Thursday, March 21, 2019

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் ஸ்ரீ சைலம் பகுதி - 1


               ஸ்ரீ சைலம்- பகுதி-1   

ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி ஆலயம்,ஸ்ரீ சைலம் 
குருக்ஷேத்திரத்தில்  தானங்கள் செய்தல் , கங்கையில் நீராடுதல் , நர்மதைக் கரையில் வாசம் செய்தல் காசியில் வசித்தல் ஆகிவற்றால் ஏற்படும்  பலன்களைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிக பலனை ஸ்ரீ சைல மல்லிகார்ஜுன ஜோதிர் லிங்கத்தைத் தரிசிப்பதால் பெறலாம் என்று ஸ்காந்த மகா புராணம் கூறுகிறது. ஸ்ரீ சைல சிகரத்தைக் கண்டால் மறு பிறவி இல்லை என்று சொல்லப்படும்.

அர்ஜுன (மருத) விருக்ஷத்தைக் கொண்ட தலங்கள் மூன்று. அவையாவன, மல்லிகார்ஜுனம்,புடார்ஜுனம் மற்றும் மத்யார்ஜுனம் என்பதாம். இதில் மல்லிகார்ஜுனம் என்பது ஸ்ரீ சைலத்தையும், புடார்ஜுனம் என்பது திருநெல்வேலிக்கு அருகிலுள்ள திருப்புடை மருதூரையும் மத்யார்ஜுனம் என்பது கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவிடைமருதூரையும் குறிக்கும்.

தலத்தின் இருப்பிடம்: ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் உள்ளது இந்தத் தலம். 384 கி.மீ. பரந்து விளங்கும் இந்த க்ஷேத்திரத்திற்குப் பிரகாசம் ஜில்லாவிலுள்ள திரிபுராந்தகம் , கிழக்கு வாயிலாகவும், கடப்பா ஜில்லாவிலுள்ள சித்த வடம் தெற்கு வாயிலாகவும், மெகபூப் நகர் ஜில்லாவிலுள்ள அலம்புரம் ,மேற்கு வாயிலாகவும், உமாமகேசுவரபுரம் வடக்கு வாயிலாகவும் விளங்குகின்றன.

இதன் தென்கிழக்கில் புஷ்பகிரி க்ஷேத்திரமும், தென்மேற்கில் சோமசீல க்ஷேத்திரமும் , வடமேற்கில் சங்கமேசுவர க்ஷேத்திரமும், வட கிழக்கில் எல்லேச்வர க்ஷேத்திரமும் விளங்குகின்றன.  
{ விஜயவாடாவிலிருந்து ஸ்ரீ சைலம் வரும் வழியில் சுமார் 80 கி.மீ. தொலைவில் குமார கிரியில் திரிபுராந்தகேச்வரர் கோயில் உள்ளது. முற்காலத்தில் ஸ்ரீ சைலத்திற்குக் கால்நடையாகச் சென்ற பக்தர்கள் முதலில் இங்கு தரிசித்து விட்டுச் செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்த இடமாதலால் குமார கிரி எனப்பட்டது. திரிபுராதிகளை வென்ற பரமேசுவரன், திரிபுரசுந்தரியோடு இங்கு கோயில் கொண்டுள்ளார். ஸ்ரீ சைல காண்டத்தில் இத்தலத்தின் பெருமை பேசப்பட்டுள்ளது. இங்கு வடபுறம் உள்ள குன்றில் தாரகாசுரன் பூஜித்த சிவலிங்கம், தாமிர தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேற்புறக் குன்றில் விஷ்ணு பூஜித்த சிவலிங்கம், ஜானவி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இங்கிருந்து காசிக்கும்,ஸ்ரீ சைலத்திற்கும் சுரங்க வழி இருப்பதாகச் சொல்வர்.

     ஸ்ரீ சைலத்தின் தென்வாயிலாகக் கூறப்படும் சித்தவடம் சுமார் 500 கி.மீ. பரப்பளவு உடையது. அகஸ்த்ய,அத்ரி,ப்ருகு,வசிஷ்டாதி முனிவர்களும், சித்தர்களும் வாழ்ந்த இடம் இது ஸ்காந்தத்தில் ஸ்ரீ பர்வத காண்டத்தில் இங்கு அனேக வனங்களும், சிகரங்களும், நதிகளும்,தீர்த்தங்களும், சிவ லிங்க மூர்த்திகளும் இருப்பது பற்றி விவரிக்கப்படுகிறது. இங்கு வாசம் செய்து,பினாகினி நதியில் நீராடி சித்தேசுவரரைத் தரிசித்தால் ஜீவன் முக்தி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. சித்தேசுவரர், பால சித்தேசுவரர், கண்டா சித்தேசுவரர், கன்யா சித்தேசுவரர், இஷ்ட சித்தேசுவரர், வியாம சித்தேசுவரர், பஸ்ம சித்தேசுவரர், பிக்ஷா சித்தேசுவரர், பில சித்தேசுவரர், புரா சித்தேசுவரர், ஜல சித்தேசுவரர், ஆகிய சித்தி தர வல்ல லிங்கங்களை இங்குக் காணலாம். காசிக்குச்  சமமான இங்கு வாசம் செய்வதாலும், உயிர்நீப்பதாலும் லிங்க ஸ்வரூபத்தை அடையலாம் என்று ஸ்காந்தம் விவரிக்கிறது. வட பெண்ணை நதிக்கரையில் உள்ள சித்தவடத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி பிரபலமானது.

     கர்நூலிலிருந்து ஹைதராபாத் செல்லும் வழியிலுள்ள அலம்புரம் ரயிலடிக்கு 9 கி.மீ. தொலைவில் யோகாம்பிகா சமேத பால ப்ரம்மேசுவரர் ஆலயம் உள்ளது. நவ பிரம்மாக்களின் சன்னதியோடு கூடிய இக் கோயிலில் யோகாம்பிகா தேவி சக்தி பீட நாயகியாகக் காக்ஷி  அளிக்கிறாள்.  பயங்கர வடிவுடன் காட்சி அளிக்கும் இத்தேவியைப் பக்தர்கள் நேராகத் தரிசனம் செய்யாமல் பக்க வாட்டில் இருந்தே தரிசிக்கிறார்கள். தக்ஷிண காசியாகச் சொல்லப்படும் இத்தலத்தில் ப்ரம்மேசுவரரே காசி விச்வநாதர்.; துங்க பத்திரையே கங்கை.  காசியைப் போலவே இங்கும் கணபதி, கால பைரவர் சன்னதிகளும் 64 படித்துறைகளும் உள்ளன.  

