Wednesday, June 29, 2016

அம்பரும் அம்பர் மாகாளமும்

அம்பர் ஆலயம் 
அம்பர், அம்பர் மாகாளம் ஆகிய இருதலங்களும் திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகங்கள் பெற்றவை. இவ்விரண்டும் ஒன்றோடொன்று 1.5 கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ளவை. கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் வழியாக காரைக்கால் செல்லும் பேருந்துகள் இவ்வூர்கள் வழியாகச் செல்கின்றன. அம்பர் என்ற தலம் அம்பல்  என்றும் அம்பர் மாகாளம் என்ற தலம் திருமாகாளம் என்றும் மக்கள் வழக்கில் வழங்கப்படுகின்றன. மயிலாடுதுறை- திருவாரூர் செல்லும் இருப்புப் பாதையிலுள்ள பூந்தோட்டம் ரயிலடியிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ள திருமாகாளத்தையும் அதன்  அருகிலுள்ள அம்பரையும் தரிசிக்கலாம்.

                                                             
                                                                      அம்பர் 

சங்க நூல்களான  புறநானூறு , நற்றிணை மற்றும்  திவாகர நிகண்டு ஆகிய நூல்கள் மூலம்  அம்பரில் அரசர்களும், கொடையாளிகளும் , புலவர்களும், கலைஞர்களும் வாழ்ந்ததாக அறிகிறோம்.

தண்ணீரும் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு .

என்ற தனிப்பாடலும் அம்பரின் சிறப்பையும் பெருமையையும் விளக்குகிறது.

தலப்பெயர்கள்:மாகாளபுரம் ,மாகாளிபுரம்,புன்னாகவனம், பிரமபுரி, நந்தராஜபுரம், சம்பகாரண்யம், மாரபுரி ஆகிய பெயர்களும் அம்பருக்கு உண்டு என்பதைத் தலபுராண வாயிலாக அறிகிறோம்.

மூர்த்திகள்:அம்பர் பெருங் கோயில் கோச்செங்கட்சோழ நாயனார் கட்டிய மாடக் கோயில்களுள் ஒன்று. சுவாமிக்குப் பிரமபுரீசுவரர் என்றும் அம்பிகைக்கு சுகந்த குந்தளாம்பிகை என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. நந்தன் என்ற அரசன் இங்கு தங்கி வழிபாட்டு வந்த காலத்தில் கடும் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. அப்பஞ்சம் தீரும்வரை தினமும் அரசனுக்கு ஒருபடிக்காசை விநாயகப் பெருமான் வழங்கியதால்,  அவருக்குப் படிக்காசு விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள பிற ஆலயங்களில் சட்டைநாதர், புவனேசுவரர் பைரவர் ,கயிலாசநாதர், திருமால்,காளி ஆகிய மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.

தீர்த்தங்கள்: அரிசிலாறு, அன்னமாம் பொய்கை, இந்திர தீர்த்தம், சூல  தீர்த்தம் ஆகியவை .

ஸ்தல விருக்ஷங்கள்: புன்னை,மருது ஆகியவை.

கோயில் அமைப்பு:
அரிசிலாற்றின் வட கரையில் கிழக்கு நோக்கியபடி இந்த ஆலயம் அமைந்துள்ளது. மூன்று நிலை ராஜ கோபுரத்தின் அருகில் இந்திர தீர்த்தம் உள்ளது. ராஜ கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் கட்டு மலையின் மீது சுவாமி சன்னதியும் கீழே அம்பாள் சன்னதியோடு கூடிய வெளிப் பிராகாரத்தையும் காண்கிறோம். சுதை வடிவிலான மிகப்பெரிய நந்தி சுவாமி சன்னதியை நோக்கியவாறு அமைந்துள்ளது.
தென்கிழக்கு மூலையில் தல விருக்ஷமான புன்னை மரமும் அதனருகே ஆதி பிரமபுரீசுவரரும், கிணறு வடிவிலுள்ள அன்னமாம் பொய்கையும் ,சோமாசி மாற நாயனார் சன்னதியும் இருப்பதைத் தரிசிக்கிறோம்.

கன்னிமூலையில் விநாயகர் , முருகன்,மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. கோஷ்டங்களில் பிரமனும் துர்க்கையும் காணப்படுகின்றனர்.சண்டிகேசுவரர் சன்னதியும், பைரவர்,சூரியன் ஆகிய சன்னதிகளும் கிழக்கு பிராகாரத்தில் அம்பாள் சன்னதியும் உள்ளன.

 மாடக்கோயிலின் படிகளை ஏறினால் சோமாஸ்கந்தர் சன்னதியும், மூலவரான பிரமபுரீசுவரர் சன்னதியும் அழகிய விமானங்களோடு அமைந்துள்ளதைக் காண்கிறோம். மலைக் கோயிலின் பிராகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி தரிசனம் தருகிறார். சுவாமி சன்னதி வாயில் சுவற்றில் சம்பந்தர்  பாடியருளிய பதிகக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

சுவாமி சன்னதியின் மகாமண்டபத்தில் நடராஜ சபை, கணபதி, துவாரபாலகர் ஆகியவற்றைத் தரிசிக்கிறோம். மூலஸ்தானத்தில் பிரமபுரீசுவரர் அழகிய சிவலிங்கத் திருமேனியோடு காட்சி தருகிறார். பெருமானுக்குப் பின்புறம் சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசிக்கிறோம். மாடக்கோயிலின் கீழ் மண்டபத்தில் சம்பந்தர்,அப்பர்,கோச்செங்கட்சோழர் ஆகிய மூர்த்தங்களைக் காண்கிறோம்.

கட்டு மலையிலிருந்து கீழே இறங்கி வந்து சுகந்த குந்தலாம்பிகையின் சன்னதியை அடைந்து அருள் பெறுகிறோம்.  

தல புராணச் செய்திகள்: இத்தலத்திற்கு வடமொழியில் இருந்த புராணம் கிடைக்காமல் இருந்தபோது அவ்வூர் அறிஞர்களும் செல்வந்தர்களும் அதை எப்படியாவது பெற்று தக்க ஒருவரால் தமிழில் செய்யுள் வடிவில் இயற்றுவிக்க வேண்டும் என்று கருதினார்கள். அவர்களுள்  வேலாயுதம் பிள்ளை என்ற செல்வந்தர் , திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் செல்லும்போது அங்கு ஆதீன வித்துவானாக விளங்கிய திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களது தமிழ்ப்புலமையைக் கேள்வியுற்று, அவர் மூலம் அம்பர்ப் புராணம் இயற்றுவிக்க எண்ணினார்.  நெடுநாட்கள் முயன்றபின் அவ்வடமொழிப் புராணப் பிரதி தஞ்சை சரஸ்வதி மகாலில் கிடைக்கப்பெற்று, அதனைத் தமிழாக்கம் செய்து அதனைக் கொண்டு பிள்ளையவர்களைப் புராணம் இயற்றுமாறு வேண்டவே, அவரும் அவ்வன்புக்கு இணங்கி 1869 ம் ஆண்டு அதனை இயற்றத் தொடங்கினார். வண்டியில் பயணம் செய்த போதும் பிள்ளை அவர்களின் வாயிலிருந்து செய்யுட்கள் மடை திறந்த வெல்லம் போல வெளி வந்தன. அவற்றை உடனிருந்து எழுதிய பிள்ளையவர்களின் மாணாக்கரான டாக்டர் உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்களது வாக்காலேயே அந்த அனுபவத்தைக் காண்போம்:

" இவர் விரைவாகச் செய்யுள் இயற்றும் ஆற்றல் உடையவர் என்று பலரும் புகழ்ந்து சொல்லுதலைக் கேட்டு அந்த நிலைமை எப்பொழுதாவது பார்க்கும்படி நேருமோ என்று ஆவலோடு பல நாளாக எதிர்பார்த்திருந்த எனக்கு இவர் பாடல்களைச் சொல்ல அவற்றை எழுதும் பாக்கியம் அன்று கிடைத்ததைக் குறித்து மெத்த சந்தோஷம் அடைந்தேன். இனி யாரேனும் இவர்களைப் போலப் பாடப் போகிறார்களா? என்ற எண்ணமும் எனக்கு அப்போது உண்டாயிற்று... ஒரு மகா கவியின் வாக்கிலிருந்து கவிதாப் பிரவாகம் பெருகிக் கொண்டிருப்ப அதனைக் காதினால் கேட்டும், கையினால் எழுதியும், மனத்தினால் அறிந்தும் இன்புற்ற எனது நிலை இங்கே எழுதுதற்கு அரியது."   இப்புராணம் பதினைந்து   படலங்களையும் 1007   செய்யுட்களையும் கொண்டது.

சிவ புராணங்களைக் கேட்பதில் பெரிதும் விருப்பம் கொண்ட நைமிசாரண்ய முனிவர்கள் , எல்லாப் பெருமைகளையும் உடையதும், முக்தி தருவதுமான தலம் ஒன்றின் பெருமையைக் கூறுமாறு சூத முனிவரிடம் கேட்க, மிக்க மகிழ்ச்சியடைந்த சூதர், கைகளைச்  சிரத்தின் மீது கூப்பி, ஆனந்தக் கண்ணீர் பெருகியவராக பிரமபுரி எனப்படும் அம்பர் தலத்தின் பெருமைகளைக் கூறலானார்.

இத்தலத்தின் பெருமையை சிவபெருமான் மட்டுமே கூற வல்லவர். வேண்டுவோர் வேண்டுவன யாவற்றையும் அளிக்கும் இத்தலம், கற்பக விருக்ஷத்தையும் காமதேனுவையும் சிந்தாமணியையும் ஒத்தது. இங்கு சிறிது நேரம் தங்கினாலும் காசியில் தங்கி தருமங்கள் செய்வதற்கு நிகராகும். இங்கு வசிக்கும் எல்லா உயிரினங்களும் சிவலோகப் பதவி பெறுவது நிச்சயம். இதன் அருகில் ஓடும் அரிசிலாறு காவிரியே. அதிலும், கோயிலில் உள்ள அன்னமாம் பொய்கையிலும் நீராடினால் பெறும் பயன் அளவிடற்கரியது. நீராடுவோர் கொடிய பாவங்களில் இருந்து  நீங்கப்பெறுவர்.

