Tuesday, October 8, 2019

ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள் - நாகேசம்

                                 ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள்- தொடர்ச்சி 

                                                   நாகேசம் 

                                             சிவபாதசேகரன் 



த்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரத்தில் “ நாகேசம் தாருகாவனே “ என்று வருவதால் நாகேச க்ஷேத்ரம் தாருகாவனத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. தாரகையும் தாரகனும் வசித்து வந்த காரணத்தால் இவ்விடம் தாருகாவனம் எனப்பட்டது. அதனால் சுவாமிக்கும் நாகநாதர் அல்லது நாகேச்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

மகாராஷ்டிரத்தில் ஸோண்டி ரயிலடியிலிருந்து சுமார் 25 கி,மீ. தொலைவிலுள்ள ஔண்டா என்ற ஊரில் இந்த ஆலயம் இருப்பதால் ஔண்ட் நாக்நாத் என்கிறார்கள். இந்தக்கோயிலை தேவகிரி யாதவ வம்சத்தவர்கள் கட்டியுள்ளனர். அதற்கு முன்பாக, பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் செய்யும்போது தர்மபுத்திரரால் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது.

அழகிய சிற்ப வேலைகளைக் கொண்ட இக்கோயிலின் கர்ப்பக்ருக விமானம் அழகிய  வடிவில் உள்ளது. கர்ப்பக் கிரகத்தில் ஒரு மேடை காணப்படுகிறது. அதனருகில் உள்ள சுரங்கப்பாதையில் இறங்கினால் நாகேச்வர ஜ்யோதிர் லிங்க மூர்த்தியைத் தரிசிக்கலாம். ஆதியில் இந்த மூர்த்தி கிழக்கு முகமாகவும்,கோமுகம் வடக்கு நோக்கி இருந்ததாகவும் , ஸ்ரீ நாம்தேவ் என்ற சிவபக்தருக்காகத் தென்முகமாகத் திரும்பியதாகவும் கோமுகமும் அதற்கேற்பக் கிழக்கு நோக்கி மாறியதாகவும்  வரலாறு கூறுகிறது.

ஒரு சமயம் ஸ்ரீ நாம்தேவ் சுவாமிகள் தரிசனத்திற்காக இங்கு வந்து கிழக்கு நோக்கிய நாகநாத மூர்த்திக்கு எதிரில் இருந்துகொண்டு பஜனை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அந்தணர்கள் அவரை சுவாமியை மறைக்காமல் இருந்து கொண்டு பஜனை செய்யுமாறு கூறினர். அதற்கு ராம்தேவ் ஸ்வாமிகள், “ ஈசன் எல்லாத் திசையையும் நோக்கிக் கொண்டு இருக்கிறார். யானும் வேறு திசையில் நின்று கொண்டு பஜனை செய்கிறேன். இறைவன் இந்த அடியவனையும் பார்த்து அருள் புரிவார் “ என்று அவர்களிடம் கூறினார். அதைக்கண்ட அந்தணர்கள் அவரைத் தென்திசையில் இருக்குமாறு செய்தனர். அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அதுவரை கிழக்கு நோக்கியிருந்த பெருமான் தனது  பக்தனுக்காகத் தென்திசை நோக்கித் திரும்பியருளினான். வடதிசை நோக்கியிருந்த கோமுகமும் கிழக்கு முகமாகத் திரும்பியது. அதனைக் கண்டோர் அனைவரும் வியந்தவண்ணம் ஸ்ரீ நாமதேவரை வணங்கிப் போற்றினர். அவ்வாறு தென்திசை நோக்கித் திரும்பிய நிலையிலேயே இன்றும் ஜோதிர் லிங்க மூர்த்தி நமக்குக் காட்சியளித்து அருள் பாலிக்கிறார்.

ஆதியில் இந்த ஜ்யோதிர் லிங்கமானது தண்ணீருக்குள் இருந்ததாகவும், வனவாசம் செய்ய வந்த பாண்டவர்கள் பெருமானைக் காணாது அருகில் இருந்தவர்களிடம் கேட்டபோது தண்ணீருக்குள் இருந்தது அவர்களுக்குத் தெரிய வந்தது. பீமன் தனது கதாயுதத்தால் நீரை அப்புறப்படுத்தவே , பாண்டவர்களுக்குச் சிவலிங்க தரிசனம் கிட்டியது. அன்றுமுதல் சுவாமி அனைவரும் காணுமாறு வெளிப்படையாகத் தரிசனம் தந்தருளுகிறார்.

