்கு அருள்
புரிகிறாள்.
தக்ஷனின் 27 பெண்களை மணந்துகொண்ட
சந்திரன், அவர்களுள் ரோகிணியிடமே மிக்க அன்புடன் இருப்பதைக் கண்ட தக்ஷன்
கோபமடைந்து, சந்திரனது அழகிற்குக் காரணமான அவனது கலை தேய்ந்து மறையட்டும் என்று
சாபமிட்டான். தனது கலைகள் ஒவ்வொன்றாகத் தேய்வதைக்கண்டு வருந்திய
சந்திரன்,தாழமங்கையை அடைந்து இறைவனை வழிபட்டான். அவனுக்கு இரங்கிய பெருமான், அவனது
மூன்றாம் பிறையைத் தனது சிரத்தில் ஏற்று அருளினான்..இதனால் பெருமானுக்கு
சந்திரமௌலீச்வரன்,சந்திர சூடன், இந்து சேகரன் ,சந்திரசேகரன் ஆகிய பெயர்கள்
ஏற்பட்டன.
இத்தலத்தில் தாழைச் செடிகள் நிறைந்த புதர்களருகில் சந்திரனது
பத்தினி கடும் தவம் செய்து இறைவனின் பிறைசூடிய கோலத்தைத் தரிசித்தாள். அம்பிகையான
ராஜராஜேச்வரியும் இப்பிறை தரிசனம் வேண்டி இறைவனை நோக்கித் தவம் செய்தாள். அவள் விரும்பியபடியே, சுவாமியும்
சந்திரமௌலீச்வரனாகக் காட்சி அளித்து அருளினார். சிவானந்தம் மேலிட்டவளாகப்
பேரழகுடன் அன்னையும் அண்ணலுடன் அங்கேயே தங்கி அடியார்கள் வேண்டிய வரமளித்து
வருகிறாள்.
சதய நட்சத்திரத்தில் பிறந்த ராஜராஜ சோழன் மாதந்தோறும்
சதய நட்சத்திரம் வரும் நாளன்று இங்கு தரிசனம் செய்து, சுவாமிக்கும் அம்பாளுக்கும்
சந்தனம், குங்குமம் போன்ற வாசனாதி
திரவியங்கள் சார்த்தி வழிபட்டதாகக் கூறுவர்.
காசி நகரிலிருந்து வந்த தம்பதிகளான நாத சன்மா –
அனவித்தை இருவரும் இத்தலத்தை அடைந்து
வழிபட்டபோது அம்பாள் அவர்களுக்குத் தெரிவை வடிவில் பேரன்னையாகத் தரிசனம்
தந்தாள்.
திருப்புள்ளமங்கை
திருஞானசம்பந்தரின் தேவாரத் திருப்பதிகம் பெற்ற இத்தலம்,
தஞ்சை – குடந்தை பாதையில் உள்ள பசுபதி கோவிலிலிருந்து ஒரு கி. மீ. தூரத்தில்
இருக்கிறது. சப்த மாதர்களில் சாமுண்டி
வழிபட்ட ஆலயம். அஷ்ட நாகங்களோடு வந்து சாமுண்டி தேவி சிவபூஜை செய்தபடியால் இங்கு
வந்து வழிபடுவோர் நாக தோஷங்கள் நீங்கப்பெறுவதாகக் கூறப்படுகிறது. நாகாபரண தரிசனம்
தனக்கும் கிடைக்கவேண்டும் என்று ஜகதம்பிகையும் தவம் செய்யவே, இறைவனும் அவ்வாறே
காட்சி அளித்ததாக வரலாறு
.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த விஷத்தை
அருந்திய இடம் இதுவே என்றும் அதனால் தலத்திற்கு ஆலந்துறை என்ற பெயர் வந்தது
என்றும் தலபுராணம் குறிப்பிடுகிறது.தேவாரத்திலும் இப்பெயர் எடுத்தாளப்படுகிறது.
மன்னானவன் உலகிற்கொரு மழை ஆனவன்; பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ் புளமங்கை
என்னானவன் இசை ஆனவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும் இடம் ஆலந்துறை அதுவே.
n திருஞான சம்பந்தர்
தேவாரம்
பிரம தேவன் இத்தலத்து ஈசனைத் தவம் செய்து அருள்
பெற்றதால், சுவாமிக்குப் பிரமபுரீச்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அல்லியங்கோதை என்ற
பெயரால் தேவி அழைக்கப்படுகிறாள். சப்தமங்கைதலங்களை வழிபடவந்த நாதசன்மா-அனவித்தை
தம்பதிகளுக்குத் தேவியானவள் பேரிளம் பெண் வடிவில் காக்ஷி அளித்தாள்
.
முதல் பராந்தக சோழனது கற்றளி இது. சோழர் காலச்
சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. மூலவரின் கருங்கல் விமானத்தைச்
சுற்றிலும் அமைந்துள்ள சிற்பங்கள் நம்மைப் பரவசப்படுத்துபவை.சின்னஞ்சிறிய வடிவில்
உள்ள ராமாயண சிற்பங்களும், நாட்டியச் சிற்பங்களும் சிற்பிகளின் கைத்திறனைப்
பறைசாற்றுவதாக உள்ளது. சுமார் 65 சிற்றுருவச் சிலைகளைக்
கொண்ட அடித்தளத்தில்,கஜசம்ஹார மூர்த்தி, காலாரி, அந்தகாசுர சம்ஹார மூர்த்தி,
தாண்டவ மூர்த்தி, வராகர் ஆகிய சிற்பங்கள் கலை நுணுக்கம் மிக்கவை.
தேவகோஷ்டங்கள் மிகவும் நேர்த்தியானவை. விநாயகர்,
பிரமன், லிங்கோத்பவர், மகாவிஷ்ணு சிற்பங்கள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலின் அஷ்டபுஜ துர்க்கை அழகும்
அருளும் மிக்கவள். கண்ணை விட்டு நீங்காத அற்புதக் கோலம். ஒருபுறம் அவளது வாகனமான
சிங்கமும்,மறுபுறம் மானும் இருப்பதைக் காணலாம். அர்த்த மண்டபத்தின் மேல் உள்ள பூத
கணங்களும் விமானத்திலுள்ள சுப்பிரமணியர், ரிஷபாரூடர், அர்த்தநாரீஸ்வரர் ஆகிய
மூர்த்திகளின் சிற்பங்களும் இணையற்றவை.
கல்வெட்டுக்களில் இறைவன் ஆலந்துறை மகாதேவர் என்று
குறிப்பிடப்படுகிறார். முதலாம் ராஜராஜன் காலத்திய கல்வெட்டால், புள்ளமங்கை ஊர்ச்சபையினர்
முரசு அறைவித்து ஒன்றுகூடி, இருக்கு வேதத்திலும்,சாம வேதத்திலும் வல்ல அந்தணர்
சிலருக்கு மானியம் விட்ட செய்தியை அறிகிறோம். பல கல்வெட்டுக்கள் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட கொடைகள் பற்றி
அறிவிக்கின்றன.