          ஸ்ரீ சைலத்தின் வடக்கு வாயிலாகத் திகழும் உமாமகேசுவரபுரம், ஹைதராபாத் செல்லும் வழியில் மன்னனூர் அல்லது ரங்காபுரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.மலை மீதும் அடிவாரத்திலும் இரு சிவாலயங்கள் உள்ளன. இங்குள்ள ருத்ர தாரகையில் நீராடி, சுவாமி தரிசனம் செய்பவர்களைப் பத்து தலைமுறையினர் வணங்குவார்கள். இங்கு செய்யும் தானங்களின் பலன் அளவிட முடியாதது. அந்திம காலத்தை இங்குக் கழிப்பவர்கள், ஈசுவரனோடு இரண்டறக் கலப்பர். குபேரனால் காக்கப்படும் இந்த ஸ்தலத்தை வழிபடுவதற்கு, ரிஷிகளும் சகல தேவதைகளும் மகா சிவராத்திரியன்று வருகிறார்கள் என்று புராணம் கூறும். இங்குள்ள மாமரத்தின் பழத்திலுள்ள வண்டினை நீக்கிவிட்டுப் பாலுடன் கலந்து 21 நாட்கள் உண்டு வந்தால் தேகம் வஜ்ரம் போல் ஆகும் என்றும் இங்கிருந்து காத தூரத்திலுள்ள பத்மாவதி குகையிலுள்ள மிருதங்கத்தை வாசித்தால் அம்பிகை தோன்றி, அமிர்தம் வழங்கி தேவ பதவியை அளிப்பாள் என்று ரத்னாகரம் என்ற நூல் கூறுகிறது.

    ஸ்ரீ சைலத்தின் தென்கிழக்கு வாசலான சோம சீலம் , நெல்லூர்-கடப்பா வழியில் வடபெண்ணை நதிக் கரையில் உள்ளது . ஸ்கந்தன் என்ற ரிஷி தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை சோம தீர்த்தக் கரையில் வைத்து விட்டு நீராடச் சென்றார். இதற்குள் சிவலிங்கமானது அவ்விடத்திலேயே பிரதிஷ்டை ஆகி விட்டது. அந்த ரிஷியின் பெயரால் சுவாமி ஸ்கந்த ஸோமேசுவரர் எனப்படுகிறார். கோயிலின் முன்பு ஓர் ஆலமரம் உள்ளது.
     பிரசூனாசலம் எனப்படும் புஷ்பகிரி ஸ்ரீ சைலத்தின் தென்மேற்கு வாயிலாகக் கருதப்படுகிறது. இது கடப்பா ஜில்லாவில் பெண்ணை நதிக் கரையில் உள்ளது. ஒருசமயம் கருடன் இந்திரலோகத்திலிருந்து அமிர்த கலசத்தை எடுத்து வரும்போது அதிலிருந்து ஒரு துளி புஷ்பகிரியில் உள்ள தடாகத்தில் விழவே, அங்கிருந்த மக்கள் அதை அருந்தி, பிறப்பு இறப்பு இன்றி வாழ்ந்தனர். கடைசியில் ஹனுமான் ஒரு பாறையைக் கொண்டு அதனை மூடினான். அம்மலையோ பூவைப்போல அத் தடாகத்தில் மிதந்தது. மும்மூர்த்திகள் அதனை நிலை பெறச் செய்தனர். இங்கு ஆதிகேசுவரர், சந்தான மல்லேசுவரர், லக்ஷ்மி, ஹனுமான் சன்னதிகள் உள்ளன.
    கர்னூல் ஜில்லா நந்தி கொட்கூருக்கு 20  கி.மீ. தூரத்திலுள்ள சங்கமேசுவரம்,  ஸ்ரீ சைலத்தின் உப த்வாரமாக/ வட மேற்கு வாயிலாக  ஸ்ரீ சைல காண்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. கிருஷ்ணா, வேணி, துங்கா, பத்ரா, பீமரதி,  மால, பவநாசனி ஆகிய ஏழு நதிகளும் இங்கு சங்கமிக்கின்றன. கிரகண காலத்தில் ஏழு கடல்களும், சகல தீர்த்தங்களும் இங்கு சங்கமிக்கின்றன. இதுபோன்ற புண்ணிய காலங்களில் இந்த நிவர்த்திசங்கமத்தில்  நீராடினால் யாக பலன் கிட்டும்.   
    
    கல்மாஷபாதன்,விசுவாமித்திரர், சாண்டில்யர், கபிலர் ஆகிய ரிஷிகளும் இங்கு வந்து தவம் செய்துள்ளனர்.
     வடக்கு வாயிலான ஏலேசுவரம், பல படை எடுப்புக்களுக்கு ஆளாகித் தற்போது நாகார்ஜுனசாகர் அணையில் மூழ்கியுள்ளது. அதனைத தற்காலத்தில்  புனர் நிர்மாணம் செய்துள்ளனர்.}      
    
 காலப்போக்கில் அழிந்தவை போக , ஐந்து மடங்கள் ஸ்ரீசைல ஆலயத்திற்குத்  தென்மேற்கில் சுமார் 2 கி.மீ. தொலைவில் சிதிலமடைந்து காணப்படுகின்றன. அவையாவன: மிகப் பழமையான கண்டா மடம். இங்கு கண்டா சித்தேசுவரர் சன்னதியும், வற்றாத கண்டா கர்ண தீர்த்தமும் உள்ளன. அருகில் பீமசங்கரர் மடம், வீர பத்திரர் ஆலயம் ஆகியன உள்ளன. மேலும் விபூதி மடம் , ருத்ராக்ஷ மடம் ,சாரங்கேசுவர முனிவர் வாழ்ந்த சாரங்க தாரா மடம் ஆகியவை உள்ளன.  

Wednesday, March 20, 2019

ஜ்யோதிர் லிங்கங்கள் ஸோம் நாத்- பகுதி 5

இதே இடத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் கோயில் இருந்ததை அகழ்வாராய்வுகள் உறுதி செய்தன. பழைய கோயிலின் தூண்கள் பெரும்பாலும் கடல் அரிப்புக்கு ஆளாகி விட்டதால் அவற்றின் மேல் ஏற்றப்படும் சிகரத்தைத் தாங்கும் வலிமை அவற்றுக்கு இல்லை. தொல்பொருள் ஆராயச்சித்துறையும் இதனை உறுதி செய்தது. எனவே புதிய கோயிலை அவ்விடத்தில் கட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. கோயிலின் வளர்ச்சிக்கு எதுவாக சுற்றிலும் உள்ள இடத்தை விரிவாக்கம் செய்வது என்று  தீர்மானிக்கப்பட்டது. 1949 ம் ஆண்டு ஜனவரி 23 ம் தேதியன்று சர்தார் படேல் உள்ளிட்ட பிரமுகர்கள் ஜாம்நகரில் கூடி டிரஸ்ட் ஒன்று ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டது. முன்ஷிஜி அவர்களைக் கொண்டு டிரஸ்டின் ஷரத்துக்கள் (deed)  வரையறுக்கப்பெற்றன.

