Wednesday, December 21, 2016

பெரும் பாவங்களும் நீங்கும் தலம்

தேவர்களில் இந்திரனும் சந்திரனும் சாபங்கள் பெற்றதாகப் புராணங்கள் மூலம் அறிகிறோம். தேவ சபையில் அரம்பையர்களின் நடனத்தைக் கண்டு கொண்டிருக்கும் வேளையில் அங்கு எழுந்தருளிய துருவாச முனிவரையும் அவர் கொண்டு வந்த சிவ பிரசாதத்தையும் மதிக்காததால் முனிவரது சாபத்தைப் பெற்றான் என்று திருவிளையாடல் புராணம் கூறும். மற்றொரு சமயம் கௌதம முனிவரது துணைவியாரான அகலிகையை விரும்பியதால்  உடல் முழுதும் கண்களாகுமாறு சபிக்கப்பட்டான். கல்லாக மாறிய அகலிகை இராமபிரானது பாதம் பெற்றுப் பழைய உருவை மீண்டும் பெற்றாள் என்று இராமாயணம் கூறுகிறது. இப்பாவத்தைச் செய்த தேவேந்திரன் எவ்வாறு சாப விமோசனம் பெற்றான் என்று அறிய வேண்டாமா?

தேவ சபையில் முனிவர் அளித்த சிவ பிரசாதத்தை அருகிலிருந்த ஐராவதம் என்ற தனது யானையின் மத்தகத்தின் மீது இந்திரன் வைத்தவுடன், அந்த யானை அதனைத் தனது காலால்  தரையில் தேய்த்தது. இதனால் வெகுண்ட துருவாசர், இந்திரன் தனது பதவியை இழக்குமாறும், அவனது யானை , காட்டானையாக மாறுமாறும் சபித்தார். திருவெண்காட்டை அடைந்து தவம் செய்த ஐராவதம், பின்னர் மதுரையை   அடைந்து தவமியற்றவே , அதனால் மகிழ்ந்த பெருமான் அந்த யானைக்குப் பழைய உருவம் வருமாறு அருளினார்.

கௌதம முனிவரின்சா பத்தால் பீடிக்கப்பட்ட  தேவேந்திரன் இத்தலத்தை வந்தடைந்து தவம் செய்தான். அதன் பயனாக அவனது உடலில் இருந்த     ஆயிரம்யோ னிகளும் ஆயிரம் கண்களாக மாறின. அதனால் இறைவனுக்குக்  கண்ணாயிர  நாதர்  என்ற  நாமம்  வந்தது. இவ்வாறு  இந்திரன்  வழிபட்ட  திருக் கண்ணார் கோயில் என்ற தலத்தை நாம் இப்போது கண்ணாரக் கண்டு களிக்கிறோம்.

தலத்தின் இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் செல்லும் பாதையில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சுமார் மூன்று கி.மீ. முன்பாக அமைந்துள்ள  கதிராமங்கலம் என்ற  இடத்திலிருந்து குறுமாணக்குடி என்ற ஊர் செல்வதற்கான கைகாட்டி உள்ளது.கிழக்கு நோக்கிச் செல்லும் அப்பாதையில்  திரும்பி சுமார் மூன்று கி. மீ. பயணித்தால் குறுமாணக்குடி என்று தற்போது வழங்கப்படும் திருக்கண்ணார் கோயிலை அடையலாம்.

மகாபலி என்ற மன்னனை வெல்லுமாறு தேவர்கள் வேண்ட, திருமால் வாமன அவதாரம் எடுத்தார். குறு மாண் ( குள்ளமான பிரமச்சாரி) வடிவில் தோன்றி, மாபலியிடம் சென்று மூவடி மண் யாசித்தார். தனது குருவான சுக்கிராச்சாரியார் தடுத்தும் கேளாமல் மூன்றடி மண் தருவதாக வாக்களித்தான். அப்போது வாமனர் , திரிவிக்கிரம வடிவெடுத்து, மண்ணை ஓர் அடியாலும், விண்ணை ஓர் அடியாலும் அளந்தார்.மூன்றாவது அடியாக மாவலியின் முடி மீது வைத்தார். இவ்வாறு குறு மாண் வடிவில் வந்த திருமால் வழிபட்ட தலம் இக் கண்ணார் கோயிலாகும். அதனால் தான் இத்தலத்திற்குக் குறு மாணக்குடி என்று பெயர் வந்தது. இக்கோயிலிலுள்ள ராஜ ராஜ சோழ மன்னரின் கல்வெட்டில் தலப்பெயர், குறு வாணியக்குடி என உள்ளது.  இவ்வரலாற்றை, இத்தலத்தின் மீது திருஞான சம்பந்தர் பாடியருளிய தேவாரத் திருப் பதிகத்தில் வரும் பின்வரும் பாடலால் அறியலாம்.

மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரைச்

செறு மாவலி பால் சென்று உலகெலாம் அளவிட்ட

குறு மாண் உருவன் தற் குறியாகக் கொண்டாடும்

கறு மாகண்டன் மேயது கண்ணார் கோயிலே.  

மேலும், இந்திரன் வழிபட்ட வரலாற்றுச் செய்தியையும் சம்பந்தரின் பதிகம் நமக்கு உணர்த்துகிறது:

முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம்

பின் ஒரு நாள் அவ்விண்ணவர் ஏத்தப் பெயர்வெய்தித்

தன்னருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர்

கன்னியர் நாளும் துன்னமர்  கண்ணார் கோயிலே.

என்பது அப்பாடல்.

ஆலய அமைப்பு: கிழக்கு நோக்கிய அழகிய ஆலயம். மதில் சுவர்களால் சூழப்பெற்றுள்ளது. மண்ணியாற்றின் வளம் சேர்க்கும் ஊர். கோயிலுக்கு எதிரில் அழகிய திருக்குளம் அமைந்துள்ளது. நாட்டுக்கோட்டை நகரத்தார்  திருப்பணி செய்துள்ளனர். திருக்குளத்தையும் சீரமைத்துள்ளனர். படிக்கட்டருகிலுள்ள விநாயகர் ஆலயச் சுவற்றில் திருக்குளப் புனரமைப்பு செய்த கல்வெட்டை அமைத்துள்ளனர்.

ஆலய முகப்பில் ராஜ கோபுரம் இல்லை. ரிஷபாரூடரின் சுதைச் சிற்பம் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும், விநாயகர், முருகன் ஆகிய மூர்த்திகள்  தங்களது வாகனங்களில் வீற்றிருக்கும் சுதைச் சிற்பங்கள் உள்ளன. சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும் அம்பிகையின் சன்னது தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. இந்திரனுக்கு ஆயிரம் கண் அருளியபடியால் பெருமானுக்குக் கண்ணாயிர நாதர் என்றும் அம்பிகைக்கு முருகு வளர் கோதை என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

இவ்வளவு புராணச் சிறப்புக்களைக் கொண்ட இந்தத் தலத்தைத் தேவாரப் பாடல் பெற்ற தல யாத்திரை செய்பவர்களே பெரும்பாலும் தரிசிக்க வருகிறார்கள். தீராத பாவங்களும் தீர்க்கும் கோயில் என்று ஜோதிடர்கள் சொன்னால் தான் மக்கள் வருவார்களோ என்னவோ!  பாவம் தீரும் காலம் வந்தால் தான் வருவார்கள் போலும் . நாம் அறியோம்.  நவக்கிரகத் தல யாத்திரையாக வைதீஸ்வரன் கோயில் வருவோர் அநேகர் உளர். அதேபோல் வைத்திய நாத சுவாமியைக் குல தெய்வமாகக் கொண்ட குடும்பங்கள் ஏராளம். இவர்கள் எல்லாம் வைதீஸ்வரன் கோயிலுக்கு வரும்போது இது போன்ற கோயில்களைத்  தரிசிக்க வரலாம். பிறருக்கும் எடுத்துச் சொல்லலாம். இதனால் அர்ச்சகருக்கும் உபகாரமாக இருக்கும். கோயில்களும் பொலிவடையும்.  இனியாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம். கண்ணாயிர நாதரைப் பிரார்த்திப்போம்.

Saturday, October 29, 2016

ஸ்கந்த மஹிமை

ஸ்கந்தனுடைய  மகிமையைக் கேட்பதாலும் படிப்பதாலும் கலியினால் ஏற்படும் பாவங்கள் விலகுகின்றன. " ஸ்கந்தஸ்ய கீர்த்தி மதுலாம் கலிகல்மஷ நாசினீம் "  என்கிறது ஸ்ரீ ஸ்காந்த மஹா புராணம். முதல் கல்பத்தில் வந்த துவாபர யுகத்தில் யாவருக்கும் வேதமோ, அதன் பொருளோ, பிற வித்தைகளோ முறைப்படி தெரியவில்லை. உலகிற்குக் காரணமாக விளங்குவது எது என்பது புரியாமல் இருந்தபோது,  பிரம விஷ்ணுக்கள் கயிலாய மலையை அடைந்து சிவபெருமானிடம் இந்த சந்தேகத்தைத் தீர்த்து வைக்குமாறு வேண்டினர்.

தேவர்களைப் பார்த்து சிவபிரான் கூறினார்: " விஷ்ணுவும் பிரமனும் பூமியில் வியாசராகவும் மனுவாகவும் தோன்றி வேத சாஸ்திர சாரமாகப் புராணங்களையும் ,ரிஷிகளுடன் சேர்ந்து சூத்திரங்களையும் உலகம் உய்யுமாறு அருளுவார்களாக." என்றார்.அதன் படி விஷ்ணுவானவர் வியாசராகத் தோன்றி, பதினெட்டுப் புராணங்களை அருளினார். அவற்றுள் பத்துப் புராணங்கள் சிவபெருமானது மகிமையைப் பேசும் ஸாத்விகங்கள் என்பர் பெரியோர். சைவ புராணங்கள் பத்தில் ஸ்காந்த புராணம் சுகத்தை அளிப்பதாகச் சிறந்து விளங்குகிறது. " ஸ்காந்தம் ஸுகதம் உத்தமம் ஸர்வ வேதாந்த ஸாரஸ்வம் " என்பது இப்புராண வாக்கியம். இதில் ஒரு லக்ஷம் ஸ்லோகங்கள் உள்ளன. அதன் ஐம்பது கண்டங்களுள் ஐந்தாவதான சங்கர சம்ஹிதையில் 30000 ஸ்லோகங்கள் உள்ளன. அதிலுள்ள சிவரஹஸ்ய கண்டத்தில் ஸ்ரீ ஸ்கந்த அவதாரம் விவரிக்கப் பட்டுள்ளது. இச்சரிதத்தை நம்பி வாழ்பவர்கள், நல்ல மனைவி, குழந்தை பாக்கியம், பசுக்கள் முதலிய பேறுகள் அனைத்தும் பெறுவர் என்கிறது இந்தப்புராணம். 

 சூர பதுமனின் துன்புறுத்தல்களுக்காளான தேவர்களின் பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய சிவபெருமானின் நெற்றிக் கண்களிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகள் ஆறு குமாரர்களாக ஆகி அக்னியும் வாயுவும் அதனைச் சுமந்து கொண்டு வந்து கங்கையில் நாணற்காட்டிலுள்ள தாமரை மலரில் விடவும், அப்பொறிகள் ஆறு குழந்தைகள் ஆயின. தேவர்களின் மகிழ்ச்சியைக் கூறவும் வேண்டுமோ? "நாம் கேட்டதோ ஒரு சிவ குமாரன் தானே. நமக்குச்  சிவனருள் தந்திருப்பதோ ஆறு குமார்கள் அல்லவா " என்று குதூகலித்தார்கள். இங்கே, வியாசபகவான் , " ஸ்ரீ பரமேசுவரன் மகிழ்ந்தால் உலகத்தில் எதுதான் கிட்டாது?"  என்கிறார். 

முருகனின் திரு அவதாரம் எதற்காக நடை பெற்றது என்பதைக் கச்சியப்பர் தனது கந்தபுராணத்தில் அருமையாக எடுத்துரைக்கிறார்:

உருவமும் அருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் 

பிரமமாய் நின்ற சோதிப்  பிழம்பதோர் மேனியாகக் 

கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே

ஒரு திரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன்  உலகம் உய்ய. 

உலகம் உய்ய வேண்டும் என்ற எல்லையற்ற கருணையினால் முருகப்பெருமான் திருவவதாரம் செய்தான் என்றார் கச்சியப்பர். அந்த பரப்பிரமத்தை இப்படிதான் வருணிக்க முடியும். உருவமும் அருவமும் கடந்த கந்தக்கடவுள்  ஆறு முகங்களும் பன்னிரு கரங்களும் கொண்டவனாக உதித்தான். எதிலிருந்து உதித்தான் என்றால், ஜோதிப்பிழம்பிலிருந்துதான். ஆகவே சிவ ஜோதியின் மறு வடிவமே கார்த்திகேயன் என்பது பெறப்படுகிறது. " மூவிரு வடிவும் " அன்னை உமாதேவி அணைத்து எடுத்தவுடன், " ஒன்றாகிக் கந்தன் என்று பேர் பெற்றனன்"  என்று கந்த புராணம் கூறும். இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவில் குமாரக் கடவள் வீற்றிருக்கும் சோமாஸ்கந்தக் கோலம், பகலுக்கும் இரவுக்கும் நடுவில் மாலை அமைந்திருப்பது போலிருந்தது என்கிறார் கச்சியப்பர். 

