ஸ்ரீ ருத்ரத்தின் மகிமை சொல்லுக்கு அடங்காதது. வேத மாதாவினாலும் ஓரளவுக்குத்தான் ஸ்ரீ பரமேச்வரனை அடையாளம் காட்ட முடியும். வேதத்தால் துதிக்கும்போது அவன் எல்லாவற்றையும் வழங்குகிறான். அவன் எங்கெல்லாம் எந்தெந்த வடிவில் இருக்கிறான் என்ற பெரிய பட்டியலையே தந்துவிடுகிறது தந்துவிடுகிறது ஸ்ரீ ருத்ரம். எல்லா உலகமும் ஆகி ("ஜகதாம் பதயே") இருப்பவன் , எங்கு தான் இல்லை? இருந்தாலும் ஒன்றொன்றாகச் சொல்லுகிறது வேதம்.
அந்த ஈச்வரன் தான் எல்லா தேவர்களின் இருதயங்களிலும் இருக்கிறான் ("தேவானாம் ஹ்ரிதயேப்ய) . அப்படி இருந்துகொண்டு ,வேண்டுவார் வேண்டுவது எல்லாம் தருபவனாக இருக்கிறான்(விசின்வத்கேப்யஹா). மகான்கள் வடிவிலும் அற்ப சக்தி உள்ளவர்கள் வடிவிலும் விளங்குகிறான். சேனைத் தலைவர்களாகவும் சேனைகள் எனவும் இருப்பதை , சேனாப்ய: சேனா நிப்யச்ச: என்கிறது ருத்ரம். அதே சமயம் தேர் ஓட்டுபவர் வடிவிலும் (க்ஷத்ருப்ய: ) ,தச்சர் வடிவிலும் (தக்ஷப்ய:) , குயவர் வடிவிலும் (குலாலேப்ய:) கருமார் வேடத்திலும்(கர்மாறேப்ய:) பறவைகளைப் பிடிக்கும் வேடர் வடிவத்திலும்( புஞ்சிஷ்டேப்ய:) மீன் பிடிக்கும் செம்படவ வடிவிலும்( நிஷாதேப்ய:) இருக்கிறான்.
சிவ ச்வரூபமோ அலாதியானது. ஆலகால விஷத்தை உண்ட கண்டம் (நீலக்ரீவாய); அதன் மேல் விபூதி பூசப்பட்டு இருக்கிறது (சிதிகன்டாய) . ஒரு சமயம் பார்த்தால் நீண்ட ஜடா முடி (கபர்தினே) இருக்கிறது. மறு கணம் பார்த்தால் கேசம் நீக்கப்பட்ட (வ்யுப்தகேசாய) தலை. ஆயிரக்கணக்கான கண்கள்(சகஸ்ராக்ஷாய) . குறுகிய வாமன வடிவுடைய (ஹ்ரச்வாய்ச வாமனாய்ச) அவனே , பெரிய வடிவத்துடனும் ( ப்ருஹதே) தோன்றுகிறான். பால விருத்த வடிவங்களிலும் காட்சி அளிக்கிறான். வேதங்களால் துதிக்கப்படுவனாகவும் (ச்துத்யாய) வேத முடிவில் வீற்றிருப்பவனாகவும்( அவசான்யாய) விளங்குகிறான்.
ஆகவே தர்மத்தின் வடிவமான பரமேச்வரனைத் தர்ம தேவதையே வாகனமாகத் தங்குகிறது என்பதை, "பப்லுசாய" என்ற சொல்லால் வேதம் வர்ணிக்கிறது. சம்சாரமாகிய மரம் ஜனன மரணங்களுக்கு ஏதுவானது. அதை வேரோடு வெட்டி வீழ்த்தி முக்தியைத் தருபவன் ஆதலால் " பவச்ய ஹேத்யை " எனப்படுகிறான். பக்தனைக் காப்பதற்காக அவன் கூடவே செல்லுபவன் என்று "தாவதே" என்ற பதத்திற்கு அர்த்தம் சொல்லுவார்கள் பெரியவர்கள். எனவே, பக்தனுக்காகத் தூது செல்லவும் தயங்குவதில்லை பரமன் என்பதைத் திருவாரூரில் சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் தியாகராஜப் பெருமான் தூது சென்றதால் அறியலாம். அது மட்டுமா? இன்னும் உனக்காக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா , அதனையும் செய்கிறேன் என்கிறானாம். இதைத்தான் ஸ்ரீ ருத்ரம், "தூதாய ச ப்ரஹி தாய ச " என்று காட்டுகிறது.
