ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி
விச்வநாதம் – X
சிவபாதசேகரன்
காசி மாநகரத்தில் உள்ள சிவாலயங்கள் (தொடர்ச்சி):
முசுகுந்தேச்வரர் கோயில்: காசிக் காண்டம் குறிப்பிடும் பல கோயில்களில் இதுவும் ஒன்று . கோடவ்லியா பகுதியில் ராடியோ எனப்படும் ஜைபுரியா பவன் அருகில் இக்கோயில் உள்ளது.
நள கூபேச்வரர் கோயில்: காஸி டோலா பகுதியில் காமேச்வரருக்குக்
கிழக்கில் தனியார் வீடு ஒன்றில் இந்த லிங்க மூர்த்தியைத் தரிசிக்கலாம். நள
கூபம் என்ற கிணறு இங்குள்ளது.
நிகும்பேச்வரர் கோயில்: தவறாமல் வழிபட வேண்டிய சன்னதி இது எனக் காசிக்
காண்டம் கூறும்.விச்வேச்வரர் கோயிலின் வளாகத்தில் பார்வதி கோயிலின் உட்புறம் இது
உள்ளது.
பஞ்ச கங்கேச்வரர் கோயில்: பைரோநாத் சென்று,
அங்கிருந்து தைலிங்க சுவாமி மடத்தின் வெளி வளாகத்தில் இக்கோயில் இருக்கக் காணலாம்.
பஞ்ச கங்கா கட் வரை படகில் சென்றாலும் கோயிலை அடையலாம்.
பவனேச்வரர் கோயில் : லோஹாட்டியா சென்று, பூத
பைரவர், ஜ்யேஷ்ட கௌரி தரிசித்துவிட்டு, முஹல்லா என்ற இடத்தில் தரை மட்டத்தின் கீழ்
உள்ள பவனேச்வரரைத் தரிசிக்கலாம்..
பித்ரேச்வரர் கோயில் :
பிசாச் மோசன் வழியாகச் சென்று பித்ரு குண்ட் தலப் என்ற
இடத்தில் பித்ரு குண்டம் அருகில் உள்ள கோயிலைக் காணலாம். இங்கு பித்ருக்களுக்குத்
தர்ப்பணம்,ச்ரார்த்தம் ஆகியவற்றைச் செய்கிறார்கள்.
ப்ரஹ்லாதேச்வரர் கோயில்: ப்ரகஹலாத் கட்டில் உள்ள கோயில் இது. அருகில்
ஸ்வர லீநேச்வரரையும் தரிசிக்கலாம்.
ஸமுத்ரேச்வரர் ஆலயம்: சௌக் கிலிருந்து
கோடவ்வியா செல்லும் வழியில் பன்ச்படக்
விச்வநாத கல்லியின் முன்பாக அர்த்த கபரி பாபா எனப்படும்
ஸமுத்ரேச்வரரையும்,ஈசானேச்வரரையும் லைன்கேச்வரரையும் தரிசிக்கலாம்.
ஷட்காலேச்வரர் கோயில்: தாதேரி பஜார் பகுதியில் தசரத் கலா
கேந்திரத்திற்கு எதிரில் பீடல் சிவாலா எனப்படும் இடத்தை அடைந்தால் தரை மட்டத்தின்
கீழ் உள்ள இக்கோயிலை அடையலாம். வழிபடுவோர்
நீண்ட ஆயுளைப் பெறுவர்.
உபசாந்தேச்வரர் கோயில்: சௌக் கிலிருந்து சங்கட
தேவி கோயில் வழியே சென்று படனி டோலா போசலா காட் என்ற இடத்திலுள்ள கங்கா மஹால்
கட்டிடத்தின் அருகே உள்ள இக் கோயிலை அடையலாம். பத்ரேச்வரருக்கு வடகிழக்கில்
உள்ளது.
வேதேச்வரர் கோயில்: ராஜ்காட் போர்டில் உள்ள
ஆதிகேசவர் அருகில் நக்ஷத்ரேச்வரர், வேதேச்வரர், வருண சங்கமேச்வரர் ஆகிய
மூர்த்திகளைத் தரிசிக்கலாம்.