சிவபெருமானின் திரு வாக்கினாலேயே கந்தனின் பெருமையைக்  கந்த புராணம் மூலம் அறிவிக்கிறார்  கச்சியப்பர்:இருவருக்கும் பேதம் கிடையாது என்பதை உணர்த்தும் அருமையான பாடல் இது:

ஆதலின் நமது சத்தி அறுமுகன் ; அவனும் யாமும் 

பேதகம் அன்றால் ; நம்போல் பிரிவிலன் ; யாண்டும் நின்றான்;

ஏதமில் குழவி போல்வான்; யாவையும் உணர்ந்தான்; சீரும்

போதமும் அழிவில் வீடும் போற்றினர்க்கு அருள வல்லான்.

இந்திரனுக்கும் மற்ற தேவர்களுக்கும் முருகன் விசுவரூபம்  காட்டியபோது அவ்வுருவில் எண் திசைகளும் ஈரேழு உலகங்களும், எட்டு மலைகளும், ஏழு கடல்களும், திருமாலும் சிவபெருமானும் அனைத்து உயிர்களும் தெரிந்தன. இதனைத் தேவர்கள் வாக்காக,

அம்புவி முதலாம் பல் பேரண்டமும் அங்கங்கு உள்ள 

உம்பரும் உயிர்கள் யாவும் உயிரலாப் பொருளும் மாலும்

செம் பதுமத்தினோனும் சிவனொடும் செறிதல் கண்டோம்

எம்பெருமானின் மெய்யோ அகிலமும் இருப்பதம்மா! 

என்பதன் மூலம் அறியலாம். 

பானுகோபனை வென்று திரும்பிய வீரவாகு முருகப்பெருமானிடம் வரம் வேண்டும்போது,  குபேர   வாழ்க்கையையும், இந்திர பதத்தையும், மாலயன் பதத்தையும் வேண்டேன். நின் பாத மலர்களில் அன்பு பூணும் ஒன்றையே வரமாகக் கோருகின்றேன் என்றார். 

போர்க்களத்தில் சூர பதுமனுக்கு முருகப்பெருமான் விசுவரூபம் காட்டியதும், சூரன் தன்னை அறியாமலேயே, நல்லறிவு பெற்றவனாய் , "  இக்குமரனைப் பாலன் என்று அலட்சியமாகக் கருதி விட்டேன். மாலயனுக்கும் ஏனைய தேவர்களுக்கும் மூல காரணமாய் இருக்கும் மூர்த்தி இவன் அல்லவோ? இவ்வடிவின் அழகையும், ஒளியையும் எவ்விதம் சொல்வேன்! இந்த அற்புத வடிவு எங்கும் காண இயலாத ஒன்று அல்லவா? இந்த அற்புதக் கோலத்தைப்  பல தடவைகள் பார்த்தாலும் தெவிட்டவில்லை  யாருக்கும் புலப்படாத இவ் வடிவை தேவர்களும் காண மாட்டார். அழியா வரம் பெற்றதால் மட்டுமே நேரில் நான் பார்க்க முடிந்தது. 

ஆயிரம் கோடி மன்மதர்களின் உருவெல்லாம் ஒருசேரத் திரண்டு ஒன்றாக வந்தாலும் இக்குமரனின் திருவடிகளது அழகிற்கு நிகராகாது என்றால், இம்முழு வடிவிற்கு எதனை உவமையாகக் கூற முடியும்? எனது கண்களில் நீர் பெருகுகின்றது. எனது கால்கள் இவனை வலம் வர வேண்டும். கைகள் இவனைத் தொழ வேண்டும். தலை தாழ்ந்து வணங்க வேண்டும். நாவினால் துதித்துக் கசிந்துருகி விழி நீர் பெருக்க வேண்டும். என் எலும்புகள் மெழுகு போல் உருகுகின்றனவே! எனது தவப்பயனாய் இவ்வடிவம் கண்டும் , மானம் ஒன்றால் தடுக்கப்பட்டு விட்டேனே" என்று ஒரு கணம் உருகி செயலற்று நின்றான். 

பகைவனுக்கும் அருளிய பரம கருணையாளனான பன்னிருகை வேலனின் நாமம் நம்மைக் கரையேற்ற வல்லது. " படிக்கின்றிலை பழனித் திருநாமம் படிப்பவர் தாள் முடிக்கின்றிலை; முருகா என்கிலை " என்பார் அருணகிரி நாதர். " மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்" என்பது கந்தர் அலங்காரம். ஆலகால விஷத்தைக்   குடித்து அனைத்து உயிர்களையும் அழியாமல் காத்த  நீலகண்டனின் மைந்தன் நமக்கு என்றும் துணையாய் இருப்பான். இதனை அருணகிரியார், கந்தர் அலங்காரத்தில்,

" ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன் 

வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே. " 

என்று அருளிச் செய்துள்ளார். மயிலேறிய மாணிக்கமாம் வள்ளி மணாளனின் திருவருள் என்றென்றும் தழைப்பதாக. 

Monday, October 17, 2016

ஹரதத்தர் சரித்திரம்

ஹரதத்தர் சிவபூஜை 
முன்னுரை: ஹரதத்தரின் சரித்திரத்தை அறிந்து கொள்வதன் முன் அந்த மகான் அவதரித்த கஞ்சனூர் என்ற ஸ்தலத்தின் மகிமையைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அந்த ஸ்தலத்திற்குச் சென்று தரிசிக்க வேண்டும். ஹரதத்தர் விஜயம் செய்த சப்த ஸ்தலங்களுக்கும் சென்று வழிபடவேண்டும். ஆயுளில் ஒரு முறையாவது தை மாதத்தில் வரும் ஹரதத்தர் ஆராதனையிலும், மாசியில் வரும் சப்தஸ்தான உத்சவத்திலும் பங்கு பெற வேண்டும். அவருக்கு உபதேசம் செய்த தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் சில நிமிஷங்களாவது தியானம் செய்ய வேண்டும்.
கஞ்சனூர் தல வரலாற்றுச் சுருக்கம்: மயிலாடுதுறையிலிருந்து காவிரின் வடகரையை ஓட்டிச் செல்லும் பூம்புகார்- கல்லணை  சாலையில் அமைந்துள்ளது கஞ்சனூர் என்ற தலம் ஆகும். இதற்குச் செல்வதற்கு  மயிலாடுதுறையிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.  இங்குள்ள கற்பகாம்பிகா சமேத அக்னீசுவர சுவாமி ஆலயம் திருநாவுக்கரசு நாயனாரது  தேவாரத் திருப்பதிகம் பெற்றதாகும். அப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் " கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு  உய்ந்தேனே " என்ற மகுடத்துடன் நிறைவு பெறும்.

பவிஷ்யோத்ரபுராணம் இந்த ஸ்தலத்தைக் கம்ஸபுர  க்ஷேத்ரம் என்று குறிப்பிடுகிறது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தர வாஹினியாகக்  காவிரி பாயும் இந்த பலாசவன  க்ஷேத்திரத்திற்கு   வந்து பராசர முனிவர் மஸ்யகந்தி என்ற செம்படவப் பெண்ணின் தொடர்பால் ஏற்பட்ட தோஷத்தை, மாசி மகத்தன்று அக்நீசுவரரின் தரிசனம் பெற்றதால் நீங்கப் பெற்றார். மாண்டவ்ய புத்திரர்களும் மாசி உத்தரத்தன்று ஆனந்த தாண்டவ தரிசனம் பெற்றுத்  தங்களது பாவம் நீங்கப்பெற்றனர்.

கம்ஸன் என்ற பாண்டிய மன்னன் இத்தலத்தை வழிபட்டுத் தன்  நோய் நீங்கப்பெற்றவனாய் , திருப்பணிகள் பல செய்வித்தான்.  
பிரமனுக்குத்   ( கஞ்சன், விரிஞ்சி ஆகிய பெயர்கள் பிரமனைக் குறிப்பன  ) திருமணக்கோலம் காட்டியதால் இத்தலம் கஞ்சனூர் என்ற பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

ஒருசமயம் பிரமனின் யாகத்தில் அதிகமான நெய்யைப்புசித்ததால் அக்னிக்குப் பாண்டு ரோகம் வந்தது. அதனை இங்கு வந்து போக்கிக் கொண்டதால் சுவாமிக்கு அக்னீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.
சந்திரனும் இங்கு வழிபட்டுக் குருசாபம் நீங்கப்பெற்றான்.  

                                               ஹரதத்தர் வரலாறு

திருமாலின் இருபத்தைந்தாவது அவதாரம் எனக் கருதப்படுபவர் ஹரதத்தர் ஆவார். ஒரு சமயம் தேவாசுரப் போரில் தோல்வியடைந்த அசுரர்கள் பிருகு முனிவரது ஆசிரமத்தைத்  தஞ்சமாக  அடைந்தனர். முனிவர் வெளியே சென்றிருந்தபடியால் அவரது மனைவி , அவ்வசுரர்களுக்கு இரங்கித் தஞ்சம் தந்து உதவினார். அசுரர்களைத் தேடிவந்த திருமால், முனிவரது ஆசிரமத்தை அடைந்து ரிஷி பத்தினியின் மீது சக்கராயுதத்தை ஏவ, அது அவளது சிரத்தை அறுத்தெறிந்தது. இதை அறிந்த முனிவர் விஷ்ணுவைப் பல ஜன்மங்கள் எடுக்குமாறு சபித்தார். பின்னர் பஞ்சாக்ஷர மகாமந்திரம் ஓதித் தன்  மனைவியின் உயிரைத் திரும்பப்பெற்றார்.  சாப விமோசனம் பெற வேண்டித் திருமால் சிவபிரானைக் குறித்துக் கடும் தவம் மேற்கொண்டார். அதனால் சிவபிரான் அவற்றுக்குக் காட்சி தந்தருளினார். " நீ கஞ்சனூர் சென்று தவம் செய்தாயானால் மனம் சமாதானம் அடைவாய்" எனக் கூறியருளினார். அதன்படி விஷ்ணுவும் கஞ்சனூரை அடைந்து பல்லாண்டுகள் தவம் செய்து வந்தார். அதனால் மகிழ்ந்த ஈசன், " எனது பக்தனது சாபத்தை முற்றிலும் மாற்றாமல் சற்றுக் குறைத்து அருளுவேன். அதாவது இருபத்தைந்து அவதாரங்கள் நீ எடுக்க வேண்டும். அவற்றுள் ஐந்தில் மட்டும் நீ கர்வம் அடையும் போது யாமே அதை அடக்கிக் கர்வ பங்கம் செய்வோம். பிற இருபது அவதாரங்களிலும் நீ எம்மை வழிபடுவாயாக. அப்போது உனக்கு அருளுவோம் எனத் திருவாய் மலர்ந்தருளினார். முன்னம் நீ திரிபுராதிகளிடம் நாரதருடன் சென்று வேத மார்க்கத்திற்குப் புறம்பாக நடக்கத் தூண்டிய பாவத்தைப் போக்கிக் கொள்ள கஞ்சனூரில் வைஷ்ணவக் குடும்பத்தில் தோன்றி, சிவபரத்துவத்தை நிலை நாட்டி சைவக் கிரந்தங்களை இயற்றி, நிறைவாக நம்மை வந்து அடைவாயாக" என்று அருள் செய்தார்.

கஞ்சனூர் தக்ஷிணாமூர்த்தி சன்னதி 
கஞ்சனூரில் வசித்த காசிப கோத்திரத்தில் பிறந்த வாசுதேவர் என்ற  வைஷ்ணவப் பிராமணரின் தவத்தினால் மகாவிஷ்ணுவே அவரது குமாரனாக சுதர்சனாவதாரமாக அவதரித்தருளினார். இதனால் பெரிதும் மகிழ்ந்த வாசுதேவர், குழந்தைக்கு  சுதர்சனன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அக்குழந்தை சிறு வயதிலிருந்தே, சிவபக்தி மிக்கவனாகத் திகழ்ந்தான். அக்னீசுவரர் கோயிலுக்குத் தவறாமல் சென்று வழிபட்டு வந்தான். அவனது இச்செயலை வாசுதேவர் எத்தனையோ தடுக்க முயன்றும் பலனில்லை. உணவு கொடுக்காமல் அவனை வருத்தலானார். இதனால் மனம் வருந்திய அப்பாலகன், அக்னீசுவரர் கோயிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதியை அடைந்து தியானத்தில் ஈடுபட்டான். இறைவனைப் பலவாறு துதித்து வழிபட்டபின் நிறைவாகச்  சோர்வுற்று நிலத்தில் சாய்ந்து விட்டான். அப்போது கணங்களும் முனிவர்களும் சூழ ரிஷபாரூடராக பார்வதி தேவியுடன் பரமேசுவரன் காக்ஷி  அளித்து, அவனைத் தேற்றி, அவனுக்கு எல்லாக் கலைகளும் வருமாறு வரமருளினார். பின்னர் அவனைக் கருணையினால் நோக்கி, " நீ உனது உடல் பொருள்,ஆவி மூன்றையும் ஹரனாகிய எனக்குத் தத்தம் செய்து விட்டபடியால் உனக்கு ஹரதத்தன் என்ற தீக்ஷா நாமம் தந்தோம். உனக்கு எல்லாக் கலைகளையும் யாமே உபதேசிப்போம் " என்று அருளிய பிறகுத தம்மை மறைத்தருளினார்.

வீட்டிற்குத் திரும்பிய ஹரதத்தர் தமக்குப் பெருமான் அருளியதைத் தாய்- தந்தையரிடம் எடுத்துரைத்தார். இதைக் கண்டு வாசுதேவருக்குக் கோபம் மூண்டது. அவ்வூரில் வாழ்ந்து வந்த வைஷ்ணவப் பிராமணர்கள் ஒன்று கூடி, " இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். இவ்வூரிலுள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் அக்னி வளர்த்து அதற்கு மேல் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்தபடி இவன், " சிவனே பரம்பொருள்" என்று நிரூபிக்க வேண்டும். முடியாது போனால் தீக்கு இரையாக வேண்டும்" என்றார்கள்.