பிரமன் அருள் பெற்றது:    ஒரு சமயம் பிரமனும் திருமாலும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று நீண்ட காலம் போரிட்டுக் கொண்டபின்னர் அப்போர் முடிவுபெறா ததால், நான்கு வேதங்களையும், காயத்ரி மந்திரத்தையும், பிரணவ மந்திரத்தையும் நேரில் வரவழைத்து முடிவு கூறுமாறு கேட்டனர். அத்தேவதைகள் ஒருமித்தவர்களாகப் பரமசிவனே பிரமம் என்று திடமாகக் கூறியும், பிரமனும் மாலும் அதனைக் கேளாது மீண்டும் போர் புரியத் துவங்கினர். அப்போது அவ்விருவரிடையே முதலும் முடிவும் அறியமாட்டாத சோதி வடிவாகச் சிவபெருமான் தோன்றினான். அச்சோதியின் அடிமுடி கண்டவரே உயர்ந்தவர் என இறைவன் கூறவே, திருமால் வராக வடிவெடுத்து திருவடியைக் காண்பதற்காக   நிலத்தை அகழ்ந்து   பாதாளம் வரை சென்றும் முடியாதுபோகவே இறைவனைத் தொழுது, " நீயே பரம்" எனக் கூற, பிரமன் அன்னப்பறவை வடிவில் முடி காணச் சென்றான். அது முடியாது போகவே, இறைவனது முடியிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சி சொல்லுமாறு கூறி விட்டுத் தான் முடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தான். அன்னப்பறவை வடிவிலேயே இருப்பாயாக என்று பிரமனைப் பெருமான் சபித்து விட்டு, இனித் தாழம்பூவை சிவபூஜைக்கு உதவாதவாறும் சபித்தான்.

பிழையை உணர்ந்த பிரமன்,அன்னவடிவம் நீங்குவதற்காகக் காவிரியின் தேகரையிலுள்ள புன்னாக வனத்தை அடைந்து கடும் தவம் மேற்கொண்டான். அத்தவத்தால் ஏற்பட்ட புகையும் அனலும் யாவரையும் வாட்டியது. திருமாலின் வேண்டுகோளுக்கு இரங்கிய கயிலாயநாதன், பிரமனுக்குக் காட்சி அளித்து, அவன் வேண்டியபடியே, அண்ணா உருவம் நீங்கிப் பழைய வடிவு பெறுமாறும், கயிலையின் ஒரு கூரான இக்கிரி , பிரம கிரி எனப் பெயர்பெருமாறும் , அங்கு காட்சி அளிக்கும் இறைவன் பிரமபுரீசுவரர் என வழங்கப்படுமாறும், தவம் செய்த பொய்கை, " அன்னமாம் பொய்கை" எனப்படுமாறும், அருள் பெற்ற மாசி மகத்தன்று அதில் நீராடுவோர் தேவ பதவி பெறுவர் என்றும் பல வரங்களை  அளித்தருளினான்.

காளி வழிபட்டது:   துர்வாச முனிவருக்கும் மதலோலா என்ற தேவ கன்னிகைக்கும் பிறந்த அம்பன்,அம்பரன் என்ற அசுரர்கள் புன்னாக வனத்தை  அடைந்து தவம் செய்து யாவரையும் வெல்லும் ஆற்றலை வரமாகப் பெற்றனர். ஊரின் பெயரும் அம்பர் என்றாயிற்று. யாவரையும் அடிமையாகக் கொண்டு அகந்தையுடன் திரிந்த இருவரையும் கண்டு தேவர்களும் அஞ்சினர். அனைவரையும் காத்தருளுமாறு திருமால் முதலிய தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அப்போது பெருமான் தனது இடப்பாகத்திளிருந்த அம்பிகையை நோக்கிச் சிறிது முறுவல் செய்யவே, குறிப்புணர்ந்த தேவியானவள் காளியை அங்கு வருமாறு பணித்தாள். அக்கணமே அங்கு தோன்றி, அடிபணிந்த காளியை நோக்கி அவ்விரு அசுரர்களையும் அழித்து வருமாறு கட்டளை இட்டாள். அழகிய கன்னிகை வடிவத்துடன் காளியும், வயோதிக மறையோனாகத் திருமாலும் அங்கிருந்து புறப்பட்டு, அசுரைகளது அரண்மனையை அடைந்தனர்.

கன்னிகையின் அழகில் மயங்கிய இருவரும் தாம் அவளை மணக்க இருப்பதாகக் கூறியதும் முதியவராக வந்த திருமால், உங்களிருவரில் யார் வலிமையானவரோ அவரை என் பெண் மணப்பாள் என்றார். உடனே இரு சகோதரர்களுக்குமிடையில் ஏற்பட்ட போரில் அம்பன் கொல்லப்பட்டான். இனித் தானே அக்கன்னிகையை மணப்பெண் எனக் கருதி,அவளிடம் சென்ரான்  அம்பரன். அப்போது அக்கன்னி ,அனைவரும் அஞ்சும் வண்ணம் பேருருவம் கொண்டு, அவனது மார்பில் உதைத்தாள். காளியானவள் அவனது குடலை மாலையாகப் பூண்டு அனைவரது துயரத்தையும் அகற்றி அருளினாள். விண்ணோரும் மண்ணோரும் அவளைத் துதித்தனர். அவ்வாறு அம்பரனை மாய்த்த இடம் அம்பகரத்தூர் எனப் பட்டது. அசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதர்காகக் காளி, அம்பர் மாகாளத்தில் சிவபெருமானைப் பூசித்து அருள் பெற்றாள்.

சம்கார சீலனை அழித்தது:புலத்திய முனிவர் வம்சத்தில் தோன்றிய சம்கார சீலன் என்பவன் பிரமனைக்  குறித்துத் தவம் செய்து யாவரையும் வெல்லும் வரம் பெற்றான். இந்திரனையும் பிற தேவர்களையும் வென்றான். அதனால் கலங்கிய இந்திரனைப் பார்த்துப் பிரமதேவன், " நீ புன்னாக வன ஈசனை நோக்கித் தவம் செய்தால் அப்பெருமான் பைரவ மூர்த்தியைக் கொண்டு அந்த அசுரனை அழித்தருளுவார்" எனக் கூறினார்.அவ்வாறே தவம் செய்து கொண்டிருந்த இந்திரனைத் தேடி அசுரன் அம்பருக்கும் வந்து விடவே, இறைவன் கால பைரவரை அனுப்பி அவ்வசுரனை மாய்வித்தருளினார்.

விமலன் அருள் பெற்றது: காசியைச் சேர்ந்த விமலன் என்ற அந்தணன் தன்  மனைவியோடும் பல தலங்களை வணங்கி விட்டு அம்பரை  வந்தடைந்து, பெருமானையும் அம்பிகையையும் பல்லாண்டுகள் வழிபட்டுப் பணி செய்து வந்தான். இறைவன் அவன் முன்னர் காட்சி அளித்து அவன் வேண்டிய வரங்களைத் தந்து,அன்னமாம் பொய்கையில் கங்கையை வச்சிரத் தூண் போல் எழுமாறு செய்யவே, விமலனும் தன் துணைவியுடன் அதில் நீராடி மகிழ்ந்தான். மாதேவன் என்ற என்ற மகனைப் பெற்றுப் பின்னர் இறைவனடி சேர்ந்தான். மாதேவனும் தந்தையைப் போலவே அத்தலத்து ஈசனுக்குப் பணிகள் பல செய்து நிறைவாகச் சிவலோக பதவி பெற்றான்.

மன்மதன் வழிபட்டது:  தேவலோக மாதர்களால் தனது தவம் வீணானதால் மன்மதன் மீது சினந்த விசுவாமித்திரர் இனி அவனது பாணங்கள் எவரிடமும் பலிக்காமல் போகக் கடவது என்று சபித்தார். அதனால் வருந்திய மன்மதன், பிரமனது சொற்படி புன்னாக வனத்திற்கு வந்து பிரமபுரீசனைப் பன்னாள் வழிபாட்டு சாபம் நீங்கப்பெற்றான்.

நந்தன் பிரமஹத்தி நீங்கியது: காம்போஜ தேச அரசனான நந்தன் என்பவன் ஒருநாள் வேட்டைக்கு வந்தபோது புலித் தோலால் தன உடலை மறைத்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த பிங்கலாக்கன் என்ற முனிவரைப் புலி என்று எண்ணி அம்பி எய்தான். அவ்வம்பினால் முனிவன் அக்கணமே மாண்டான். அரசனைப் பிரமஹத்தி பற்றியது. அப்பழி தீர வேண்டிப் பல தலங்களுக்கும் யாத்திரை செய்தான். அப்படியும் அது அவனை நீங்கவில்லை. அம்பர் எல்லைக்கு வந்தபோது பிரமஹத்தி அவனைப் பின் தொடர அஞ்சி ஊர்ப் புறத்திலேயே நின்றுவிட்டது. அங்கிருந்த முனிவர்கள் சொற்படி பிரப்ரீசுவரர் கோயிலுக்குச் சென்று பெருமானைத் தரிசித்துத் தனது பழி தீர்த்தருளுமாறு வேண்டினான். அத்தலத்திலேயே தங்கி, கோயிலைத் திருப்பணி செய்வித்தான். பிரமஹத்தி அவனை விட்டு நீங்கியது. இறைவனது திருவருள் பெற்ற அரசன் மீண்டும் தன்னாட்டிற்குச் சென்றான். பின்னர் உத்தமன் என்ற தனது மைந்தனுக்கு முடி சூட்டிவிட்டு மீண்டும் அம்பரை  வந்தடைந்து பணிகள் பல செய்தான். கயிலாயநாதர் என்ற பெயரில் சிவலிங்கம் ஒன்றையும் ஸ்தாபித்து ஆலயம் அமைத்தான்.

அப்போது கடும் பஞ்சம் ஏற்பட்டு எல்லா உயிர்களும் வருத்தமுறவே, தன்  கையிலுள்ள எல்லாப் பொருள்களையும் அளித்துப் பசிப்பிணி தீர்த்து வந்தான். கைப்பொருள்கள் முற்றும் செலவானதும் பெருமானது சன்னதியை அடைந்து, உயிர்கள் வருந்துவதைக் கண்ட பின்னரும் தான் வாழ்வதை விரும்பவில்லை என்றும் பெருமானே வழி காட்ட வேண்டும் என்றும் விண்ணப்பித்தான். அவனுக்கு இரங்கிய பெருமான் விநாயகப் பெருமான் மூலம் நாள்தோறும் படிக்காசு பெறச் செய்து பஞ்சம் தீர்த்தருளினான். சின்னாட்களில் பஞ்சம் தீர்ந்து உயிர்கள் மகிழ்ச்சியுற்றன. திருவருளைக் கண்டு வியந்த மன்னனும் பெருமானது மலரடிகளை வழுவாது வழிபட்டுப்  பேரின்பமுற்றான்.

