சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
சிவ ராஜதானி
|
(நாகைப்பட்டினத்துப்
பன்னிரு சிவாலயங்கள்)
|
திருவாதிரையான்
திருவருட் சபை, சென்னை.
|
பணிவுரை
|
தெய்வப் பொன்னி நதி வளம் கொழிக்கும்
சோழ வளநாட்டில் காவிரியின் இருகரைகளிலும் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 190 ஆகும். அவற்றுள், காவிரித்
தென்கரைத் தலங்களுள் ஒன்றாக விளங்குவதும், மிகப் பழமையானதும், தேவார மூவராலும்
பாடல் பெற்றதும்,சக்தி பீடங்களுள் ஒன்றும், சப்த விடங்கத் தலங்களுள்
ஒன்றும்,பல்வேறு புராண வரலாறுகளைக் கொண்டதும் ஆகிய தலம், நாகப்பட்டினம் என்று
தற்போது வழங்கப்பெறும் நாகைத் திருத்தலம். நாகராஜனாகிய ஆதிசேஷன் வழிபட்ட
சிறப்புடையதால்,இப்பெயர் வந்தது என்பர் .
ஊழிக்காலத்தில் அனைத்தும் இங்கு
ஒடுங்குவதால்,இத்தலம் சிவராஜதானி எனப்பட்டது எனத் தல புராணம் கூறுகிறது. காயா
ரோஹாணர் என்ற பெயருடன் சிவபெருமான் அருட் காட்சி வழங்கும் தலங்கள், காஞ்சி,
கும்பகோணம்(மகாமகக் குளக் கரை), நாகை ஆகிய மூன்றுமாம். கயிலை யையும்,காசியையும்
போன்று முக்தி மண்டபம் இங்கு இருக்கிறது.
இத்தல எல்லைக்குள், ஸ்ரீ நீலாயதாக்ஷி
அம்பிகா சமேத ஸ்ரீ காயாரோகண ஸ்வாமி ஆலயம் உள்ளிட்ட பன்னிரண்டு சிவாலயங்கள் உள்ளன.
இவை யாவும் புராணச் சிறப்பும்,பழமையும் வாய்ந்தவை. இப்பன்னிரண்டு ஆலயங்களையும்
பலர் ஒரே நாளில் தரிசிப்பர்.
இப்பன்னிரண்டு ஆலயங்களின் இருப்பிடம்,
வரலாறு ஆகியவை பற்றிய செய்திகளுடன் ஒரு சிறு நூல் வெளியிட்டால் இக்கோயில்களைத்
தரிசிக்க வருவோர்க்குப் பெரிதும் பயன் படும் என்ற எண்ணத்தால் இச் சிறு முயற்சியை
மேற்கொள்கிறோம். சிவராஜதானியாகிய நாகைக்கு வரும் அன்பர்கள் இதனை வரவேற்பர் எனக்
கருதி, இதனைத் திருவாதிரையான் திருவருட் சபையின் வெளியீடாக ஆதி புராணனாகிய
காயாரோகணப் பெருமானின் மலரடிகளில் சமர்ப்பிக்கிறோம்.
--சிவபாதசேகரன்
,திருவாதிரையான் திருவருட் சபை, சென்னை/
1. காயாரோகணம்
(ஸ்ரீ நீலாயதாக்ஷி சமேத
ஸ்ரீ காயாரோகண ஸ்வாமி ஆலயம்)
திருச்சிற்றம்பலம்
நிருத்தனை நிமலன் தன்னை நீணிலம் விண்ணின்
மிக்க
விருத்தனை வேத வித்தை விளைபொருள்
மூலமான
கருத்தனைக் கடல் சூழ் நாகைக்
காரோணம் கோயில் கொண்ட
ஒருத்தனை உணர்தலால் நாம்
உய்ந்தவா நெஞ்சினீரே..