ஹரதத்தரும் அக்னீசுவரர் ஆலய தரிசனமும் ஆன்மார்த்த பூஜையும் செய்து விட்டுப் பெருமாள் கோயிலுக்குச் சென்று தீக் குழியின் மீது அமைக்கப்பட்ட காய்ச்சிய முக்காலியில் அமர்ந்து, " வேத புராணங்கள் சிவனே பரம்பொருள் என்று கூறியுள்ள படியால் இம்முக்காலி  அடியேனுக்குக் குளிரட்டும் " என்று கூறி, சிவபரத்துவ சுலோகங்களையும், இருபத்திரண்டு நிரூபணங்கள் அடங்கிய பஞ்ச ரத்ன சுலோகங்களையும்   கூறி அருளியவுடன் முக்காலி குளிர்ந்தது. தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். அனைவரும் ஹரதத்தரிடம் தம்மை மன்னிக்க வேண்டினர்.

பாண்டிய மன்னனான சிவ லிங்க பூபாலன் என்பவன்  ஹரதத்தரின் பெருமையைக் கேள்விப்பட்டுக் கஞ்சனூரை அடைந்து அவரை வணங்கி, அவருக்குக் கனகாபிஷேகம் செய்வித்தான். அவனது வேண்டுகோள் படி ஹரதத்தர் அவனுக்கு சிவ தீக்ஷை செய்வித்து, வட மொழியில் சுருதி சூக்த மாலை என்ற நூலை இயற்றி, அதற்கு அவனையே உரை எழுதும் படிப் பணித்தார். பாண்டிய மன்னனும் அந்நூலுக்கு சதுர்வேத தாத்பர்ய சங்கிரகம் என்ற உரையை எழுதி அதனைக் கஞ்சனூர் சென்று ஆசிரியப்பெருமானிடம் சமர்ப்பித்தான். ஹரதத்தர், சிவ பரத்துவத்தை நிலைநாட்டும் நூல்களாகத்  தச ஸ்லோகி என்பதையும், ஹரி-ஹர தாரதம்யம் என்ற 108 சுலோகங்கள் அடங்கிய நூலையும் இயற்றியருளினார்.
ஹரதத்தருக்குப் பதினெட்டு வயது வந்ததும், கமலாக்ஷி என்ற பெண்ணை அவருக்கு மணம் செய்துவித்தார்கள். அவருக்குத் தேவையான பொருள்களை சிவலிங்க பூபதி மன்னன் அவ்வப்போது அனுப்பி வைத்துக் கொண்டிருந்தான்.

அன்றாட நியமங்களாகக் காவிரியில் நீராடுதல், கஞ்சனூர் அக்னீசுவரர் கோயில் தரிசனம், மற்றும் அருகிலுள்ள திருக்கோடிகா(வல்), (வட) திரு வாலங்காடு, திருவாவடுதுறை, (தென்) குரங்காடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய ஆறு சிவஸ்தலங்களுக்குச் சென்று தரிசித்தல் என்று ஏழு ஸ்தலங்களையும் கால் நடையாகவே சென்று வழிபட்டு வந்தபிறகு, அதிதியுடன் போஜனம் செய்து வந்தார்.

                                 ஹரதத்தர் வாழ்வில் நடைபெற்ற அற்புதங்கள்  

சப்த ஸ்தான யாத்திரை மகிமையை உணர்த்தியது: 

பல தலங்களைத் தரிசித்தவனாக உறையூர் சோழன் ஒருவன் கஞ்சனூரை அடைந்து சிவாலய தரிசனத்திகுப் பின் ஹரதத்தரின் வீட்டிகுச் சென்று அவரை வணங்கி, " அடியேன் கயிலையைக் காண விரும்புகிறேன். அதற்கு ஒரு வழியைத் தேவரீர் கூறி அருள வேண்டும் " என்று வேண்டினான். அதற்கு ஹரதத்தர், " மன்னனே, முதலில் கஞ்சனூர் ஆலயத்தை வழிபட்டு விட்டுக் கால் நடையாகவே அருகிலுள்ள திருக் கோடிகா, திருவாலங்காடு, திருவாவடுதுறை, தென் குரங்காடுதுறை (ஆடுதுறை), திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய சிவ ஸ்தலங்களுக்குச் சென்று தரிசித்துவிட்டு அரை ஜாமத்திற்குள்ளாக மீண்டும் கஞ்சனூர் வந்து அக்நீசுவரரையும் கற்பகாம்பிகையையும் தரிசனம் செய்து யாத்திரையைப் பூர்த்தி செய்தால் உடனே கயிலையை அடையலாம்" என்றார். மறுநாள் சோழன் குதிரையில் ஏறி, பின்னால் குடை பிடிப்பவன் ஓடி வர, அரை ஜாமத்திற்குள் யாத்திரையைப் பூர்த்தி செய்துவிட்டுக் கஞ்சனூர் திரும்பினான். அவனது வருகைக்காக ஹரதத்தர் கோயில் வாயிலில் காத்திருந்தார்.

கோயில் வாயிலை அடைந்ததும், குதிரையும், அதன் பின்னால் ஓடி வந்த குடை பிடிப்பவனும் மூர்ச்சித்து விழுந்தனர். அப்போது கயிலையிலிருந்து வந்த சிவ கணங்கள் அக்குதிரையின் ஆத்மாவையும் , குடை பிடிப்பவனது ஆத்மாவையும்  தாங்கள் கொண்டு வந்த விமானத்தில் ஏற்றிக்  கொண்டு கயிலைக்குச் சென்றனர். அதுபோல் தானும் கயிலை செல்ல இயலவில்லையே என்று வருந்திய சோழ மன்னனிடம் ஹரதத்தர், "  அவ்விருவரும் கால் நடையாகவே சென்றதால் கயிலைக்குச் செல்ல முடிந்தது. நீயும் கால் நடையாகச் சென்றால் கயிலையை அடைவாய்" என்று அருளினார். அதன்படியே, சோழனும் மறுநாள் கால் நடையாகவே எழூர்களுக்கும் சென்று வந்தவுடன் விமானம் எறிக் கயிலையை அடைந்தான்.

அக்னியில் சமர்ப்பித்ததை அக்னீசுவரர் ஏற்றது:  

ஒரு சமயம் சிவலிங்க பூபதி அக்நீசுவரருக்காகப் பட்டு வஸ்திரம் ஒன்றை அனுப்பி வைத்து அதனைத் தனது ஆசாரியராகிய ஹரதத்தர் மூலம் சுவாமிக்குச் சேர்ப்பிக்குமாறு வேண்டினான். அந்த வஸ்திரத்தை ஹரதத்தர் தான் செய்த வேள்வியில் நெய்யில் நனைத்து ஈசுவரார்ப்பணமாகச்  செய்து விட்டார். அதனைக் கேள்விப்பட்ட சிவலிங்க பூபதி, அந்த வஸ்திரம்  சுவாமிக்குச் சார்த்தப்படாமல் அக்னிக்கு அளிக்கப்பட்டதே என்று மனம் வருந்தினான். சில தினங்களுக்குப் பின்னர் சிவலிங்கபூபதி கஞ்சனூர் வந்தபோது ஹரதத்தர் அவனை சுவாமி சன்னதிக்கு அழைத்துச் சென்று காட்டினார். " பூபதி, நீ அளித்த வஸ்திரத்தை சுவாமி ஏற்றுக் கொண்டுள்ளதைப் பார்" என்று காட்டினார். அந்த வஸ்திரம் சுவாமிக்குச் சார்த்தப்பட்டிருந்ததைக் கண்டு அதிசயித்த பூபதி, தன்  அறியாமையை உணர்ந்து ஆசிரியப் பெருமானின் திருவடிகளை வணங்கி அருள் பெற்றான்.

பசுக் கொலை செய்தவனுக்கு இரங்கிப் பிராயச்சித்தம் அருளியது:

கஞ்சனூரில் வாழ்ந்து வந்த தேவசன்மா என்ற பிராமணன் இரவு நேர இருட்டில் மாட்டுக் கொட்டகைக்குச் சென்று பசுக்கன்று இருப்பது தெரியாமல் அதன் மீது வைக்கோல் கட்டைப் போட்டு விட்டு இல்லம் திரும்பினான். மறுநாள் காலை அப்பசுங் கன்று வைக்கோல் பாரம் தாங்காமல் மூச்சு முட்டி  இறந்திருந்தது தெரிய வந்தது. உள்ளூர் அந்தணர்கள்,    " பசுக்கொலைக்குப் பிராயச்சித்தமே கிடையாது" என்றார்கள். இதைக் கேட்டு மனம் உடைந்த தேவசன்மா , ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்ற போது, வாயில் படியில் தலை மோதியதால் வலி பொறுக்கமுடியாமல், " சிவ சிவ  என்றான். நடந்ததை ஞான திருஷ்டியால் அறிந்த ஹரதத்தர், அவனைத் தேற்றி, " வரூந்தாதே, சிவ என்று ஒரு முறை சொன்னதும், பசுவைக் கொன்ற பாவம் தீர்ந்து விட்டது. அடுத்த முறை சிவ என்று சொன்னதால் நிச்சயமாக மோக்ஷம் கிடைக்கும்" என்று ஆறுதலளித்து அனுப்பினார். ஆனால் ஹரதத்தர் அதனை நிரூபிக்க வேண்டும் என்று ஊர்க் காரர்கள் கூறவே, ஹரதத்தரும் அதற்கு இசைந்து, " காவிரியில் நீராடிவிட்டு, ஒரு கைப்பிடி அருகம் புல்லோடு கோவிலுக்கு அவ்வந்தணர்களுடன் வருவாயாக" என்று தேவசன்மாவிடம் கூறினார்.

மறுநாள் காலை அக்னீசுவரர் சன்னதியை அனைவரும் அடைந்தனர். அப்போது அக்னீசுவரப் பெருமானைப் பாரத்து ஹரதத்தர் "  ஒரு முறை சிவ என்றால் பசுக்கொலைப் பாதகம் தீரும் என்பதை நிரூபிக்க இங்குள்ள கல்லால் ஆன நந்தி இந்த அருகம் புல்லை யாவரும் காணும் படி உண்ண வேண்டும்" என்று பிரார்த்தித்தார். உடனே, அருகிலிருந்த கல் நந்தி உயிர்பெற்று அப்புல்லைத் தின்றது. உள்ளூர் வாசிகள் ஹரதத்தரை வணங்கிப்  பிழை பொறுக்க வேண்டினர்.

தண்டனையைத் தான் ஏற்றது :

ஒரு சமயம் அக்னீசுவரர் ஆலய அர்த்தஜாம பூஜைக்கு வராத கணிகை ஒருவளை ஆலய அதிகாரிகள் வெய்யிலில்  நிற்க வைத்துத் தண்டித்ததைப் பார்த்த ஹரதத்தர், பல தவறுகள் செய்த ஆலய அதிகாரிகளும் இவ்விதம் தண்டனைக்குரியவர்கள் தானே என்று நினைத்துத் தாமும் வெய்யிலில் புரண்டார். அப்போது அங்கு வந்த ஒரு சிவனடியார் அதன் காரணம் வினவ, இக் கணிகையை அதிகாரிகள் தண்டிக்கின்றார்கள் . கோயில் சொத்தை அபகரித்துள்ள இவர்களை அக்நீசுவரரே தண்டிக்க வேண்டும். அவர்களுக்கான தண்டனையை நானே ஏற்றுக் கொண்டேன்." என்றார். இதைக் கேட்டுப்  புன்னகைத்துக் கொண்டே,  வந்த சிவனடியார் மறைந்து போனார். இதனைக் கண்ட அதிகாரிகள் ஹரதத்தரிடம் மன்னிப்பு வேண்டினர்.  

நாய்க் குட்டி வடிவில் சிவனைக் கண்டது:

ஒரு நாள் ஹரதத்தரது சிவபூஜையைக் காண இருவர் வந்தனர். சிவலிங்கத்திற்கு சங்கால் அபிஷேகம் செய்யத் துவங்கும் போது ஒரு நாய்க் குட்டி அருகில் வரவே, ஹரதத்தர் அச்சங்கிலிருந்த தீர்த்தத்தைச்  சிறிது அந்த நாய்க்கு  அளித்தார். இப்படிச் செய்யலாமா என்று வந்தவர்கள் வினவ, அதற்கு  ஹரதத்தர்,  " இப்போது நாய் வடிவில் வந்தது சிவ பெருமான். " என்றார். அந் நாய் மீண்டும் அங்கு வந்தது. அதன் மீது  ஹரதத்தர் தீர்த்தத்தைத்  தெளிக்க அது சிவ லிங்கமாக மாறியது.  அதனை வந்தவர்களிடம் கொடுத்து நித்திய பூஜை செய்து வருமாறு அருளினார்.

புலையன் வடிவில் கண்ட காட்சி:  

ஒரு நாள் காவிரிக்கு நீராடச் சென்ற ஹரதத்தர் அங்கு ஓர் புலையனும் புலைச்சியும் தங்களுக்குள்     பேசிக்  கொண்டிருந்ததைக் கேட்டார் ஹரதத்தர். தான் செய்த பாவத்தால் புலைச்சியானதாகக் கூறி, அப்பாவம் நீங்க வேண்டிக் காவிரியில் நீராடப் போவதாகக் கூறியவளைப்    புலையன் தடுத்து நிறுத்திவிட்டு, " இக்காவிரியாற்றிலுள்ள மணல் ஒவ்வொன்றும் சிவலிங்கம் என்பதை அறிவாய். நீ இதில் இறங்கினால் இதிலுள்ள எத்தனையோ இலிங்கங்களை மிதிக்க நேரிடும். இந்தத் தெய்வீக ஆற்றை இங்கிருந்தபடியே தரிசனம் செய்து உனது பாவங்கள் நீங்குவதைக் காண்பாய் " என்றான். இதனைக் கண்ட ஹரதத்தர் , பார்க்கும் யாவும் சிவமயமாகக் காணும் இவனன்றோ சிவஞானி! என்று எண்ணி அப்புலையனை நமஸ்கரித்து அவனது மிதியடியைத் தலை மீது வைத்துக் கொண்டார். அப்புலைய வடிவில் வந்தவர்கள் அக்நீசுவரரும் கற்பகாம்பிகையும் ஆவர். " ஹரதத்தா, உனக்குத் திருவடி தீக்ஷை செய்யவே இப்படித் திருவிளையாடல் செய்தோம் " எனத்  திருவாய் மலர்ந்து அருளினான்  பெருமான்.