தவறு செய்யாதவர்கள் உலகத்தில் யாரும் இல்லை. அதிலும் தனது பக்தன் செய்யும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு மன்னிக்கிறான் ஈச்வரன். இதைத் தான் வேத மாதா நமக்கு, "ஸஹமானாய " என்ற பதத்தால் உணர்த்துகிறாள். திருக் கருப்பறியலூர் ( தலை ஞாயிறு) என்ற ஸ்தலத்தில் ஸ்வாமிக்கு அபராத க்ஷமாபநேச்வரர் (குற்றம் பொறுத்த நாதர்) என்று பெயர்.
நமஸ் ஸோமாய ச என்று தொடங்கும் எட்டாவது அனுவாகத்தில் ஸ்ரீ பஞ்சாக்ஷரம் வருவதால் பெரியவர்கள் இதை ஜபிப்பதை விசேஷமாகக் கருதுவார்கள். இதைத் தான் ஞான சம்பந்தரும், "வேதம் நான்கினும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே " என்று பாடினார். இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் சி வ பூஜை செய்பவன் சிவனாகவே ஆகிவிடுகிறான். சுவாமியைத் தொட்டு பூஜை பண்ணிய கைகள் அத்தன்மையை அடைந்து விடுவதை, "அயம்மே ஹஸ்தோ பகவான்" என்று சொல்லும் ஸ்ரீ ருத்ரம், அப்படிப் பூஜை செய்யும் வலது கை, நோய் தீர்க்கும் மருந்தாகவும் ஆகிவிடுவதாகக் கூறுகிறது.
ஸ்ரீ ருத்ர மகிமையைக் கூறவந்த சேங்காலிபுரம் அனந்த ராம தீட்சிதர் அவர்கள் ஒரு நடந்த சம்பவத்தை எழுதியிருக்கிறார்கள். ஒரு சமயம், ஸ்ரீ தீட்சிதரின் பெரிய தகப்பனார் ஸ்ரீ சுவாமிநாத தீட்சிதர் என்ற நித்யாக்நிஹோத்ரிகள், தன் பத்னியுடன் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை ஸ்நானத்திற்காக ஸ்ரீவாஞ்சியம் என்ற ஸ்தலத்திற்குச் சென்றுகொண்டிருந்தார். இருட்டிவிட்டபடியால், வழியில் இருந்த புதர்களில் இருந்து நரிகள் ஊளை இடும் சப்தம் கேட்டது. மார்கபந்துவான ஸ்ரீ பரமேச்வரனைத் தீட்சிதர் த்யானிக்கலானர். அச்சமயம் கையில் விளக்குடன் ஒரு சிவாச்சார்யார் அங்கு வந்து, தானும் ஸ்ரீவாஞ்சியம் செல்வதாகவும் பயப்படாமல் தன்னுடன் சேர்ந்து வரலாம் என்றும் சொல்லி ,ஸ்ரீவாஞ்சியம் கோயில் வந்தவுடன் உள்ளே சென்றுவிட்டார். மறுநாள் காலை தீட்சிதர் கோயிலுக்குச் சென்று அந்த சிவாசார்யாரைப் பார்த்துத் தன் நன்றியைத் தெரிவிக்க முற்படலாயினார். இதைக் கேட்ட அர்ச்சகரோ,முதல் நாள் மாலை, கோவிலை விட்டுத் தான் எங்கும் போகவே இல்லை என்றார். அப்போதுதான் தீட்சிதருக்கு, துணையாக வந்தவர் வாஞ்சினாதேச்வரர் என்று புரிந்தது. ஒப்பற்ற துணையாகத் தன் பக்தர்களைப் பெருமான் இன்றும் என்றும் காத்துக் கொண்டு இருக்கிறான்.