திருச்சிற்றம்பலம்
--- திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்
தலமும்
இருப்பிடமும்: புண்ணியத்
தலங்களும்
தீர்த்தங்களும்
நிறைந சோழ வளநாட்டில் தெய்வப்பொன்னி
நதியின்
தென்கரையில்
உள்ள தேவாரப் பாடல்பெற்ற
சிவத்தலங்களுள் 82 வது தலமாக விளங்குவது திருநாகைக் காரோணம் எனும் இத்தலம். இது, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புடையதாய்
விளங்குகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாகைக்குவர இரயில் மற்றும் பேருந்து வசதிகள் இருக்கின்றன. இரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி. மீ தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.
தலத்தின் தொன்மை: பல ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டதால் இதனை ஆதி புராணம் என்றும் சுவாமியை ஆதி புராணேச்வரர் என்றும் தல புராணம் குறிப்பிடுகிறது.
தலத்தின் பெருமை: உமா தேவியும்,ஆதிசேஷனும்,புண்டரீக முனிவரும் வழிபட்ட தலம். அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான அதிபத்த நாயனார் அவதரித்த தலமும் இதுவே ஆகும்.
கோயில்
அமைப்பு: கிழக்கு நோக்கிய இச்சிவாலயத்தின்
முகப்பிலுள்ள முற்றுப்பெறாத கோபுர வாசலைக் கடந்தால், நாகாபரண விநாயகர், சுதையாலான நந்தி, முக்தி மண்டபம்,ஆகியவற்றைத் தரிசிக்கலாம்.
ஐந்து நிலை கோபுர வாசலைக் கடந்தால்,தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதியும், அருகில் கொடிமரம் ஆகியன அமைந்துள்ளன. சுவாமி பிராகாரத்தில், அருகாமையில் தியாகராஜமூர்த்தி சன்னதியும், எதிரில் சுந்தரரும் இருக்கக் காணலாம். இப்பிராகாரத்தில், அறுபத்து மூவர், புண்டரீக முனிவர், சாலீசுக மன்னன்,முருகன்,கஜலக்ஷ்மி,தசரதன் ஸ்தாபித்த சநீச்வரன்,நவக்ரகங்கள்,காட்சி
கொடுத்தவர்,நடராஜர்,பிக்ஷாடனர் அதிபத்தர் ஆகிய மூர்த்திகளையும் தரிசிக்கலாம்.தியாகராஜர் சன்னதியில் சுந்தர விடங்கரையும் தரிசிக்கலாம். மூலவரான காயாரோகண சுவாமிக்குப் பின்னால் சப்த ரிஷிகளுக்கும் காட்சி தந்த சோமாஸ்கந்தரையும் தரிசிக்கலாம். ஸ்தல விருக்ஷமான மாமரத்தின் அருகில் மாவடிப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.
தீர்த்தங்கள்: சர்வ தீர்த்தம் என்னும் புண்டரீக தீர்த்தம் கோவிலின் மேற்கிலும், சிவகங்கை என்னும் தேவ தீர்த்தம் முக்தி மண்டபத்தருகிலும், தேவநதியாகிய உப்பாறு ஊருக்கு மேற்கிலும் உள்ளன. கடலும் சிறந்த தீர்த்தமாவதால், விசேஷ நாட்களில் இதில் நீராடுவது சிறப்புடையதாகக் கருதப் படுகிறது.
நாகைப் புராணம் : வடமொழியில் இருந்த
இத்தலத்தின் புராணத்தைத் தமிழில் இயற்றித் தருமாறு அன்பர்கள்
வேண்டவே, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் மகாதேவ
சாஸ்திரிகள் என்பவரிடமிருந்து தமிழாக்கம் செய்து
கொண்டு, செய்யுள்நடையில்1868ம் ஆண்டு இயற்றினார்கள். புராணம் முழுதும்
இயற்றப்பட்டவுடன், 1869 ம் ஆண்டு நாகைப் புராண அரங்கேற்றம்
நடைபெற்றது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் 65
வது
பீடாதிபதியாக விளங்கிய ஸ்ரீ மகா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், கீழ்வேளூர் சுப்ரமணிய தேசிகர்
ஆகியோர் பிள்ளைஅவர்களை ஆசீர்வதித்துச் சென்றார்கள். அதே
சமயத்தில் சென்னையிலும் இந்நூல் அச்சேறியது.