நாய் உண்டது பிரசாதமானது:

ஹரதத்தரது மனைவி கமலாக்ஷி, அடுக்களையில் உணவு சமைத்து வைத்திருந்தபோது ஒரு நாய் அங்கு புகுந்து அதில் ஒரு கவளத்தை உண்டது. புலையன் சொன்னதுபோல் காவிரி மணல் யாவும் சிவன் என்றால் நாயும் சிவன் தானே! அப்படியானால் நாய் உண்டதை சிவன் உண்டதாகக் கருதி அதனைப் பிரசாதமாக ஏற்று உண்பது தானே முறை எனக் கருதினார்  ஹரதத்தர். அப்போது அந்த நாய் சிவனாகக் காட்சி தந்து மறைந்ததை இருவரும் கண்டனர். சுவாமி அப்போது அசரீரியாக,      " முன்பு உனக்குத் திருவடி தீக்ஷை தந்தோம். இப்போது குருவாகிய யாம் உண்ட சேஷத்தை உனக்குத் தந்தோம் " என்று அருளினார். ஆனந்தக் கூத்தாடிய ஹரதத்தர் திருவருளை வியந்தவராக நாய் உண்ட சேஷத்தை உண்டு,வீட்டிலுள்ளோரையும் உண்ணச் செய்தார்.

வீட்டிலிருந்தோர் செயல்கள்:

ஹரதத்தரின் தாயார்  ஒரு சமயம் வீட்டு வாசலில் நெல்லை உலற வைத்திருந்தபோது ஒரு காளை  மாடு அங்கு வந்து அந்த நெல்லைச் சிறிது தின்றது. மிஞ்சியிருந்த நெல்லை அங்கு வந்த ஹரதத்தர் குவித்து வைத்து, அக்காளை  மாடு உண்ணுமாறு உதவினார். இதைப் பார்த்துக் கொண்டே வந்த ஹரதத்தரின் தாயார் நெல்லை மாடு தின்று விட்டதே என்று எண்ணி அதைக் கோலால் அடித்து விரட்டினாள். அப்போது அங்கு வந்த ஹரதத்தர், " காளை  மாடு ஈசுவரனின் வாகனம் அல்லவா? இப்படி வாயில்லா ஜீவனை அடிக்கலாமா? " என்றார். சிறுது நேரத்தில் அவர் வீட்டு வாயிலில் சிவலிங்க பூபதி கொடுத்து அனுப்பிய நெல் மூட்டைகள் வந்து இறங்கின. வண்டிக்காரர் ஹரதத்தரிடம், " பூபதி தங்களிடம் நாற்பது கோட்டை நெல்லைக் கொடுத்து வரச் சொல்லியிருந்தார். வரும்  வழியில் ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட இருபது மூட்டைகள் போக மீதி இருப்பதே மிஞ்சின" என்றார். அவர் விடைபெற்றுச் சென்ற பிறகு  ஹரதத்தர், தாயாரிடம் " அம்மா, நீ உலர்த்திய நெல்லில் பாதியைக் காளை  தின்றது என்று அதை அடித்தாயல்லவா? நமக்கும் பாதி நெல்லே வந்து சேர்ந்தது " என்றார்.

அரிசியைத் தின்ற நாயை மனைவி வெட்டியது:

ஒருநாள் ஹரதத்தரின் மனைவி, அரிசியை முற்றத்தில் வைத்து விட்டு அடுக்களையில் வேலையாக இருந்தாள் . அப்போது அங்கு வந்த ஒரு நாய் அந்த அரிசியை உண்ணத் துவங்கியது. அதைக் கண்டு கோபம்கொண்ட கமலாக்ஷி, அந்த நாயை விரட்டுவதற்காக அரிவாள் மனையை அதன் மீது வீசி எறிந்தாள் . நாயும் வெட்டுப்பட்டு இறந்தது. அதக் கேட்ட ஹரதத்தர் அங்குவந்து அந்த நாய்க்கு விபூதி பூசி விட்டு அதன் காதில் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓதினார். அதனால் அந் நாய்  நற்கதி பெற்று விமானமேறி தேவலோகம் அடைந்தது.

அக்நீசுவரரே ஸ்லோகத்தைப் பூர்த்தி செய்தது:

தனது தாயார் காளை  மாட்டைக்  கோலால் அடித்து விரட்டிய பாவத்தையும்,மனைவியார்  நாயைக் கொன்ற பாவத்தையும் தீர்ப்பதற்காக ஒரு ஸ்லோகம் எழுதத் தொடங்கினார். பிராயச்சித்தம் என்னவென்று விளங்காததால் இரண்டே வரிகள் எழுதித்  தொடங்கப்பெற்ற ஸ்லோகத்தைப் பூர்த்தி செய்யாமல் காவிரிக்கு  நீராடச் சென்றார். வீட்டிற்குத் திரும்பியதும் தான் எழுதிய ஓலைச் சுவடியைக் கொண்டுவந்து பிரித்துப் பார்த்தால் அந்த ஸ்லோகத்தின் மீதி இரண்டு வரிகள் எழுதப்பட்டிருந்தன. பஞ்சட்சர  ஜபம் செய்வதே பிராயச்சித்தம் என்ற பொருள் உடையவை அவ்வரிகள். இதை யார் எழுதியது என்று மனைவியிடம் கேட்டபோது அதற்கு அவர், " தாங்கள் தானே திரும்பி வந்து எழுதி வைத்து விட்டுக் காவிரிக்குச் சென்றீர்கள்?" என்றார். தம் உருவில் வந்து எழுதியது அக்நீசுவரரே என்று ஹரதத்தருக்கு அப்போதுதான் புலப்பட்டது.

மாசிலாமணீசுவரர் இடையன் உருவில் துணை வந்தது:

ஒருசமயம் ஹரதத்தர் திருவாவடுதுறைக்குச் சென்று மாசிலாமணீசுவரரைத் தரிசித்து விட்டுத் திரும்புகையில் இருட்டி விட்டது. கரிய மேகங்கள் சூழ்ந்தபடியால் வழியும் தெளிவாகத் தெரியாததால்  சுவாமியை தியானித்தார். அப்போது கையில் விளக்கேந்தியவாறு ஒரு  பசு மேய்க்கும் இடையன் ஒருவன் அவரிடம் வந்து, " நான் இவ்வூரில் வசிக்கும் இடையன். என் பெயர்  மாசிலாமணி. எனது பசுவைத் தேடிக் கொண்டு இங்கு வந்தேன்.தாங்கள் மாபெரும் சிவஞானி. நான் உங்களுக்குத் துணையாக வருகிறேன்" என்ரூ கூறி விளக்கை ஏந்தியபடியே அவருக்கு முன் நடந்தான். கஞ்சனூர் வந்ததும் அவரிடம் அந்த ஆயன் விடை பெற்றுக் கொண்ட போது, ஹரதத்தர் தன்  வீட்டிலிருந்த சோற்றையும் பாகற்காய் குழம்பையும் அவனிடம் தந்து உண்ணச் சொன்னார். அதற்கு அவன் அதை ஏற்றுக்கொண்டு  தனது ஊர் திரும்பிய பிறகு உண்ணுவதாகக் கூறிவிட்டு விடை பெற்றுச் சென்றான். இடையன் வடிவில் வந்த மாசிலாமணீசுவரர், திருவாவடுதுறை யிலுள்ள தனது ஆலயத்திற்குள் எழுந்தருளித்  தாம் கொண்டு வந்த சோற்றையும் பாகற்காய் குழம்பையும் சன்னதியில் சிதறிவிட்டு மறைந்தருளினார்.

மறுநாள் காலையில் அர்ச்சகர் இவ்வாறு சிதறிக் கிடப்பனவற்றைக் கண்டு பதறினார். அதிகாரிகள், ஆலய பரிசாரகர்களை அழைத்து உண்மையைக் கூறாவிட்டால் சவுக்கடி விழும் என்றனர். அப்போது பெருமான் அசரீரியாக, " நேற்று இரவு அர்த்த ஜாம தரிசனம் செய்து விட்டுக்  கஞ்சனூர் திரும்பிய ஹரதத்தனோடு யாமே துணையாகச் சென்று அங்கு அவன் தந்தவற்றைப் பெற்றுக் கொண்டு வந்து இங்கு சிதறுவித்தோம்" என்றருளினார். இந்தச்  செய்தியைக் கேள்விப்பட்ட ஹரதத்தர் , திருவருளை நினைந்து ஆனந்த பரவசம் அடைந்தார்.

தைப்பூச மகிமை உரைத்தது:

திரியம்பகர் என்பவர் ஒரு யதியின் ஆசிரமமடைந்து அந்த யதியின் விருப்பப்படி காசி யாத்திரை சென்றார். அப்போது அவருக்குப் பணிவிடை செய்து வந்த ஒருத்தி, திரியம்பகர் திரும்பி வருவதை யோகி அறிந்து விட்டார்  என்பதை உணர்ந்தாள். மணலில் அவர் எழுதுவது யாருக்கும் புரியாதபோது அவள், த்ரியம்பகருக்குச் சொல்லவேண்டிய ரகசியத்தை எழுதியிருக்கிறார் என்றாள். தான் வந்த போது யதியின் ஆவி பிரிந்ததை  அறிந்த திரியம்பகர், குருவுக்குக்  கிரியைகள் செய்து முடித்தார். அந்திம காலத்தில் யதி எழுதியது என்ன என்று அவர் அப்பெண்ணைக் கேட்டபோது ஒரு மாதம் கழித்துச் சொல்வேன் என்று கூறி அதற்குள் ஆசிரம சொத்துக்களைக் கைப்பற்றலானாள். பின்னர் கேட்டபோது "யதி பஞ்சாக்ஷரம் எழுதினார்  அதுவே ரகசியம்" என்று கூறினாள். அவளை விரட்டிய திரியம்பகர் அவளது தொடர்பால் ஏற்பட்ட பாவம் நீங்கத்  தல யாத்திரை செய்து வரும்போது திருவிடைமருதூரை அடைந்தார். வழியில் கஞ்சனூரை அடைந்து ஹரதத்தரை வணங்கினார் . ஹரதத்தரும் அவருக்குத் தனது மனையில் உணவளித்தார். பெண் தொடர்பு கொண்டவரோடு ஹரதத்தர் எதற்காக உணவருந்த வேண்டும் என்று உள்ளூர் வாசிகள் என்று கேட்டபோது, அவர்களிடம் ஹரதத்தர்," பாவம் செய்ததது என்னவோ உண்மை தான். ஆனால் எப்போது இந்தத் தலத்திற்கு வந்து காவிரியில் தைப்பூச தீர்த்தவாரியில் நீராடினாரோ அப்போதே அவரது பாவங்கள் நீங்கப்பெற்று விட்டார்" என்றார். அந்தப்  பதிலைக் கேட்டவர்கள் திருப்தி அடையாததால் அவர்களுடன் ஹரதத்தர் மகாலிங்க சுவாமியின் சன்னதியை அடைந்து பிரார்த்தித்தபோது, சுவாமி அசரீரியாக, " தைப்பூச நீராடல் எல்லாப் பாவங்களையும் நீக்கும். இது சத்தியம். இந்தத் துறவியின் பாவமும் நீங்கி விட்டது" என்று மும்முறை ஒலித்தருளினார். மனம் மகிழ்ந்த திரியம்பகரும் ஹரதத்தரிடம் விடை பெற்றுக் கொண்டு தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார்.  

முடவனான தங்கை மகனைக் காசிக்கு அனுப்பியது:

ஹரதத்தரின் தங்கை மகன் கங்காதரர் என்பவர் ஒரு பிறவி முடவர் . அவருக்குக் காசிக்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் ஹரதத்தர் அவரைக் கஞ்சனூரிலுள்ள பிரம தீர்த்தத்தில் மூழ்கச் செய்து அதன் பலனாகக்  காசியில் கரை ஏறுமாறு செய்தார். மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த கங்காதரர், காசியில் விஸ்வநாதரையும் விசாலாக்ஷியையும் வழிபட்டு வந்தபோது ஆலயத்தின் வெளியில் ஒரு தனவந்தரையும் அவரது மனைவியையும் கண்டார். தான் கஞ்சனூரிலிருந்து வருவதாகக் கூறியதும், அத்  தனவந்தர், ஹரதத்தர் தனது நண்பர் என்றும் அவரை மிகவும் விசாரித்ததாகக் கூறும் படியும் சொல்லிவிட்டுகே  கங்காதரரை மணிகர்ணிகையில் மூழ்கச் சொன்னார். அவரும் அப்படியே செய்ய, கஞ்சனூரில் தற்போது மனியாங் குளம் என்று வழங்கப்படும் மணி கர்ணிகா குளத்தில் எழச் செய்தருளினார். நடந்தவற்றை அறிந்த ஹரதத்தர், மெய் சிலிர்த்து, " கங்காதரா, அவர்கள் இருவரும் விசுவநாதரும் விசாலாட்சியும் தான். அவர் என்னை நண்பன் என்று சொன்னதற்கு எத்தனை புண்ணியம் செய்தேனோ"  என்று ஆனந்தப் பட்டார். பின்னர் கங்காதரர் ஹரதத்தரிடம் எல்லா சாஸ்திரங்களையும் கற்றார். ஹரதத்தர் இயற்றிய சுருதி சூக்த மாலைக்கு சிறந்த உரையையும் எழுதினர். எல்லோரும் அவரை, " இளைய ஹரதத்தர்" என்று பாராட்டினர்.