கர்ப்பக் கிரகம் அமைந்துள்ள குகைக்கு மேல் மற்றோர் குகையிலும் ஒரு நந்தியும் ஒரு சிவலிங்கமும் காணப்படுகிறது. முகமதியர்கள் நமது ஆலயங்களுக்குத் தீங்கிழைப்பதை அறிந்தபடியால் ,ஒருக்கால் அவர்கள் வந்தால் மேலேயுள்ள குகையில் இருக்கும்  லிங்கமே உண்மையானது என்று ஏமாறுமாறு இவ்வாறு மற்றோர் சன்னதி உருவானது என்கிறார்கள்.

தாருகாவனத்தில் தங்கள் பத்தினிகளுடன் வாழ்ந்த முனிவர்கள், தங்களது கர்மானுஷ்டானங்களால் எதையும் பெற முடியும் என்பதால் கடவுளை வணங்க அவசியம் இல்லை என்று அகந்தையுடன் இருந்தார்கள். அவர்களுக்கு ஞானோபதேசம் செய்வதற்காகத்  தாருகாவனத்தில்  பிக்ஷாடன வடிவமேற்றுப் பரமேச்வரனும், மோகினி உருக்கொண்டு விஷ்ணுவும் வந்ததாகப் புராணம் கூறும்.

நுழைவு வாயில் 
முன்னொரு காலத்தில் தாருகன்  என்ற அசுரன் தனது மனைவியான    தாருகையுடன் இங்கு பதினாறு யோஜனை விஸ்தீரணம் கொண்ட நந்தவனம் அமைத்து வசித்து வந்தான். தாரகையானவள் பார்வதி தேவியைக் குறித்துத் தவம் செய்து அனேக வரங்கள் பெற்றாள். நம்மை எவராலும் வெல்ல முடியாது என்று அகந்தை கொண்டு இருவரும், வேள்வி செய்யும் அந்தணர்களையும் சிவனடியார்கள் பலரையும் சிறையில் அடைத்தார்கள். இதைப் பொறுக்காத ஔர்வ முனிவரின் சாபத்தால் பல அரக்கர்கள் மாண்டனர். எஞ்சிய அரக்கர்களை அழைத்துக்கொண்டு தாருகன் கடல் நடுவில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.

அரக்கனது தொல்லையால் துன்பப்பட்டுக்கொண்டு இருந்த அந்தணர்களுக்கு இரங்கிய சுப்ரியன் என்ற அந்தணன் அவர்களுடன் சிவபூஜை செய்யலானான். இதனை ஒற்றர்கள் மூலம் அறிந்த தாருகன் அப்பூஜையை செய்யவிடாமல் இடையூறு செய்தான். அப்போது சுப்ரியன் பூஜித்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவபெருமான் தாருகனைத் தனது நெற்றிக்கண்ணால் அழித்துத் தனது பக்தர்களைக் காப்பாற்றினார். ஆனால் தாருகை உமாதேவியிடம் வரம் பெற்றதால் எஞ்சிய அசுரர்கள் காக்கப் பெற்றனர். இவ்வாறு அருள் செய்த மூர்த்தியை போகேச்வரர் என்கிறார்கள். இதற்கு ஜில்லிகா, சரஸ்வதி சங்கமத்திலுள்ள பூதேச்வர லிங்கம் உப லிங்கமாகக் கருதப்படுகிறது.

அயோத்திக்கருகில் சரயு நதிக்கருகில் உள்ள நாகேசமே ஜ்யோதிர் லிங்கம் என்று கூறுவோரும் உளர். நாகேசம் தாருகாவனே என்று ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்திரத்தில் கூறப்படுவதாலும் , தாருகை தனது இருப்பிடத்தை மேற்குக் கடலில் அமைத்திருந்தாள் என்று சிவமஹா புராணம் குறிப்பதாலும் ஔண்டாவில் உள்ள லிங்கமே ஜ்யோதிர்லிங்கம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. 
 
சீக்கிய குருமார்களின் தொடர்புடைய இடமாதலால் சீக்கியர்கள் பலர் இங்கு வருகிறார்கள். கோயிலுக்குள் வெளிப்ராகாரத்தை ஒட்டிய இடத்தில் ஒரு குளத்தை ஒட்டிய பாதையில் சென்றால் தத்தாத்ரேய மடமும்,ராதா - கிருஷ்ணா மந்திர்,சந்த்ஜனாபாய் ஜாதே,மற்றும் ஷாம்கிர்குரு என்பவர் இடமும் உள்ளன. இங்கு சீக்கிய சகோதரர்கள்  பஜனை செய்கிறார்கள். இங்கிருந்து சுமார் ஐம்பது கி.மீ தூரத்திலுள்ள நான்டெட் நகரில் அவர்களது பிரசித்திபெற்ற குருத்வாரா உள்ளது. அதனருகில் தங்க வசதியுள்ள அறைகள் இருப்பதால் நாகேசம் செல்பவர்கள் இங்கிருந்து சாலை மார்க்கமாகச் செல்வது எளிது.