மகாவித்துவான் பிள்ளை அவர்களின்
மாணாக்கரான டாக்டர் உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்கள்,
இப்புராணத்தின் அருமை பெருமைகளைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்:
“இந்நூலில் பல நயங்கள் மிகுந்து
விளங்கும். சொல்லணி,பொருளணி, தொடைநயம்,பொருட்சிறப்பு,சுவைநயம்,நீதி,சிவபக்தி,சிவத்தலச்சிறப்பு, நாயன்மார் பெருமை முதலிய பலவும் நிரம்பியுள்ளன. சுவைப் பிழம்பாக விளங்கும் இக்காப்பியத்தைப்
பெறுதற்குத் தமிழ்நாடு தவம் செய்திருக்க வேண்டும். பல
புலவர்களின் வாக்குகளை ஒருங்கே பார்த்து மகிழ வேண்டுபவர் இந்நூலைப் படித்தால் போதும்.”
ஞானசம்பந்தர் அருளிய திருமுகப்
பாசுரத்தின் ஒவ்வோரு பாடலுக்கும் சேக்கிழார் விரிவுரை செய்ததைப் போலப்
பிள்ளை அவர்களும், சுந்தரர் இத்தலத்தின் மீது அருளிய பதிகத்தின்
ஒவ்வொரு பாடலுக்கும் இப்புராணத்தில் விளக்கம் அளித்துள்ளது
அறிந்து மகிழத் தக்கது.
2506
பாடல்களைக்
கொண்ட இப்புராணத்தைத் திருவாவடுதுறை ஆதீனம், 1970 ம் ஆண்டு, குறிப்புரையுடன் வெளியிட்டுத் தமிழ் கூறு நல்லுலகிற்குத் தந்து பேருபகாரம் செய்தது, நன்றியுடன் இங்கு
நினைவுகூரத் தக்கது.
புராண வரலாறுகள்:ஏழு
முனிவர்களுக்கும் சோமாஸ்கந்த வடிவில் காட்சி அளித்தது, அகஸ்தியருக்குத் திருமணக் காட்சி
அளித்தது, சாலீசுக மன்னனுக்குத் தரிசனம் அளித்தது, தசரதன்
தனியே சனிப் பிரதிஷ்டை செய்தது, சுகுமாரன் என்ற அந்தணனுக்கு
சிவராத்திரி அன்று நற்கதி அளித்தது,புண்டரீக முனிவரைக் காயத்தோடு
ஆரோகணம் செய்தது, திருமால், பிரமன் முதலிய தேவர்களும், அகத்தியர், வசிஷ்டர் முதலிய முனிவர்களும்,
முசுகுந்தன்,அரசகேசரி,விசித்திரகவச்சன்,
விரூரகன், பத்திரசேனன் என்னும் அரசர்களும்
,பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்ட தருமன் என்னும் அந்தணர்களும்
தருமன் முதலிய வணிகர்களும் வழிபட்டது ஆகியவற்றைப் புராணம் விரித்து உரைக்கிறது. சுந்தர மூர்த்தி நாயனார் இப்பெருமானைப்
பாடிக்,குதிரை, முத்தாரம்,வயிரம், கஸ்தூரி,சாந்து,பொன்,பட்டாடை,காம்பினோடு நேத்திரம்,ஆகியவற்றைப் பெற்றதாகப் பெரிய புராணம்
கூறுகிறது.இறைவன் தனது குதிரை வாகனத்தை சுந்தரருக்கு அளித்ததால்,
அன்றுமுதல் இக்கோவிலில், குதிரைவாகன விழா, சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கே
நடைபெறுவதாகப் புராணம் கூறும்.
