Sunday, December 29, 2013

பஞ்சாரண்யத் தலங்கள்

சோழ வளநாடு பொன்னி நதி பாய்வதால் வயல்களைத் தன்னகத்தே கொண்ட மருத நிலமாக மட்டும் அமையாமல் சிவபெருமான் நீங்காது உறையும் திருக்கோயில்கள் பலவற்றையும் கொண்டது. இதனிடையே பல பகுதிகள் முனிவர்கள் விரும்பித் தவம்  செய்துவந்த வனப்  பிரதேசங்களாக விளங்கின. தாருகாவனம்(வழுவூர்), பதரீ வனம்(கீழ்வேளூர்), தில்லை  வனம் (சிதம்பரம்) ,பாரிஜாதவனம்( திருக்களர்),சாயா வனம் (திருச்சாய்க்காடு) ஆகிய தலங்களைச் சில எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். காடு என்று முடியும் தலங்களாகத் தலையாலங்காடு, தலைச்சங்காடு,திருவெண்காடு  போன்ற தலங்களையும் உடையது இப் பகுதி. ஆரண்யம் என்றாலும் காடு என்று பொருள் படும். குடந்தையைச் சார்ந்த பகுதியில் ஐந்து ஆரண்யங்களாகத்  திருக்கருகாவூர், அவளிவநல்லூர் , அரித்துவாரமங்கலம், ஆலங்குடி மற்றும் திருக்கொள்ளம்பூதூர் ஆகியவற்றைக் குறிப்பர். இந்த ஐந்து தலங்களையும் மேற்படி வரிசையில் ஒரே நாளில் தரிசிப்பதும் வழக்கம். அதாவது, உஷக் காலத்தில்(காலை  6 மணி அளவில்) திருக்கருகாவூரையும்,  கால சந்தி நேரத்தில்  8 மணி அளவில் அவளிவநல்லூரையும்,  உச்சிக்காலத்தில் ( சுமார் 12 மணிக்கு) அரித்துவாரமங்கலத்தையும்) , சாயரக்ஷை  நேரத்தில் (மாலை 6 மணிக்கு) ஆலங்குடியையும், அர்த்தஜாம நேரத்தில் (இரவு 8 மணி அளவில்) திருக்கொள்ளம்பூதூரையும் தரிசிப்பர்.

1. திருக்கருகாவூர் :

 மாதவி வனம் என்று குறிப்பிடப்படும் இத்தலம் முல்லைக்காடாக விளங்கியது. இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனும் முல்லைவன நாதர் (மாதவி வனேச்வரர்) என்று அழைக்கப்படுகிறார். சுயம்பு மூர்த்தியாகிய இப்பெருமானைத் திருஞான சம்பந்தரும் ,திருநாவுக்கரசரும் தேவாரப்பதிகங்களால் போற்றியுள்ளனர்.இத்தலத்தைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மூன்று அடி நடந்தால் முதலாவது அடியால் பாவ வினைகள் முழுதும் அகலும் என்றும், இரண்டாவது அடியால், அமரர் உலகையும் பெறலாம் என்றும், மூன்றாவது அடியால் சிவசாயுஜ்ஜியம் பெறலாம் என்றும் தலபுராணம் குறிப்பிடுகிறது. இத்தலத்தை நினைத்தாலும், இதன் பெயரைச்சொன்னாலும் , அதனைக் கண்டாலும், அங்கு வசித்தாலும், இதன் வழியாகப் பிற ஊர்களுக்குச் சென்றாலும் பாவங்கள் நீங்கப்பெற்று, போகங்கள் யாவும் பெற்று, நிறைவாக இறைவன் கழலடியை அடைவர் என்கிறது தலபுராணம்.