ஹரதத்தர் கயிலாயம் சென்றது:

ரிஷபாரூடராகக்  கயிலாசநாதனான பரமேசுவரன் பார்வதி தேவியோடு ஹரதத்தருக்குக் காட்சி அளித்துக் கயிலாச பதம் தருவதாகவும் வேறு வரம் வேண்டினால் கேட்பாயாக என்றும் அருளினார். அப்போது ஹரதத்தர், " சுவாமி, அடியேனது அண்டை வீட்டார் பதினான்கு பேரும் கைலாச பதம் பெற வேண்டும். அதோடு, அடியேன் உண்ட சே ஷத்தைச் சாப்பிட்டு வந்த நாய்க்கும் அப்பதம் கிடைக்க அருள வேண்டும்" என்று பிரார்த்தித்தார். இறைவனும் அப்படியே வரம் தந்தருளினான். கயிலையில் இருந்து விமானம் வந்தது அதில் ஹரதத்தரும், அண்டை வீட்டாரும் விநாயக  பூஜை செய்து வந்த ஒரு கிழவியும், சேஷத்தை உண்ட நாயும் ஏறிக்  கயிலாயத்தை அடைந்தனர்.  

ஹரதத்தர் அருளிய நூல்கள்:

சிவபரத்துவ சுலோகங்கள்; சுலோக பஞ்சகம்; தச சுலோகி; ஹரி ஹர தார தம்மியம் சுருதி சூக்த மாலை என்பன.

துணை நின்ற நூல்: " ஹரதத்தர் வரலாறு " கஞ்சனூர் சிவபூசைச் செல்வர் இரா. கலியபெருமாள் பத்தர் அவர்களின் மணி விழா மலர்.

Thursday, October 6, 2016

திருத்தினைநகர் சிவக்கொழுந்தைச் சென்றடைவோம்

திருத்தினைநகர் சிவாலயம் 
தல யாத்திரை செய்வதில் தற்போது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆன்மீக இதழ்களும், தொலைக் காட்சிகளும்  திருத்தல தரிசனமாகப் பல ஊர்களை அறிமுகம் செய்து வைக்கின்றன. ஜோதிடர்களும் மக்களைப பரிகாரத் தலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். கவலைகள் பெருகி வரும் இந்நாளில் மக்கள் இறைவனை நாட ஆரம்பித்து விட்டனர் என்றும் சொல்லலாம். அரசின் சுற்றுலாத் துறையும் பல தனியார்களும்  ஸ்தல யாத்திரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதனால் மக்கள் பெரும்பாலும் பிரபலமான கோயில்களையும், பரிகாரக் கோயில்களையும் நாடுகின்றனர். அவற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்கு அவர்கள் செல்வதில்லை. உதாரணமாக, சந்திரக் கிரகப் பிரீதி செய்கிறேன் என்று திங்களூருக்குச் செல்பவர்களில் எத்தனை பேர்  வழிலுள்ள பாடல் பெற்ற தலமாகிய திருப் பழனத்திற்குச் செல்கிறார்கள்?  கோயில் சுற்றுலா செல்பவர்களும் எத்தனை கோயில்களுக்குச் செல்கிறோம் என்ற எண்ணிக்கையிலேயே குறியாக இருக்கிறார்கள்.

பாடல் பெற்றவையும், பாடல் கிடைக்கப்பெறாததும் ஆகிய எண்ணற்ற தலங்கள் திரும்பிப் பார்க்கக் கூட ஆளில்லாத நிலையில் உள்ளன.அந்த ஊர்களில் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் நகரங்களை நோக்கி நகர்ந்து விட்டதன் விளைவே இது. போதாக் குறைக்கு ஆலய நிலங்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டும் தீர்வு காணாத நிலை ! இப்படி இருக்கும் போது  கைவிடப்பட்ட கோயில்களைப்  பற்றிக் கவலைப் படுவோர் மிகச் சிலரே. 

இம்மாநிலத்திலும், பிற மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் வாழ்ந்துவரும் அன்பர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். பிரபலமான கோயில் உண்டியல்களை நிரப்பிவிட்டுச் செல்வதைச்  சற்றுக்  குறைத்துக் கொண்டு,  ஏழ்மை நிலையில் உள்ள ஆலயங்களையும் அவற்றில் பணி புரியும் சிப்பந்திகளையும் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கலாம் அல்லவா? அக்கோயில்களுக்கு முடிந்தபோதெல்லாம் சென்று வழிபாடுகள், உழவாரப் பணிகள் போன்றவற்றையும் செய்யலாம். அப்போதுதான் அக்கோயில்களில் தீபம் எரியும். அர்ச்சகர்கள் வாழ்விலும் ஒளி ஏற்றப்படும். மன்னர்கள் தமது பிற்கால சந்ததியர்களின் மீது வைத்த நம்பிக்கை பாழாக விடலாமா? 

கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் இரண்டு அற்புதமான பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. ஆலப்பாக்கத்திற்கு அண்மையில் உள்ள தியாகவல்லி என்று அழைக்கப்படும் திருச்சோபுரமும் , மேட்டுப்பாளையம் என்ற ஊரிலிருந்து  5 கி.மீ. தொலைவில் தீர்த்தனகிரி என்ற பெயரில் உள்ள திருத்தினை நகரில் உள்ள சிவக் கொழுந்தீசுவரர் கோயிலும் அவ்விரண்டு ஆலயங்கள். 

                                                     திருத்தினை நகர்

 தல இருப்பிடம்:  கடலூருக்குத் தென்மேற்கில் 16 கி.மீ. தொலைவில் பெண்ணை ஆற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது  

தல வரலாறு: இவ்வூருக்கு அருகிலுள்ளதும் கருடனால் உண்டாக்கப்பட்டதுமான பெருமாள் ஏரியின் தென்புறம் உள்ள ஐஎழுமூர் என்ற ஊரில் பெரியான் என்பவன் வாழ்ந்து வந்தான். வறுமை வந்த காலத்திலும் சிவனடியார்களுக்கு உணவு அளித்து வந்தான். தனது நிலத்தில் தினையைப் பயிரிட்டு அதன் மூலம் கிடைத்த வருமானத்திலிருந்து அடியார்களுக்கு அமுதளித்து வந்தான். அவனது தொண்டை உலகம் அறிய வேண்டி இறைவன் ஒருநாள் அவன் முன்னர் ஜங்கம வடிவில் தோன்றி, அமுதளிக்குமாறு வேண்டினான். அதைக் கண்டு இரங்கிய பெரியானும், " நான் தற்போது நிலத்தை உழுது கொண்டிருக்கிறேன். அதில் பயிரிட வேண்டி, தினை  விதைகளை இதோ வைத்திருக்கிறேன். தாங்களோ பசியால் மிகவும் வாடிக் களைத்திருக்கிறீர்கள் . நான் எனது வீட்டிற்குச் சென்று உணவு எடுத்து வருகிறேன். அதுவரையில் தாங்கள் தினை  விதைகளை உட்கொள்ளலாம்." என்று கூறிவிட்டுத் தனது இல்லத்திற்குச் சென்றான்.  இறைவனோ பெரியான் திரும்பி வருவதற்குள் கையில் இருந்த தினை  விதைகளை நிலத்தில் விதைத்துவிட்டு ,  அன்றே அவை முதிர்ந்து விளையும்படி செய்தருளினான். 

சிவனடியார் வந்த செய்தியை இல்லம் திரும்பிய பெரியான் தன்  மனைவியிடம் கூறினான். வீட்டில் உணவுப் பொருள்கள் எதுவும் இல்லாததால் நிலத்தில் விதைப்பதற்காக வைத்திருந்த தினை விதைகளைக் கையில் எடுத்துக் கொண்டு  மனைவியுடன் நிலத்திற்குத் திரும்பினான். அங்கு தினைப் பயிர் விளைந்திருந்த அதிசயம் கண்டான். இருவரும் எங்கு தேடியும் வந்திருந்த அடியாரைக் காணவில்லை. கொன்றை மர  நீழலில் ஒரு சிவலிங்கம் இருந்ததைக் கண்டு அதிசயித்து நின்றனர். அப்போது வான வீதியில் உமாதேவியுடன் சிவபெருமான் காட்சியளிக்க, இருவரும் திருவருட் கருணையை எண்ணி எண்ணி நெகிழ்ந்து தொழுதனர். இவ்வாறு அன்றே தினை  விளைத்து அன்றே விளைந்ததால் இத்தலம் தினை  நகர்  என்று பெயர் பெற்றது. இவ்வரலாறு  தென்புறச்  சுவற்றில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இப்போதும் தினை  அமுது சுவாமிக்கு நிவேதிக்கப்படுகிறது.

சம்பந்தரை அடியார்கள் எதிர்கொண்டு வரவேற்றல் 
பிற செய்திகள்: இத்தலத்துப் பெருமானை திருமாலானவர் மூன்று தினங்கள் வழிபாட்டு,    முராசுரனை  வதைத்ததால் முராரி என்ற சிறப்புப் பெயர் பெற்றார். 

ஜாம்பவான் இங்கு வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து நீண்ட ஆயுள் பெற்று, ராம பிரானுடன் ராவணனைத் தேடும் வானர சேனைகளுக்குத் துணை புரிந்தார். அம்பாள் சன்னதியில் இவர் பூஜித்த சிவ லிங்கம் உள்ளது. தீர்த்தம் ஒன்றும் இவர் பெயரில் அமைந்துள்ளது.  

ஸ்தல விருக்ஷமான  கொன்றை மரத்தடியில் நந்திதேவர் இறைவனை வழிபட்டுள்ளார். பிராகாரத்தில் உள்ள கொன்றை மரத்தடியில் சிவலிங்கமும் நந்தியும் இருப்பதைக் காணலாம். 

பதஞ்சலி,வியாக்கிரபாதர் ஆகியோரும் இங்கு வந்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றனர். 

வங்க தேசத்து மன்னனான விசுவ நிருபன் என்பவன் பிரமஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு ஒவ்வொரு சிவத்தலமாகத் தரிசனம் செய்து கொண்டு வரும்போது திருத்தினை நகரை அடைந்து அங்கிருந்த  தாமரைத் தடாகத்தில் விதிப்படி ஸ்நானம் செய்து இறைவனைக் காலந்தோறும் தொழுது வந்தான். அதனால் அவனது சரும நோயும், பிரமஹத்தி தோஷமும் நீங்கின. அவனது மகனான வீர சேனன் என்பவன் இங்கு மூன்று ஆண்டுகள் தங்கித் திருப்பணிகள் செய்வித்தான். இவனது வில்லேந்திய உருவச்சிலையை நால்வர் சன்னதியில் காணலாம். 

கோயிலமைப்பு:  ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் நமது வலப்புறம் தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ள கருந்தடங்கண்ணி அம்பிகையின் சன்னதி அமைந்துள்ளது. 

ராஜ கோபுரமும் அம்பாள் சன்னதியும் 
வடமொழியில் தேவியின் திருநாமம் நீலாயதாக்ஷி என்பதாகும். அம்பிகையின் இப்பெயர், இத்தலத்தின் மீது சுந்தரர் அருளிய தேவாரத் திருப்பதிகத்தில், " கருந் தடங் கண்ணி பங்கனை "  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அம்பிகையின் மகாமண்டபத்திலுள்ள சுவற்று ஓவியங்கள் சம்பந்தர், அப்பர் ஆகியோர் இத்தலத்துக்கு வருகை தந்தபோது அடியார்கள் எதிர்  கொண்டு அழைப்பதைச் சித்தரிப்பதாக வரையப்பட்டுள்ளன.  

மூலவர் விமானம் 
மூலவர் சன்னதி கிழக்கு நோக்கியவாறு அர்த்த மண்டபம், மகா மண்டபத்துடன் விளங்குகிறது. சதுர ஆவுடையாரோடு பெருமான் அற்புதக் காட்சி வழங்குகிறார்.தெற்கு நோக்கிய நடராஜர் சபையில் விஷ்ணு  சங்கு  ஊதுபவராகவும்,பிரமன் பஞ்சமுக வாத்தியம் வாசிப்பவராகவும் இருபுறமும் விளங்க ஆடல்வல்லான் அம்பிகையுடன் அருட் காட்சி அளிக்கின்றான். 

பிராகாரச் சுவற்றில் தலவரலாற்றுச் சிற்பங்களின்  வரிசையில், பெரியான், ஜன்கமராக வந்த இறைவன், தினை விதைத்தது, தினை முதிர்ந்து நிற்பது,கொன்றையடியில் காட்சி தருவது பெரியானும் அவனது மனைவியும் வணங்குவது போன்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

ஆண்டு முழுதும் பூக்கும் சரக்கொன்றை மரம் தல விருக்ஷமாகப் பிராகாரத்தில் அமைந்துள்ளது. ஜாம்பவான் பூஜிக்கும் சிற்பமும் அம்பிகை பூஜித்த பெரிய லிங்கமும் இருக்கக் காணலாம். தேவ கோஷ்டங்களிலுள்ள மூர்த்தங்களில் இரு கால்களையும் மடக்கிய வண்ணம் காட்சி தரும் தக்ஷிணாமூர்த்தி குறிப்பிடத்தக்கவர் . சண்டிகேசுவரரும்,சண்டிகேஸ்வரியும் சேர்ந்து ஒரே சன்னதியில் காட்சியளிக்கின்றனர். 