அகில இந்திய சம்ஸ்க்ருத சர்வகலாசாலை ஒன்றை பிரபாஸில் அமைக்க வேண்டும் என்றும் யாத்திரீகர்கள் தங்கி ஓய்வெடுக்க வீடுகள் அமைக்க வேண்டும் என்றும் கிருஷ்ண பகவான் தனது மானுட உடலை நீத்த தேஹோத் சர்கா என்ற இடத்தை மீண்டும் புனரமைக்க வேண்டும் என்றும்,கோசாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் பல அம்சங்கள் அதில் அடங்கியிருந்தன. சர்தார் படேல் அவர்கள் அக்டோபர் 1949 ல் ட்ரஸ்டிகளை நியமனம் செய்தார். அரசாங்க ஒப்புதலுக்குப் பிறகு, ஸோம்நாத்தின் எழாவதுகோயில் கட்டுவதற்கான தாங்குதளக் (Foundation work) கட்டுமானப் பணிகள் 1950 ம் ஆண்டு மே மாதம் எட்டாம் நாளன்று துவங்கியது. வெள்ளியாலான நந்தி ஒன்று சுவாமிக்கு முன்னே அமைக்கப்பெற்றது.

“ This national urge was reflected when Sardar , with uncanny insight , saw that we should never genuinely feel that freedom had come, nor develop faith in our future, unless Somanatha was restored “
                                                                                        - K . M. Munshi

தான் எழுதிய “Somanatha the eternal shrine “என்ற புத்தகத்தை முன்ஷிஜி அவர்கள் சர்தார் படேல் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்தவராக,அதில் எழுதியுள்ளதைக் கீழே தருகிறோம்:

To Sardar Patel…. But for whom mine eyes would not have seen the shrine of Somanath rise again .”

 நேருவின் விருப்பம் வேறாக இருந்தபோதிலும் எல்லாம் வல்ல சோமநாத சுவாமியின் விருப்பப்படியே ராஷ்ட்ரபதி ராஜேந்திர பிரசாத் அவர்களின் முன்னிலையில் 1951 ம் ஆண்டு மே மாதம் பதினோராம் நாளன்று சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பெற்றுக் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாகச் செய்விக்கப்பட்டது. நாட்டின் பல பாகங்களிலிருந்து பக்தர்கள் இந்த அபூர்வ வைபவத்தைக் காண வந்திருந்தனர்.

திரிவேணி சங்கமம் 
காசி ராமேசுவரம் செல்வது போலவே ஹிந்துக்கள் தமது ஆயுளில் ஒரு முறையாவது ஸோம்நாத் ஜ்யோதிர் லிங்கத்தைத் தரிசிக்க வேண்டும். கார்த்திகை சோமவாரங்கள், மகாசிவராத்திரி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். திரிவேணி சங்கமத்தில் நீராடி,முன்னோருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

ஜெய் ஸோம்நாத் - வெளியில் விற்கப்படும் படம் 
கோயிலுக்குச் சற்றுத் தள்ளியே நுழைவாயில் இருப்பதால் நாம் நமது உடைமைகளான கைப்பை, மொபைல் ,கேமெரா போன்றவற்றைப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்க வேண்டும். பாதுகாப்புப் பரிசோதனைகள் செய்யப்பட பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். நேராகச் சென்று சோமநாதரின் சன்னதியை அடைகிறோம். அந்த அருட்காட்சியில் நாம் லயிக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்திருந்தால் இவ்வற்புதக் காட்சியைக் காணாமலேயே வாழ்க்கை முடிந்திருக்குமே என்று எண்ணும்போது கண்கள் பனிக்கின்றன. உயரமான ஜ்யோதிர் லிங்கத் திருமேனியைச் சுற்றிலும் வட்டமான ஆவுடையார். ஒளியில் மின்னும் பெருமானின் அழகில் மயங்கி நின்றாலும் அதிக நேரம் நிற்க முடியாமல் பின்னால் பக்தர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். பாணத்தின் மீது ஓம் என்று அழகாக சந்தனத்தால் வரைந்திருக்கிறார்கள். 

வெளியில் இருக்கும் ஒரே பிராகாரத்தில் நின்று கொண்டு சுவாமி விமானத்தை அண்ணார்ந்து பார்க்கிறோம். மீண்டும் ஒரு முறை உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை எழுகிறது. அவனைத் தரிசிக்க அருள் செய்தமைக்குக் கைமாறாக நம் வேறு என்ன செய்ய முடியும் ? எவ்வளவு பேருக்கு வாழ்க்கையில் இத்தரிசனம் கிடைக்கிறது? “ என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே “ என்ற திருஞான சம்பந்தரின் வாக்கு நினைவுக்கு வருகிறது.

இறைவா , மீண்டும் மீண்டும் உன்னைத் தரிசிக்கும் பாக்கியத்தை அருளுவாயாக என்று பிரார்த்தித்துக் கொண்டே வெளியே வருகிறோம். 

ஸோம்நாத்தில் தரிசிக்க வேண்டிய இடங்கள் பல உண்டு. அவை ஒவ்வொன்றும் சற்றுத் தள்ளியே அமைந்திருப்பதால் ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு அனைத்தையும் தரிசிக்கலாம். ஆட்டோகாரர் ஒரு கார்டு தருகிறார். அதில் சுமார் 12 இடங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. ஒவ்வொரு இடத்திற்கும் நாம் சென்ற ஆட்டோ டிரைவர் பொறுமையாக அழைத்துச் சென்று அவற்றைப் பற்றி விளக்கமும் அளித்தார். அவருக்கு நம் நன்றி உரியது.

புதிய சோமநாத் கோயிலைத் தரிசித்ததும் ஆட்டோவில் ஏறி பழைய சோம்நாத் ஆலயத்தை அடைகிறோம். சிவலிங்க மூர்த்தி ஆழத்தில் இருப்பதைக் காண்கிறோம்.

அடுத்ததாகத்  திரிவேணி சங்கமத்தை அடைகிறோம். அங்கு சரஸ்வதி உள்ளிட்ட மூன்று நதிகள் சங்கமித்துக் கடலோடு கலக்கின்றன. ரம்மியமான காட்சி. கரைகளை சுத்தமாக வைத்திருப்பதை நம்மவர்கள் போய்ப் பார்க்க வேண்டும். கடல் பறவைகள் , யாத்திரீகர்கள் தரும் தான்யங்களைக் கொத்த வட்டமடிக்கின்றன.

பாண கங்கா என்ற இடத்தில் கடலுக்குள் இரு சிவலிங்கங்களைத் தழுவியபடி அலைகள் திரண்டு வருவதைக் கண்டு மெய் சிலிர்க்கிறோம்.

ஆதி சங்கரர் 
இனி த்வாரகா சங்கர மடத்தை அடைகிறோம். அருமையான சூழலில் ஆதி சங்கரர், சிவ லிங்க பாணங்கள் ஆகியவற்றின் தரிசனம் கிடைக்கிறது.

சூரியனுக்கு ஓர் ஆலயம் இருப்பதைக் காண்கிறோம். காலத்தால் மிகப் பழமையான சூரிய பகவானது திருவுருவ தரிசனம் கிடைக்கிறது.
சூர்யா மந்திர் 

ஹிங்கஜ் மாதாஜி குகை என்ற இடத்துக்குச் செல்கிறோம். குகைக்குள்  உட்கார்ந்தபடியே சென்றால் தேவியின் தரிசனம் கிட்டுகிறது.

