ருத்ர பீடங்கள்
சிவபாதசேகரன்
சீர்காழிக்கு அண்மையில் உள்ள நாங்கூர் என்ற ஊரிலும் அதனைச்
சுற்றியுள்ள ஊர்களிலும் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்கள் த்வாதச ருத்ர பீடங்களாகக்
கூறப்படுகின்றன. இதே பகுதியில் பன்னிரு வைணவ ஆலயங்களும்
உள்ளன. இப்பழமை வாய்ந்த ஆலயங்கள் இப்பகுதியின் தெய்வீகத் தன்மையைப் பறை
சாற்றுகின்றன. புராண வரலாறுகள் தத்தம் கோயில்களை உயர்வாகக் கூறினும் , ஆன்மிகம்
தழைத்தோங்கிய பகுதி இது என்று தயக்கமின்றிக் கூறலாம்.
நாங்கூர் த்வாதச ருத்ர பீடங்களைப் பற்றி அறிவதற்கு முன்னம் இதே ஊரிலுள்ள நாலாயிரம் பிள்ளையார் கோவிலைப் பற்றித் தெரிந்து கொண்டு அங்கிருந்து த்வாதச ருத்ர ஆலயங்களைத் தரிசித்தல் முறை என்று தோன்றுகிறது. இந்த விநாயகப் பெருமான் அமைதியான சூழலில் ஒரு குளத்தின் அருகில் கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார். வெளி ஊர்களிலிருந்தும், வெளி நாடுகளில் குடியேறிய சிலரும் இப்பெருமானை ஆண்டு தோறும் வந்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒரே கால பூஜையே நடைபெறுவதால் விநாயகரைத் தரிசிக்கவும், கணபதி ஹோமம்,அபிஷேக ஆராதனைகள் செய்து கொள்ளவும் ஆலய அர்ச்சகரை 9994215144 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நாலாயிரம் பிள்ளையார் கோயில்: சதுர் ஸஹஸ்ர கணபதி
என்று வட மொழியில் வழங்கப்படும் இப்பிள்ளையாருக்கு இப்பெயர் வந்த காரணம்
சுவாரஸ்யமானது. இராமாயண காலத்தில் நடைபெற்ற சம்பவத்தைக் கொண்டு இப்பெயர் காரணப் பெயர்
ஆயிற்று. இவரே க்ஷேத்ர கணபதி.
கிஷ்கிந்தையை ஆண்டு வந்த வாலிக்கு யாரிடம் போரிட்டாலும்
எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வர வேண்டும் என்ற வரத்தைப் பிரமதேவனிடம் பெற்றான்.
பிரமனை நோக்கிக் கடுமையான தவம் செய்ய ஒரு குகைக்குள் இருந்தான். நெடும்காலமாகியும்
வாலி வெளியில் வராதது கண்டு அஞ்சிய அவனது வீரர்கள் குகையை ஒரு பாறாங் கல்லால்
மூடிவிட்டுக் கிஷ்கிந்தைக்குத் திரும்பி விட்டனர். இதற்கிடையில் , கடும் தவத்தின்
பலனாக வாலிக்குப் பிரமனின் தரிசனம் கிடைத்தது. வாலி வேண்டியவாறே எதிரியின்
பலத்தில் பாதி, அவனுக்கு வரும்படியாக நான்முகன் வரமளித்து மறைந்தார்.
குகையின் வாயில் மூடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த
வாலி அப்பாறையை அகற்றிவிட்டு வெளியில் வந்து, கிஷ்கிந்தையை அடைந்தான். அரசன்
இல்லாததால் மந்திரிகளும் மக்களும் கோரியபடி சுக்ரீவன் ஆட்சிப் பொறுப்பை
ஏற்றிருக்கும் வேளையில் அவனை அரியணையில் வீற்றிருக்கக் கண்ட வாலி கோபமுற்றான். தம்பியான
சுக்ரீவனைப் போரிட்டு வென்று நாட்டை விட்டே துரத்தி விட்டான். ஆனால் சுக்ரீவனது
மனைவியையோ அல்லது அவனது மகனான அங்கதனையோ சுக்ரீவனோடு அனுப்பவில்லை. இத்தவறுக்காகவே இராமனால் தண்டிக்கப்பட்டான் என்றும் கூறுவது உண்டு.