தீர்த்தங்கள்:  
1 கௌரி தீர்த்தம்: பிராகாரத்தில் கிணற்று வடிவிலுள்ளது. சிவபூஜைக்காக அம்பிகையால் உண்டாக்கப்பட்டது. 
2 ஜாம்பவான் தீர்த்தம்: ஜாம்பவானால் ஏற்படுத்தப்பட்ட இத்தீர்த்தம் தற்போது தாமரைக்            குளமாகக்  கோயிலின் வடபுறம் அமைந்துள்ளது.
3 கருட தீர்த்தம்: ஏரி  வடிவிலுள்ள இத்தீர்த்தத்தின் அருகில் கருட லிங்கக் கோயில் உள்ளது.
4 தேவ தீர்த்தம்: அருகிலுள்ள கடல்,  தேவ தீர்த்தம் எனப்படுகிறது. 
5 சக்கர தீர்த்தம் :  ஊரின் மூலையில் உள்ள மற்றொரு தீர்த்தம் 

சிவரகசியத்தில் இத்தல மகாத்மியம் கூறப்பட்டுள்ளது. இதனைத் தமிழில் குமார மைய மருந்தார் என்பவர் 854 விருத்தங்களால் இயற்றியுள்ளார். 

இத்தலத்தைத்  தேவாரம் பாடிய மூவரும் வந்து தரிசித்ததாகப் பெரிய புராணம் கூறும். ஆனால் தற்போது நமக்கு சுந்தரர் அருளிய ஒரு பதிகம் மட்டுமே கிடைக்கிறது. ஏனையவை மறைந்து போயின. வாழ்க்கை நிலையாமையை உணர்த்தும் அற்புதமான திருப்பதிகத்தை இத்தலத்து இறைவன் மீது சுந்தரர் பாடியருளியுள்ளார். அப்பதிகத்தைப் பாடவல்லார்கள் முக்தி பெறுவர் என்று பதிகப்பலனும் அறிவிக்கின்றார் அவர். 

 நடுநாட்டிலுள்ள தேவாரப்பாடல்களைப்  பெற்ற தலங்களில் ஒன்றான திருத்தினை நகரைச் சென்றடைந்து சிவக் கொழுந்தீசனின் திருவருளைப் பெற அன்பர்கள் அனைவரையும்  அழைக்கிறோம்.  இவ்வாலய  அர்ச்சகரைத் தொடர்பு கொள்ள வேண்டிய   தொலை பேசி எண்கள்: 097864677593; 09150151192; 09047140464. 

Wednesday, June 29, 2016

அம்பரும் அம்பர் மாகாளமும்

அம்பர் ஆலயம் 
அம்பர், அம்பர் மாகாளம் ஆகிய இருதலங்களும் திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகங்கள் பெற்றவை. இவ்விரண்டும் ஒன்றோடொன்று 1.5 கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ளவை. கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் வழியாக காரைக்கால் செல்லும் பேருந்துகள் இவ்வூர்கள் வழியாகச் செல்கின்றன. அம்பர் என்ற தலம் அம்பல்  என்றும் அம்பர் மாகாளம் என்ற தலம் திருமாகாளம் என்றும் மக்கள் வழக்கில் வழங்கப்படுகின்றன. மயிலாடுதுறை- திருவாரூர் செல்லும் இருப்புப் பாதையிலுள்ள பூந்தோட்டம் ரயிலடியிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ள திருமாகாளத்தையும் அதன்  அருகிலுள்ள அம்பரையும் தரிசிக்கலாம்.

                                                             
                                                                      அம்பர் 

சங்க நூல்களான  புறநானூறு , நற்றிணை மற்றும்  திவாகர நிகண்டு ஆகிய நூல்கள் மூலம்  அம்பரில் அரசர்களும், கொடையாளிகளும் , புலவர்களும், கலைஞர்களும் வாழ்ந்ததாக அறிகிறோம்.

தண்ணீரும் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு .

என்ற தனிப்பாடலும் அம்பரின் சிறப்பையும் பெருமையையும் விளக்குகிறது.

தலப்பெயர்கள்:மாகாளபுரம் ,மாகாளிபுரம்,புன்னாகவனம், பிரமபுரி, நந்தராஜபுரம், சம்பகாரண்யம், மாரபுரி ஆகிய பெயர்களும் அம்பருக்கு உண்டு என்பதைத் தலபுராண வாயிலாக அறிகிறோம்.

மூர்த்திகள்:அம்பர் பெருங் கோயில் கோச்செங்கட்சோழ நாயனார் கட்டிய மாடக் கோயில்களுள் ஒன்று. சுவாமிக்குப் பிரமபுரீசுவரர் என்றும் அம்பிகைக்கு சுகந்த குந்தளாம்பிகை என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. நந்தன் என்ற அரசன் இங்கு தங்கி வழிபாட்டு வந்த காலத்தில் கடும் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. அப்பஞ்சம் தீரும்வரை தினமும் அரசனுக்கு ஒருபடிக்காசை விநாயகப் பெருமான் வழங்கியதால்,  அவருக்குப் படிக்காசு விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள பிற ஆலயங்களில் சட்டைநாதர், புவனேசுவரர் பைரவர் ,கயிலாசநாதர், திருமால்,காளி ஆகிய மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.

தீர்த்தங்கள்: அரிசிலாறு, அன்னமாம் பொய்கை, இந்திர தீர்த்தம், சூல  தீர்த்தம் ஆகியவை .

ஸ்தல விருக்ஷங்கள்: புன்னை,மருது ஆகியவை.

கோயில் அமைப்பு:
அரிசிலாற்றின் வட கரையில் கிழக்கு நோக்கியபடி இந்த ஆலயம் அமைந்துள்ளது. மூன்று நிலை ராஜ கோபுரத்தின் அருகில் இந்திர தீர்த்தம் உள்ளது. ராஜ கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் கட்டு மலையின் மீது சுவாமி சன்னதியும் கீழே அம்பாள் சன்னதியோடு கூடிய வெளிப் பிராகாரத்தையும் காண்கிறோம். சுதை வடிவிலான மிகப்பெரிய நந்தி சுவாமி சன்னதியை நோக்கியவாறு அமைந்துள்ளது.
தென்கிழக்கு மூலையில் தல விருக்ஷமான புன்னை மரமும் அதனருகே ஆதி பிரமபுரீசுவரரும், கிணறு வடிவிலுள்ள அன்னமாம் பொய்கையும் ,சோமாசி மாற நாயனார் சன்னதியும் இருப்பதைத் தரிசிக்கிறோம்.

கன்னிமூலையில் விநாயகர் , முருகன்,மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. கோஷ்டங்களில் பிரமனும் துர்க்கையும் காணப்படுகின்றனர்.சண்டிகேசுவரர் சன்னதியும், பைரவர்,சூரியன் ஆகிய சன்னதிகளும் கிழக்கு பிராகாரத்தில் அம்பாள் சன்னதியும் உள்ளன.

 மாடக்கோயிலின் படிகளை ஏறினால் சோமாஸ்கந்தர் சன்னதியும், மூலவரான பிரமபுரீசுவரர் சன்னதியும் அழகிய விமானங்களோடு அமைந்துள்ளதைக் காண்கிறோம். மலைக் கோயிலின் பிராகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி தரிசனம் தருகிறார். சுவாமி சன்னதி வாயில் சுவற்றில் சம்பந்தர்  பாடியருளிய பதிகக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

சுவாமி சன்னதியின் மகாமண்டபத்தில் நடராஜ சபை, கணபதி, துவாரபாலகர் ஆகியவற்றைத் தரிசிக்கிறோம். மூலஸ்தானத்தில் பிரமபுரீசுவரர் அழகிய சிவலிங்கத் திருமேனியோடு காட்சி தருகிறார். பெருமானுக்குப் பின்புறம் சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசிக்கிறோம். மாடக்கோயிலின் கீழ் மண்டபத்தில் சம்பந்தர்,அப்பர்,கோச்செங்கட்சோழர் ஆகிய மூர்த்தங்களைக் காண்கிறோம்.

கட்டு மலையிலிருந்து கீழே இறங்கி வந்து சுகந்த குந்தலாம்பிகையின் சன்னதியை அடைந்து அருள் பெறுகிறோம்.  

தல புராணச் செய்திகள்: இத்தலத்திற்கு வடமொழியில் இருந்த புராணம் கிடைக்காமல் இருந்தபோது அவ்வூர் அறிஞர்களும் செல்வந்தர்களும் அதை எப்படியாவது பெற்று தக்க ஒருவரால் தமிழில் செய்யுள் வடிவில் இயற்றுவிக்க வேண்டும் என்று கருதினார்கள். அவர்களுள்  வேலாயுதம் பிள்ளை என்ற செல்வந்தர் , திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் செல்லும்போது அங்கு ஆதீன வித்துவானாக விளங்கிய திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களது தமிழ்ப்புலமையைக் கேள்வியுற்று, அவர் மூலம் அம்பர்ப் புராணம் இயற்றுவிக்க எண்ணினார்.  நெடுநாட்கள் முயன்றபின் அவ்வடமொழிப் புராணப் பிரதி தஞ்சை சரஸ்வதி மகாலில் கிடைக்கப்பெற்று, அதனைத் தமிழாக்கம் செய்து அதனைக் கொண்டு பிள்ளையவர்களைப் புராணம் இயற்றுமாறு வேண்டவே, அவரும் அவ்வன்புக்கு இணங்கி 1869 ம் ஆண்டு அதனை இயற்றத் தொடங்கினார். வண்டியில் பயணம் செய்த போதும் பிள்ளை அவர்களின் வாயிலிருந்து செய்யுட்கள் மடை திறந்த வெல்லம் போல வெளி வந்தன. அவற்றை உடனிருந்து எழுதிய பிள்ளையவர்களின் மாணாக்கரான டாக்டர் உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்களது வாக்காலேயே அந்த அனுபவத்தைக் காண்போம்:

" இவர் விரைவாகச் செய்யுள் இயற்றும் ஆற்றல் உடையவர் என்று பலரும் புகழ்ந்து சொல்லுதலைக் கேட்டு அந்த நிலைமை எப்பொழுதாவது பார்க்கும்படி நேருமோ என்று ஆவலோடு பல நாளாக எதிர்பார்த்திருந்த எனக்கு இவர் பாடல்களைச் சொல்ல அவற்றை எழுதும் பாக்கியம் அன்று கிடைத்ததைக் குறித்து மெத்த சந்தோஷம் அடைந்தேன். இனி யாரேனும் இவர்களைப் போலப் பாடப் போகிறார்களா? என்ற எண்ணமும் எனக்கு அப்போது உண்டாயிற்று... ஒரு மகா கவியின் வாக்கிலிருந்து கவிதாப் பிரவாகம் பெருகிக் கொண்டிருப்ப அதனைக் காதினால் கேட்டும், கையினால் எழுதியும், மனத்தினால் அறிந்தும் இன்புற்ற எனது நிலை இங்கே எழுதுதற்கு அரியது."   இப்புராணம் பதினைந்து   படலங்களையும் 1007   செய்யுட்களையும் கொண்டது.

சிவ புராணங்களைக் கேட்பதில் பெரிதும் விருப்பம் கொண்ட நைமிசாரண்ய முனிவர்கள் , எல்லாப் பெருமைகளையும் உடையதும், முக்தி தருவதுமான தலம் ஒன்றின் பெருமையைக் கூறுமாறு சூத முனிவரிடம் கேட்க, மிக்க மகிழ்ச்சியடைந்த சூதர், கைகளைச்  சிரத்தின் மீது கூப்பி, ஆனந்தக் கண்ணீர் பெருகியவராக பிரமபுரி எனப்படும் அம்பர் தலத்தின் பெருமைகளைக் கூறலானார்.

இத்தலத்தின் பெருமையை சிவபெருமான் மட்டுமே கூற வல்லவர். வேண்டுவோர் வேண்டுவன யாவற்றையும் அளிக்கும் இத்தலம், கற்பக விருக்ஷத்தையும் காமதேனுவையும் சிந்தாமணியையும் ஒத்தது. இங்கு சிறிது நேரம் தங்கினாலும் காசியில் தங்கி தருமங்கள் செய்வதற்கு நிகராகும். இங்கு வசிக்கும் எல்லா உயிரினங்களும் சிவலோகப் பதவி பெறுவது நிச்சயம். இதன் அருகில் ஓடும் அரிசிலாறு காவிரியே. அதிலும், கோயிலில் உள்ள அன்னமாம் பொய்கையிலும் நீராடினால் பெறும் பயன் அளவிடற்கரியது. நீராடுவோர் கொடிய பாவங்களில் இருந்து  நீங்கப்பெறுவர்.

பிரமன் அருள் பெற்றது:    ஒரு சமயம் பிரமனும் திருமாலும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று நீண்ட காலம் போரிட்டுக் கொண்டபின்னர் அப்போர் முடிவுபெறா ததால், நான்கு வேதங்களையும், காயத்ரி மந்திரத்தையும், பிரணவ மந்திரத்தையும் நேரில் வரவழைத்து முடிவு கூறுமாறு கேட்டனர். அத்தேவதைகள் ஒருமித்தவர்களாகப் பரமசிவனே பிரமம் என்று திடமாகக் கூறியும், பிரமனும் மாலும் அதனைக் கேளாது மீண்டும் போர் புரியத் துவங்கினர். அப்போது அவ்விருவரிடையே முதலும் முடிவும் அறியமாட்டாத சோதி வடிவாகச் சிவபெருமான் தோன்றினான். அச்சோதியின் அடிமுடி கண்டவரே உயர்ந்தவர் என இறைவன் கூறவே, திருமால் வராக வடிவெடுத்து திருவடியைக் காண்பதற்காக   நிலத்தை அகழ்ந்து   பாதாளம் வரை சென்றும் முடியாதுபோகவே இறைவனைத் தொழுது, " நீயே பரம்" எனக் கூற, பிரமன் அன்னப்பறவை வடிவில் முடி காணச் சென்றான். அது முடியாது போகவே, இறைவனது முடியிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சி சொல்லுமாறு கூறி விட்டுத் தான் முடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தான். அன்னப்பறவை வடிவிலேயே இருப்பாயாக என்று பிரமனைப் பெருமான் சபித்து விட்டு, இனித் தாழம்பூவை சிவபூஜைக்கு உதவாதவாறும் சபித்தான்.