விபண்டேச்வரர் கோயில்: பாண்டே ஹவேலிக்குச்
சென்று, தில பண்டேச்வரர் கோயிலைத் தரிசிக்கலாம். ஆண்டுதோறும் ஒரு எள் அளவு இந்த
லிங்கம் வளர்வதாகக் கூறப்படுகிறது. சிவலிங்கம் பெரிது.
வித்யேச்வரர் கோயில்: சௌக் கில் ஸித்தேச்வரி
என்னுமிடத்தில் (சங்கட தேவி கோயில் வழியில் ) இக்கோயில் உள்ளது.சிந்தியா காட்டைப்
படகின் மூலம் அடைந்தும் செல்லலாம்.தரைக்குக் கீழ் இச்சன்னதி அமைந்துள்ளது.
விசாலாக்ஷேச்வரர் ஆலயம்: மிர் காட்டிலுள்ள
விசாலாக்ஷி கோயிலருகில் உள்ளது.விச்வநாதர், அன்னபூரணி கோயில்களையும் இத்துடன்
தரிசிக்கலாம்.
யாக்ஞவல்கீச்வரர் ஆலயம்: சௌ க்கிலிருந்து சங்கட
தேவி வழியே சென்றால் , க்ருஷ்ணேச்வரருக்கு அருகே உள்ளது.
ஆதிவராஹேச்வரர் கோயில் : காசியில் வசிப்பவர்கள்
தினந்தோறும் தரிசிக்க வேண்டிய கோயில்களுள் இதுவும் ஒன்று என்று காசிகாண்டத்தில்
குறிப்பிடப்படுகிறது. தசாஸ்வமேத் காட்டில் உள்ளது
ஹரிகேசேச்வரர் ஆலயம்: அகஸ்த்யேச்வரருக்கு
அருகில் உள்ளது. சோனார் புராவிலிருந்து கோடவ்வியா போகும் வழியில் ஜன்கம்பரி மடம்
தாண்டி விமல ஆதித்யர் அருகில் ஒரு மேடையில் இருக்கிறது.
காச்யபேச்வரர் சன்னதி: மேற்கூறிய ஹரிகேசேச்வரருக்கு அருகே
உள்ளது.இதுவும் தினமும் அந்தர்க்ருஹி யாத்திரை செய்ய வேண்டிய கோயில்களில் ஒன்று.
ஹட்கேச்வரர் கோயில்: இதுவும் அன்றாடம் வழிபட
வேண்டிய சன்னதிகளுள் ஒன்றாகும். ஹர்ஹா சராய் சென்று, ராஜா தர்வாசாவின்
உட்புறத்திலுள்ள இக்கோயிலை அடையலாம்.
ஹிரண்ய கர்பேச்வரர் கோயில்: த்ரிலோசன் காட்டில்
நீராடி விட்டு , படிகளில் ஏறிச் சென்று இந்த சன்னதிக்குச் செல்லலாம்.
ஆதி மகாதேவர் கோயில்: தேவர்களும் முனிவர்களும்
சத்ய யுகத்தில் செய்த பிரார்த்தனைக்காக எழுந்தருளிய மூர்த்தி இவர். முக்தி தர வல்ல
மகாதேவர். த்ரிலோசன் காட்டில் இக்கோயில் இருக்கிறது.
பால்மீகேச்வரர் கோயில்: த்ரிலோசன் காட்டில் உள்ள
த்ரிலோசநேச்வரர் கோயிலுக்கு உள்ளே அமைந்துள்ளது. அக்ஷய திருதியை அன்று விசேஷ
பூஜைகள் நடைபெறுகின்றன
மத்யமேச்வரர் சன்னதி: தாராநகரில் உள்ளது. பிச்வேச்வரர்
கஞ்ச் என்ற இடத்திலிருந்து செல்லலாம். க்ருத்திவாசேச்வரர் கோயில் அருகில் உள்ளது.
பார்வதேச்வரர் கோயில்: சௌக் கிலிருந்து
ஆத்மவீரேச்வரர் கோயில் வழியாகச் சென்று சிந்தியா காட்டில் உள்ள இக் கோயிலை அடையலாம்.