கீதா மந்திர் என்ற கோயிலுக்குள் கீதோபதேசக் காட்சியைத் தத்ரூபமாக அமைத்திருக்கிறார்கள். தூண்களில் பகவத் கீதை கல்வெட்டாக அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணனின் பாதுகை எனப்படும் இடத்தில் -- கிருஷ்ணாவதாரம் நிறைவு பெற்ற அதே இடத்தில் பகவானின் பாதுகைகளை நிறுவியிருக்கிறார்கள். இங்கு அமர்ந்து ,அமைதியாக தியானம் செய்ய வருவோர் இருக்கிறார்கள்.

இதைத்தவிரவும் லக்ஷ்மிநாராயண் மந்திர், பல்தேவ் குகை ஆகிய இடங்களுக்கும் நாம் சென்று வழிபடுகிறோம். ஊருக்கு வெளியில் 5 கி.மீ. தொலைவில் வேனேஷ்வர்  கோயிலும், பிட் பஞ்ஜன் மகாதேவர் கோயிலும், பாலகா தீர்த்தமும் உள்ளன.

சிவ சிந்தனைகளோடு நிரம்பித் ததும்பும் மனத்துடன் ஸோம்நாத் யாத்திரையை நிறைவு செய்கிறோம்.     

Tuesday, March 19, 2019

ஜோதிர் லிங்கங்கள் ஸோம்னாத்- நான்காம் பகுதி

கடலுக்குள் இரு சிவலிங்கங்களை அலைகள் தழுவுகின்றன.

ஸோம்நாத் ஆலயத்தை அல்லாவுதீன் கில்ஜியின் தளபதி நிர்மூலமாக்கிச் சென்ற பிறகு ஜுனாகத் மகாராஜா மணிபாலா என்பவர் அதனை மீண்டும் பழுது பார்த்தார். கி.பி. 1393 வரை மேலும் பாதிப்புக்கு ஆளாகாத இக் கோயிலை ஜாபர்கான் என்ற குஜராத் கவர்னர் சிதைத்து விட்டான். அதனுள் ஒரு மசூதியையும் கட்டினான். மக்களை மத மாற்றம் செய்ய அவன் முயன்றபோது, எதிர்ப்பு ஏற்பட்டது. அஹமத் ஷா என்பவன் மதம் மாற்றுதலில் அதி தீவிரமாக ஈடுபட்டான். குஜராத்தின் முழுப் பகுதியும் இவனது ஆளுகைக்குள் வரவே, செல்லுமிடங்களில் எல்லாம் இருந்த கோயில்களை இடித்துத் தள்ளினான். பின்னர் ஒருவாறு சோம்நாத் ஆலய பூஜைகள் தொடரலாயின. அக்பரது ஆட்சிக் காலத்திலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்கிறார்கள். ஊர் எல்லையில் சிறு கோயிலில் ஸோமேசுவரர் வழிபாடு நடந்து வந்தது.

கடலும் கோயிலும் 
கி.பி.1783ம் ஆண்டு இந்தூர் மகாராணி அஹல்யா பாய் அவர்கள் பழைய கோயிலுக்குச் சற்றுத் தள்ளிப் புதிய கோயில் ஒன்றைக் கட்டினார். அங்கு ஓர் பாதாள அறையில் பாதுகாப்பாக சிவலிங்கம் நிறுவப்பட்டது.
பிற்காலத்தில் பிரபாஸ் பரோடா அரசின் கீழ் வந்தது. அப்போதும் ஜுனாகத் நவாபின் தலையீட்டால் பரோடா அரசு செல்வாக்கை இழந்தது. அஹல்யா பாய் கட்டிய கோயிலும் பொலிவிழந்தது. பிரிட்டிஷ் அரசாங்கமும் இதில் தலையிட விரும்பவில்லை.

1922 ம்  ஆண்டு டிசம்பர் மாதம் ஓர் இளைஞனாக இங்கு சென்ற திரு முன்ஷிஜி அவர்கள் கோயிலின் நிலையைக் கண்டு கதறி அழுதிருக்கிறார். கிருஷ்ண பகவான் தன்னுடலை நீத்த இடத்திலிருந்து கடலை நோக்கிய வண்ணம் குமுறியிருக்கிறார். மீண்டும் அங்கு கோயில் எழும்புமா என்பது அப்போது அவருக்கு எளிதில் நிறைவேற முடியாத கனவாகவே தோன்றியது.

ஜுனாகத் நவாப் உட்பட பல இஸ்லாமிய அரசர்கள் நாட்டு விடுதலையின் போது பாகிஸ்தானுடன் சேர்ந்து விட எத்தனித்தார்கள். எண்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்துக்களைக் கொண்ட ஜூனாகத்தில், நவாப்பின் இச் செய்கை  மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இணையான ஒரு அரசாங்கத்தையே அவர்கள் தோற்றுவிக்கலாயினர். அதை சமாளிக்க முடியாமல் நவாப் தனது  மனைவிகள், மக்கள், நகைகளோடு பாகிஸ்தானுக்கு ஓடி விட்டார்.

டெல்லியில் திரு முன்ஷிஜியும் சர்தார் படேலும் பேசிக் கொண்டிருந்த வேளையில் தொலைபேசி ஒலித்தது. இந்தியப்படை ஜுனாகத் நகருக்குள் நுழைய நவாப் சம்மதித்து விட்டார் என்ற செய்தி வந்தது. மகிழ்ச்சி வெள்ளம் கரை போண்டு ஓடியபடி, “ஜெய் ஸோம்நாத் “ என்று முன்ஷிஜி கோஷமிட்டவுடன் சர்தார் படேல் புன்னகைத்தார். இருவருமாக ஸோம்நாத் சென்று ஆலயத்தை மீண்டும் நிர்மாணிப்பது பற்றி ஆலோசனை நடத்தினர். அப்போது படேல் அவர்கள் அஹல்யா பாய் கட்டிய கோயிலில் ஆற்றிய உரையைக் கீழே தருகிறோம்:

“ On this auspicious day of the new year, we have decided that Somanatha should be  reconstructed. You, people of Sowrashtra ,should do your best. This is a Holy task in which all should participate.”