திருவிழாக்கள்: வைகாசியில்
பிரமோற்சவமும், ஆனி ஆயில்யத்தில் புண்டரீக மகரிஷி ஐக்கியமும், ஆனி
கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பஞ்சக் குரோச உற்சவமும் நடைபெறும்.அப்போது,
சாலீசுகனுக்குத் திருமணக்காட்சி அளித்த பின், பல்லக்கில்
புறப்பட்டு, பஞ்சகுரோச யாத்திரையாக, பொய்யூர், பாப்பா கோவில், சிக்கல்,
பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய தலங்களுக்குச் சென்று விட்டு, மறுநாள்
காலை, நாகை அடைந்து, கோபுர வாசல் தரிசனம் நடை பெறுகிறது.
ஆடிப் பூரத்தில் நீலாயதாக்ஷி அம்பிகைக்கு விமரிசையாக உற்சவம் நடைபெறும். ஆவணியில் அதிபத்த நாயனார் விழாவும், ஆடி - தை அமாவாசைகளில் சமுத்திர தீர்த்த வாரியும், தியாகராஜப் பெருமானுக்குப் பங்குனி உத்திர விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.கார்த்திகை சோமவாரங்களில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
2 அமர நந்தீசுவரர் கோவில்
நாகை பெரிய கோவில் கீழை சன்னதித் தெருவின் முனையில்,கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது இந்த ஆலயம்,சிறிய கோபுர வாசலைக் கொண்டது. நாகைக் காரோணப் புராணத்தில் அமரரேந்திரேச்வரர் என்று காக தீர்த்தப் படலத்தில் சுவாமி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் மக்கள் வழக்கில் அது,அமர நந்தீஸ்வரர் என ஆயிற்று போலும்!
புராண வரலாறு: அகலிகையை நாடிய
இந்திரன் கௌதம முனிவரின் சாபத்தால் காக்கையாக மாறினான். சாப
விமோசனத்திற்காக நாகை வந்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினான். அதுவே
காக்கை தீர்த்தம் எனப்படுவது. தினமும் அதில் நீராடி, காயாரோகனரை வழிபட்டு
நற்கதி பெற்றான். ஆலயத்தின் கிழக்கே, ஒரு சிவலிங்க
மூர்த்தியை பிரதிஷ்டை செய்து, தனது வஜ்ராயுதத்தால் ஒரு தீர்த்தம்
உண்டாக்கி, வழிபட்டான். இம்மூர்த்திக்குஅமரனந்தீசுவரர்
என்றும், தீர்த்தத்திற்கு வஞ்சி கங்கை தீர்த்தம் பெயர்கள் ஏற்பட்டன.
ஆலயம் அழகிய கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு விளங்குகிறது.
ஆலயம் அழகிய கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு விளங்குகிறது.
3 அக்கரை குளம் சொக்கநாதர் கோவில்
நாகை பெரிய கோவிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. குறுகிய தெருக்கள் வழியாகச் செல்லவேண்டும். ஆலயத்தின் அருகில் அழகிய குளம் அமைந்துள்ளது.ஒரே ப்ராகாரத்துடன் கூடிய சிறிய கோயில். செட்டியார் பரம்பரையினர் நிர்வகிக்கின்றனர். மொட்டைக்கோபுர வாயிலின் மேல் சுவாமியின் மடியில் முருகனும் அம்பிகையின் அருகில் கணபதியும் அமர்ந்துள்ளவாறு சுதை வடிவங்கள் உள்ளன. சுவாமி, சுந்தரேசுவரர் என்றும் அம்பிகை, மீனாக்ஷி என்றும் அழைக்கப்படுகின்றனர். நாகைக் கோயில்கள் பண்ணிரண்டின் விவரங்களை ஒரு பலகையில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
4 சட்டையப்பர் கோயில்
பிரபலமான சிவாலயம். முன்னமே தோன்றியதால் ஆதி காரோணம் என்று வழங்கப்பெறும்.புண்டரீகமுனிவர் ஆதிபுராணருக்குத் தென்மேற்கில் ஒரு ஆசிரமம் அமைத்து, லிங்கப்ரதிஷ்டை செய்து வழிபட்டுவந்தார். தினந்தோறும் சர்வ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து,,பெருமானை வழிபட்டு வந்தார். இறைவன் அவரைத் தனது காயத்துடன் ஆரோகணித்துக் கொண்டதால்,காயாரோகணர் எனப்பட்டார். சர்வதீர்த்தமும், புண்டரீக தீர்த்தம் எனப்பட்டது.