அக்னீச்வரர் கோயில்: சௌக் கிலிருந்து சங்கட தேவி வழியே சென்றால் , போசலா காட் என்ற
இடத்திலுள்ள இக் கோயிலைத் தரிசிக்கலாம். விச்வனர்- சுஷிஷ்மதி தம்பதியரின் குமாரன்
க்ரஹபதி என்பவனுக்குப் பன்னிரண்டாவது வயதில் அக்கினியால் மின்னல் வடிவில் ஆபத்து
நேரும் என்று நாரதர் சொல்லக்கேட்ட
க்ரஹபதி, காசிக்குச் சென்று சிவபூஜை செய்து வந்தான். அவனது பன்னிரண்டாவது
வயதில் இந்திரன் அவன் முன்னர் தோன்றி, வஜ்ராயுதத்தால் தாக்கியதால் இடி
வீழ்த்ததுபோல் க்ரஹபதி மயங்கி வீழ்ந்தான். அப்போது சிவபெருமான் அவனுக்குக்
காட்சியளித்து அபயமளித்தார் என்கிறது காசிக் காண்டம். அவ்வாறு அக் குமாரன்
ஸ்தாபித்த லிங்கமே அக்னீச்வர லிங்கமாகும். இவரை வழிபட்டால் நெருப்பாலோ,மின்னலாலோ,
அகால மரணமடையமாட்டார் என்று ஈச்வரனே வரமளித்தார் என்று புராணம் கூறுகிறது.
அச்வினி குமாரேச்வரர் கோயில்: மேற்கண்ட போசலாகாட்டில்
உள்ள மற்றொரு கோயில் இது. சூரிய குமாரர்களான அச்வினி தேவர்களால் ஸ்தாபிக்கப்பெற்றது.
பாகீரதேச்வரர் கோயில்: மணிகர்ணிகா கட்டத்திலிருந்தோ
அல்லது சௌக்கிலிருந்து பிராமணாள் வழியாகவோ சென்றால் தேவானந்த் சதுர்வேதி என்பவரது வீட்டிற்குள் இக்
கோயிலை அடையலாம்.
சண்டீச்வரர் கோயில்: ஸதர் பஜாரில் பீஷ்ம சண்டீ
தேவி கோயில் அருகிலுள்ளது.காசியில் உள்ள ஆற்றல் மிக்க பதினான்கு லிங்கங்களில்
இதுவும் ஒன்று என சிவபெருமானே கூறியதாகக் காசிக் காண்டம் கூறுகிறது.
சித்திரங்கதேச்வரர் கோயில் :கேதார்காட் தபால் நிலையம்
அருகில் உள்ளது.
தண்டபாணி : சௌக் பக்கத்திலுள்ள
ஞானவாபியின் அருகிலுள்ளது. விச்வநாதருக்குத் தெற்கில், தண்டத்தை ஏந்தியவராகத்
தீய சக்திகளை அண்டவிடாமல் செய்யும் பணியை
மேற்கொண்ட இவரை அவசியம் வழிபடவேண்டும் என்று பரமேச்வரனே சொல்வதாகக் காசி காண்டம்
கூறுகிறது. பூர்ணபத்ரன் – கனக குண்டலை
தம்பதியரின் குமாரனான ஹரிகேஷ் என்பவன் இளமையிலேயே ஆன்மீக நாட்டம் கொண்டம்
கொண்டு காசிக்குச் சென்று தவம் இயற்றினான். அவனுக்குக் காசியைக் காவல் காக்கும் பணியை அளித்தருளினார்
இறைவன். அப்போது அருளிய விச்வேசர், ஹரிகேஷை வழிபடாதவர்கள் முக்தி அடைய
மாட்டார்கள் என்று சொன்னதாகக் காசிக் காண்டத்தால் அறிகிறோம்.