கோயிலின் அப்போதைய நிலை:

கோயிலின் பழைய அமைப்புக்களான கர்ப்பக்கிருகம், பிரதக்ஷின வழி, நடு மண்டபம், சிதைக்கப்பட்ட சிற்பத் தூண்கள், உடைக்கப்பட்ட கர்பக்கிருகத் தரை இருப்பது தெரிய வந்தது. தொல் பொருள் ஆய்வின்படி, இடிக்கப்பட்ட கோயில்களின் இடிபாடுகள் பூமிக்கடியில் ஏராளமாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கற்பலகைகளில்  எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருந்ததைக் கண்டனர். ஆவுடையார் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. உடைந்த சிற்பங்களில் பல்வேறு கடவுள்கள், நாட்டியமாடும் பெண்கள் காணப்பட்டனர். ஆறாம்  நூற்றாண்டைச் சேர்ந்த பிராம்மி கல்வெட்டு ஒன்றும் இருந்தது. சிற்பிகளின் பெயர்களும் ஒவ்வொரு சிற்பத்துடன் காணப்பட்டன. கர்ப்பகிருகத்தின் அஸ்திவாரம் 13 அடி ஆழத்தில் இருந்தது. கடல் சுவர் இடிந்து போயிருந்தது. லார்ட் கர்சன் இக்கோயிலை பழங்காலச் சின்னமாக அறிவித்ததோடு சுற்றுச் சுவரையும் அமைத்துக் கொடுத்தார். இது தொடர்பாக முன்ஷிஜி கூறியதைக் கேளுங்கள் :

We were ,however, firm in our view that the Temple of Somanatha was not an ancient monument. It lived in the sentiment of the whole nation and its reconstruction was a national pledge. Its preservation should not be a mere matter of historical curiosity “       

Monday, March 18, 2019

ஜோதிர் லிங்கங்கள் ஸோம்நாத் தொடர்ச்சி

வெராவெல் ரயில் நிலையம். இங்கிருந்து ஸோம்நாத் சுமார் 5 கி.மீ.  

கி.பி. 731 – 738 கால கட்டத்தில் அரேபியப் படைகள் நுழைய முற்பட்டபோது, சாளுக்கிய அரசரான புலிகேசி அதனை முறியடித்து விரட்டினார். சௌராஷ்ட்ரத்தை வளைத்து உஜ்ஜைன் வரை வந்த படைகளை பிரதிஹரா வம்சத்தைச் சேர்ந்த நாகபட்டா என்ற மன்னர் விரட்டியடித்தார்.கி.பி.815ல் இரண்டாம் நாகபட்டா என்ற மன்னரது ஆட்சியில் கனோஜ் தலைநகர் ஆகியது. அப்போதுதான் மூன்றாவது முறையாக ஸோம நாத் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். கி.பி. 1019 ல் போஜ ராஜன் காலத்தில் குஜராத் மிகுந்த வளர்ச்சி பெற்றது. சிவ பக்தரான போஜ ராஜா பல கோயில்களைக் கட்டினார்.

ஸோம்நாத்தில் நம்மை வரவேற்ற காளை 
கி.பி. 1000 ஆண்டில் மகமூத் என்பவன் பெரிய சேனையைத் திரட்டிக் கொண்டு சிந்து வெளியைத் தாண்டிப்  போரிட வந்தான். அப்போது அவனது தந்தைக்கு ஜெயபால மன்னர் எழுதிய கடிதத்தை “The Glory that was Gujraradesha “ என்ற நூலிலிருந்து திரு. முன்ஷிஜி அவர்கள் பின்வருமாறு எடுத்துத் தருவதை நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படித்து உணர வேண்டும்:

You have heard of, and now know the heroism of the Indians. In difficulties, we fear neither death nor destruction. In affairs of honour and renown, we would woo the fire like roast meat, the dagger like the rays of the sun .”

பதினோரு ஆண்டுகள் கழித்து மகமூத் மீண்டும் படை எடுத்து வந்து, ஜெயபால மன்னரைத் தோற்கடித்தான். மன்னரும்,தனது மகனுக்கு முடி சூட்டிவிட்டுத் தீப் பாய்ந்தார். திரு முன்ஷி அவர்கள், : the conquest of India is the conquest of culture “ என்று குறிப்பிடுகிறார். கி.பி. 1022 வரை மகமூதின் படைகள் மும்முறை தாக்கின. இதற்குப் பின் தான் வழிபாட்டுத் தலங்களின் மீது தாக்குதல் துவங்கியது.

கி.பி. 1026 ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆறாவது நாள், சோம்நாத்தைப் பொருத்தவரை ஒரு கருப்பு தினம். கஜினி முகமதின் படைகள் அன்றுதான் ஸோமனாத் மீது தாக்குதல் நிகழ்த்தின. 8 ம்  தேதியன்று பயங்கரப் போர் மூண்டது. ஆலயத்தைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்டபோது சுமார் ஐம்பதினாயிரம் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். கோட்டையைக் கைப்பற்றிய கஜினி முகமது நேராக ஆலயத்திற்குள் சென்று சிறு பகுதிகளாக ஸோமநாத மூல லிங்கத்தை உடைத்தெறிந்தான். சிவந்த கற்களால் அருமையாகக் கட்டப்பட்டிருந்த இந்த மூன்றாவது ஆலயம் தீக்கு இரையாக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் கஜினி முகமது அங்கு தங்காமல் கஜினிக்கே திரும்பி விட்டான். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரே ஸோம்நாத் ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது. எதற்காக இக்கோயிலையே குறி வைத்தார்கள் என்றால் இந்துக்களுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக வரலாற்றைக் கடந்து இந்தக்கோயில் திகழ்ந்ததுதான் ! 

ஐந்தாவது முறையாக இக்கோயில் கட்டப்பட்டபோது கோட்டைச் சுவர்கள் பலப்படுத்தப்பட்டன. அரசர்கள் தரிசிக்கும் இடம் கட்டப்பட்டது. உறுதியான தூண்களைக் கொண்ட மண்டபம் ஸோமநாதர் சன்னதிக்கு முன்னர் நிறுவப்பட்டது. வேதம் ஒதுபவர்களுக்கென்று வீடுகள் கட்டித்தரப்பட்டன. த்ரிபுராந்தகா என்ற பாசுபத ஆச்சார்யார் காலத்தில் பல கோயில்கள் கட்டப்பெற்று பிரபாஸ் சீரும் சிறப்புமாக விளங்கியது.

கி.பி. 1292 ல் அல்லாவுதீன் கில்ஜி டெல்லி சுல்தான் ஆனதும் மீண்டும் பிரபாஸ் அழிவுக்கு ஆளாகியது. ராஜபுத்திரப்படைகள் எவ்வளவோ போரிட்டும் அரேபிய படைகளை வெல்ல முடியவில்லை. ஆலப் கான் என்பவன் கோயிலுக்குள் நுழைந்து சிவ லிங்க மூர்த்தியை சிதைத்து விட்டு அதன் துண்டுகளை டெல்லிக்கு எடுத்துச் சென்றான்.

Sunday, March 17, 2019

ஜோதிர் லிங்கங்கள் ஸோம்நாத் தொடர்ச்சி


சோம்நாத் ஆலயம் மீண்டும் எழுவதற்கு மூல காரணமாய் இருந்த சர்தார் படேல் அவர்களுக்கும் திரு. K.M. முன்ஷி அவர்களுக்கும் ஹிந்துக்கள் என்றென்றும் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். கோயில் கட்டுவதற்கு காந்தி-நேரு ஆகியோர் மூலம் அரசாங்க உதவி மறுக்கப்பட்ட நிலையிலும், இவ்விருவரும் ஒரு ட்ரஸ்ட் நிறுவி ஆலயத்தை எழுப்பி அழியாப் புகழ் பெற்றனர். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சர்தார் படேலின் திருவுருவச் சிலை சோமநாதர் ஆலயத்தை நோக்கி நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம்.