கோயில் பெரிது. திருக்குளம் உள்ளே
அமைந்திருக்கிறது. தக்ஷிணாமூர்த்திக்கு
அழகிய தனி சன்னதி அமைந்திருக்கிறது.சுவாமிக்கு ஆதி காயாரோகணேசுவரர் என்று பெயர். அம்பிகை இக்ஷுரஸ
பாஷிணி எனப்படுகிறாள். அதாவது, கருப்பஞ்சாறு
போன்று இனிக்கும் குரல் வளமுடையவள் என்று பொருள் படும்.
இக்கோயிலின் சிறப்பு மூர்த்தியாக
சட்டைநாதர் தனிச் சன்னதி கொண்டு அருளுகிறார். கண்கண்ட தெய்வமான இவருக்கு உள்ளுர்
மற்றும் வெளியூர் அன்பர்கள் பிரார்த்தனை
செலுத்த வருகிறார்கள். மிகவும் நியமத்தோடு பூஜைகள் செய்யப்படுகின்றன.
சட்டைநாத சுவாமி, அம்பிகையோடு காட்சி அளிப்பது சிறப்பு அம்சம்.
5 நாகநாத சுவாமி ஆலயம்
நாகையில் சட்டையப்பர் வடக்கு வீதியின் வட சிறகில் இக்கோயில் அமைந்துள்ளது. முகப்பில் மூன்று நிலை ராஜ கோபுரம் அணி செய்கிறது. உள்ளே சென்றால் ஓர் கருங்கல் மண்டபத்தில் விநாயகர்,நந்தி,பலிபீடம் இருக்கக் காணலாம்.சன்னதிக்குச் செல்லும் வழியிலுள்ள சுவற்றில், ஆதிசேஷன் சிவபெருமானைப் பூஜிக்கும் திருவுருவம் இருக்கக் காண்கிறோம்.இடப்புறச் சுவற்றில்,நாக கன்னிகை இருக்கிறாள். அம்பிகை அகிலாண்டேச்வரியாக தனிச் சன்னதி கொண்டு காட்சி அளிக்கிறாள். நாகநாத சுவாமி சன்னதியில் நாகப்புற்றுக்கள் உள்ளன. அருகிலுள்ள மேடையில் ராகு, கேது ஆகியோரின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இது சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலம் என்பர்.
பிராகாரத்தில், தக்ஷிணாமூர்த்தி,கருவறைச்
சுவற்றை ஒட்டி கோஷ்டமாக மட்டும் இராமல் தனிச் சன்னதி கொண்டு
விளங்குகின்றார்.இது போன்ற அமைப்பு, இக்கோயிலிலும்,சட்டையப்பர்
கோயிலிலும் மட்டுமே உள்ளன.
ஸ்தல விருக்ஷமான சரக்கொன்றை தற்போது
இல்லை.ஒரே இடத்தில் ஆலும்,வேம்பும் இணைந்த தோற்றத்தையே
காண்கிறோம்.இங்கு நாகப்-பிரதிஷ்டைகள் செய்திருக்கிறார்கள்.தென்மேற்கில்வினாயகப்பெருமானின் சன்னதியும்,வடக்குத் திருச்சுற்றில் முருகப்பெருமானது சன்னதியும் உள்ளன. மயில் வாகனனாக,
வள்ளி-தெய்வானையுடன் அற்புதக் காட்சி வழங்குகின்றான் ஆறுமுகன். கஜலக்ஷ்மி,துர்க்கை,சண்டேசர்,சூரியன்,சனி, பைரவர் ஆகிய மூர்த்திகளையும் பிராகாரத்தில்
தரிசிக்கலாம்.