த்ருவேச்வரர் கோயில்: துருவனது தவத்திற்கு
மெச்சிய மஹாவிஷ்ணு , அவனுக்குக் காட்சியளித்து, அவனைத் தன்னுடன் காசிக்கு
அழைத்துச் சென்றார். அவரது சொற்படி, துருவன் பிரதிஷ்டை செய்த மூர்த்தியே
த்ருவேச்வரர் ஆவார்.நயி சரக் என்ற இடத்தில், ஸநாதன தர்ம கல்லூரியில் இக்கோயில்
உள்ளது.
கருடேச்வரர் கோயில்: ஜங்கம்பாடியில் உள்ள
கோயில். கருடன் தனது தாயான வினதையுடன் காசிக்குச் சென்று இங்கு சிவலிங்கப்
பிரதிஷ்டை செய்ததாகக் காசிக் காண்டம் கூறும்.
ஞானேச்வரர் கோயில்: காசிக் காண்டத்தில்
குறிப்பிடப்பெறும் பதினான்கு முக்கியமான சிவலிங்கங்களுள் ஒன்றான இந்த மூர்த்தியின் கோயிலை லாஹேரி தோலா
என்ற இடத்தில் ஞானேச்வர் சில்க் பாக்டரி வளாகத்தில் காணலாம்.
ஹரிசந்த்ரேச்வரர் கோயில்: பெரிய லிங்க மூர்த்தியான
இவரைத் தனியார் ஒருவரது வீட்டில் ஸங்கட் காட் என்ற இடத்தில் வழிபடலாம். சௌக்கிலி ருந்து ஸங்கட தேவி கோயில்
வழியாகச் செல்லலாம்.
ஜய் கிஷேச்வரர் கோயில்: பூத் பைரவ் என்ற இடத்தில் அக்னி த்ருவேச்வரர் கோயில்
செல்லும் வழியில் உள்ளது.ஜயகீஷ் முனிவர் தவம் செய்த குகை இங்கு உள்ளது.
ஜ்யேஷ்டேச்வரர் கோயில்: ஜ்யேஷ்ட மாத பௌர்ணமிக்கு
முன் வரும் சுக்ல சதுர்தசி மற்றும் அனுஷ நக்ஷத்ரம் சேர்ந்த சோமவாரம் ஆகிய
தினங்களில் இங்கு வழிபடுதல் விசேஷ பலன்களைத் தரும். மைதாகின் என்ற இடத்திலிருந்து
ஸப்த ஸாகர் முஹல்லா என்ற இடத்திற்குச் சென்றால் காசி தேவி கோயிலுக்கருகிலுள்ள
இந்தக் கோயிலை அடையலாம்.
தூர்வாசேச்வரர்/காமேச்வரர் கோயில்: காசியையும் அங்கு வாசம்
செய்வோரையும் துர்வாச முனிவர் சபிக்க இருக்கையில், சிவபெருமான் அவர் முன்
காட்சியளிக்கவே,முனிவரின் கோபம் தணிந்தது. காம குண்டத்தை உண்டாக்கி,காமேச்வர
லிங்கப் பிரதிஷ்டை செய்தார்.இங்கு சனிப் பிரதோஷத்தன்று தரிசிப்பதால் பாவங்கள்
நீங்கப் பெறலாம். இங்குள்ள பெரிய லிங்கம் துர்வாசேச்வரர் என்றும் சிறிய லிங்கம்
காமேச்வரர் என்றும் அழைக்கப்படுகிறது.
கந்தூகேச்வரர் கோயில்: ஒரு முறை பார்வதி
தேவியானவள் பந்து விளையாடிக்கொண்டு இருந்தபோது, ராக்ஷசர்கள் அங்கு வரவே, அன்னை
அப்பந்தை அவர்கள் மீது எறிந்து அவர்களை சம்ஹரித்தாள். அப்பந்து மீண்டு வந்து ஒரு
சிவலிங்கமாயிற்று. அம்மூர்த்தியைப்பார்வதி தேவி தினமும் வழிபடுகிறாள். காசி தேவி
கோயில் வழியாகச் சென்றால் பூத பைரவ் என்ற இடத்தில் இக்கோயில் இருப்பதைக் காணலாம்.