திரு முன்ஷி அவர்கள் அகழ்வாராய்ச்சிகள்  மூலமும், பொறியியல் வல்லுனர்கள் மூலமும் நன்கு பரிசீலித்து இத்தனை அழகான கோயிலை நிர்மாணிக்க உதவியுள்ளார்கள். அவர்கள் எழுதியுள்ள “ Somanatha the shrine eternal “ என்ற அருமையான நூல் முதன் முதலாக 1951 ம் ஆண்டு பாரதீய வித்யா பவன் மூலம் வெளி வந்தது. பின்னர் பல பதிப்புக்கள் வெளிவந்துள்ளன.

மகாபாரதத்தில் பலமுறைகள் சரஸ்வதி நதி கடலில் சங்கமம் ஆகும் இடத்தில் பிரபாஸ்  இருந்த செய்தி தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பாரதப்போர் முடிந்ததும் யாதவர்கள் குடிபோதையில் தங்களுக்குள் போரிட்டு மாண்டார்கள்.கிருஷ்ணபகவானும் பலராமனும் மட்டுமே எஞ்சினார்கள். மான் உறங்கிக்கொண்டிருப்பதாகத் தவறாகக் கருதிய வேடன் ஒருவனது அம்பு அங்கு உறங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணன் மீது பாயவே  கிருஷ்ணாவதாரம் நிறைவு பெற்றது. அவ்வாறு கிருஷ்ணன் தனது சரீரத்தை நீத்த இடம், சோம்நாத் கோயிலருகில் உள்ள பாலகடிர்தா என்பதாகும். இங்கு ஹிரண்யா, சரஸ்வதி, கபிலா ஆகிய மூன்று நதிகள் கடலோடு சங்கமிக்கின்றன.

புராணங்கள் மூலம் பாதாள லோகத்தில் நாகர்கள் வசித்ததை அறிகிறோம். மூன்று விதமான நெருப்புடன் சரஸ்வதி நதி இங்கு கடலில் கலப்பதாகப் புராணம் கூறும். எனவே அதனை அக்னி தீர்த்தம் என்றும் கூறுவதுண்டு. நாக லோகத்திற்கும் சோமநாதருக்கும் உள்ள தொடர்பு பற்றியும் புராணம் விவரிக்கிறது. நாகர்களான பார சைவர்கள் ஆண்ட போது சிவ வழிபாடு மேலோங்கி இருந்தது. ( We find Shiva everywhere in this period” says Jayaswal- K.P. Jayaswal, History of India P. 55) 

நாகர்களது ஆட்சிக்குக் கீழ் குஜராத் இருந்ததாலும் அதில் மிகப் புனிதம் வாய்ந்த பிரபாஸும் இருந்தததாலும்  சிவத்தை முன்னிறுத்திய கலாசாரம் மேலோங்கியது. சமஸ்க்ருத மொழி வளர்ச்சி பெற்றது. காசியிலும், நர்மதைக் கரையிலும் அஸ்வமேத யாகங்கள் நடைபெற்றன. இவ்வாறு நாக மன்னர்கள் ஹிந்துமதத்தின் புதிய எழுச்சிக்கு அஸ்திவாரம் நிறுவியதாக டாக்டர். ஜெயஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.     
ஸோமவித்யா என்ற நூலும், ஸ்காந்த மஹா புராணமும், ஸோமவார அமாவாசையன்று இங்கு உள்ள சரஸ்வதி நதி,மற்றும் கடல் நீராட்டையும், ஸோம நாதர் தரிசனத்தையும் மிகவும் புனிதம் வாய்ந்தவையாகக் குறிப்பிடுகின்றன.

மொகன்சாதாரோவில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களில் சிவன் ஹடயோகியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். ஸோம்நாத்தில் உள்ள லகுளீசர் சிற்பமும் இதையே காட்டுகிறது. பாரத நாடு முழுமைக்கும் பாசுபத வழிபாடு ஸோம்நாத் ஆலயத்தை மையமாகக் கொண்டே இருந்திருக்கிறது. பாசுபத ஆசார்யர்களுள் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த லகுளீசர் என்பவர் நர்மதைக் கரையில் உள்ள ப்ரோச் நகருக்கு அருகில் தோன்றியவர். சிவனது வடிவாகவே எண்ணப்பட்டவர். சோம சர்மா என்ற பாசுபத ஆச்சார்யர் தனது நான்கு மகன்களுடன் பிரபாஸ் தீர்த்தத்திற்கு வந்து தங்கி விட்டார். எனவே கி.பி. முதல் நூற்றாண்டிலேயே ஸோம்நாத்தில் முதல் கோயில் இருந்ததாகக் கொள்ளலாம்.

குப்தர்கள் ஆட்சிக்குப் பிறகு வலபி மன்னர்கள் ஆட்சியில் சோம்நாத்தில் இரண்டாவது கோயில் கட்டப்பட்டது ( கி.பி. 640-649) என்றும் அப்போது பழைய கல்வெட்டுக்கள் மறைந்து போயின என்றும் சரித்திர ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். முதல் கோயில் இருந்த இடத்திலேயே இரண்டாவது கோயிலின் கர்ப்பக் கிருகம் எழுப்பப்பட்டது. கடல் உள்ளே வராதபடி தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. கி.பி. 641-644 களில் சீன யாத்ரீகர் யுவான் சுவாங் சௌராஷ்ட்ரத்திற்கு வருகை தந்தார். நாட்டின் பிற பகுதிகளைப் போலவே இங்கும் கலாசாரம் விளங்கியதாகக் குறிப்பிடுகிறார்.

நான்காம் தாரசேன மன்னரது ஆட்சியில் இப்பகுதி பன்னாட்டுத்துறைமுகமாக விளங்கியது.கி.பி.722 ல்      
பாதாமியை ஆண்டு வந்த சாளுக்கியர்கள் கைவசம் வலபியர்களின் அரசு மாறியது. இதே சமயத்தில் தான்  ( கி.பி. 711 ) அரேபியர்களின் பார்வை பாரத நாட்டின் மீது விழுந்தது. சிந்து மாநிலம் வழியாக முன்னேறிய அரேபியப் படை மார்வார், ப்ரோச், உஜ்ஜைன்,மால்வா ஆகிய பகுதிகளை வென்று சௌராஷ்டிர மன்னரையும் வென்று தனது ஆளுகைக்குக் கொண்டு வந்தது. கி.பி. 725-726 ஆண்டுகளில் விதி நம் தேசத்தின் மீது விளையாடத் தொடங்கி விட்டது. “An Unforgettable National disaster “– K.M. Munshi  

Saturday, March 16, 2019

ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்

லிங்கோத்பவ மூர்த்தி 

முன்னுரை: சிவபெருமான் ஒளிமயமானவன். ஜோதியுள் ஜோதி எனத் திகழ்பவன். ஸ்வயம் பிரகாசனாக என்றென்றும் விளங்குபவன். அவ்வொளியிலிருந்து தோன்றியருளியதே சிவலிங்கமாகிய ஜோதி வடிவம். தம்முள் யார் பெரியவர் என்று பிரமனும் விஷ்ணுவும் பல்லாண்டுகள் போரிடும்போது அவர்களுக்கு இடையில் மகா சிவராத்திரி நன்னாளன்று சிவ பெருமான் அழல் மலையாகத் தோன்றியருளியதும்  இருவரும் அந்தச் சுடரொளியின் அடிமுடி காணாது போகவே, ஜோதிர் லிங்கமாகத் தோன்றினான் முழு முதற்கடவுளாகிய சிவபெருமான் என்று சிவ மகாபுராணம் குறிப்பிடுகிறது. இந்த லிங்கோத்பவக்  கோலத்தைத்தான் சிவாலயங்களில் மூலவர் கருவறையின் பின்புறம் நாம் காண்கிறோம்.