 கும்பகோணத்திலிருந்து ஆவூர் வழியாகத் தஞ்சை செல்லும் பேருந்து வழியில் வெட்டாற்றின் தென்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்தின் எதிரில் திருப்பாற்குளம் என்ற தீர்த்தம் உள்ளது. ராஜகோபுர வாயிலைக் கடந்து முதல் பிராகாரத்தை அடைந்தால் நந்தவனமும்,வசந்தமண்டபமும் இருக்கக் காணலாம். முதல் பிராகார வாயிலில் விநாயகப் பெருமானைத் தரிசித்துவிட்டுக்  கொடிமரம், நந்தி,பலிபீடம் ஆகியனவற்றையும் தரிசிக்கிறோம். அறுபத்துமூன்று நாயன்மார்களும் சந்தனாச்சார்யர்களும் சமயாச்சார்யர் நால்வரும் தரிசனம் தருகின்றனர். நிருதிமூலையில் கணபதியும், சுவாமி - அம்பாள் சன்னதிகளுக்கு  இடையில்   ஆறுமுகப்பெருமானது சன்னதி இருப்பது சோமாஸ்கந்த வடிவை நினைவு படுத்துகிறது. தேவகோஷ்டங்களில் மேற்கில் அர்தநாரீஸ்வரரும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும் சிறப்பு வாய்ந்த மூர்த்தங்கள். வடக்கு பிராகாரத்தில் ஸ்தல விருக்ஷமான முல்லை உள்ளது. சபா மண்டபம் குதிரை பூட்டிய ரத வடிவில் உள்ளது. இங்கு நித்துருவர்,கார்க்கியர், சங்குகர்ணன் ஆகியோர் பூஜித்த சிவலிங்கங்கள் உள்ளன.

   விநாயகரை வணங்கியவாறே சுவாமி சன்னதிக்குள் நுழைகிறோம். மகாமண்டபத்தில் நடராஜ சபையும், நவக்ரகங்களும் இருக்கக் காண்கிறோம். சோமாஸ்கந்த மண்டபத்தைத் தரிசித்துவிட்டு, மூலவரான முல்லைவனநாதப் பெருமானது சன்னதி வாயிலை அடைகிறோம். சுவாமி, ப்ருத்வியால்   ஆன உயரமான பாணம். பெருமான் முல்லைக் கொடி சுற்றியுள்ள வடிவோடு காட்சி அளிக்கிறார். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடத்தப் படுகின்றன. எல்லா உலகங்களுக்கும் கண்ணாகவும் , கருவாகவும் இருக்கும் இந்தப்பெருமானைத் துதிக்கும் அப்பர் தேவாரத்தால் நாமும் பாடி வழிபடுகிறோம்:

 " குருகாம் வயிரமாம் கூறு நாளாம் கொள்ளும் கிழமையாம் கோளே தானாம்
   பருகா அமுதமாம் பாலின் நெய்யாம் பழத்தின் இரதமாம் பாட்டில் பண்ணாம்
   ஒருகால் உமையாள் ஓர் பாகனுமாம் உள் நின்ற நாவிற்கு உரையாடியாம்
   கருவாய் உலகிற்கு முன்னே தோன்றும் கண்ணாம் கருகாவூர் எந்தைதானே. "

அம்பாள் சன்னதிக்குச் செல்லும் வழியில் சத்திய கூபம் என்ற தீர்த்தமும் கௌதமேச்வரர் கோவிலும் உள்ளன. புத்திர பாக்கியம் தந்து, கருவைக் காப்பவளாகக் கர்ப  ரக்ஷாம்பிகை (கருக்  காத்த நாயகி) அருட் காட்சி அளிக்கிறாள். இச்சன்னதியில் பிள்ளைவரம் வேண்டுவோர் பலர் பிரார்த்தனைகள் செய்கின்றனர். நிருத்துருவமுனிவரின் பத்தினி வேதிகை, கர்பகாலத்தில் நேர்ந்த அயர்ச்சியால், அங்கு வந்த ஊர்த்துவபாத முனிவரை உபசரிக்க  இயலாமல் போகவே, கோபம் கொண்ட முனிவர், அவளது கர்ப்பம் சிதையுமாறு சபித்தார். அதனால் துயரமுற்ற தம்பதியர்,இறைவனையும் இறைவியையும் சரணடைந்து துதிக்கவே, வேதிகையின் கரு சிதையாமல் அம்பாள் காத்து ரக்ஷித்தபடியால் கர்ப்ப ரக்ஷாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.