கபர்தீச்வரர் கோயில்: பாவச் செயல்கள்
காரணமாகப் பிசாசு உருவம் கொண்ட ஒருவரை , சிவசஹஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிருந்த
வான்மீகி முனிவர், விமல குண்டத்தில்
ஸ்நானம் செய்து, கபர்தி என்ற சிவகணம் பிரதிஷ்டை செய்த கபர்தீஸ்வரரைத்
தரிசிக்குமாறு கூறினார். அப்படியே செய்ததால் பிசாசு வடிவம் நீங்கியது. விபூதியின்
மகிமையைக் கூறிய முனிவர், அப்பிசாசு வடிவம் நீங்கப்பெற்றவனுக்கு அதனைப் பிரசாதமாக
அளித்தருளினார் என்று காசிக் காண்டம் கூறுகிறது. பிசாச் மோசனில் இக்கோயில் உள்ளது.
பிசாச் மோசன் குண்டில் பித்ரு காரியங்கள் செய்யலாம்.
கார்க்கோடக நாகேச்வரர் கோயில்: ஜெயத்புரா காவல்
நிலையம் வரை சென்று அங்கிருந்து நாக் கௌனுக்குச் சென்றால் கார்க்கோடக வாபியில்
உள்ள கார்க்கோடக லிங்கத்தைத் தரிசிக்கலாம். அருகில் கந்தர்வேச்வரர்
எழுந்தருளியுள்ளார்.ஸ்ரவண மாத நாக பஞ்சமியில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்.
சர்ப்பதோஷ நிவர்த்தி பெற பூஜைகள் செய்கிறார்கள்.
குபேரேச்வரர் கோயில்: அன்னபூரணி கோயிலின்
உட்புறம் உள்ள இந்த லிங்கப் பெருமான்,குபேரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.அவன் முற்பிறவியில் தவறு பல செய்திருந்தும்
நல்வினைப் பயனால் காசியில் உள்ள சிவாலயத்தில் நிகழ்ந்த மகா சிவராத்திரி பூஜையைக்
கண் விழித்து தரிசித்ததாலும், அறியாமலேயே தீபம் ஏற்றியதாலும் சிவனருளால் குபேரனாக்கப்பட்டான்.
மார்க்கண்டேச்வரர் கோயில்: ஞான வாபி அருகில்
உள்ளது. மார்க்கண்டேய தீர்த்தம் தற்சமயம் காணப்படவில்லை.
நர்மதேச்வரர் கோயில்: ஒருசமயம், கங்கைக்கு
சமமாகத் தானும் எண்ணப்படவேண்டும் என்று நர்மதையானவள் பிப்பில தீர்த்தமருகிலுள்ள
த்ரிலோசநேச்வரருக்கு அருகில் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து தவம் செய்தாள். அவளது
தவத்திற்கு இரங்கிய சிவபெருமான், “ நர்மதை நதியில் உள்ள கற்கள் அனைத்தும் சிவலிங்கங்களாகவே
எண்ணப்படும்.நர்மதையைப் பார்த்தவுடனேயே பாவங்கள் அகன்றுவிடும் . இந்த லிங்கத்தில்
நான் நர்மதேச்வரர் என்ற பெயரில் இருக்கிறேன் . இந்த லிங்கத்தைப் பார்த்தாலே பாவங்கள்
நீங்கி விடும் “ என்று வரமளித்து அருளினார்.
பிரஹலாத் காட் சௌலாஹா சென்று அங்கிருந்து த்ரிலோசனை
அடைந்தால் இக் கோயிலைத் தரிசனம் செய்யலாம்.