புராண வரலாறு: சனத்குமார
முனிவரின் வேண்டிக்கோளுக்குக்கிணங்கி, நந்தியெம்பெருமான், நாகையில்
திருக்கோயில் கொண்டுள்ள நாகநாதப் பெருமானுடைய பெருமைகளைக் கூறுவதாகப்
புராணம் அமைந்துள்ளது. பாதாள உலகை ஆண்டுவந்த ஆதிசேஷனுக்கு மகப்பேறு
இல்லாததால் மிகவும் மனச்சோர்வடைந்து வசிஷ்ட
முனிவரை அணுகினான். சிவ பூஜை செய்துவந்தால் மகப்பேறு சித்திக்கும் என்று
முனிவர் அருளவே, சிவராத்திரி தினத்தன்று இரவு நான்கு
காலங்களும் முறையே, குடந்தைக் கீழ்க்கோட்டம்(கும்பகோணம் நாகேஸ்வர
சுவாமி ஆலயம்), திருநாகேசுவரம், திருப்பாம்புரம் ,திரு
நாகைக் காரோணம் ஆகிய நான்கு தலங்களை வழிபட்டான். நாகையை அடைந்து,
தேவ தீர்த்தத்தில் நீராடி, காயாரோகணப் பெருமானையும், நீலாயதாக்ஷி
அம்பிகையையும் முறைப்படி வழிபட்டான்.சர்வ
தீர்த்தத்தின் மேல்திசையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான்.
அதன் பயனாக அவனது மனைவி ஒரு பெண் மகவை ஈன்றெடுத்தாள். ஆனால்
அக்குழந்தைக்கோ மூன்று தனங்கள் இருக்கக் கண்டு வருந்தலாயினான். அப்போது
அசரீரி, “நாகராஜனே!
வருந்தாதே. இவளுக்குத் தக்க மணாளன் வரும்போது மூன்றாவது தனம் மறையும்” என ஒலித்தது.
ஆதிசேஷனின் மகளான நாக கன்னிகை, நாள்தோறும் ஆதிபுராணரை மனமுருகி வழிபட்டுவந்தாள். ஒருநாள் தேவதீர்த்தக்கரையில்
சோழ அரசகுமாரனாகிய சாலீசுகனைக் கண்டாள். அப்போது
அவளது மூன்றாவது தனம் மறையவே, இவளே தனது மணாளன் என
அறிந்து, தன் பெற்றோரிடம் கூறினாள். பிலத்துவாரம்
வழியே நாகலோகம் சென்ற சோழனை ஆதிசேஷன் வரவேற்றுத் தன் மகளை
அவனுக்கு மணம் செய்துவித்தான். பின்னர் அவனை
அரசாட்சி செய்யுமாறு கூறிவிட்டு, நாகராஜன் நாகையை வந்து அடைந்தான். நாக
தீர்த்தத்தில் நீராடித் தான் பிரதிஷ்டை செய்த நாக லிங்கத்தை வழிபாட்டு
வந்தான். இத்தீர்த்தத்தில் நீராடுவோரைப் பாம்பு தீண்டினாலும் விஷம் ஏறாமல்
இருக்கக் கடவது என்ற வரமும் பெற்றான்.இவ்வாறு மாசி
மாத மகாசிவரத்திரியன்று பூஜை செய்யும்போது, இறைவன் காட்சி
நல்கினான். அப்போது ஆதிசேஷன், "இறைவா, இந்நகரம் அடியேனது பெயரில்
அழைக்கப்படவேண்டும். இந்த லிங்க மூர்த்தியில் தாங்கள் எப்போதும் இருத்தல்
வேண்டும். இங்கு வந்து வணங்கும் அன்பர்களுக்கும் வேண்டிய வரம்
அனைத்தையும் தந்தருள வேண்டும்.” என்று வீழ்ந்து வணங்கினான். நாகநாதப்
பெருமானும் அவன் வேண்டிய வரத்தைத் தந்தருளினார் நாகநாதப்பெருமானது அருளை வேண்டி,
வாசுகி, கார்கோ டகன், தனஞ்சயன், ஐராவதன், குளிகன்,சங்கபாலன் ஆகிய
நாகங்களும் வழிபட்டதை மேலைத் திருச்சுற்றில் காணலாம். கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு இது பரிகாரத் தலம்
எனப்படுகிறது.