அகந்தையால் படைப்புத் தொழிலை இழந்த பிரமன் இங்கு வந்து,தன் பெயரால் தீர்த்தம் அமைத்து,இறைவனை வழிபட்டு மீண்டும் படைப்புத் தொழிலைக் கைவரப்பெற்றான். கேரள தேசத்தைச் சேர்ந்த சுவர்நாகரன் என்பவன் சாபத்தால் பைசாச வடிவம் கொண்டு பல பிறவிகள் துன்புற்ற பின்னர், கார்க்கிய முனிவரின் அறிவுரைப்படி இத்தலத்திற்கு வந்து,பிரம தீர்த்தத்தில் நீராடி,இறைவனை வழிபட்டதால் பழைய வடிவை மீண்டும் பெற்றான். கோஹத்தி தோஷம் நீங்க வேண்டி கௌதம முனிவர் இத்தல இறைவனை வழிபட்டு,நற்கதி பெற்றார். சாபத்தினால் புலி வடிவம் கொண்ட குஜத்வஜன் என்ற மன்னன் கார்த்திகை ஞாயிறுகளில் இறைவனை வழிபட்டுப் பழைய வடிவம் பெற்று, வைகாசியில் பிரம்மோற்சவ விழா நடத்தினான். குரு சாபத்தால் பேய் உருவம் பெற்ற சங்கு கர்ணன் என்பவன் முல்லைவன நாதரை மார்கழித் திருவாதிரையன்று வழிபட்டுப் பழைய உருவம் பெற்றான். தக்ஷ சாபம் நீங்க வேண்டிச் சந்திரன் வழிபட்டான். இன்றும் பங்குனி மாதப் பௌர்ணமியில் சந்திரனின் கிரணங்கள் இறைவன் மீது படுவதைக் காணலாம். கோவிலுக்கு எதிரில் உள்ளதும்,காமதேனுவின் பாலால் ஏற்பட்டதுமான பால் குளத்தில் சிவராத்திரியன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஊருக்குத் தென்மேற்கிலுள்ள பிரம தீர்த்தத்தில் நடராஜப்பெருமான் மார்கழித் திருவாதிரையிலும் முள்ளிவாய்,விருத்த காவேரி என்று அழைக்கப்படும் வெட்டாற்றின் படித்துறையில் வைகாசி விசாகத்தில்  தீர்த்தவாரியும்  நடைபெறுகிறது.

2. அவளிவநல்லூர்: 