பிழையை உணர்ந்த பிரமன்,அன்னவடிவம் நீங்குவதற்காகக் காவிரியின் தேகரையிலுள்ள புன்னாக வனத்தை அடைந்து கடும் தவம் மேற்கொண்டான். அத்தவத்தால் ஏற்பட்ட புகையும் அனலும் யாவரையும் வாட்டியது. திருமாலின் வேண்டுகோளுக்கு இரங்கிய கயிலாயநாதன், பிரமனுக்குக் காட்சி அளித்து, அவன் வேண்டியபடியே, அண்ணா உருவம் நீங்கிப் பழைய வடிவு பெறுமாறும், கயிலையின் ஒரு கூரான இக்கிரி , பிரம கிரி எனப் பெயர்பெருமாறும் , அங்கு காட்சி அளிக்கும் இறைவன் பிரமபுரீசுவரர் என வழங்கப்படுமாறும், தவம் செய்த பொய்கை, " அன்னமாம் பொய்கை" எனப்படுமாறும், அருள் பெற்ற மாசி மகத்தன்று அதில் நீராடுவோர் தேவ பதவி பெறுவர் என்றும் பல வரங்களை  அளித்தருளினான்.

காளி வழிபட்டது:   துர்வாச முனிவருக்கும் மதலோலா என்ற தேவ கன்னிகைக்கும் பிறந்த அம்பன்,அம்பரன் என்ற அசுரர்கள் புன்னாக வனத்தை  அடைந்து தவம் செய்து யாவரையும் வெல்லும் ஆற்றலை வரமாகப் பெற்றனர். ஊரின் பெயரும் அம்பர் என்றாயிற்று. யாவரையும் அடிமையாகக் கொண்டு அகந்தையுடன் திரிந்த இருவரையும் கண்டு தேவர்களும் அஞ்சினர். அனைவரையும் காத்தருளுமாறு திருமால் முதலிய தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அப்போது பெருமான் தனது இடப்பாகத்திளிருந்த அம்பிகையை நோக்கிச் சிறிது முறுவல் செய்யவே, குறிப்புணர்ந்த தேவியானவள் காளியை அங்கு வருமாறு பணித்தாள். அக்கணமே அங்கு தோன்றி, அடிபணிந்த காளியை நோக்கி அவ்விரு அசுரர்களையும் அழித்து வருமாறு கட்டளை இட்டாள். அழகிய கன்னிகை வடிவத்துடன் காளியும், வயோதிக மறையோனாகத் திருமாலும் அங்கிருந்து புறப்பட்டு, அசுரைகளது அரண்மனையை அடைந்தனர்.

கன்னிகையின் அழகில் மயங்கிய இருவரும் தாம் அவளை மணக்க இருப்பதாகக் கூறியதும் முதியவராக வந்த திருமால், உங்களிருவரில் யார் வலிமையானவரோ அவரை என் பெண் மணப்பாள் என்றார். உடனே இரு சகோதரர்களுக்குமிடையில் ஏற்பட்ட போரில் அம்பன் கொல்லப்பட்டான். இனித் தானே அக்கன்னிகையை மணப்பெண் எனக் கருதி,அவளிடம் சென்ரான்  அம்பரன். அப்போது அக்கன்னி ,அனைவரும் அஞ்சும் வண்ணம் பேருருவம் கொண்டு, அவனது மார்பில் உதைத்தாள். காளியானவள் அவனது குடலை மாலையாகப் பூண்டு அனைவரது துயரத்தையும் அகற்றி அருளினாள். விண்ணோரும் மண்ணோரும் அவளைத் துதித்தனர். அவ்வாறு அம்பரனை மாய்த்த இடம் அம்பகரத்தூர் எனப் பட்டது. அசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதர்காகக் காளி, அம்பர் மாகாளத்தில் சிவபெருமானைப் பூசித்து அருள் பெற்றாள்.

சம்கார சீலனை அழித்தது:புலத்திய முனிவர் வம்சத்தில் தோன்றிய சம்கார சீலன் என்பவன் பிரமனைக்  குறித்துத் தவம் செய்து யாவரையும் வெல்லும் வரம் பெற்றான். இந்திரனையும் பிற தேவர்களையும் வென்றான். அதனால் கலங்கிய இந்திரனைப் பார்த்துப் பிரமதேவன், " நீ புன்னாக வன ஈசனை நோக்கித் தவம் செய்தால் அப்பெருமான் பைரவ மூர்த்தியைக் கொண்டு அந்த அசுரனை அழித்தருளுவார்" எனக் கூறினார்.அவ்வாறே தவம் செய்து கொண்டிருந்த இந்திரனைத் தேடி அசுரன் அம்பருக்கும் வந்து விடவே, இறைவன் கால பைரவரை அனுப்பி அவ்வசுரனை மாய்வித்தருளினார்.

விமலன் அருள் பெற்றது: காசியைச் சேர்ந்த விமலன் என்ற அந்தணன் தன்  மனைவியோடும் பல தலங்களை வணங்கி விட்டு அம்பரை  வந்தடைந்து, பெருமானையும் அம்பிகையையும் பல்லாண்டுகள் வழிபட்டுப் பணி செய்து வந்தான். இறைவன் அவன் முன்னர் காட்சி அளித்து அவன் வேண்டிய வரங்களைத் தந்து,அன்னமாம் பொய்கையில் கங்கையை வச்சிரத் தூண் போல் எழுமாறு செய்யவே, விமலனும் தன் துணைவியுடன் அதில் நீராடி மகிழ்ந்தான். மாதேவன் என்ற என்ற மகனைப் பெற்றுப் பின்னர் இறைவனடி சேர்ந்தான். மாதேவனும் தந்தையைப் போலவே அத்தலத்து ஈசனுக்குப் பணிகள் பல செய்து நிறைவாகச் சிவலோக பதவி பெற்றான்.

மன்மதன் வழிபட்டது:  தேவலோக மாதர்களால் தனது தவம் வீணானதால் மன்மதன் மீது சினந்த விசுவாமித்திரர் இனி அவனது பாணங்கள் எவரிடமும் பலிக்காமல் போகக் கடவது என்று சபித்தார். அதனால் வருந்திய மன்மதன், பிரமனது சொற்படி புன்னாக வனத்திற்கு வந்து பிரமபுரீசனைப் பன்னாள் வழிபாட்டு சாபம் நீங்கப்பெற்றான்.

நந்தன் பிரமஹத்தி நீங்கியது: காம்போஜ தேச அரசனான நந்தன் என்பவன் ஒருநாள் வேட்டைக்கு வந்தபோது புலித் தோலால் தன உடலை மறைத்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த பிங்கலாக்கன் என்ற முனிவரைப் புலி என்று எண்ணி அம்பி எய்தான். அவ்வம்பினால் முனிவன் அக்கணமே மாண்டான். அரசனைப் பிரமஹத்தி பற்றியது. அப்பழி தீர வேண்டிப் பல தலங்களுக்கும் யாத்திரை செய்தான். அப்படியும் அது அவனை நீங்கவில்லை. அம்பர் எல்லைக்கு வந்தபோது பிரமஹத்தி அவனைப் பின் தொடர அஞ்சி ஊர்ப் புறத்திலேயே நின்றுவிட்டது. அங்கிருந்த முனிவர்கள் சொற்படி பிரப்ரீசுவரர் கோயிலுக்குச் சென்று பெருமானைத் தரிசித்துத் தனது பழி தீர்த்தருளுமாறு வேண்டினான். அத்தலத்திலேயே தங்கி, கோயிலைத் திருப்பணி செய்வித்தான். பிரமஹத்தி அவனை விட்டு நீங்கியது. இறைவனது திருவருள் பெற்ற அரசன் மீண்டும் தன்னாட்டிற்குச் சென்றான். பின்னர் உத்தமன் என்ற தனது மைந்தனுக்கு முடி சூட்டிவிட்டு மீண்டும் அம்பரை  வந்தடைந்து பணிகள் பல செய்தான். கயிலாயநாதர் என்ற பெயரில் சிவலிங்கம் ஒன்றையும் ஸ்தாபித்து ஆலயம் அமைத்தான்.

அப்போது கடும் பஞ்சம் ஏற்பட்டு எல்லா உயிர்களும் வருத்தமுறவே, தன்  கையிலுள்ள எல்லாப் பொருள்களையும் அளித்துப் பசிப்பிணி தீர்த்து வந்தான். கைப்பொருள்கள் முற்றும் செலவானதும் பெருமானது சன்னதியை அடைந்து, உயிர்கள் வருந்துவதைக் கண்ட பின்னரும் தான் வாழ்வதை விரும்பவில்லை என்றும் பெருமானே வழி காட்ட வேண்டும் என்றும் விண்ணப்பித்தான். அவனுக்கு இரங்கிய பெருமான் விநாயகப் பெருமான் மூலம் நாள்தோறும் படிக்காசு பெறச் செய்து பஞ்சம் தீர்த்தருளினான். சின்னாட்களில் பஞ்சம் தீர்ந்து உயிர்கள் மகிழ்ச்சியுற்றன. திருவருளைக் கண்டு வியந்த மன்னனும் பெருமானது மலரடிகளை வழுவாது வழிபட்டுப்  பேரின்பமுற்றான்.

சோமாசி மாற நாயனார்: அம்பரில் அவதரித்த மறையவர். பெருமானது மலரடிகளை மறவாதவர். திருவாரூர் சென்று தம்பிரான் தோழரான சுந்தரரை அம்பரில் தாம் செய்யவிருக்கும் சோம யாகத்திற்குத் தியாகராஜ மூர்த்தியுடன் வருமாறு வேண்டினார். அதற்கு உடன்பட்ட சுந்தரர், கூப்பிட்ட நாளன்று மாறனாறது வேள்விச் சாலைக்கு எழுந்தருளினார். யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இறைவனும் இறைவியும் நீச வடிவம் கொண்டு கணபதியும் கந்தனும் நீச உருவில் உடன் வர யாகசாலைக்குள் நுழைந்ததைப் பார்த்த வேதியர்கள் யாகம் வீணானது எனக் கூறி அங்கிருந்து அகன்றனர். சுந்தரரும் சோமாசி மாறரும் மட்டும் அங்கிருந்து அகலவில்லை. பெருமான் அம்பிகையோடு அவர்களுக்குக் காட்சி அளித்தருளினார்.
தரிசித்தோர்: கோச்செங்கட்சோழ நாயனார்  மாடக்கோயிலாகத் திருப்பணி செய்து இறைவனை வழிபட்டார். திருஞான சம்பந்தர் இத்தலத்துப் பெருமான் மீது தேவாரப் பதிகம் பாடி அருளியுள்ளார். அப்பர் தேவாரத்திலும் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டுக்கள்: இராஜராஜரின் கல்வெட்டு ஒரு வணிகன் இக்கோயிலுக்கு இரண்டு விளக்குகள் கொடுத்ததையும் நிபந்தமாக நிலங்களை அளித்ததையும் கல்வெட்டால் அறிகிறோம்.
               
                                                       அம்பர் மாகாளம் 

அம்பருக்கு அண்மையில் உள்ள இத்தலம் தற்போது திரு மாகாளம் எனப்படுகிறது. ஞான சம்பந்தரின் பதிகங்கள் மூன்றைப் பெற்ற தலம்.

கோயில் அமைப்பு: அரசலாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கியபடி ஆலயம் அமைந்துள்ளது. ஐந்து நிலைக் கோபுரம் வாயிலில் உள்ளது கோயிலுக்கு வெளியில் மாகாள தீர்த்தம் அமைந்துள்ளது. இரண்டு பிராகாரங்களைக் கொண்டது. சுவாமி பிராகாரத்திற்கு வெளியில் தனிக் கோயிலாக கிழக்கு நோக்கி அம்பிகையின் சன்னதி உள்ளது. இரண்டாவது கோபுர வாயிலைக் கடந்து சுவாமி சன்னதியை அடைகிறோம். மகாமண்டபம்,ஸ்நபன மண்டபம்,அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட மகாகாளேசுவரரின் சன்னதி அழகு வாய்ந்தது.
முதல் பிராகாரத்தில் அறுபத்துமூவர், விநாயகர், முருகன், தக்ஷிணாமூர்த்தி , உதங்கர்-மதங்கர் முனிவர்கள், வில்லேந்திய வேலவர், மகாலக்ஷ்மி, துர்க்கை, சண்டிகேசுவரர், ஆகியோரது சன்னதிகளைத் தரிசிக்கிறோம்.

மூர்த்திகள்: இறைவன் மகாகாள நாதர் எனவும் அம்பிகை பயக்ஷயாம்பிகை என்றும் வழங்கப்படுகின்றனர். மேலும்,தியாகேசர், அச்சம் தீர்த்த விநாயகர், காக்ஷி கொடுத்தவர்,காளி,நாக கன்னிகை ஆகிய மூர்த்திகளைத் தரிசிக்கிறோம்

வழிபட்டோர்: அம்பன்-அம்பாசுரனைக் கொன்ற பழி தீரக் காளியும், உமாதேவியை மகளாகப் பெற மதங்க முனிவரும், நாக கன்னிகையும் இறைவனை வழிபட்டுள்ளனர்.    