சீதையைத் தேடிவந்த இராமபிரான் தென்புறம்
ஓர் லிங்கமூர்த்தியை நிறுவி பூஜித்தார். அம்மூர்த்தியே ராமலிங்கேசுவரர் என்பதாகும்.கிரகண காலங்களிலும்,அர்தோதய-மகோதய புண்ணிய
காலங்களிலும் இங்குள்ள கடலில் மூழ்கி இராமனாதப் பெருமானை
வணங்குவோர், எல்லா நன்மைகளையும் அடைவர். இத்தலத்தை வழிபடுவோர், மணப்பேறு, புத்திரப்பேறு, நோய் நீக்கம்,ஆகியன அருளப்பெறுகிறார்கள் கார்த்திகை சோமவாரம் பங்குனி உத்தரம் மற்றும்
மாதந்திர விசேஷ நாட்கள் அனைத்தும் இங்கு
விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.
6 அழகர் கோயில்
திருப்பாற்கடலைக் கடையும் போது ஆலகால
விஷம் வெளிப்பட்டதால் திருமாலின் மேனி கருமை நிறமாக மாறியது.
மீண்டும் தனது அழகைப் பெறுவதற்காக விஷ்ணுவானவர் நாகைக்கு
வந்து லிங்கப்ரதிஷ்டை செய்து,அதன் மேற்கில் அம்ருத புஷ்கரணி
என்ற தீர்த்தத்தை உண்டாக்கி வழிபட்டு வந்தார். ஈசனும் அவருக்குக்
காட்சி அளித்து, “ நீ கரிய நிறத்தவனாக இருப்பினும் அழகைப்
பெறுவாய் “ என்று வரமளித்தார். இவ்வாறு தனது அழகை மீண்டும் பெற்ற
திருமால்,சௌந்தரராஜப்பெருமாள் என்ற திருநாமத்துடன், இக்கோயிலின்
தென்மேற்குத் திசையில் கோயில் கொண்டுள்ளார்.
7 நடுவூர் கோயில்
8 வீரபத்ர சுவாமி கோயில்
ஸ்ரீ விசாலாக்ஷி சமேத ஸ்ரீ விஸ்வநாதர் கோயில், அதன் பிரதான மூர்த்தியான வீரபத்ரரின் பெயரால் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் இராஜ கோபுரம் ஐந்து நிலைகளை உடையது. வீரபத்திரருக்கென்று தனிச் சன்னதி இருக்கிறது. சிவபெருமானை மதியாது தக்ஷன் செய்த யாகத்தில் பங்கேற்ற குற்றத்திற்காக வீரபத்திரர் தோன்றி அத்தேவர்களைத் தண்டித்தார். அதனால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதற்காக சிவனை வழிபட்டார். பெருமானும், “ யாகத்தில் பயன்படுத்தப்பட்ட மாலைகளை கங்கையில் போட்டு அவை எங்கே கரை சேருகின்றனவோ, அங்குசிவ-லிங்கப்ப்ரதிஷ்டை செய்து என்னை வழிபடுவாயானால், பாவம் நீங்கப்பெறுவாய் “ என்று அருளினார். அம்மாலைகள் நாகையில் கரை ஒதுங்கின. வீரபத்திரரும், காளியைக் காவல் தெய்வமாகக் கொண்டு லிங்கப் பிரதிஷ்டை செய்து, அப்பெருமானுக்கு விஸ்வநாதர் என்று பெயரும் இட்டார்.