சோமாசி மாற நாயனார்: அம்பரில் அவதரித்த மறையவர். பெருமானது மலரடிகளை மறவாதவர். திருவாரூர் சென்று தம்பிரான் தோழரான சுந்தரரை அம்பரில் தாம் செய்யவிருக்கும் சோம யாகத்திற்குத் தியாகராஜ மூர்த்தியுடன் வருமாறு வேண்டினார். அதற்கு உடன்பட்ட சுந்தரர், கூப்பிட்ட நாளன்று மாறனாறது வேள்விச் சாலைக்கு எழுந்தருளினார். யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இறைவனும் இறைவியும் நீச வடிவம் கொண்டு கணபதியும் கந்தனும் நீச உருவில் உடன் வர யாகசாலைக்குள் நுழைந்ததைப் பார்த்த வேதியர்கள் யாகம் வீணானது எனக் கூறி அங்கிருந்து அகன்றனர். சுந்தரரும் சோமாசி மாறரும் மட்டும் அங்கிருந்து அகலவில்லை. பெருமான் அம்பிகையோடு அவர்களுக்குக் காட்சி அளித்தருளினார்.
தரிசித்தோர்: கோச்செங்கட்சோழ நாயனார்  மாடக்கோயிலாகத் திருப்பணி செய்து இறைவனை வழிபட்டார். திருஞான சம்பந்தர் இத்தலத்துப் பெருமான் மீது தேவாரப் பதிகம் பாடி அருளியுள்ளார். அப்பர் தேவாரத்திலும் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டுக்கள்: இராஜராஜரின் கல்வெட்டு ஒரு வணிகன் இக்கோயிலுக்கு இரண்டு விளக்குகள் கொடுத்ததையும் நிபந்தமாக நிலங்களை அளித்ததையும் கல்வெட்டால் அறிகிறோம்.
               
                                                       அம்பர் மாகாளம் 

அம்பருக்கு அண்மையில் உள்ள இத்தலம் தற்போது திரு மாகாளம் எனப்படுகிறது. ஞான சம்பந்தரின் பதிகங்கள் மூன்றைப் பெற்ற தலம்.

கோயில் அமைப்பு: அரசலாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கியபடி ஆலயம் அமைந்துள்ளது. ஐந்து நிலைக் கோபுரம் வாயிலில் உள்ளது கோயிலுக்கு வெளியில் மாகாள தீர்த்தம் அமைந்துள்ளது. இரண்டு பிராகாரங்களைக் கொண்டது. சுவாமி பிராகாரத்திற்கு வெளியில் தனிக் கோயிலாக கிழக்கு நோக்கி அம்பிகையின் சன்னதி உள்ளது. இரண்டாவது கோபுர வாயிலைக் கடந்து சுவாமி சன்னதியை அடைகிறோம். மகாமண்டபம்,ஸ்நபன மண்டபம்,அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட மகாகாளேசுவரரின் சன்னதி அழகு வாய்ந்தது.
முதல் பிராகாரத்தில் அறுபத்துமூவர், விநாயகர், முருகன், தக்ஷிணாமூர்த்தி , உதங்கர்-மதங்கர் முனிவர்கள், வில்லேந்திய வேலவர், மகாலக்ஷ்மி, துர்க்கை, சண்டிகேசுவரர், ஆகியோரது சன்னதிகளைத் தரிசிக்கிறோம்.

மூர்த்திகள்: இறைவன் மகாகாள நாதர் எனவும் அம்பிகை பயக்ஷயாம்பிகை என்றும் வழங்கப்படுகின்றனர். மேலும்,தியாகேசர், அச்சம் தீர்த்த விநாயகர், காக்ஷி கொடுத்தவர்,காளி,நாக கன்னிகை ஆகிய மூர்த்திகளைத் தரிசிக்கிறோம்

வழிபட்டோர்: அம்பன்-அம்பாசுரனைக் கொன்ற பழி தீரக் காளியும், உமாதேவியை மகளாகப் பெற மதங்க முனிவரும், நாக கன்னிகையும் இறைவனை வழிபட்டுள்ளனர்.    

கல்வெட்டு: முதல் குலோத்துங்கன்,விக்கிரம சோழன், ஆகியோர் காலத்தில் கோயிலுக்குச் செய்த தானங்களைக் கல்வெட்டுக்களால் அறியலாம்.

திருவிழாக்கள்:
வைகாசி ஆயில்யத்தன்று நடைபெறும் சோமாசிமாற நாயனார் குருபூஜையன்று அம்பருக்கும் அம்பர் மாகாளத்திற்கும் இடையில் யாகம் நடத்தப்பெறுகிறது .  திருமாகாளம் கோயிலில் இருந்து சுவாமியும் அம்பாளும் யாகசாலைக்கு எழுந்தருளி சோமாசி மாறருக்கும் சுந்தரருக்கும் காக்ஷி கொடுத்தருளுகின்றனர்.
      

Monday, January 4, 2016

உலகத் தோற்றமும் குடந்தையும்

ஆதி கும்பேசுவரர் ஆலயம் 
இறைவனது ஐந்து தொழில்களில் முதலாவதாக சிருஷ்டி (தோற்றம் ) குறிப்பிடப்படுகிறது. முடிவில்லாத பரம்பொருள் மட்டுமே மீண்டும் உலகத்தையும்,உலக உயிர்களையும் தோன்றச் செய்யமுடியும். ஆகவேதான் இறைவனுக்கு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் அவனுக்குத் தோற்றமும் முடிவும் இல்லாததுதான் மிகச் சிறந்த பெருமை என்பதை, " தோன்றாப் பெருமையனே" என்று போற்றுகிறது  திருவாசகம். இதே கருத்தை இளங்கோவடிகளும், " பிறவா யாக்கைப் பெரியோன்" என்று சிவபெருமானைக் குறிப்பிடுவதால் அறியலாம். ஊழிக்காலம் ஆனபிறகு மீண்டும் உலகைத் தோற்றுவிக்கும் பரம கருணையோடு, பிரம்மன்,விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளையும் தன்னிடம் தோன்றச் செய்தான் சிவபெருமான் என்கின்றன புராணங்கள். அப்படிப்பட்ட மூர்த்த வடிவை ஏக பாத மூர்த்தியாகத் திருவொற்றியூர் போன்ற தலங்களில் தரிசிக்கிறோம். இவ்வாறு ஆதியும் அந்தமும் இல்லாத பரமசிவத்தை அப்பர் சுவாமிகளின் தேவாரம், " ஈறு இல்லாதவன் ஈசன் ஒருவனே " என்று கோடிட்டுக் காட்டுகிறது.

சிவபரத்துவத்தைக் காட்டும் தலையாய தலங்களுள் கும்பகோணம் எனப்படும் குடந்தை நகர் தனிச் சிறப்பு வாய்ந்தது. ஒரு  சமயம் பிரளயத்தால் உலகம் அழியும் தருணத்தில், பிரம தேவன் சிவபெருமானிடம்  சென்று, வேதமும் சிருஷ்டி பீஜமும் அழிந்து விட்டால் தன்னால் படைப்புத் தொழிலைச் செய்யாமல் போய் விடுமாதலால் அவற்றைக் காப்பாற்றி அருளுமாறு வேண்டினான். அவனது வேண்டிகோளுக்கு இரங்கிய பெருமானும், சிருஷ்டி பீஜத்தை அவனிடம் தந்து அதனை அமிர்தமும் மண்ணும் சேர்ந்த ஒரு குடத்தில் இட்டு, அக்குடத்தின் மீது மாவிலை,தேங்காய்,வில்வம்,பூணூல் ஆகியவற்றை இட்டு, அமுதத்தால் தெளித்த பின்னர் ஓர் உறியில் வைத்து, அதை மேரு மலையில் வைக்கும்படிக் கட்டளையிட்டு அருளினார். , அதன்படியே பிரமனும் அமுத குடத்தை மேருவில் வைத்து விட்டுத் திருவருளை வேண்டி நின்றான். சிவபிரானது திருவருளால் பிரமன் மீண்டும் படைப்புத் தொழிலைக் கைவரப்பெற்றான்.அப்போது பிரமன் தொடங்கி வைத்த மாசிமகத் திருவிழாவே தற்போதும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

கலயநல்லூர்(சாக்கோட்டை)
பிரளய வெள்ளத்தில் அமுத குடம் தென் திசையை நோக்கி நகர்ந்தது. அதன் மீது அணிவிக்கப்பட்டிருந்த மாவிலை,தேங்காய்,வில்வம்,பூணூல் ஆகியவை பெரும் காற்றால் கலைக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் விழுந்தன. அப்படி விழுந்த இடங்களில் இலிங்க மூர்த்திகள் தோன்றின. நிறைவாக அமுதகும்பமானது காவிரியின் தென்கரைக்கு வந்த போது, சிவபெருமான் ஓர் வேட  உருவம் கொண்டு அக்குடத்தின் மீது அம்பைச் செலுத்தினான். அவ்வாறு அம்பு(பாணம் ) எய்த இடம் பாணபுரி ஆயிற்று. எய்த அம்பு அமுத குடத்தின் மூக்கைச் சிதைத்தபடியால் அங்கே கும்பேச லிங்கம் தோன்றியது. அந்தத்  தலமும் குடமூக்கு என்று வழங்கப்படலாயிற்று. அக்குடத்திலிருந்து அமுதம் வெளிப்பட்டு விழுந்த இடம்  கலய நல்லூர்  எனவும் அங்கு தோன்றியருளிய பெருமான், அமிர்த கலச நாதர் எனவும் அழைக்கப்பட்டனர். குடத்தின் வாய்ப் பகுதி விழுந்த இடம் குட வாயில் (குடவாசல்) ஆயிற்று. அக்கோயிலுக்கு எதிரில் அமிர்தம் தங்கிய திருக்குளம் அமிர்த தீர்த்தம் எனப்பட்டது. கலசத்தின் தேங்காய் விழுந்த இடம் அபிமுகேசுவரர் கோயிலாக மகாமகக் குளத்தின் அருகே காட்சி அளிக்கிறது. கும்பத்தின் மீது அணிவிக்கப்பட்ட பூணூல் விழுந்த இடம் கௌதமேசுவரர் ஆலயமாயிற்று. கும்பத்தின் மேல் இடப்பட்ட வில்வம் விழுந்த இடம் நாகேசுவர சுவாமி (குடந்தைக் கீழ்க் கோட்டம்) ஆகியது. அமுத கும்பத்திற்கு ஆதாரமாக இருந்த உறி விழுந்த இடம் சோமேசுவரர் ஆலயமாக விளங்குகிறது.