பஞ்சாரண்யத் தலங்களுள்  இரண்டாவதாகத் திகழும் இத்தலத்திற்குக் கும்பகோணத்திலிருந்தும் தஞ்சாவூரிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. தஞ்சை - நீடாமங்கலம் வழியிலுள்ள அம்மாபேட்டைக்கு 6 கி.மீ. தொலைவிலும், கும்பகோணம்- நீடாமங்கலம் வழியிலுள்ள வெட்டாற்றுப் பாலத்திலிருந்து  8 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. சாட்சிநாதபுரம், புல்லாரண்யம், பாதிரிவனம் ஆகிய பெயர்கள்  இத்தலத்திற்கு உண்டு. இரண்டு ப்ராகாரங்களுடன் கூடிய இக்கோயிலுக்கு ராஜ கோபுரம் இல்லை. வெளிப் ப்ராகாரத்தில், அம்பாள் சன்னதி, வசந்த மண்டபம், மடைப்பள்ளி ஆகியன உள்ளன. மூலவருக்கு சாக்ஷி நாதர், பாதிரிவனேச்வரர் , தம்பரிசுடையார் ஆகிய பெயர்கள் வழங்கப்படுகின்றன. கர்ப்ப க்ருகத்தில்   சுயம்புவாகக் காட்சி அளிக்கும் மூலவருக்குப் பின்னர் உமாதேவியோடு ரிஷப சகிதராக சாக்ஷி சொன்ன கோலத்தில் பெருமான் அருட் காட்சி வழங்குகின்றான். சௌந்தர நாயகி என்றும் அழகம்மை என்றும் வழங்கப்படும் அம்பிகை தெற்கு நோக்கியவாறு தனிச் சன்னதி கொண்டு விளங்குகிறாள். சுவாமியின் உட்ப்ராகாரத்தில் கணபதி, நால்வர், கண்வர், வீரபத்திரர், சப்த கன்னியர் , அறுபத்து மூவர் , ஆறுமுகர், கஜலக்ஷ்மி, சண்டேசர், ஆனந்த சபேசர், விஸ்வநாதர்,விசாலாக்ஷி, சூரியன், பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்தங்களையும், தேவ கோஷ்ட மூர்த்தங்களையும் தரிசிக்கிறோம்.

கோவிலுக்கு எதிரிலுள்ள சிவபுஷ்கரணி தீரா நோய்களையும் தீர்க்க வல்லது. தை அமாவாசை யன்று சாக்ஷிநாத சுவாமி பரிவாரங்களோடு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும்போது, இத்தீர்த்தத்தில் ஏராளமானோர்  நீராடுவர்.  பாதிரி மரத்தடியில் பெருமான் ஸ்வயம்பு மூர்த்தியாகத் தோன்றியதால் ஸ்தல விருக்ஷம் பாதிரியாகத் திகழ்கிறது.

பிரமனும் சூரியனும்,அகத்திய முனிவரும்  வழிபட்ட தலம் இது. வராக வடிவம் கொண்ட திருமால் இப்பெருமானை வழிபட்டுப் பேறு பெற்றார். இத்தலத்து சிவாசார்யாரின் இரு பெண்களுள் மூத்தவளை மணந்த சம்புபாதசர்மா என்பவர்,காசி யாத்திரைக்குச் சென்று திரும்பியபோது, தன் மனைவி நோயுற்றுத் தன் கண் பார்வையையும் உடல் அழகையும் இழந்தாள். ஆகவே, சம்புபாதர்  அவளது தங்கையைச் சுட்டிக்காட்டி அவளே தனது மனைவி என்று பொய் உரைத்தார். மூத்தவளோ, கலங்கியவளாக இறைவனை அடைக்கலம் அடைந்து முறையிட்டாள் அப்போது சிவபெருமான் உமா தேவியோடு எழுந்தருளி, " நீ மணம் செய்துகொண்டவள் நீ சொல்வதுபோல் அல்ல. அவள் இவளே " என்று மூத்த சகோதரியைச் சுட்டிக்காட்டி சாக்ஷி சொன்னபடியால் ஊரின் பெயர்  அவள் இவள் நல்லூர் என்றும் சுவாமிக்கு சாக்ஷிநாதர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. சம்புசர்மாவும் தனது பிழைக்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டியவராகத் தனது மனைவியோடு திருக்குளத்தில் நீராடி எழுந்தபோது, அப்பெண் தனது இழந்த கண் பார்வையைப் பெற்றதோடு, உடல் வனப்பும் பெற்றாள்.

அவளிவநல்லூர்ப் பெருமானைத் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தேவாரப்பதிகங்களால் போற்றியுள்ளனர். அப்பர் பெருமானது ஒரு பதிகத்தில் கயிலை மலையைப் பெயர்க்க முயன்ற இராவணனுக்கும் இரங்கி அருள் புரிந்த திறத்தைப் பாடல் தோறும் பரவியுள்ளது அறிந்து மகிழத்தக்கது.