9 கட்டியப்பர் கோயில்
இக்கோயிலின் ராஜகோபுரம் மூன்று
நிலைகளைக் கொண்டது. தேவாசுரர்கள் பாற்கடலைக் கடையும்
காட்சி சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
சுவாமி அம்ருதகடேசுவரர் என்றும்
அம்பிகை, பிரம்மானந்த சுந்தரி என்றும் வழங்கப்படுகிறார்கள்.
10 மலை ஈசுவரன் கோயில்
இக்கோயிலின் நுழை வாயிலில் இராஜ
கோபுரம் இல்லை. சுதை வடிவங்களாக ரிஷப வாகனத்தில் சுவாமியும்
அம்பாளும் காட்சி அளிக்கிறார்கள். இருபுறமும்
கணபதியும் கந்தனும் காட்சி தருகிறார்கள். மாடக்கோயிலின் கீழே நந்தியும்
பலிபீடமும் அமைந்துள்ளன. மேலே பதினெட்டுப் படிகள் ஏறிச்சென்றால் சுவாமி
சன்னதியை அடையலாம். பதினாறு பட்டை லிங்கமாக கைலாசநாதப்
பெருமான் தரிசனம் தருகிறார்.
11 காசி விசுவநாதர் கோயில்
ஸ்ரீ காயாரோகண சுவாமி ஆலயத்தின் தெற்கு மடவிளாகத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
முன்னொரு காலத்தில் தர்மம் குன்றி,
அதர்மம் மேலோங்கி இருந்தபோது, சிவனருளால் நாகையில்
தேவ தீர்த்தம் தோன்றியது. அதன் வடகரையில் உள்ள காசி
விசுவநாதரை வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் நீங்கும். இங்கு முக்தி மண்டபம்
அமைந்துள்ளது. இங்குதான் நாகைக் காரோணப் புராணம் அரங்கேற்றம்
செய்யப்பெற்றது. இங்குள்ள விஸ்வரூப விநாயகரின்
திருவுருவம் தரிசிக்கத்தக்கது.
12 அகஸ்தீசுவரர் கோயில்
இக்கோயில் வெளிப்பாளயத்தில்
அமைந்துள்ளது. ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீஅகஸ்தீசுவரசுவாமியை
அகத்தியமுனிவர் வழிபட்டுள்ளார்.
திருக்கயிலையில் சிவ-பார்வதியரின்
திருமணம் நடந்தபோது, வடதிசை தாழவே, பூமியைச் சமன் செய்யும்
பொருட்டு, அகத்திய முனிவரைத் தென்திசைக்கு அனுப்பினார்
சிவபெருமான். அதன்படி பொதிகையை நோக்கி வந்த முனிவர் நாகையில் தங்கி, காயாரோகணத்தின் வடக்கே ஓர் சிவலிங்கத்தை
ஸ்தாபித்து, பூஜித்து வந்தார். அதன் கிழக்கில் ஓர் தீர்த்தமும்
ஏற்படுத்தினார். அத்தீர்த்தம்
அகத்திய தீர்த்தம் எனப்படுகிறது. கடலில் மறைந்த வண்ணம் தேவர்களை அசுரர்கள்
தாக்கும்போது துன்பப்பட்ட தேவர்கள் அகத்தியரை
அணுகினர். அகத்திய முனிவரும் கடல்நீரைப் பருகிவிட்டார். அதனால்
வெளிவந்த அசுரர்களைத் தேவர்கள் வென்றனர். இவ்வாறு
தர்மத்தை நிலைநிறுத்துகையில், அகத்தியர் தங்கி பூஜித்த ஆலயம்
இது என்பர்.
.