கும்பகோணத்திற்குப் பஞ்ச குரோசத் தலங்களாகத் திருவிடைமருதூர், திருநாகேசுவரம், திருத் தாரேசுவரம்(தாராசுரம்) , திருப்பாடலவனம்                       ( கொரநாட்டுக் கருப்பூர்) , திருவேரகம் (சுவாமி மலை) ஆகிய தலங்கள் கும்பகோணப் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.  கும்பேசுவரர் கோயிலில் இருந்து சுவாமியும் அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி பஞ்ச குரோசத் தலங்களுக்கு எழுந்தருளுவர்.

குடவாசலில் மாசி மக விழா 
கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது குடவாயில்(குடவாசல்) என்ற தலம். இது ஞான சம்பந்தப்பெருமானது தேவாரப் பதிகங்கள் பெற்ற சிறப்புடையது. மேற்கு நோக்கிய அழகிய மாடக் கோயில். சுவாமி கோணேசுவரர் என்ற பெயரில் பெரிய லிங்க வடிவில் அருட் காட்சி அளிக்கிறார். அமிர்த லிங்கேசுவரர் என்ற பெயரும் உண்டு. கருடனால் வழிபடப்பெற்ற பெருமான் இவர். அம்பிகை பெரியநாயகி எனப்படுகிறாள். கோயிலுக்கு எதிரில் உள்ள அமிர்த தீர்த்தக் கரையில் ஆதி கஜானனர் என்ற நாமத்துடன் விநாயகப் பெருமான் அருள் வழங்குகிறார்.

குடவாசலைத் தரிசித்த பிறகு கும்பகோணம் திரும்பி வரும் பாதையில் உள்ள சாக்கோட்டை என்னும் ஊரில் மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ள கலய நல்லூர் சிவாலயத்தை தரிசிக்கலாம்..சுந்தர மூர்த்தி சுவாமிகளின் அருமையான தேவாரப்பதிகம் கொண்ட தலம் இது.  அமிர்த கலச நாதராகவும் அமிர்த வல்லியாகவும் சுவாமியும் அம்பிகையும் சன்னிதி கொண்டுள்ளனர்.

நாகேசுவரர் ஆலயம்,குடந்தைக் கீழ்க் கோட்டம் 
கும்பகோணம் நகருக்குள் அமைந்துள்ள தலங்களுள் அமுத கும்பத்தின் வில்வம் விழுந்த இடமாகப் புராணத்தில் கூறப்படும்  நாகேசுவர சுவாமி ஆலயம் சூரியனாலும்,ஆதிசேஷனாலும் வழிபடப்பெற்றது. திருநாவுக்கரசரின் பதிகம் பெற்றது. சோழர் கட்டிடக் கலைச் சிறப்பை சுவாமி கருவறை சுவற்றிலும் விமானத்திலும் காணலாம்.

குடந்தையில் பொற்றாமரைக்குளத்தின் அருகில் உள்ள சோமேஸ்வரரர் ஆலயம், அமுத கும்ப ஆதாரமான தறி  விழுந்த இடம். சந்திரனுக்கு அருளியதால்,இறைவன் சோமேஸ்வரர் எனப்படுகிறார். வியாழ பகவான் வழிபட்டதால் வியாழ சோமேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

மகாமகத் தீர்த்தத்தின்  கீழ்க் கரையில் அமுதகும்பத்தின் தேங்காய் விழுந்த இடமான அபிமுகேசுவரம் அமைந்துள்ளது. மகாமகத்தில் நீராட வந்த நவ கன்னிகைகளுக்கு மேற்கு முகமாகக் காட்சி அளித்ததால் சுவாமிக்கு அபிமுகேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.

மகாமகக் குளத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள கௌதமேசுவரர்  ஆலயம், கும்பத்தின் பூணூல் விழுந்த இடம். அதனால் சுவாமிக்கு யக்யோபவீதேசுவரர் என்றும் கௌதம முனிவர் வழிபட்டதால் கௌதமேசுவரர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.
சிவபெருமான் வேட  உருக்கொண்டு, அமுத குடத்தின் மீது அம்பு ( பாணம் ) போட்ட இடம்  பாண புரீசுவரம் ஆனது. இங்குள்ள அம்பிகை சோமகலாம்பிகை எனப்படுகிறாள்.

மேற்கண்ட தலங்களைத் தவிர, இந்நகரில், காசி விசுவநாதர், கம்பட்ட விசுவநாதர் ,ஏகாம்பரேசு வரர் ,மீனாக்ஷி சுந்தரேசுவரர், காளஹஸ்தீசுவரர் ஆலயங்களும் சிறப்பு வாய்ந்தவை.

ஆண்டுதோறும் இத்தலத்தில் மாசி மாதத்தில் மாசி மக பிரமோத்சவம் பத்து நாட்கள் நடைபெறும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியிலும், சந்திரன் கும்ப ராசியிலும் வரும் மாசி மகப் பௌர்ணமி தினத்தன்று கங்கை முதலான ஒன்பது நதிகளும், மகா மகக் குளத்தில் தங்கள் பாவங்கள் தீர வேண்டி நீராட வருவதால், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் லட்சக் கணக்கில் வந்து நீராடி, இறையருளைப் பெறுவது நெடுங் காலமாக நடைபெற்று வருகிறது. சித்திரை மாதத்தில் ஆதி கும்பேசுவரரும் மங்களாம்பிகையும் பல்லக்கில் எழுந்தருளி, சாக்கோட்டை, கலயநல்லூர், தாராசுரம்,திருவலஞ்சுழி,சுவாமி மலை,கொட்டையூர் , மேலக் காவேரி முதலிய சப்த ஸ்தானங்களுக்கு விஜயம் செய்வர்.

சொக்கநாதப்புலவர் இயற்றிய கும்பகோணப் புராணத்தைத் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம்  அச்சிட்டுள்ளது.(வெளியீடு எண்: 132) அதில் இத்தலத்தின் சிறப்பைக் கூறுமிடத்தில், நமது பிறவியாகிய சேற்றைத் தனது புகழாகிய நீரால்  கழுவித் தூய்மை ஆக்கி, தாயைப்போன்ற தயாவுடன் கருணை பாலித்து, முக்தியாகிய பயிரை வளர்க்கும் கழனி போன்று விளங்குவதும் ,அழிவில்லாததும் ஆகிய உத்தம பூமி குடந்தை மாநகரம் என்று இப் புராணம் எடுத்துரைக்கக் காணலாம்.

கும்பகோணத்தைத் தரிசித்தாலும்,நினைத்தாலும், அதன் பெயரைக் கூறினாலும்,அங்குள்ள தீர்த்தங்களில்நீராடினாலும் பாவங்கள் நீங்கப்பெற்று முக்தி கிடைக்கும் என்று தல புராணம்  கூறுகிறது. சிருஷ்டிக்கு ஆதாரமாக விளங்குவதும் சிவபரத்துவத்தை உணர்த்துவதுமான குடந்தை நகரிலுள்ள கும்பேசுவரர் ஆலயத்தையும் அப்புராணத்துடன்  தொடர்புடைய பிற கோயில்களையும் தரிசித்து இம்மை மறுமைப்பலன்களை அடையலாம்.

Friday, October 16, 2015

கடம்பன்( முருகன்) வழிபட்ட சிவஸ்தலங்கள்

கடம்ப மரத்தைத் தல விருக்ஷமாகக் கொண்ட சிவஸ்தலங்கள் பலவற்றுள் . மதுரை, திருக்கடம்பந்துறை (குளித்தலை) போன்ற தலங்களைச்  சில எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம். இங்கெல்லாம் சுவாமியைக் கடம்பவன நாதர்  என்று அழைக்கிறோம். முருகனுக்கும் கடம்ப மலர் மீது பிரியம் அதிகம். ஆகவே கந்தவேளைக் கடம்பன் என்று நூல்கள் போற்றுகின்றன. தேவாரமும் குமரப் பெருமானை " நம் கடம்பன்" என்று குறிப்பிடுகிறது. " கந்தக் கடம்பன் " என்று கார்மயில் வாகனனை வாயாரப் பாடுவார் அருணகிரிநாதர். சூர சம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காக முருகப்பெருமான்  சிக்கலுக்கு அருகில் உள்ள கீழ்வேளூரில்(கீவளூர்)சிவபூஜை செய்யும்போது அத்தலத்தைச் சுற்றிலும் ஐந்து (ஒன்பது என்றும் கூறுவர்) தலங்களில் சிவ லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

பஞ்சக் கடம்பத் தலங்கள்: ஆழிக்கடம்பனூர் (ஆழியூர்), அகரக் கடம்பனூர் , கடம்பர வாழ்க்கை, இளங் கடம்பனூர், பெருங் கடம்பனூர்  ஆகிய தலங்களைப் பஞ்ச(ஐந்து) கடம்ப க்ஷேத்திரங்களாகக் குறிப்பிடுவர். .

நவகடம்பத்தலங்கள்:   கோயில் கடம்பனூர் , ஆழிக் கடம்பனூர்,  கடம்பர வாழ்க்கை, இளங் கடம்பனூர், பெருங் கடம்பனூர் , வல்ல மங்கலம், பட்ட மங்கலம், சொட்டால் வண்ணம், ஓதியத்தூர்  ஆகிய ஒன்பது தலங்களும் இவ்வரிசையில் அடங்குவன, 

1.பட்டமங்கலம்:   திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் உள்ள கீவளூரிலிருந்து   கச்சனம் செல்லும் செல்லும் சாலையில் சென்று, தேவூருக்கு முன்னதாகவே உள்ள  பட்டமங்கலத்தை  அடையலாம். இதைப் புழுதிக்குடி என்றும் வழங்குகிறார்கள். சாலையின் ஒரு புறம் சுமார் 1 கி.மீ. தொலைவில் பட்டமங்கலமும், நேர் எதிர்திசையில் 1.5 கி.மீ. தொலைவில் சொட்டால் வண்ணமும் அமைந்துள்ளன. பட்டமங்கலத்தில் உள்ள கோயில் மேற்கு பார்த்தது. கோயில் சிறிது. உள்ளூர் வாசிகள் ஈடுபாட்டுடன் காணப்படுகின்றனர். பிரதோஷத்தில் பலர் தரிசிக்க வருகின்றனர்.  சுவாமிக்கு அபிமுக்தீஸ்வரர் என்றும் அம்பிகைக்கு ஆனந்தவல்லி என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. அர்ச்சகர் வெளியிலிருந்து வந்து பூஜை செய்கிறார். அழகிய நந்தவனம்  அமைத்து வருகிறார்கள். மேலும் தொடர்புக்கு: 9786582126.