" ஏனமாய் இடந்த மாலும்  எழில் தரும் முளரியானும்
ஞானம் தான் உடையராகி நன்மையை அறிய மாட்டார்
சேனந்தான் இல்லா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி
ஆனந்த அருள்கள் செய்தார் அவளிவனல்லூராரே"

3. அரித்துவார மங்கலம் {அரதைப் பெரும் பாழி } :

பிரமனும் திருமாலும் தமக்குள் யார் உயர்ந்தவர் என்று சண்டையிடும்போது அவர்களுக்கு முன்னர் சிவபெருமான் ஜோதிப் பிழம்பாகத் தோன்றி, "யார் இதன் அடியையும் முடியையும் காண்கிறாரோ அவரே பெரியவர்"  என்று கூறவே, பிரமன் முடிதேடியவராக அன்ன வடிவில் உயரப் பறந்தார். திருமாலோ வராக அவதாரம் கொண்டு பூமியைக் குடைந்து செல்வாராயினார். எவ்வளவு காலமாகியும் இருவராலும் அடி-முடி காண முடியவில்லை. தமது இயலாமையை ஒப்புக் கொள்ள வேண்டி மீண்டும் பூமிக்குமேல் ஹரி வந்த இடமே, இந்த ஹரித்வார மங்கலம். தனது தோல்வியை ஒப்புக் கொண்டதன் அடையாளமாகத் தன் வராக வடிவின் கொம்புகளை வராகமூர்த்தியானவர்  இறைவனுக்குச் சமர்ப்பிக்க, அதனை சிவபிரான் தனது மார்பில் அணிந்தார். இந்நிகழ்ச்சிக்கு அடையாளமாக மூலவருக்கு முன்னர் ஒரு பெரிய பள்ளம்  இருப்பதை இன்றும் காணலாம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இத்தலத்தைக் கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து மூலம் அடையலாம். குடந்தையிலிருந்து இத்தலம் சுமார் 20 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. வன்னி வனமாக இருந்ததால் வன்னி மரம்  ஸ்தல வ்ருக்ஷமாக இருக்கிறது. பஞ்சாரண்யத் தலங்களுள் இது மூன்றாவது தலம்.

 கிழக்கு நோக்கிய சுவாமி சன்னதிக்கு நேராக ராஜஜோபுரம் எழிலுடன் விளங்குகியது. அலங்காரவல்லி அம்பாளும் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளாள். அந்த சன்னதி எதிரில் ஸ்தல விருக்ஷமான வன்னி மரம உள்ளது. ஸ்தலவிருக்ஷ மேடையில் விநாயகரைத் தரிசிக்கிறோம். பிராகார வலம் வரும் போது கணபதி,சோமாஸ்கந்தர் , சண்டிகேஸ்வரர் சன்னதிகளையும் தரிசனம் செய்கிறோம். சுவாமி பிராகார கோஷ்டங்களில் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர்,பிரமன் ஆகிய மூர்த்திகளைக் காண்கிறோம். கர்ப்பக் க்ருகத்தில் ஸ்வயம்புவாகக் காட்சி அளிக்கிறார். பாதாள வரதர்.
ராஜகோபுரத்தை ஒட்டிய  மண்டபத்தில் பிள்ளையார், காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, சூரியன், சந்திரன்,பைரவர், சம்பந்தர்,சுந்தரர்  ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.

" வரி அரா என்பு அணி மார்பினர் நீர் மல்கும்
   எரி அராவும் சடை மேல் பிறை ஏற்றவர்
   கரிய மாலோடு அயன் காண்பரிதாகிய
  பெரியர்  கோயில் அரதைப் பெரும்பாழியே. "
                                                       --- சம்பந்தர் தேவாரம்

4. ஆலங்குடி ( திரு இரும்பூளை) :


கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் வழியிலுள்ள இத்தலத்தை , நீடாமங்கலத்திலிருந்தும் (18 கி.மீ.) அடையலாம். பஞ்சாரண்யங்கள் ஐந்தில் நான்காகத் திகழும் இத்தலம், திருஞானசம்பந்தரால் பாடப் பெற்றது. காசி ஆரண்யம் என்பது இதன் வட மொழிப்பெயர் ஆகும். திருப்பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது எழுந்த ஆல கால விஷத்தை சிவபெருமான் உகந்து பருகித் தன் கண்டத்தில் வைத்து, அகில உலகங்களையும் காத்ததால் ஆலம் குடித்தவனாக ஆனான். உலக வழக்கில் அவனை ஆலங்குடியான் (ஆலங்குடியைச் சேர்ந்தவன் என்ற பொருளில்) என்று மக்கள் அழைக்கிறார்களே என்று சிலேடையாகக் காளமேகப்புலவர் பாடி, அவ்வாறு அவன் ஆலம் குடிக்காவிட்டால் அனைத்து உயிர்களும் மாயந்திருக்க வேண்டியிருக்கும் அல்லவா என்று வினவுகிறார். அப்பொருள் நயம்  மிகுந்த பாடலைக் காண்போம்:

" ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை
   ஆலங்குடியான் எனு ஆர் சொன்னார்  -- ஆலம்
   குடியானே யாகில் குவலயத்தோர் எல்லாம்
   மடியாரோ மண் மீதினில்."

அழகிய ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கொண்ட இத திருக்கோயில் கிழக்கு நோக்கியது. கோபுர வாயிலில் கலங்காமல் காத்த கணபதியைத் தொழுதவாறே, உள்ளே நுழைகிறோம். ஸ்வாமிக்குக் காசியாரண்யேச்வரர்  என்றும் ஆபத்சகாயேச்வரர் என்றும் இரும்பூளை நாதர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. அம்பிகை, ஏலவார் குழலி என்ற திருநாமத்துடன் தெற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளாள். இது குரு பரிகாரத்  தலமாகக் கருதப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை சிறப்பு மூர்த்தியாகப் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

கஜமுகாசுரனால் தேவர்களுக்கு வந்த ஆபத்தை நீக்கி அவர்களைக் காத்தபடியால், விநாயகப்பெருமான், கலங்காமல் காத்த கணபதி எனப்படுகிறார். அம்பிகை தவம்  செய்து இறைவனை மணந்ததால்  அந்த இடம்   திருமணமங்கலம் எனப்படுகிறது. அத்திருமணத்தைக் காண வந்த திருமால்,பிரமன், லக்ஷ்மி, சாஸ்தா, அஷ்டதிக் பாலகர்கள், வீரபத்திரர், கருடன் ஆகியோர் தத்தம் பெயரில் இலிங்கம் நிறுவி வழிபட்டுள்ளனர். முசுகுந்தன், சுவாசனன் ஆகியோரும்  பூசித்துள்ளனர்.  சுந்தரர் இங்கு வந்தபோது வெட்டாற்றில் ஒடக்காரனாக வந்து சிவபெருமான் அருளியதாகச் செவிவழிச் செய்தி குறிப்பிடுகிறது.

திருமாளிகைப்பத்தியில் சூரியன்,சுந்தரர், நால்வர், ஆகிய மூர்த்திகளும், சூரியேசர் , சோமேசர் , குருமோக்ஷேச்வரர் , சப்தரிஷிநாதர், விஷ்ணுநாதர் , பிரமநாதர், ஆகிய இலிங்கங்களும் தரிசனம் தருகின்றனர். அதோடு, விஸ்வநாதர்,விசாலாக்ஷி, அகஸ்தியர், ஆக்ஞா  கணபதி, சோமாஸ்கந்தர், நின்ற கணபதி, சந்திர சேகரர், வள்ளி  தெய்வானை சமேத சுப்பிரமணியர், சப்த மாதாக்கள், சண்டேசர், கஜலக்ஷ்மி , நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்திகள் உள்ளனர்.சபாநாதர் சன்னதியை அடுத்து, உற்சவ தக்ஷிணாமூர்த்தியைத் தரிசிக்கிறோம். கீழ்ப்புறம் உள்ள திருமாளிகைப்பத்தியில் பைரவர், சந்திரன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். மூலவர் ஆபத்சகாயரின் தென்புறக் கோஷ்டத்தில் அழகும் ஞானமுமே வடிவாகத்  தக்ஷிணாமூர்த்தி பகவான் காக்ஷி அளிக்கிறார். மேற்புற கோஷ்டத்தில் லிங்கோத்பவரும், வடபுறம் பிரமனும் துர்க்கையும் எழுந்தருளியுள்ளார்கள்.  வெளியில் சுக்கிரவார அம்மன் சன்னதி , பள்ளியறை ஆகியன உள்ளன.