கல்வெட்டு: முதல் குலோத்துங்கன்,விக்கிரம சோழன், ஆகியோர் காலத்தில் கோயிலுக்குச் செய்த தானங்களைக் கல்வெட்டுக்களால் அறியலாம்.

திருவிழாக்கள்:
வைகாசி ஆயில்யத்தன்று நடைபெறும் சோமாசிமாற நாயனார் குருபூஜையன்று அம்பருக்கும் அம்பர் மாகாளத்திற்கும் இடையில் யாகம் நடத்தப்பெறுகிறது .  திருமாகாளம் கோயிலில் இருந்து சுவாமியும் அம்பாளும் யாகசாலைக்கு எழுந்தருளி சோமாசி மாறருக்கும் சுந்தரருக்கும் காக்ஷி கொடுத்தருளுகின்றனர்.
      

Monday, January 4, 2016

உலகத் தோற்றமும் குடந்தையும்

ஆதி கும்பேசுவரர் ஆலயம் 
இறைவனது ஐந்து தொழில்களில் முதலாவதாக சிருஷ்டி (தோற்றம் ) குறிப்பிடப்படுகிறது. முடிவில்லாத பரம்பொருள் மட்டுமே மீண்டும் உலகத்தையும்,உலக உயிர்களையும் தோன்றச் செய்யமுடியும். ஆகவேதான் இறைவனுக்கு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் அவனுக்குத் தோற்றமும் முடிவும் இல்லாததுதான் மிகச் சிறந்த பெருமை என்பதை, " தோன்றாப் பெருமையனே" என்று போற்றுகிறது  திருவாசகம். இதே கருத்தை இளங்கோவடிகளும், " பிறவா யாக்கைப் பெரியோன்" என்று சிவபெருமானைக் குறிப்பிடுவதால் அறியலாம். ஊழிக்காலம் ஆனபிறகு மீண்டும் உலகைத் தோற்றுவிக்கும் பரம கருணையோடு, பிரம்மன்,விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளையும் தன்னிடம் தோன்றச் செய்தான் சிவபெருமான் என்கின்றன புராணங்கள். அப்படிப்பட்ட மூர்த்த வடிவை ஏக பாத மூர்த்தியாகத் திருவொற்றியூர் போன்ற தலங்களில் தரிசிக்கிறோம். இவ்வாறு ஆதியும் அந்தமும் இல்லாத பரமசிவத்தை அப்பர் சுவாமிகளின் தேவாரம், " ஈறு இல்லாதவன் ஈசன் ஒருவனே " என்று கோடிட்டுக் காட்டுகிறது.

சிவபரத்துவத்தைக் காட்டும் தலையாய தலங்களுள் கும்பகோணம் எனப்படும் குடந்தை நகர் தனிச் சிறப்பு வாய்ந்தது. ஒரு  சமயம் பிரளயத்தால் உலகம் அழியும் தருணத்தில், பிரம தேவன் சிவபெருமானிடம்  சென்று, வேதமும் சிருஷ்டி பீஜமும் அழிந்து விட்டால் தன்னால் படைப்புத் தொழிலைச் செய்யாமல் போய் விடுமாதலால் அவற்றைக் காப்பாற்றி அருளுமாறு வேண்டினான். அவனது வேண்டிகோளுக்கு இரங்கிய பெருமானும், சிருஷ்டி பீஜத்தை அவனிடம் தந்து அதனை அமிர்தமும் மண்ணும் சேர்ந்த ஒரு குடத்தில் இட்டு, அக்குடத்தின் மீது மாவிலை,தேங்காய்,வில்வம்,பூணூல் ஆகியவற்றை இட்டு, அமுதத்தால் தெளித்த பின்னர் ஓர் உறியில் வைத்து, அதை மேரு மலையில் வைக்கும்படிக் கட்டளையிட்டு அருளினார். , அதன்படியே பிரமனும் அமுத குடத்தை மேருவில் வைத்து விட்டுத் திருவருளை வேண்டி நின்றான். சிவபிரானது திருவருளால் பிரமன் மீண்டும் படைப்புத் தொழிலைக் கைவரப்பெற்றான்.அப்போது பிரமன் தொடங்கி வைத்த மாசிமகத் திருவிழாவே தற்போதும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

கலயநல்லூர்(சாக்கோட்டை)
பிரளய வெள்ளத்தில் அமுத குடம் தென் திசையை நோக்கி நகர்ந்தது. அதன் மீது அணிவிக்கப்பட்டிருந்த மாவிலை,தேங்காய்,வில்வம்,பூணூல் ஆகியவை பெரும் காற்றால் கலைக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் விழுந்தன. அப்படி விழுந்த இடங்களில் இலிங்க மூர்த்திகள் தோன்றின. நிறைவாக அமுதகும்பமானது காவிரியின் தென்கரைக்கு வந்த போது, சிவபெருமான் ஓர் வேட  உருவம் கொண்டு அக்குடத்தின் மீது அம்பைச் செலுத்தினான். அவ்வாறு அம்பு(பாணம் ) எய்த இடம் பாணபுரி ஆயிற்று. எய்த அம்பு அமுத குடத்தின் மூக்கைச் சிதைத்தபடியால் அங்கே கும்பேச லிங்கம் தோன்றியது. அந்தத்  தலமும் குடமூக்கு என்று வழங்கப்படலாயிற்று. அக்குடத்திலிருந்து அமுதம் வெளிப்பட்டு விழுந்த இடம்  கலய நல்லூர்  எனவும் அங்கு தோன்றியருளிய பெருமான், அமிர்த கலச நாதர் எனவும் அழைக்கப்பட்டனர். குடத்தின் வாய்ப் பகுதி விழுந்த இடம் குட வாயில் (குடவாசல்) ஆயிற்று. அக்கோயிலுக்கு எதிரில் அமிர்தம் தங்கிய திருக்குளம் அமிர்த தீர்த்தம் எனப்பட்டது. கலசத்தின் தேங்காய் விழுந்த இடம் அபிமுகேசுவரர் கோயிலாக மகாமகக் குளத்தின் அருகே காட்சி அளிக்கிறது. கும்பத்தின் மீது அணிவிக்கப்பட்ட பூணூல் விழுந்த இடம் கௌதமேசுவரர் ஆலயமாயிற்று. கும்பத்தின் மேல் இடப்பட்ட வில்வம் விழுந்த இடம் நாகேசுவர சுவாமி (குடந்தைக் கீழ்க் கோட்டம்) ஆகியது. அமுத கும்பத்திற்கு ஆதாரமாக இருந்த உறி விழுந்த இடம் சோமேசுவரர் ஆலயமாக விளங்குகிறது.

கும்பகோணத்திற்குப் பஞ்ச குரோசத் தலங்களாகத் திருவிடைமருதூர், திருநாகேசுவரம், திருத் தாரேசுவரம்(தாராசுரம்) , திருப்பாடலவனம்                       ( கொரநாட்டுக் கருப்பூர்) , திருவேரகம் (சுவாமி மலை) ஆகிய தலங்கள் கும்பகோணப் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.  கும்பேசுவரர் கோயிலில் இருந்து சுவாமியும் அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி பஞ்ச குரோசத் தலங்களுக்கு எழுந்தருளுவர்.

குடவாசலில் மாசி மக விழா 
கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது குடவாயில்(குடவாசல்) என்ற தலம். இது ஞான சம்பந்தப்பெருமானது தேவாரப் பதிகங்கள் பெற்ற சிறப்புடையது. மேற்கு நோக்கிய அழகிய மாடக் கோயில். சுவாமி கோணேசுவரர் என்ற பெயரில் பெரிய லிங்க வடிவில் அருட் காட்சி அளிக்கிறார். அமிர்த லிங்கேசுவரர் என்ற பெயரும் உண்டு. கருடனால் வழிபடப்பெற்ற பெருமான் இவர். அம்பிகை பெரியநாயகி எனப்படுகிறாள். கோயிலுக்கு எதிரில் உள்ள அமிர்த தீர்த்தக் கரையில் ஆதி கஜானனர் என்ற நாமத்துடன் விநாயகப் பெருமான் அருள் வழங்குகிறார்.

குடவாசலைத் தரிசித்த பிறகு கும்பகோணம் திரும்பி வரும் பாதையில் உள்ள சாக்கோட்டை என்னும் ஊரில் மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ள கலய நல்லூர் சிவாலயத்தை தரிசிக்கலாம்..சுந்தர மூர்த்தி சுவாமிகளின் அருமையான தேவாரப்பதிகம் கொண்ட தலம் இது.  அமிர்த கலச நாதராகவும் அமிர்த வல்லியாகவும் சுவாமியும் அம்பிகையும் சன்னிதி கொண்டுள்ளனர்.

நாகேசுவரர் ஆலயம்,குடந்தைக் கீழ்க் கோட்டம் 
கும்பகோணம் நகருக்குள் அமைந்துள்ள தலங்களுள் அமுத கும்பத்தின் வில்வம் விழுந்த இடமாகப் புராணத்தில் கூறப்படும்  நாகேசுவர சுவாமி ஆலயம் சூரியனாலும்,ஆதிசேஷனாலும் வழிபடப்பெற்றது. திருநாவுக்கரசரின் பதிகம் பெற்றது. சோழர் கட்டிடக் கலைச் சிறப்பை சுவாமி கருவறை சுவற்றிலும் விமானத்திலும் காணலாம்.

குடந்தையில் பொற்றாமரைக்குளத்தின் அருகில் உள்ள சோமேஸ்வரரர் ஆலயம், அமுத கும்ப ஆதாரமான தறி  விழுந்த இடம். சந்திரனுக்கு அருளியதால்,இறைவன் சோமேஸ்வரர் எனப்படுகிறார். வியாழ பகவான் வழிபட்டதால் வியாழ சோமேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

மகாமகத் தீர்த்தத்தின்  கீழ்க் கரையில் அமுதகும்பத்தின் தேங்காய் விழுந்த இடமான அபிமுகேசுவரம் அமைந்துள்ளது. மகாமகத்தில் நீராட வந்த நவ கன்னிகைகளுக்கு மேற்கு முகமாகக் காட்சி அளித்ததால் சுவாமிக்கு அபிமுகேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.

மகாமகக் குளத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள கௌதமேசுவரர்  ஆலயம், கும்பத்தின் பூணூல் விழுந்த இடம். அதனால் சுவாமிக்கு யக்யோபவீதேசுவரர் என்றும் கௌதம முனிவர் வழிபட்டதால் கௌதமேசுவரர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.
சிவபெருமான் வேட  உருக்கொண்டு, அமுத குடத்தின் மீது அம்பு ( பாணம் ) போட்ட இடம்  பாண புரீசுவரம் ஆனது. இங்குள்ள அம்பிகை சோமகலாம்பிகை எனப்படுகிறாள்.

மேற்கண்ட தலங்களைத் தவிர, இந்நகரில், காசி விசுவநாதர், கம்பட்ட விசுவநாதர் ,ஏகாம்பரேசு வரர் ,மீனாக்ஷி சுந்தரேசுவரர், காளஹஸ்தீசுவரர் ஆலயங்களும் சிறப்பு வாய்ந்தவை.

ஆண்டுதோறும் இத்தலத்தில் மாசி மாதத்தில் மாசி மக பிரமோத்சவம் பத்து நாட்கள் நடைபெறும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியிலும், சந்திரன் கும்ப ராசியிலும் வரும் மாசி மகப் பௌர்ணமி தினத்தன்று கங்கை முதலான ஒன்பது நதிகளும், மகா மகக் குளத்தில் தங்கள் பாவங்கள் தீர வேண்டி நீராட வருவதால், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் லட்சக் கணக்கில் வந்து நீராடி, இறையருளைப் பெறுவது நெடுங் காலமாக நடைபெற்று வருகிறது. சித்திரை மாதத்தில் ஆதி கும்பேசுவரரும் மங்களாம்பிகையும் பல்லக்கில் எழுந்தருளி, சாக்கோட்டை, கலயநல்லூர், தாராசுரம்,திருவலஞ்சுழி,சுவாமி மலை,கொட்டையூர் , மேலக் காவேரி முதலிய சப்த ஸ்தானங்களுக்கு விஜயம் செய்வர்.

சொக்கநாதப்புலவர் இயற்றிய கும்பகோணப் புராணத்தைத் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம்  அச்சிட்டுள்ளது.(வெளியீடு எண்: 132) அதில் இத்தலத்தின் சிறப்பைக் கூறுமிடத்தில், நமது பிறவியாகிய சேற்றைத் தனது புகழாகிய நீரால்  கழுவித் தூய்மை ஆக்கி, தாயைப்போன்ற தயாவுடன் கருணை பாலித்து, முக்தியாகிய பயிரை வளர்க்கும் கழனி போன்று விளங்குவதும் ,அழிவில்லாததும் ஆகிய உத்தம பூமி குடந்தை மாநகரம் என்று இப் புராணம் எடுத்துரைக்கக் காணலாம்.

கும்பகோணத்தைத் தரிசித்தாலும்,நினைத்தாலும், அதன் பெயரைக் கூறினாலும்,அங்குள்ள தீர்த்தங்களில்நீராடினாலும் பாவங்கள் நீங்கப்பெற்று முக்தி கிடைக்கும் என்று தல புராணம்  கூறுகிறது. சிருஷ்டிக்கு ஆதாரமாக விளங்குவதும் சிவபரத்துவத்தை உணர்த்துவதுமான குடந்தை நகரிலுள்ள கும்பேசுவரர் ஆலயத்தையும் அப்புராணத்துடன்  தொடர்புடைய பிற கோயில்களையும் தரிசித்து இம்மை மறுமைப்பலன்களை அடையலாம்.