2. சொட்டால் வண்ணம்:  உள்ளூர்க் காரர்கள் பலருக்கு சிவன் கோயில் எங்கு இருக்கிறது என்றே  தெரியவில்லை. சிலர் அதைப் பிள்ளையார் கோயில் என்று அழைக்கிறார்கள். சாலையை ஒட்டிய சிறிய கோயில். அமைதியான சூழல். சுவாமிக்கு விஸ்வநாதர் என்று திருநாமம். மேற்கொண்டு விவரங்கள் சொல்வதற்கு யாரையும் காணோம்.

3. கோயில் கடம்பனூர்: அகரக்கடம்பனூர் என்றும் வழங்கப்படுகிறது. கீழ் வேளூரிலிருந்து சிக்கல் செல்லும் சாலையில் சுமார்  2 கி.மீ. சென்று ஆழியூரில் திரும்பினால் கோயில் கடம்பனூர் ஆலயத்தை அடையலாம். ஒரே பிராகாரம். சற்று விசாலமானது. உழவாரப்பணி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. சுவாமி: கைலாச நாதர். தேவி: சௌந்தர நாயகி. முருகப்பெருமானின் திருவுருவம்      தரிசிக்கத்தக்கது. 

4. ஆழியூர்: ஆழிக் கடம்பனூர் என்றும் பெயர் பெற்றது. பிரதான சாலையிலிருந்து சற்று உள்ளடங்கியுள்ள தலம். எதிரில் பெரிய குளம் அமைந்துள்ளது. இறைவன்: கங்காள நாதர். இறைவி: கற்பகவல்லி. நந்தி மண்டபத்தைத் தாண்டி சுவாமி சன்னதியின் முகப்பு வாயிலின் மேல் அர்த்த நாரீசுவரது திருவுருவத்தைச்  சுதை வடிவில் காணலாம்.  

5. இளங் கடம்பனூர்: ஆழியூருக்கு அண்மையில் இளங் கடம்பனூரும், பெருங் கடம்பனூரும் அமைந்துள்ளன. இளங் கடம்பனூர் ஆலய முகப்பில் மூன்று நிலை ராஜ கோபுரம் உள்ளது. அர்ச்சகர் வீடு அருகில் உள்ளது.   2013 ம் ஆண்டு திருப்பணி செய்யப்பெற்று, கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
அம்பிகை : சௌந்தர நாயகி  சுவாமி  சோளீசுவரர்

6. பெருங்கடம்பனூர் :   நான்கு வேதங்கள் பூஜித்ததால் சுவாமிக்கு சதுர் வேத புரீசுவரர் என்று பெயர். கோச்செங்கட் சோழ நாயனார் கட்டிய மாடக் கோயில். சிவாசாரியார் வீடு அருகாமையில் உள்ளது. திருப்பணி செய்யப்பெற்றுக் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

7. கடம்பர வாழ்க்கை:  ஆழியூரிலிருந்து செல்லும் பாதை செப்பனிடப்பட்டு வருவதால் அங்கு செல்ல இயலவில்லை. இறை அருளால் மற்றொரு தருணத்தில் தரிசிக்க விழைகிறோம். சுவாமி: விசுவநாதர் ; அம்பிகை: விசாலாக்ஷி.

8. வல்ல மங்கலம் ; 9. ஓதியத்தூர்:  ஆகிய தலங்கள் கீழ்வேளூருக்கு அண்மையில் உள்ளன. இவையும் தரிசிக்க வேண்டிய தலங்கள்.

கீழ் வேளூர்:  வீரஹத்தி தோஷம் நீங்க சிவபூஜை செய்ய முற்பட்ட முருகப்பெருமான், முதலில் மஞ்சளால் விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார். அந்த இடம் தற்போது மஞ்சள்வாடி எனப்படுகிறது.
பின்னர் பதரி வனத்தில் (கீழ் வேளூரில்)அக்ஷயலிங்கப் பெருமானைப் பூஜிக்கையில் அதற்குத் தீய சக்திகளால் இடையூறு வராத வண்ணம் அம்பிகை அஞ்சு வட்டத்தம்மை மூலம் காத்து அருளினாள் . கீழ் வேளூர் கோயிலில் அஞ்சுவட்டத்தம்மையின் சன்னதி பிரபலமானது. பஞ்ச ( நவ) லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட முருகப்பெருமான்  தவக்கோலமாகத் தனிச் சன்னதியில் பால சுப்பிரமணியராக  அருள் பாலிக்கிறார். 

சுவாமி சன்னதி கட்டு மலை மீது அமைந்துள்ளது. இது கோச்செங்கட்சோழ நாயனார் கட்டிய மாடக் கோயில் ஆகும். அற்புதமான அமைப்பைக் கொண்டது. அக்ஷய லிங்க சுவாமி ,    கேடிலியப்பராக , சுயம்பு மூர்த்தியாக அற்புதக் காட்சி வழங்குகின்றார். மற்றோர் சன்னதியில் அகஸ்தியருக்காக  தாண்டவக் காட்சி காட்டிய கோலத்தில் நடராஜப் பெருமானைத் தரிசிக்கிறோம். சம்பந்தராலும் அப்பராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம்.

சிக்கல் சென்று வருபவர்கள்  அதன் மிக அருகிலுள்ள இந்தத் தலங்களையும் அவசியம் தரிசிக்க வேண்டும். யாருமே தரிசிக்காத நிலைக்கு எந்தக் கோயிலும் வந்து விடக் கூடாது. இதுபோன்ற கிராமக் கோயில்களுக்கு  அன்பர்கள் செல்வதால் அந்த ஊர் மக்களும் அர்ச்சகர்களும் மிகவும் மகிழ்ந்து வரவேற்பர். அக்கோயில்களும் இதனால் நன்கு பராமரிக்க ஏதுவாகும். தரிசிப்பதோடு நின்று விடாமல் அக்கோயில்களின்  நித்திய பூஜைக்கும்,அர்ச்சகர்களுக்கும் நம்மாலான உதவியைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.  

Saturday, September 5, 2015

ஜீவன்முக்தி வழங்கும் திருப்புனவாசல்

காசிக்கு சமமான சிவஸ்தலங்கள் பலவற்றில் பாண்டிய நாட்டிலுள்ள  திருப்புன வாயிலும் ஒன்று. தற்போது திருப்புனவாசல் என்று மக்களால் அழைக்கப்படும் இத்தலத்தை  விருத்த காசி  என்று  ஸ்தலபுராணம் குறிப்பிடுகிறது. ஊரும் விருத்தபுரி என்றும் பழம்பதி என்றும்  அழைக்கப்பட்டது.

" பாண்டி நாடே பழம்பதி ஆகவும் "  என்று மாணிக்கவாசகரால் போற்றப்படும் பாண்டிய நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் பதினான்கில் இதுவும் ஒன்று. இப்பழம்பதியை வழிபட்டால் ஏனைய பதிமூன்று தலங்களையும் ஒருசேர வழிபட்ட பலன் கிடைக்கும் என்பர்.

காசியில் உயிர் நீப்பவர்களுக்கு முக்தி கிடைக்கும். ஆனால் தன்னிடம் வந்து வணங்குவோரது பாவங்களைத் தீர்த்து ,ஜீவன் முக்தியையே வழங்குவது திருப்புனவாயில் என்பதை, விருத்தபுரி மஹாத்மியம் கூறுகிறது. சிவமஹாபுராணத்தில் ஏகாதச ருத்ர வைபவ காண்டத்தில் விருத்தபுரி மகாத்மியம் கூறப்பட்டுள்ளது. இத்தலத்திற்கு இந்திரபுரம்,சதானந்தபுரம், வஜ்ர துருமவனம், வனமுகம்,கைவல்யபுரம்,விருத்தகாசி, என்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. தசதீர்த்தங்களை உடைய புண்ணியத்தலம் இது. அப்பத்து புண்ணிய தீர்த்தங்களாவன: இந்திர தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், லக்ஷ்மி தீர்த்தம், சூரிய புஷ்கரணி,சந்திர புஷ்கரணி, சக்ர தீர்த்தம், சர்பநதி, வருண தீர்த்தம்,கல்யாண தீர்த்தம் என்பன.   யுகத்திற்கு ஒன்றாக நான்குயுகங்களில் வெவ்வேறு ஸ்தல விருக்ஷங்களைக் கொண்ட சிறப்புடையது இத்தலம். கிருத யுகத்தில் சதுரக்கள்ளியும், திரேதா யுகத்தில் குருந்த மரமும், துவாபர யுகத்தில்  மகிழ மரமும், கலியுகத்தில்  புன்னை மரமும் ஸ்தல விருக்ஷங்களாக அமைந்துள்ளன.

திருப்புனவாயிலைச் சுற்றிலும் உள்ள தலங்களுள் தென்கிழக்கில் தீர்த்தாண்டதானமும், வடமேற்கில் பறையத்தூரும், அதன் வடமேற்கில் கல்யாணபுரமும் ,மேற்கில் வெளி முக்தியும், வடக்கில் வசிஷ்டர்  பூஜித்த தலமும் உள்ளன. இவற்றிலும் விருத்தபுரீச்வரரே அருள் செய்வதாகப் புராணம் சொல்கிறது. விருத்தபுரியின் சுற்றுவட்டாரத்தில் எமதர்மனும் அவனது தூதர்களும் நுழையமாட்டார்கள் எனவும் இங்கு உயிர் விடும் அத்தனை பேருக்கும் சிவலோகம் சித்திக்கும் என்றும் தலபுராணத்தால் அறியலாம்.

வைகாசி புனர்பூசத்தில் கொடியேற்றி ஸ்வாதியன்று தேரோட்டமும், விசாகத்தில் தீர்த்தவாரியும் நடைபெற வேண்டும் என்றும் மாசி மகத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, சர்ப்ப நதியில் (பாம் பாற்றில்) தீர்த்தம் கொடுப்பதாகவும் புராண வாயிலாக அறிகிறோம்.