அடியார்களை நோக்கி வினவுவதாகத் திருஞானசம்பந்தர் இத்தலத்தில் அருளிய திருப்பதிகம் சிறப்பு வாய்ந்தது: இரும்பூளை ஈசன் எதற்காகக் காட்டில் ஆடுகிறான் என்று கேட்பதாக அமையும்  பாடலைக் காண்போம்:

" தொழலார் கழலே தொழும் தொண்டர்கள் சொல்லீர்
   குழலார் மொழிக் கோல்வளையோடு உடன் ஆகி
   எழிலார் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்
   கழலான் கரி கானிடை ஆடும் கருத்தே."

5. திருக்கொள்ளம்பூதூர் :


பஞ்சாரண்யத் தலங்களுள் ஐந்தாவதான வில்வாரண்யம் எனப்படும் இத்தலம், கொரடாச்சேரியிலிருந்து செல்லூர் வழியாகவும், கும்பகோணம் மற்றும் திருவாரூரிலிருந்து வரும்போது குடவாசல்,ஓகை வழியாக செல்லூர் வழியாகவும் அடைதற்குரியது.முள்ளியாறு என்றும் அகஸ்திய காவேரி என்றும் கூறப்படும் வெட்டாற்றின் கரையில் உள்ளது. ஆற்றின் மறு கரையில் நம்பர் கோயில் உள்ளது. திருஞானசம்பந்தர் இந்த ஊருக்கு எழுந்தருளியபோது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியதால் ஓடம்  விடுவோரைக் காணாது , தனது நாவையே ஒடமெனக் கொண்டு மறுகரையில் உள்ள கொள்ளம்பூதூர்ப் பெருமானைப் பாடினார். ஓடம்  தானாகவே தொண்டகளுடன் மறுகரையை அடைந்தது.

கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம்  ஆடிய நம்பனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே

என்பது அப்பதிகத்தின் முதல் பாடல்.

இத்தலம், வில்வவனம், பிரம வனம், பஞ்சாக்ஷரபுரம், காண்டீபவனம், ஆகிய பெயர்களையும் கொண்டது. பாற்கடலில் அமுதம் கடைந்தபோது எழுந்த அமுதத் திவலைகள் இங்கு தெரித்து விழுந்து வில்வமரங்கள் ஆயின . குரு வடிவாய் சுவாமி பஞ்சாக்ஷர உபதேசம் செய்வதால் பஞ்சாக்ஷரபுரம் எனப்படுகிறது. காண்டீபனாகிய அர்ச்சுனன் தவமியற்றி, இத்தலம் என்பெயரை உடையதாக இருக்க வேண்டும் என வரம் வேண்டியதால், காண்டீப வனம் எனப்பட்டது.