ஒரு உருவமும், ஒரு பேரும் இல்லாத அனைத்தும் கடந்த கடவுளை நாம் பல்வேறு உருவங்களும் பெயர்களும் கொண்டவனாக நமது பக்குவத்திற்கேற்ப வழிபடுகிறோம். இதற்கு அடுத்த நிலையே உருவமும் அருவமும் கலந்த உருவாருவ நிலையாகிய இலிங்க வடிவம். இவ்வடிவை வழிபடின்  சிவஞானம் பெற்று அருவ நிலையையும் உணரத் தொடங்க ஏதுவாகிறது. இத்துணை அருமை பெருமைகளை வாய்ந்த சிவ லிங்க வடிவமே பெரும்பாலும் சிவாலயங்களில் நடு நாயகமாக இருக்கக் காண்கிறோம். பிற தேவதா மூர்த்தங்கள் அனைத்தும் உருவ வடிவில் இறைவனைச் சுற்றிலும் அமைந்துள்ளனர். எனவே ஒவ்வொரு சிவலிங்கமும் ஜோதிர் லிங்கமே எனப் பொதுப் படையாகக் கொண்டாலும் நமது நாட்டில் பன்னிரண்டு இடங்களில் உள்ள ஜோதிர் லிங்கங்கள் தொன்மை வாய்ந்ததும், சிறப்பு மிக்கனவுமாகப் பெரியோர்களால் கருதப்பட்டு வருகிறது.
சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகள் ஜ்யோதிர்லிங்க பூஜை 


பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்: துவாதச ஜோதிர் லிங்கங்களின் இருப்பிடத்தைப் பின் வரும் சுலோகத்தால் அறியலாம்:

சௌராஷ்ட்ரே ஸோமனாதம் ச ஸ்ரீ சைலே மல்லிகார்ஜுனம்; உஜ்ஜயின்யாம் மஹாகாளம்  ஒங்காரமமலேச்வரம்; 
பரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீம சங்கரம்  ஸேது பந்தே து ராமேசம் நாகேசம் தாருகாவனே ; வாரணஸ்யாம் து விச்வேசம் த்ரயம்பகம் கௌதமீ தடே ; ஹிமாலயே து கேதாரம் குஸ்மேசம் ச சிவாலயே .
ஏதாநி ஜ்யோதிர்லிங்காநி ஸாயம் ப்ராத: படேந் நர: ஸப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி .   
           

இதன்மூலம்,  ஸோமநாதமும், ஸ்ரீ சைலமும், உஜ்ஜைனி மஹாகாளமும்,ஒங்காரேச்வரமும்,பரலி வைத்யநாதமும், பீமசங்கரமும், ராமேச்வரமும்,, நாகேசமும்,காசி விச்வேசமும், த்ரயம்பகமும், கேதாரமும்,குஸ்மேசமும் ஜோதிர் லிங்க ஸ்தலங்கள் என்று குறிக்கப்படுகின்றன.                                                                            ஸோமநாதம்                                         
ஸோம நாதர் ஆலயத்தின் எழில் தோற்றம்  
                           
பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்களுள் முதன்மையாக வைத்து எண்ணப்படுவது இதுவேயாகும்.
ஸோம லிங்கம் நரோ த்ருஷ்ட்வா ஸர்வபாபாத் ப்ரமுச்யதே ; என்ற வாக்கியம் இதன் பெருமையை உணர்த்தும்.

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்திலிருந்து வேராவல் ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து சுமார் ஐந்து கி.மீ. சென்றால் அரபிக் கடலோரம் கம்பீரமாய் நிற்கும் ஸோம்நாத் ஆலயத்தை அடையலாம். மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டுத் தூய்மையாகக் காட்சி அளிக்கும் இவ்வாலயம் அனைவரையும் பரவசப்படுத்துவது.
மிகப்பழைய காலத்தில் சௌராஷ்டிரத்தின் பிரபாஸ் பட்டன்/ தேவபட்டன பகுதியைச் சேர்ந்ததாக விளங்கியது. இமயமலை தோன்றும் முன்பே இப்பகுதி இருந்ததாகவும், கற்கால மனிதர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சிந்து வெளி நாகரிகம் தழைத்தபோது சிவனைப் பசுபதி என்று பெயரிட்டு வணங்கி வந்தனர். பாண்டவர்கள் இப்பகுதியை அமைத்தபோது, அதற்குக் குசஸ்தலி என்று பெயரிட்டனர். பின்னர்தான் இப்பகுதி, சுரதா, சௌராஷ்டிரா என்றெல்லாம் வழங்கப்பட்டது. ஒரு காலத்தில் பிரபாஸ் பன்னாட்டு வணிகச் சிறப்பு வாய்ந்த துறைமுகமாக விளங்கியது.

மேற்குக் கடற்கரை ஓரம் இருந்த தலங்களுள் பாரத காலத்திலிருந்தே பிரபாஸ் மிகப்புனிதம் வாய்ந்த தலமாகக் கருதப்பட்டது. இந்திரன்,சூரியன், முனிவர்கள் பலரும் வழிபட்ட இத்தலத்தைப பாண்டவர்களும், கிருஷ்ணனும்,பலராமனும், வழிபட்டனர். கோகர்ணத்திலிருந்து துவாரகை செல்லும் வழியில் அர்ச்சுனன் இங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. பரீக்ஷித் மன்னன், ஜனமேஜயன் ஆகியோரும் இங்கு யாத்திரை செய்துள்ளனர். எனவே, க்ருஷ்ணரது காலத்திற்குப் பல காலம் முன்னதாகவே புனிதம் மிக்க தலமாக இது திகழ்ந்துள்ளதை அறியலாம்.