கஜமுகாசுரனை வெல்ல அருள் வேண்டி விநாயகப் பெருமான் இங்கு வந்து, சிவகங்கையில் நீராடிப் பழம்பதிநாதரின் அருள் பெற்றார். தங்கள் தவறை உணர்ந்த திரிபுராதிகள் இங்கு வந்து வழிபட்டு இறைய ருள் பெற்றனர்.  நாரதர் வாயிலாக இத்தலப் பெருமையை அறிந்த அங்காரகன்  இங்கு வழிபட்டு அருள் பெற்றதால் செவ்வாய்க் கிழமைகளில் வழிபடுவோரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும்படி வரம் பெற்றான். பிரமன் மீண்டும் படைப்புத்தொழிலைப் பெற்றது , சந்திரன் தக்ஷனது சாபத்திலிருந்து விமோசனம் பெற்றது , சுசீலன் என்பவனையும் அவனது மனைவியையும் எமதூதர்கள் கொண்டு செல்ல எத்தனிக்கையில் சிவ கணங்கள் அவர்களை விடுவித்து முக்தி பெற்றது அகத்தியர் திருமணக் கோலம் கண்டது ,வியாக்கிராசுரன் என்பவனை அம்பிகை ,பத்திர காளி உருவில் அழித்தது மகாலக்ஷ்மி பைரவ மூர்த்தியிடம் மகாவிஷ்ணுவைக் காத்துத் தனது மாங்கல்யத்தையும் காக்க வேண்டி வரம் பெற்றது கௌதம ரிஷியின் சாபம் தீர தேவேந்திரன் தீர்த்தம் ஏற்படுத்தி வழிபாடு செய்தது, ராமன் பூஜித்து அருள் பெற்றது ஆகிய வரலாறுகளை இப்புராணம் விரிவாக எடுத்துரைக்கிறது.
தலத்தின் இருப்பிடம்:  புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் வழியாகவும், காரைக்குடியிலிருந்து தேவகோட்டை, ஓரியூர்  வழியாகவும்,மதுரையிலிருந்து சிவகங்கை,திருவாடானை வழியாகவும், ராமநாதபுரத்திலிருந்து தொண்டி , சுந்தரபாண்டிய(S.P) பட்டணம் வழியாகவும் திருப்புனவாசலை அடையலாம்.

கோயில் அமைப்பு: கிழக்கு நோக்கிய ராஜ கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. அதன் இருபுறமும் வல்லப கணபதி சன்னதியும் தண்டபாணியின் சன்னதியும் விளங்குகின்றன. திருவாயிலைக் கடந்தவுடன் சூரிய சந்திரர்களையும், கால பைரவரையும் தரிசிக்கிறோம். பெரிய வடிவில் நந்திகேசுவரர் காட்சி தருகிறார்.  மகாமண்டபத்தைத் தாண்டியதும் பிரமாண்ட வடிவில் விருத்தபுரீச்வரர் காட்சி அளிக்கிறார். பாணத்திற்கு மூன்று முழமும் ஆவுடையாருக்கு முப்பது முழமும் உள்ள வஸ்திரம் அணிவிக்கப்படுகிறது. உள்ளத்தை நெகிழ வைக்கும் அற்புத தரிசனம். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய மகாலிங்க மூர்த்தி . இவருக்குப் பின்புறம் எப்போதும் அகஸ்திய முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். தினமும் அர்த்த ஜாம பூஜைக்குப்பிறகு, இந்திரன் வழிபடுவதாகவும் ஸ்தல புராணம் கூறும். இந்த சன்னதியின் மேல் அமைந்துள்ள விமானமும் பிரம்மாண்டமானது.

தேவகோஷ்டங்களில் நர்த்தன கணபதி, ஏழடி உயரம் உள்ள வீராசன தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன் , துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். இப்பிராகாரத்தில் மிகப் பழமையான புன்னை விருக்ஷம் உள்ளது , மகிழ விருக்ஷத்தின் கீழ் ஐந்து விநாயக வடிவங்களையும், கபிலர் பூஜித்த சதுர்முக லிங்கத்தையும், கன்னிமூலையில் இந்திரன் பிரதிஷ்டை செய்த ஆகண்டல கணபதி சன்னதியும் அறுபத்து மூன்று நாயன்மார்களையும், விஸ்வநாதர்-விசாலாக்ஷியையும், முருகனது சன்னதியையும் இரண்டு சண்டிகேச்வரர்களைக் கொண்ட சன்னதியையும் தரிசிக்கலாம். சுவாமி பிராகாரம் வலம் வருகையில் சுவாமிக்கு இடது புறத்தில் பெரிய நாயகி சன்னதியையும் அதன் எதிரில் உக்ராகாளியின் சன்னதியையும் தரிசிக்கிறோம். வரப்ப்ரசாதியான காளி தேவி உக் ர வடிவில் இருப்பதால் கண்ணாடியை மட்டுமே காணலாம்.குடைவரைக் காளி என்ற பெயரோடு அடியார்கள் வேண்டிய யாவற்றையும் வழங்கும் தேவி இவள்.

திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டு யாத்திரை செய்தபோது இங்கு வந்து வழிபட்டுப் பதிகம் பாடியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. சுந்தரரும் இத்தலத்து இறைவனைத் தரிசித்துப் பதிகம் பாடியுள்ளார். அதில் " பத்தர் தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி " என்று அருளியுள்ளதால் இதன் பழமையும் பெருமையும் நன்கு விளங்கும்.

இத்தனை பெருமைகள் வாய்ந்த இத்திருக்கோயிலுக்கு 3.9.2015 அன்று மகாகும்பாபிஷேகம் எட்டு கால யாகசாலை பூஜைகளின் நிறைவாக மிக விமரிசையாக நடை பெற்றது. ஏராளமான அன்பர்கள் தரிசித்துக் கண் பெற்ற பயன் பெற்றனர். ராமேச்வர யாத்திரை செல்லும் அன்பர்கள் இத்தலத்தையும், தீர்த்தாண்டதானத்தையும் திருவாடானையையும் ஆவுடையார் கோயிலையும்  உத்தர கோச மங்கையையும் தவறாது தரிசிக்க வேண்டும்.   

Wednesday, March 18, 2015

ஏக பில்வம் சிவார்ப்பணம்.

தெய்வாம்சம் பொருந்திய மரங்களாக வணங்கப்படுபவைகளுள் வில்வமும் ஒன்று. இதனை மஹா லக்ஷ்மி விரும்பி உறைவதால், ஸ்ரீ வ்ருக்ஷம் என்றும் அழைப்பர். இதன் இலைகளால் சிவபெருமானை லக்ஷ்மி அர்ச்சித்து, மஹா விஷ்ணுவை அடையப்பெற்றாள் என்பது வரலாறு. மூன்று தளங்களாகத் திகழும் இதன் இலைகளைப் பறிப்பதற்கும் நியமம் உண்டு. மரத்தின் மேல் கால் வைத்து ஏறாமல் ஏணியின் மூலம் ஏறி, இலைகளைப் பறிக்க வேண்டும். சோமவாரம், சிவராத்திரி,அமாவாசை, பெளர்ணமி,த்வாதசி, ஆகிய நாட்களில் பறிக்கக் கூடாது. மரக் கிளைகளை வெட்டுவதோ அவற்றை விறகு போலப் பயன் படுத்துவதோ அறவே கூடாது. இதன் கீழ் அமர்ந்து செய்யும் ஜபம்,பாராயணம் ஆகியவற்றுக்கு அதிகப் பலன் உண்டு. இதன் மூன்று தளங்கள்,பிரம்ம, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளையும் குறிப்பதாகக் கூறுவர். பூச்சி அரிக்காத வில்வ இலைகளால்,பிரதோஷம், சோமவாரம்,சிவராத்திரி போன்ற நாட்களில் சிவ சஹஸ்ர நாமம்,ருத்ர த்ரிசதி அர்ச்சனைகள் செய்வர். பிற நாட்களிலும் வில்வ இலைகளால் சிவ அஷ்டோத்திரம் செய்யப் படுகிறது.

ஒரு காலத்தில் வில்வக்காடுகளாகத் திகழ்ந்த இடங்களில் சிவாலயங்கள் இருப்பதை இன்றும் காணலாம். ஒரு சில உதாரணங்களாக, திருவைகாவூர், திருக் கொள்ளம் பூதூர் ஆகிய ஸ்தலங்களைக் குறிப்பிடலாம். இங்கெல்லாம் சுவாமிக்கு வில்வாரண்யேச்வரர் என்று பெயர். இவ்விடங்களில் வில்வம், ஸ்தல விருக்ஷமாக அமைந்துள்ளது.

புலியால் விரட்டப்பட்ட வேடன் ஒருவன் திருவைகாவூரில் ஒரு மரத்தின் மீது அமர்ந்து தஞ்சமடைந்தான். அவன் அவ்வாறு அமர்ந்தது ஒரு வில்வ மரம். அன்றைய தினம் மகா சிவராத்திரி. இதை அறியாமலே, அம்மரக்கிளைகளில் இருந்து இலைகளைப் பிய்த்துக் கீழே போட்டுக் கொண்டு இருந்தான். மரத்தடியில் இருந்த அம்மையப்பர் அதனை அர்ச்சனையாக ஏற்று அவனுக்கு முக்தி வழங்கி அருளினார் என்பது அத்  தல வரலாறு.

பில்வ அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம் என்ற அருமையான ஸ்தோத்திரம் இருக்கிறது. இதைப் பாராயணம் செய்து பரமேச்வரனுக்கு வில்வார்ச்சனை செய்தால் சிவ சாயுஜ்யம் பெறலாம் என்பது இதன் கடைசிப்  பாடல். நீண்ட ஆயுள்,புகழ்,வெற்றி ஆகியனவும் பெறலாம் என்கிறது இந்த ஸ்தோத்திரம். இப்படி அர்ச்சனை செய்வதால் பாப நிவர்த்தி ஏற்படும்.

சிவ நாமாக்கள் ஏராளமாக அமைந்து வருவதால் எளிமையாகப் புரிந்து கொண்டு பாராயணம் செய்யலாம்.
சிவம் சாந்தம் உமாநாதம் மஹாத்யான பராயணம்
ஞானப்ரதம் க்ருத்திவாஸம்  ஏகபில்வம் சிவார்ப்பணம்
என்பதால், மங்களமானவனும், சாந்த மூர்த்தியும், தியானங்களுக்கு இருப்பிடமானவனும், ஞானத்தை வழங்குபவனும், யானைத் தோல் போர்த்தவனுமான ஈச்வரனை வணங்கி , ஒரு பில்வத்தை சிவார்ப்பணமாக அர்ச்சிக்கிறேன் என்பது பொருள்.

இதேபோன்று, ருத்ராக்ஷதாரியாகவும், பார்வதிக்குப் பிரியமான நாயகனாகவும், பிறை சூடிய பெருமானகவும் வருணனை வருகிறது:
அக்ஷமாலாதரம் ருத்ரம் பார்வதி ப்ரிய வல்லபம்
சந்திரசேகரம் ஈசானம் ஏகபில்வம் சிவார்ப்பணம்.

சிவாஷ்டோத்திர நாமாக்களை நினைவு படுத்துவதாக அமைந்த
ஸாமப்ரியம் ஸ்வர மயம் பஸ்மோத்தூளித விக்ரஹம்
ம்ருத்யுஞ்ஜயம் லோகநாதம் ஏக பில்வம் சிவார்ப்பணம்
என்பதும் ,

 ஸ்ரீ ருத்ரத்தை நினைவு படுத்துவதாக,
சிபி விஷ்டம் சஹஸ்ராக்ஷம்  துந்துப்யம் ச நிஷங்கிணம்
ஹிரண்ய பாஹும் ஸேனான்யம் ஏக பில்வம் சிவார்ப்பணம் .
என்பதும் நாம் அறிந்து மகிழத் தக்கன.