பஞ்ச குரோசேச்வரர் கோயில்: சௌக் கிலிருந்து
காஷ்மீரி மால் ஹவேலி என்ற இடத்திற்குச் சென்றால் இக் கோயிலை அடையலாம்.ஐந்து
நாட்களில் 128 மூர்த்திகளைப் பக்தர்கள்
காசியை வலமாகச் சென்று தரிசிப்பது பஞ்ச க்ரோச யாத்திரையாகும்.அந்தப்பலனை இக்
கோயிலைத் தரிசிப்பதால் பெறலாம் என்கின்றனர்.காசி காண்டத்தில் சிவலிங்க
யாத்திரை,ஏகாதச லிங்க யாத்திரை, அந்தர்க்ருஹி யாத்திரை, கௌரி யாத்திரை, சூர்ய
யாத்திரை, பைரவ யாத்திரை, விஷ்ணு யாத்திரை ஆகியவற்றைக் கூறியுள்ளது போல், கூர்ம
புராணம்,சிவ ரஹஸ்யம் ஆகியவற்றில் பஞ்ச க்ரோச யாத்திரை பற்றிக் கூறப்பட்டுள்ளது.
பார்வதீச்வரர் கோயில்: காசியில் லிங்க ஸ்தாபனம் செய்பவர்கள் எல்லையற்ற
ஆனந்தம் பெறுவர் என்று சிவபெருமான் சொல்லக் கேட்ட பார்வதியானவள் தானும் ஓர்
லிங்கத்தை அங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டாள் . அதுவே பார்வதீச்வர லிங்கமாகும்.
மச்சோதரியைத் தாண்டி ஆதி மகாதேவ்- த்ரிலோசன் என்ற இடத்தில் இக் கோயில் உள்ளது.
பசுபதேச்வரர் கோயில்: மணிகர்ணிகாவுக்கு வடபுறம்
பசுபதேச்வரர் கல்லி என்ற இடத்தில் பசுபதி
தீர்த்தமும் அதனருகில் பெரிய ஸ்வயம்பு லிங்க வடிவில் பசுபதேச்வரரும் இருக்கக்
காணலாம். மாலையில் இவரை வழிபடல் சிறப்பு என்று காசிக் காண்டம் குறிப்பிடும்.சித்திரையில்
சுக்ல சதுர்தசியன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பிதாமஹேச்வரர் கோயில்: சௌக் கிலிருந்து நடந்து,
சீதலா கல்லி என்ற இடத்தை அடைந்தால் தரைமட்டத்திலிருந்து ஆழத்தில் அமைந்துள்ள
ஸ்வயம்பு மூர்த்தியின் சன்னதியைத் தரிசிக்கலாம்.மிகுந்த சக்தி வாய்ந்த சன்னதியாக
இது கருதப்படுகிறது.
ரத்னேச்வரர் கோயில்: தங்களது மகளான
பார்வதியைக் காண்பதற்காக ஹிமவானும் மேனியும் ஆடை, நவரத்னங்கள் ஆகிவற்றை எடுத்துச்
சென்றனர். காசியில் தங்களது மகள் வசிப்பதோ முத்தும் வயிரமும் பதித்த அரண்மனை என்று
அறிந்து, வெட்கியவர்களாகத் தாம்
கொண்டுவந்த ரத்தினங்களை ஓரிடத்தில் வைத்துவிட்டு மறுநாள் விடியற்காலையில்
காசியிலிருந்து கிளம்பி விட்டார்கள். அந்த
ரத்னக் குவியல் ஒரு சிவலிங்கமாக ஆகிவிட்டது. அதுவே ரத்நேச்வரர் எனப்படுவதாகும்.
இவரைப் பூஜித்தால் ஒரு கோடி ருத்ர ஜபம் செய்த பலன் கிட்டும் என்று காசிக் காண்டம்
புகழ்கிறது. இக் கோயிலானது, பிசேச்வர் கஞ்ச் தபால் நிலயம் அருகில்
வ்ருத்தகாலேச்வரர், ம்ருத்யுஞ்ஜேச்வரர் கோயில்களுக்குச் செல்லும் வழியில் உள்ளது
ஸ்ருதீச்வரர் கோயில் : மேற்படி ரத்நேச்வரர்
கோயில் அருகில் உள்ளது.
சைலேச்வரர் கோயில்: வருண நதிக்கரையில்
ஹிமவான் ஒரே இரவில் எழுப்பிய கோயில் இது.சைலபுத்ரி என்ற இடத்தில் மர்ஹியா காட்
என்ற பகுதியில் இருக்கிறது.