காடுகளில் அனுமனோடு திரிந்துகொண்டு வாலிக்கு அஞ்சி வாழ்ந்து
கொண்டிருந்த சுக்ரீவன், இராம லக்ஷ்மணர்களைக் கண்டு தான்படும் துயரத்தை அவர்களிடம்
கூறினான். அவனுக்கு அடைக்கலம் கொடுத்த இராமன், மரங்களுக்குப் பின்னால் நின்று
கொண்டு வாலியின் மீது பாணம் செலுத்தி அவனை வீழ்த்தினார். அதனால் ஏற்பட்ட தோஷத்தை
நீக்கும் பொருட்டு, நாங்கூரை அடைந்து காவிரியின் கிளை நதியான மணிகர்ணிகையில் மணல்
எடுத்து விநாயகர் திருவுவை அதில் அமைத்துப் பூஜை செய்தார். அசரீரி வாக்கின்படி, தோஷ
நிவர்த்திக்காக 4000 வேத விற்பன்னர்களைக்
கொண்டு யாகம் செய்ய முற்படுகையில் ஒரு அந்தணர் வரவில்லை. தடை ஏற்படுகிறதே என்று
வருந்திய இராமருக்கு ஆறுதல் அளித்துத் தானே ஒரு வேதியராக மகா கணபதி வந்ததால்
நாலாயிரத்தில் ஒருவர் என்ற திருநாமம் ஏற்பட்டது. அதுவே மக்கள் வழக்கில் தற்போது
நாலாயிரம் பிள்ளையார் எனப் படுகிறது. இராம பிரானே மணலால் வடிவமைத்த கணபதியாதலால்
ஸ்வயம்பு மூர்த்தியாகக் காக்ஷி அளிக்கிறார்.
விநாயகரின் சன்னதி வாயிலில் துவார பாலகர்கள் இருக்கும்
இடத்தில் சங்க நிதியும் பத்ம நிதியும் இருக்கிறார்கள். இவர்களே ஹோம சாமான்களை
யாகம் செய்வதற்காக எடுத்து வந்ததாக ஐதீகம். அன்று முதல் இருவரும் சன்னதி
வாயிலிலேயே நின்று விட்டனர். எல்லா திரவியங்களாலும் பிள்ளையாருக்கு அபிஷேகங்கள்
நடை பெறுகின்றன. பால் அபிஷேகம் செய்யும்போது அதில் ஒரு பகுதி, மூர்த்திக்குள்
செல்வது அற்புதமாகக் கூறப்படுகிறது. விநாயக சதுர்த்தி விழா அன்பர்கள் ஆதரவோடு
சிறப்பாக நடைபெறுகிறது. ஆண்டுக்கொரு முறை நாங்கூர் பன்னிரண்டு ஆலயங்களின்
மூர்த்திகளும் ஒரே இடத்தில் ரிஷப வாகன சேவை தரும்போது, நாலாயிரம் பிள்ளையாரும்
அம்மூர்த்திகளோடு தரிசனம் தருகிறார்.
இராமர் யாகம் செய்வவதற்காகக் கோயில் எதிரில் அமைத்த குண்டம் தற்போது குளமாகக் காட்சியளிக்கிறது. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் இதிலிருந்த நீர் காவி நிறத்தில் இருந்ததாம். ஆனால் அதில் நீராடினால் வெள்ளை வஸ்திரத்தில் காவி படிவதில்லையாம்.அதன் பிறகு, குளத்தைத் தூர் வாரப் போய், குளத்து மணலை அகற்றிவிட்டதால் அந்தக் காவி நிறம் போய் எல்லா நீர்நிலைகளில் உள்ள நீரைப் போன்று தோற்றமளிக்கிறது.
த்வாதச ருத்ர பீடங்கள்:
1. தத்புருஷ பீடம் : ஸ்ரீ அஞ்சனாக்ஷி சமேத ஸ்ரீ மதங்கீசுவரர் கோயில், திருநாங்கூர்
த்வாதச ருத்ர பீடங்களில் இதனை ஹ்ருதய ஸ்தானமாகக் கொள்வர். மகா பிரளய காலத்தில் உலகம் யாவும் நீரில் மூழ்கும் தருவாயில் திருவெண்காடு என்ற ஸ்தலம் அழியாமல் இருப்பதைக் கண்டு பிரம்ம குமாரரான மதங்க ரிஷி அங்கு சென்று தவம் புரியலானார். அங்கிருந்த மணிகர்ணிகை என்ற நதியில் ஒரு தாமரை மலரின் மேல் ஒரு குழந்தையாக அம்முனிவர் காணும்படி தோன்றினாள். அக் குழந்தையைத் தமது தவத்தின் பலனாகவே கருதி, மகிழ்ச்சியுடன் ஏற்று வளர்த்து வந்தார். முனிவரது தவத்தை சோதிக்க வேண்டி, மோகினி வடிவம் கொண்டு விஷ்ணுவானவர் அவர் எதிரே தோன்றினார். தவத்திற்குப் பங்கம் வந்து விட்டது எனக் கருதி, மோகினியைச் சபிக்க முற்பட்ட முனிவர் முன் மோகினியாக வந்த மகாவிஷ்ணு காக்ஷி அளித்தார். இதன் காரணமாகவே இப்பகுதியில் பன்னிரு சிவாலயங்களும் பன்னிரு விஷ்ணு ஆலயங்களும் தோன்றின என்பர்.