தக்ஷன் தனது 27 பெண்களைச் சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். அவர்களுள் ரோகிணியிடம் மட்டுமே சந்திரன் பிரியமாக இருக்கக்கண்டு மற்ற பெண்கள் தந்தையிடம் முறையிட்டனர். அதனால் வெகுண்ட தக்ஷன், சந்திரனின் கலைகள் தேய்ந்து போகும்படி சபித்து விட்டான். அந்நிலையில் சிவபெருமான் ஒருவரே அவனுக்கு அடைக்கலம் தந்து, பிறைச் சந்திரனை ஏற்று அருளியதோடு கலைகள் 15  நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் வளருமாறு அருளினார். அவ்வாறு சந்திரன் இறைவனை வழிபட்ட இடமே பிரபாஸ் என்கிறார்கள். அது முதல் சுவாமிக்கும் சோமநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. ஊரும் ஸோம்நாத் ஆயிற்று.                                                      ஒவ்வொரு ஆலயத்திற்கும் வரலாற்றுப் பின்னணி உண்டு. ஆனால், ஸோம் நாத்திற்கோ சோக மயமான பின்னணி இருக்கிறது. ஆம். சோகம் ஒரு முறை ஏற்பட்டதல்ல. 18 முறைகள் கறை படிந்த சம்பவங்களால் ஏற்பட்ட மாளாத சோகம் அது. நமது வரலாற்றுப் புத்தகங்களில் ஒரே வரியில் எழுதப்பட்டுள்ள போதிலும், புதையுண்ட அவ்வரலாற்றுச் செய்திகள் நாம் ஒவ்வொருவரும் அறிய வேண்டுவனவாகும். முகலாயப் படையெடுப்புக்களால் சூறையாடப் பெற்று முற்றிலும் அழிக்கப்பட்ட இந்த ஆலயத்தின் சோக வரலாற்றைப் பற்றி சுருங்கக் காண்போம்:


குப்தப் பேரரசின் போது இவ்வாலயம் நன்கு பராமரிக்கப்பட்டு வந்தது. ஜூனாகாத் நகரைத் தலைநகரமாகக் கொண்ட குப்த சாம்ராஜ்ஜியத்தில் பிரபாஸ் புகழோடு விளங்கியது. ஸோம்நாத்தைப் பராமரிக்க ஒரு கிராமம் அளிக்கப்பட்டது. இவ்வாறு சுமார் இருநூறு ஆண்டுகள் உன்னத நிலையில் இக் கோயில் இருந்து வந்தது. கி.பி. 1026 ம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ம் நாள் கஜினி முகமதின் முகலாயப் படைகள் இங்கு வந்து கோயிலை நாசம் செய்தன. மூல லிங்கமானது கஜினியினால் உடைக்கப்பட்டது ( இதை எழுதக் கை கூசுகிறது). கோவிலின் விலையுயர்ந்த ஆபரணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. சிறுவர்களும் பெண்களும் கடத்திச் செல்லப்பட்டனர்.

பின்னர் ஜுனகாத் அரசர் , அஜ்மீர் மால்வா ஆகியோர், கோயிலை மீண்டும் நிர்மாணித்தனர். ஆனால் கி.பி.1298 ம் ஆண்டு டெல்லி சுல்தான் அல்லாவுதீன் கில்ஜியின் படைகள் இக்கோயிலைத்  தாக்கின. ஜோதிர்லிங்கம் உடைக்கப்பட்டது. பிறகு ராஜா ராவன்வர் என்பவர் மீண்டும் கோயிலை உருவாக்கி, சிவலிங்கத்தைத் ஸ்தாபித்தார். கியாசுதீன் துக்ளக்கின் மகன் பதவி ஏற்றதும் சோம்நாத் ஆலயம் சூறையாடப்பட்டது. சிவலிங்கமும் மூன்றாவது முறையாகக் கொள்ளை அடிக்கப்பட்டது. பின்னர் பிரபாஸ் மற்றும் ஜுனேகாத் அரசர்கள் இணைந்து டெல்லிப் படையை விரட்டி விட்டு, மீண்டும் சோம்நாத் ஆலயத்தைக் கட்டி, சிவலிங்க பிரதிஷ்டை செய்தனர். ஆனால் ஜாபர் கான் என்பவனால் நான்காவது முறையாக சோம்நாத் ஆலயம் சூறையாடப்பட்டது.1377 ல் ராஜா பஜாடி என்பவர் புதுப்பித்த கோயிலை ஜாபர் கான் இடித்ததால் ஐந்தாம் முறையாக ஆலயம் சூறையாடப்பட்டது. ஆனாலும் இந்துக்கள் அங்கு சென்று பூஜை செய்வதைக் கண்டு சகிக்காமல்,ஜாபர்கான் கோயிலுக்குள் நுழைந்து சிவலிங்கத்தை உடைத்து, பூஜை நடை பெறாதபடி செய்தான். இந்த ஆறாவது தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரமான கொள்ளைகள் நடைபெற்று ஆலயம் சீரழிந்தது.

கி.பி.1415 ல் அகமது ஷா என்பவன் இக்கோயிலின் எந்த பகுதியும் இருக்கலாகாது என்று ஆணை இட்டான். இந்துக்கள் மத மாற்றம் செய்யப்பட்டனர். இதன் பிறகு ஜுனாகத் அரசர் கி.பி. 1451முதல்  ஐந்து ஆண்டுகள் இக்கோயிலைத் திரும்பவும் கட்டி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார். கி.பி. 1490 ல் பிரபாஸ் மீண்டும் சூறையாடப்பட்டது. எண்ணற்ற கோயில்கள் அழிக்கப்பட்டன.இந்து உருவங்களைப் பூஜிப்பதைத் தடை செய்தனர். இதனால் மனம் உடைந்த இந்துக்கள் சரஸ்வதி ஆற்றையே இறைவனாக வழிபட்டனர். கி.பி. 1547 ம் ஆண்டு போர்ச்சுகீசியர்களது படையெடுப்புக்கு இப்பகுதி உள்ளானது. அக்பரது காலத்தில் நிலைமை ஓரளவு கட்டுக்குள் இருந்தது. ஆனால் கி.பி. 1665 ல் அப்துல் கான் என்பவனுடன் இங்கு வந்த ஔரங்கசீப் முதலில் அந்தணர் ஒருவரையும்,ஒரு பசுவையும் கொன்று விட்டு, ஸோம்னாத்தின் மீது படை எடுத்தான். கி.பி. 1704 ல் மீண்டும் சோம்நாத் மீது படை எடுக்க ஔரங்கசீப் ஆணையிட்டான். ஆனால் அது நிறைவேறும் முன்பாக 1707 ம்  ஆண்டு மாண்டு போனான். பிறகு கி.பி. 1786 ம் வருடம் இந்தூர் மகாராணி அகல்யா பாய் அவர்கள் சோம்நாத் கோயிலை புனர் நிர்மாணம் செய்து சிவலிங்க பிரதிஷ்டை செய்தார். 1947 வரை அமைதியாக இருந்த  நிலையில் ஜுனாகத் நவாப் பாகிஸ்தானுடன் சேர முயற்சி செய்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு ஏற்படவே, நவம்பர் 9 ம் தேதி தான் மட்டும் பாகிஸ்தானுக்கு ஓடி விட்டார்.

நவம்பர் 15 ம் தேதி ஜுனாகத் மாகாணம் இந்தியாவுடன் இணைந்தது. இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்படும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சீரிய முயற்சியால் சோம்நாத் கோயில் அறக்கட்டளை துவக்கப்பட்டது. ஜாம்நகர் ராஜா திக் விஜய் சிங் அதற்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். கி.பி. 1951 ம் ஆண்டு சோம்நாத் ஆலயம் முழுவதுமாகக் கட்டப்பெற்று சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதியான டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்களால் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.