முதல் வாயிலில் கோபுரம் இல்லாவிடினும்,இரண்டாவது வாயிலில் கோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் விநாயகர், வசந்த மண்டபம் ஆகியவற்றைக் காண்கிறோம். அடுத்த கோபுர  வாயிலில் பொய்யாக் கணபதியும் தண்டபாணியும் காட்சி அளிக்கின்றனர். பிராகாரத்தில் மடைப்பள்ளி, ஆதி வில்வ விருக்ஷம், வலம்புரி விநாயகர்,சோமாஸ்கந்தர், பஞ்சலிங்கம், முருகப்பெருமான், கஜலக்ஷ்மி, பைரவர்,பள்ளியறை, நவக்கிரகங்கள் ஆகியவற்றைத் தரிசித்துவிட்டு, நடுமண்டபத்தில் உற்சவ மூர்த்திகளையும் அருகில் சௌந்தர நாயகி சன்னதியும் அமைந்திருக்கக் காண்கிறோம். கல்வெட்டுக்களில் பெருமான் , கொள்ளம்பூதூர் உடையார் என்றும் தேவியார், அழகிய நாச்சியார் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.

கோவிலுக்கு முன்புறம் உள்ள பிரம தீர்த்தம் , பிரமனால் ஏற்படுத்தப்பட்டது. இதில் தை வெள்ளிகளில் நீராடுவர். கோயிலுக்கு வடப்புறம் உள்ள அர்ஜுன தீர்த்தத்தில் பங்குனிப் பௌர்ணமியில் நீராடினால்  நற்பயன்களை அடையலாம். அகத்தியர் தோற்றுவித்த அகத்திய தீர்த்தத்தில் கார்த்திகை சோம வாரங்களில் நீராடி தோஷங்கள் நீங்கப்   பெறலாம்.   வெட்டாற்றை ஒடம்போக்கி ஆறு எனவும் வழங்குவர்.

இத்தலத்தில் இறப்பவர்களுக்கு வில்வவனேசர் அம்பிகையோடு எழுந்தருளி, வலது செவியில் பஞ்சாக்ஷர உபதேசம் செய்து முக்தி அளிப்பதாகப் புராணம் கூறுகிறது. விநாயகர், கங்கை, காவேரி, சாண்டில்யர், ஆதிசேஷன், இடைக்காடர், வரகுணபாண்டியர், கோச்செங்கட்சோழர்,பிருகு முனிவர், காச்யபர், மார்கண்டேயர், கண்வர்,வசிஷ்டர், வாமதேவர் ஆகியோரும் பூஜித்துள்ளனர். பன்றியாகப் பிறந்த அந்தணன் ஒருவன் இங்கு வந்து அகத்திய தீர்த்தத்தில் மூழ்கி, தேவ வடிவம் பெற்று முக்தி அடைந்தான். வழிப்பறி செய்த வேடன் ஒருவன், நல்வினைப்பயனால் இங்கு வந்து, பிரம தீர்த்தத்தில் சிவராத்திரியன்று நீராடி முக்தி வரம் பெற்றான். இவ்வாறு இங்கு வந்து நீராடி இறைவனைத் தரிசிப்போர் காசிக்குச் சென்று கங்கையில் நீராடிய பலனைப் பெறுவர்.

இத்தலத்தில் ஓடத்  திருவிழா ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் நடைபெறுகிறது. திருஞானசம்பந்தர் அடியார்களுடன் ஆற்றின் மறுகரையிலிருந்து பதிகம் பாடிக்கொண்டே ஓடத்தில் ஏறி இக்கரைக்கு வரும் காட்சியும் மேலவாயிலில் ரிஷபாரூடராகப் பெருமான் அவருக்கும் மற்ற அடியார்களுக்கும் தரிசனம் கொடுக்கும் காட்சியும்   மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பஞ்சாரண்யத்தலங்கள் இகபர நலன்கள் எல்லாவற்றையும் வழங்குபவை. யாத்திரை செய்யும் அடியார்கள்  மனம் ஒன்றி வழிபடுவதுடன்  ஆலய வளர்ச்சிக்கும் , ஆலய சிப்பந்திகளின் நலனுக்கும் தங்களால் இயன்ற அளவில் உதவினால் பெரிய சிவபுண்ணியமாக அமையும் என்பதில் ஐயமில்லை.