யக்யேச்வரனே யாகத்திற்கு ஏற்படும் இடையூறுகளைப் போக்கி, ஹவிர் பாகத்தை ஏற்றுக் கோரிய பலனை வழங்குகிறான் என்பதை,
யக்ஞ கர்ம பலாத்யக்ஷம்  யக்ஞ விக்ன விநாசகம்
யக்ஞேசம் யக்ஞ போக்தாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
என்பதால் அறியலாம்.

மூன்று பிறவிகளின் பாவங்களை நீக்கி, சாளக்ராம வழிபாடு, கன்னிகாதானம், கிணறு - குளம் வெட்டுதல் ஆகியவற்றால் கிடைக்கும் பலனை ஒரு வில்வதளத்தால் சிவனை அர்ச்சிப்பதால் சித்திக்கும் என்கிறது இந்த ஸ்தோத்திரம்.

வில்வ மரத்தைப் பார்ப்பதும், அதனைத் தொடுவதும், பாவங்களைப் போக்க வல்லது என்பதை,    " தர்சனம் பில்வ வ்ருக்ஷஸ்ய ஸ்பர்சனம் பாப நாசனம் "   என்பதால் இதன் பெருமை அறிய வருகிறது.  அன்பர்கள் அனைவரும் இந்த அற்புதமான ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வதோடு,வில்வ தளங்களால் சிவ பூஜை செய்து இகபர பலன்கள் யாவும் பெற வேண்டும் என்று எல்லா உலகங்களுக்கும் தாயாகவும் தகப்பனாகவும் இருந்து அருளும் கருணைக்கடலைப்  பிரார்த்திக்கிறோம்:
ஸர்வ லோகைக பிதரம்   ஸர்வ லோகைக மாதரம்
ஸர்வ லோகைக நாதஞ்ச ஏக பில்வம் சிவார்ப்பணம்.    

Monday, March 2, 2015

கண் தந்த கடவுள்

மனித உடலில் சிரசே பிரதானம் என்பார்கள். பஞ்ச இந்திரியங்களுள் வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய நான்கும்  தலைப் பகுதியிலேயே உள்ளன. ஐந்தாவதாகிய மெய்யின் ஒரு பகுதியில் தலையும் அடங்கும்.மெய் என்பதற்குப் புறந்தோல் என்றும் சிலர் பொருள் கொள்வது உண்டு. இந்த ஐந்திலும் கண்ணுக்குத் தனிச் சிறப்பு உண்டு. அது செயல் படாவிட்டால் மனிதன் முடங்கிப் போகிறான். பிறர் துணையைத் தேடுகிறான். இறைவனது படைப்புக்களைக் கண் கொண்டே காண்கிறான். அப்படிக் காணும் போது,  நல்லனவற்றையும் தீயனவற்றையும் ஒருசேரக் காண்கிறான். திரு அங்க மாலை என்ற திருப் பதிகத்தை அருளிச் செய்த நாவுக்கரசர், கண்களின் பயன் கடல் நஞ்சு உண்டு அண்டங்கள் அனைத்தையும் காத்த பரமேச்வரனைக் காண்பதற்கே என்கிறார். அவனது குஞ்சித பாதத்தைக் கண்ட கண்களால் வேறொன்றையும் காணவும் வேண்டுமோ என்பார் . கண்கள் இரண்டால்  அவன் கழல் கண்டு களிக்க வேண்டும் என்று பாடுகிறார் மணிவாசகர். இறைவனைக் கண்ட களிப்பை, " கண்ணாரக் கண்டேன் நானே " என்று வெளிப்படுத்துகிறது தேவாரம்.

கண் இல்லாதவரும் கண்ணில் குறைபாடு உள்ளவரும் படும் வேதனை கொஞ்சநஞ்சமல்ல. திருவொற்றியூரை நீங்கேன் என்று சபதம் செய்துவிட்டு, மகிழ மரத்தடியில் சங்கிலியாரை மணந்த சுந்தரர் , திருவாரூர் வசந்தோற்சவம் காண வேண்டி ஒற்றியூர் எல்லையை நீங்கியபோது இரு கண் பார்வையை இழந்தார். மீண்டும் ஒற்றியூர் பெருமானிடமே வந்து ஒரு பதிகம் பாடுகிறார். அதில், கண் இழந்தவன் ,பார்வை உள்ளவனது துணையுடன் ஒரு  கோலைப் பற்றியபடி மெதுவாகப் பின்பற்றிச் செல்லும்போது, கண்ணுள்ளவன் அவனைக் கறகற என்று இழுத்துச் செல்வதுபோன்ற நிலை எனக்கு வந்துவிடாதபடி அருள்வாய் என்று பெருமானிடம் விண்ணப்பிக்கிறார். வீட்டில் உள்ள பெண்டிர்களை  அழைத்தால் ," போ குருடா " என்பார்களாம்.  அடியேனுக்கு அந்நிலை வர விடலாமா என்று இறைவனைத் துதிக்கிறார் நம்பியாரூரர்.

இக்காலத்தும் கண் நோயால் பாதிக்கப்படுவோர் எத்தனையோ பேர் உளர். பலருக்குத் தீர்வு காண முடியாதபடி வேறு பல உடற்கோளாறுகள் தடை செய்கின்றன. அவர்கள் இப்படி எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் இறைவன் ஒருவனே நம்மைக் கை விடான் எனத் துணிந்து அவனைச் சரண் அடைகின்றனர்.  கண் நோயைத்  தீர்த்து நலம் தரும் ஆலயங்களை நாடுகின்றனர்.  சிலர் வீட்டிலிருந்தபடியே, ஆதித்ய ஹ்ருதயம் , சூர்ய சதகம்  ஆகிய வடமொழி சுலோகங்களையும், சம்பந்தர் அருளிய புறவார் பனங்காட்டுப்  (பனையபுரம்) பதிகத்தையும், சுந்தரர் கண் பெற வேண்டி அருளிய காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் தலத்துப் பதிகங்களையும் பாராயணம் செய்வது வழக்கம்.

கண் நோய் தீர்க்கும் திருத்தலங்களுள் கண் கொடுத்த வனிதம் என்ற தலம் சிறப்பு வாய்ந்ததும் தொன்மையானதும் ஆகும்.  இத்திருக்கோயில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்காவில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை மன்னார்குடி செல்லும் வழியிலுள்ள கமலாபுரம் வழியாக 5  கி. மீ. பயணித்தால் அடையலாம். தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் கொரடாச் சேரியிலிருந்து 7 கி.மீ. சென்றாலும் அடைய முடியும். கொரடாச்சேரி, கமலாபுரம்,  ஆகிய ஊர்களில் இருந்து கண் கொடுத்த வனிதம் கோயில் வாசல் வழியாக மினி பஸ்கள் செல்கின்றன. ஆட்டோ வசதியும் உண்டு.

தான் பெற்ற குழந்தை கண் பார்வை இல்லாதது கண்ட ஒரு பெண் , தனது கண் பார்வையை எடுத்துக் கொண்டு குழந்தைக்குப் பார்வை அளிக்குமாறு இத்தலத்து இறைவனை வேண்ட, அதற்கு மனமிரங்கிய இறைவன், அக்குழந்தைக்குப் பார்வை தந்து அருளினான் என்பது தல வரலாறு. அதனால் சுவாமிக்கு நயன வரதேசுவரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து சுவாமி,அம்பாள்,சூரியன் ஆகியோருக்கு அபிஷேகம்,அர்ச்சனை செய்து நலம் பெறுவோர் பலர்.

பாண்டியர்களும்,சோழர்களும் இக்கோயிலைத் திருப்பணி செய்திருக்கிறார்கள்.

திருவெண்காட்டைப் போலவே,இங்கும் சித்திரைப் பரணியன்று அமுது படையல் உற்சவம் நடைபெறுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டுவோர் அன்றையதினம் இங்கு வந்து வழிபட்டுத் திருவருள் பெறுகிறார்கள்.
உயரத்தில் அமைந்துள்ள சன்னதியில் அம்பாள்,தேவநாயகி என்ற பெயருடன் காட்சி தருகிறாள். சுமார் ஐந்தரை ஆடி உயர சுயம்பு மூர்த்தியாகப் புகழாபரணீ ச்வரர் , சுவாமி சன்னதிக்கு நேர் பின்புறம் தனிச் சன்னதியில் காட்சி அளிக்கிறார். இவரை வழிபட்டால் நல்ல ஆற்றலும், செல்வமும்,நோய் நீக்கமும் பெறலாம் என்பது நம்பிக்கை.

திருக்குளக்கரையில் உள்ள ஆத்தி மரம் 
பாண்டவை ஆற்றின் வடகரையில் உள்ள இவ்வூர் தீர்த்தச் சிறப்புக் கொண்டது. கோயிலுக்கு எதிரில் அழகிய திருக்குளம் உள்ளது. இதன் கரையில் மிகப்பழமையான ஆத்தி மரம் உள்ளது.

தொன்மையான இந்த ஆலயத்தில் மூன்றாம் குலோத்துங்கன், முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆகியோரது ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பல உள்ளன. ஊரின் பெயர் ஆலத்தாங்குடி என்று கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. பிற்காலத்தில் வனிதை (பெண்) ஒருத்திக்குக் கண் கொடுத்தமையால் கண் கொடுத்த வனிதம் எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். இக்கோயில், 190 அடி அகலமும், 270 அடி நீளமும் கொண்டு பரந்து விளங்குகிறது.

பலகாலமாக இக்கோயில் மேடிட்டும் இடிந்தும் முட்புதர்களுடனும் காணப்பட்டது. கல்வெட்டு ஆர்வலர்களின் முயற்சியால் மேடிட்ட பகுதிகளை அகற்றி,ஆழ்ந்து பார்க்கும்போது பாண்டியன் குலசேகரனது ஆட்சிக் காலக் கல்வெட்டு ஒன்று முப்பத்திரண்டு அடி நீளமுள்ள வரிகளுடன்  இருப்பது  காணப்பட்டுப் படி எடுக்கப்பட்டது. ஒவ்வொரு வரியும் 24 அடி நீளத்துடன் பத்து வரிகளைக் கொண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்துக் ( கி.பி. 1185 ) கல்வெட்டும் படி எடுக்கப்பட்டது. 2004 ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டுத் திருப்பணிகள் செய்விக்கப்பெற்ற இவ்வாலயம் , வரும் ஏப்ரல் மாதம் 3 ம் தேதி அன்று குட முழுக்கு விழாக் காண இருக்கிறது.  மேலும் தகவல்களைத் திரு கண்ணன் அவர்களிடமிருந்து (  9443135129) பெற்று இவ்வைபவத்தில் பங்கேற்கலாம்.