நாங்கூரில் உள்ள மதங்கீசுவரர் ஆலயம் பிரதான
சாலைக்குச் சற்று உள்ளடங்கி உள்ளது. மிகப் புராதனமான ஆலயம் இது. நுழைவாயிலில் ராஜ
கோபுரம் இல்லை. ஆலயத்திற்குள் நுழைந்தவுடன் நந்தி மண்டபத்தில் இரண்டு நந்திகள்
இருப்பதைப் பார்க்கிறோம். இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர் திசைகளைப் பார்த்தவாறு உள்ளன. மதங்க முனிவரின்
ப்ரார்த்தனைப்படி, திருவெண்காட்டிலிருந்து
ச்வேதாரண்யேச்வரர் அவரது வளர்ப்புப் புதல்வியாகிய மாதங்கியைத் திருமணம் செய்துகொள்ள
எழுந்தருளியதால் ஒரு நந்தி திருவெண்காடு
அமைந்துள்ள திசையை நோக்கி உள்ளது என்கிறார்கள்.
திருமணத்தின் போது முனிவர் சீர்வரிசை கொடுக்க இயலாதது கண்டு மணம் காண வந்திருந்த தேவர்கள் குறை கூற ஆரம்பிக்கவே, எல்லா ஐச்வர்யங்களுக்கும் அதிபதியும் அவற்றைத் தனது பக்தர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலுமான ஈச்வரன் , மாதங்கியின் அனைத்து செல்வங்களும் சிவலோகத்தில் இருப்பதைக் கூறி, நந்தி தேவரை அங்கு அனுப்பி அவற்றை எடுத்து வரச் செய்தார். அதன்படி சீர்வரிசைகள் நாங்கூரை வந்தடைந்தபின் திருக்கல்யாணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இத்தலத்தில் வைகாசி விசாகத்தன்று திருக்கல்யாண விழா நடைபெறுகிறது.
மதங்கீச்வரரது சன்னதி விமானம் ஏகதளத்தைக் கொண்டது. சிவலிங்க மூர்த்தி,பெரிய உருவோடு காட்சி தருகிறார். சுந்தர மூர்த்தி சுவாமிகளது வாக்கில் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது.
(ஊர்த்தொகை)
“ தாங்கூர் பிணி நின் அடியார்மேல் அகல அருளாயே
வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே
நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே
பாங்கூர் பலி தேர் பரனே பரமா பழனப் பதியானே “
என்ற பாடலில் இத்தலப் பெயர்
குறிப்பிடப்படுகிறது . தனிப் பதிகம் கிடைக்காததால் இது வைப்புத் தலமாக வைத்து
எண்ணப்படுகிறது.
பராசவன புராணத்தில் மாதங்கியின் பதினாறு பெயர்கள் கூறப் பட்டுள்ளன. அவையாவன: அஞ்சனாக்ஷி, சங்கீத யோகினி, ராஜ மாதங்கி, ச்யாமா, ச்யாமளா, மந்த்ர நாயகி, மந்த்ரிணி , சசிலோசனி, ப்ரதானேசி, ஸுகப்ரியா, வீணாவதி, வைணிகி , முத்ரிணி , ப்ரியகப் ப்ரியா, ஸ்ரீபப்ரியா, கதம்பவன வாஸினி என்பனவாகும். மாதங்கி தேவியே சரஸ்வதிக்கு குருவாக இருப்பதால் தங்களது குழந்தைகளுக்கு அக்ஷராப்யாசம் செய்ய இந்த சன்னதிக்கு அழைத்து வருகிறார்கள்.
(ருத்ரபீட தரிசனம்
தொடரும்)
wonderful. Thank you. I have been to Sirkazhi from Annamalainagar, but did not know about these temples.
ReplyDeleteIndebted to you for this history. Look forward to reading more about these temples.
தெரிந்த கோவில், தெரிந்த விவரம்
ReplyDeleteதெரிந்த கோவில், தெரியாத விவரம்
தெரியாத கோவில், தெரிந்த விவரம்
தெரியாத கோவில், தெரியாத விவரம்
என பலருக்கும் பல்வேறு விதமாக பயன்படும் ஆசிரியரின் சீரிய முயற்சி பயனாளிகளின் பாராட்டுக்குறியது
Intact I did not know solar that there are 12 sacred Siva temples near TIRUNANGUR. It is news to me.I can only satisfy myself by reading your articles I have heard about 12 Garuda debris best wishes and looking forward to more information regarding Saivait temple piranhas. Vazga valamudan.Janakiraman
ReplyDeleteVery nice
ReplyDelete