ஸித்தி அஷ்டகேச்வரர் ஆலயம்: லோஹாட்டியா சென்று
அங்கிருந்து, பாரா கணேஷ் கோயில் வளாகம் சென்றால் ஆலயத்தை அடையலாம். மந்தாகினி
தீர்த்தத்தின் வடக்கே உள்ளது. வழிபட்டால் அஷ்ட ஸித்திகள் பெறலாம்.
த்ரிலோசனேச்வரர் கோயில்: பிப்பில தீர்த்தத்தில்
நீராடி, ஸ்வயம்பு லிங்கமான த்ரிலோசநேச்வரரைத் தரிசித்தவுடனே எல்லாப் பாவங்களும்
நீங்குவதாகக் காசிக் காண்டம் கூறுகிறது.இது த்ரிலோசன் காட் என்ற பகுதியில்
மச்சோதரிக்கு அருகில் உள்ளது.வாரணசி தேவியும் இங்கு கோயில் கொண்டுள்ளாள்.அக்ஷய
திரிதியை இங்கு விசேஷம்.
த்ரிஸந்த்யேச்வரர் கோயில்: பூத் கணேஷ் என்ற
இடத்தில் உள்ள இம்மூர்த்தியை த்ரிசந்த்யா தீர்த்தத்தில் நீராடி, சந்த்யா வந்தனம்
செய்து வழிபடல் வேண்டும். தீர்த்தத்தில் நீர் வற்றினால் அருகிலுள்ள கங்கையில்
நீராடுகிறார்கள்.
வருணேச்வரர் கோயில்: கர்தம ரிஷியின் குமாரன்
சுசிஷ்மன் என்பவன் நீர் வாழ் பிராணியால் இழுத்துச் செல்லப்பட்டு, சிவனருளால்
காப்பற்றப்படவே, உயிர் பிழைத்த சுசிஷ்மன், காசியில் சிவலிங்கப் பிரதிஷ்டை
செய்தான். அவன் வேண்டியபடியே சிவபிரானும் அவனை நீரில் வாழும் உயிர்களுக்குத்
தலைவனாக்கினார். சௌக் கிலிருந்து கோமத் என்ற பகுதிக்கு நடந்து சென்றால் ஜ்யோதி
ரூபேச்வர்( அபய சன்யாஸ ஆச்ரமம் ) என்ற இடத்தில் வருணேச்வர லிங்கத்தைத் தரிசிக்கலாம்.
வாசுகீச்வரர் கோயில்: சிந்தியா காட்டில்
ப்ரஹஸ்பதீச்வரர் கோயிலருகே ஜ்யேஷ்டேச்வர லிங்கத்தின் தென்புறம் வாஸுகீச்வர லிங்கம்
உள்ளது. அருகில் ஆத்ம வீரேச்வரர் கோயில் இருக்கிறது. வாஸுகி தீர்த்தத்தில் நீராடி,
வாசுகீச்வரரை வழிபட்டுத் தானங்கள் அளிப்பது சிறப்பு. தற்போது அக்குண்டம்
நிலத்திற்கு அடியில் உள்ளது என்கின்றனர். சர்ப்ப தோஷ நிவர்த்தி பெற வேண்டிப் பலர்
இங்கு வருகிறார்கள்.
விச்வகர்மேச்வரர் கோயில்: சிந்தியா காட் பகுதியில்
ஆத்ம வீரேச்வரர் கோயிலின் உட்புறம் விச்வகர்மாவால் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்க
தரிசனம் பெறலாம்.
வ்யாக்ரேச்வரர் கோயில்: துந்துபி என்பவன்
அந்தணர்களைக் கொன்று கொண்டிருந்தபோது ஒரு சிவராத்திரி தினத்தன்று பூஜை செய்து
கொண்டிருந்த ஓர் அந்தணரைப் புலி வடிவம் கொண்டு தாக்கினான். அப்போது
சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்ட இறைவன் அவனைக் கொன்று ,பக்தனைக் காப்பாற்றினார்.
பூத் பைரவ் மொஹல்லா என்ற இடத்தில் இந்தக் கோயில் உள்ளது .
( காசியின்
தெய்வ தரிசனங்கள் தொடரும் )