உலகிற்கே கண்ணாக  இருந்து காப்பவனைக் காண வேண்டாமா? கண்டு தொழுது கண் கொடுத்த கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? அவனைக் காணக் கண் அடியேன் பெற்றவாறு என்று எண்ணி எண்ணி நெக்குருக வேண்டாமா? அதோடு நின்று விடாமல், நாம் பெற்ற இந்த அற்புத தரிசனம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்ட வேண்டும் அல்லவா? அதற்காக நயன வரதீச்வரனின் கோயிலை நாடுவோம். அனைவரும் நலம் பெற வேண்டுவோம்.  

Thursday, January 15, 2015

இல்லை என்று சொல்லாத இயற்பகை நாயனார்

நான்கு வேதங்களும் ஓலமிட்டு அலறியும் காண மாட்டாத பரம்பொருள் தனது பரம பக்தனைப் பார்த்து ஓலம் இடுகிறான். தன்  அடியானுக்காக எதையும் செய்யக் காத்திருக்கும் பரமன் இதையும் செய்கிறான். எப்படி ஓலம் இட்டான் தெரியுமா? " இயற்பகை முனிவா  ஓலம் " என்று மறைகள் ஓதும் வாயால் ஓலமிட்டான். அப்படியானால் அந்த பக்தர்   முனிவரா என்றால் நாம் நினைப்பதுபோல ஜடாமுடியும், காவி ஆடையும்,கமண்டலமும் தரித்த கோலத்தவர் இல்லை. இல்லறத்தில் இருந்துகொண்டே, சிவத்தொண்டு செய்து வந்த ஒப்பற்ற அடியார் அவர். உலகத்தில் பெரும்பாலும்  சராசரி மனிதர்களாக வாழ்ந்துவிட்டுப் போவார்களையே நாம்  காண்கிறோம். அசாதாரண செயல் செய்பவர்களை  " செயற்கரிய செய்பவர்கள் " என்கிறோம். அவர்களே பெரியோர் என்று தமிழ் இலக்கியமும் வாயாரப் புகழ்கிறது.

அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராக வைத்துப் போற்றப்படும் இயற்பகை நாயனாரது அவதாரத் தலம், பூம்புகாருக்கு அண்மையில் உள்ள திருச் சாய்க்காடு என்பது. இதனைச் சாயாவனம் என்றும் அழைப்பர். இங்குள்ள சிவாலயம் திருஞானசம்பந்தராலும்,திருநாவுக்கரசு  சுவாமிகளாலும் பாடப்பெற்றது.  சீர்காழி,மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து இத்தலத்தை அடையலாம். இதற்கு மிக அண்மையில் பல்லவநீச்வரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது.

சாயாவனத்தில் உள்ள சிவாலயம் குதிரை பூட்டப்பெற்ற தேர் வடிவைக் கொண்ட மாடக் கோவில். இதைத் தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல இந்திரன் முயன்றபோது ,கலக்கமடைந்து அம்பிகையானவள் தனது குயில் போன்ற குரலால் கூவியதால் கூவென்ற கோதை என்றும் கோஷாம்பிகை என்றும் வழங்கப்படுகிறாள். ஸ்வயம்பு மூர்த்தியாக மூலவர் , இரத்தின சாயாவனேஸ்வரர் என்ற பெயருடன் அற்புத தரிசனம் தருகிறார்.

உட்ப்ராகாரத்தில் வெவ்வேறு நிலையில் உள்ள கணபதி மூர்த்தங்களைத் தரிசிக்கிறோம். மகாமண்டபத்தில் வில்லேந்திய வேலவரின் சன்னதி இருக்கிறது. இங்கிருந்தபடியே, சுவாமியையும், அம்பிகையையும், இவ்விருவருக்கு இடையில் உள்ள வில்லேந்திய வேலவரையும் ஒருங்கே தரிசனம் செய்கிறோம். வெளிப் பிராகாரத்தில் இயற்பகை நாயனார்,தனது மனைவியாரான கற்புக்கரசியுடன் அருட் காட்சி அளிக்கிறார்.

எதைக் கேட்டாலும் இல்லை என்றும் அப்புறம் பார்க்கலாம் என்றும்  சொல்லும் காலம் இது.  தன்னிடம் உள்ள எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாத தனிச் சிறப்பு வாய்ந்தவர் இயற்பகை நாயனார் என்பதால், இவரை, சுந்தரமூர்த்தி நாயனார், " இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் " என்று சிறப்பித்தார். வணிகர் குலத்தில் தோன்றிய இயற்பகையார் , சிவனடியார்களுக்கு வேண்டிய அனைத்தையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதை நியமமாகக் கொண்டவர். அவரது மனைவியாரும் தனது கணவனாரின் குறிப்பின்படியே அனைத்து அறங்களையும் செய்து வந்த உத்தமி.  இவரது பெயரைக் கற்பினுக்கரசியார் என்று வழங்குகிறார்கள்.

இவர்களது பெருமையை உலகிற்குக் காட்டவேண்டி, சிவபெருமான் ஓர் அந்தண வேடம் பூண்டு நாயனாரது மனைக்கு எழுந்தருளி, யான் கேட்பது ஒன்று உன்னிடம் உண்டு அதனைக் கொடுக்க சம்மதமானால் சொல்லுகிறேன் என்றார். அதுகேட்ட இயற்பகையார்,  அவரை வணங்கி,  என்னிடம் இருப்பது அனைத்தும் சிவபிரானது அடியவர்களுடைய உடைமை. எதனைக் கேட்டாலும் மகிழ்வுடன் அளிப்பேன்.இதற்கு ஐயம் ஏதும் இல்லை என்றார்   வந்த சிவ வேதியர், " உனது மனைவியை வேண்டி வந்தனம்" என்றவுடன் முன்னைவிட மிகவும் மகிழ்ந்து ,  இது எனக்கு " எம்பிரான் செய்த பேறு "  என்றவறாகத் தனது கற்பில் சிறந்த மனைவியாரிடம் " உன்னை இந்த வேதியர்க்குக் கொடுத்தேன் ": என்றார்.  அதுகேட்ட மனைவியார் , கலக்கமுற்று, மனம் தெளிந்த பின்னர், "  இவ்வாறு தாங்கள் அருள் செய்ததை யான் செய்வதை விட வேறு பேறு உண்டோ " என்று தனது " தனிப் பெரும் கணவனாரை " வணங்கி, வேதியரது திருவடிகளைப் பணிந்து நின்றார்.

இன்னும் அடியேன் செய்யும் பணி ஏதேனும் உண்டோ என்று கேட்ட நாயனாரிடம், " யான் உனது மனைவியுடன் செல்வதைப் பார்த்தவுடன் உனது சுற்றத்தவர்கள் சீற்றம் கொண்டு எனக்குத் தீங்கு விளைக்க முயல்வர். அவர்களிடமிருந்து என்னைப் பாதுகாக்க நீயும் துணையாக வருவாய்" என்றார். அதற்கும் நாயனார் உடன்பட்டு, வாளேந்தியவராகத் தன் மனைவியாரையும், மாதவரையும் முன் செல்ல விட்டுப் பின் தொடர்ந்தார். இதனைக் கண்ட சுற்றத்தவர்கள் திரண்டு வந்து எதிர்க்கவே, வேதியராகி வந்த இறைவன் அஞ்சுவதுபோல கற்பினுக்கரசியாரைப் பார்க்க, அம்மையார், " இறைவனே அஞ்ச வேண்டா; இயற்பகை வெல்லும் " என மொழிந்தார்.

இவ்வாறு தடுத்தவர்களை வெட்டி வீழ்த்திவிட்டு வேதியரைத் தனது   மனையாளுடன் அனுப்பத் துணிந்தார் நாயனார். அனைவரையும் வென்ற இயற்பகையார், இருவரையும் சாய்க்காட்டு எல்லை வரை துணையாக வந்து விடை கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் தனது இருப்பிடம் நோக்கித் திரும்பிய அளவில் , அன்பனின் பக்தியை மெச்சிய இறைவன், திரும்பவும் ஆபத்து வந்ததுபோல, " இயற்பகை முனிவா ஓலம்" என்று அழைத்தான். அதோடு, " செயற்கரும் செய்கை செய்த தீரனே ஓலம் " என்று ஓலமிட்டான். அதுகேட்ட இயற்பகையார், " இதோ வந்தேன், தங்களுக்குத் தீங்கு விளைப்பவர்  இன்னும் உளரோ? " என்று வாளை  ஓங்கியவராக வந்தார். அப்பொழுது அங்கு அந்தணரைக் காண வில்லை. மனைவியாரை மட்டுமே கண்டார்.  விண்ணிலே உமாதேவியோடு ரிஷப வாகனத்தில் காட்சி அளித்த இறைவன், " உனது அன்பைக் கண்டு மகிழ்ந்தோம். பழுதிலாதவனே, நீ உனது மனைவியோடு நம்முடன் வருவாயாக என அருளி , இருவரையும் சிவலோகத்தில் இருத்தினார்.

இயற்பகை நாயனார்  வீடு பேறு பெற்ற திருநாளான  மார்கழி உத்திரத்தன்று இத்திருக்கோவிலில் மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இயற்பகையார் சன்னதியிலும் அவை நடத்தப்பெற்றபின், ஐக்கிய தீபாராதனை நடைபெறுகிறது. நகரத்தார் பெருமக்கள் மிக்க ஈடுபாட்டுடன் இவ்விழாவைச் சிறப்பாக நடத்துகிறார்கள். நகரத்தார் விடுதியில் அடியார்களுக்கு அன்னம் பாலிப்பு நடைபெறுகிறது.

வேறு எவரும் செய்ய முடியாத செயலைச் செய்து காட்டிய இயற்பகையார் நம் அனைவராலும் வணங்கப்படும் உயர்ந்த நிலையை அடைந்தார். அது மட்டுமா? அப்புகழுக்கு உறுதுணையாக விளங்கிய அவரது மனைவியார் கற்புக்கரசிக்கும் அதில் பங்கு உண்டு அல்லவா?. இருவருமே உலகியலுக்குப் பகையாக விளங்கிக் காட்டிய தனிப்பெரும் பெருமை வாய்ந்தவர்கள். அவர்தம் பாத மலர்களை வாழ்த்தி வணங்குவோமாக.