திலீபனின் மகன் ரகு அயோத்தியை ஆண்டு வந்த காலத்தில் ஒரு நாள் நகர சோதனைக்காகப் போய்க்கொண்டு இருந்தபோது, வழியில் ஒரு ராக்ஷசனால் துரத்தப்பட்ட வேதியன் அடைக்கலம் வேண்டி, அவனது காலில் வந்து விழுந்தான். சிறிது நேரத்தில், பசியுடன் வந்த ராக்ஷசன், அவனை விட்டுவிடும்படி கேட்கவே, " செய்த பாவங்கள் துலா ஸ்நானம் செய்தால் நீங்கும். ஆனால் அடைக்கலம் புகுந்தவனைக் கைவிட்ட பாவத்திற்குப் பிராயச்சித்தமே இல்லை. " என்று சொல்லிய அரசன், ஸ்ரீ பரமேச்வரனை பிரார்த்திக்க, அவரும் ஒரு வழிப்போக்கனைப்போல் எதிரில் வந்து, "அரக்கனே, நீ இதற்குமுன் சதத்துய்மன் என்ற பெயருடன் வாழ்ந்திருந்தாய்.வசிஷ்ட முனிவரை ஏளனம் செய்ததால் அரக்கனாக மாறினாய். ஒரு அரசனைக் கண்டவுடன் பழைய உருவம் பெறுவாய்" என்று வசிஷ்டர் கூறியபடி, இப்போது அரசனைக் கண்டாய். உனது பழைய உருவம் வந்துவிடும்." என்று கூறி மறைந்தார். பழைய வடிவம் பெற்ற அரக்கனும், துலா காவேரி ஸ்நானம் செய்து நற்கதி பெற்றான்.
சித்திர வர்மன் என்ற கொடுங்கோல் மன்னன், அகஸ்திய முனிவரின் சொற்படி உதய காலத்தில் துலா ஸ்நானம் செய்து வந்தான். அதைக் கண்டு மகிழ்ந்த முனிவர், " எந்த வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அனைத்துப் பாவங்களும் துலா ஸ்நானம் செய்வதால் நீங்கிவிடுகின்றன.எத்தனையோ தர்மங்கள் செய்வதால் அடையும் பலன்களை ஒரு முறை காவரி ஸ்நானம் செய்தவன் பெறுவான் என்பது நிச்சயம். " என்றார். சோம பூஷணன் என்ற வேதியன் மிகவும் வறுமை நிலையிலும் காவேரி ஸ்நானம் செய்து வந்தான். இதனால் மகிழ்ந்த பிரம்ம தேவன் , அவன் முன் தோன்றி, "காவேரி ஸ்நான விசேஷத்தால், செல்வந்தன் ஆவாய். ஆனால் , அதைக்கொண்டு தான தர்மங்கள் செய்து வர வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் ஏழை ஆகிவிடுவாய்." என்று அருளினார். சோம பூஷணன் அதன்படி நடந்துவந்த போதிலும் அவன் மனைவி அதற்கு மாறாக நடந்ததோடு, கணவனையும் தான - தர்மங்கள் செய்யாமலும் ,காவேரி ஸ்நானம் செய்யாமலும் இருக்கும்படி மாற்றவே, அவர்கள் வீட்டில் திருடர்கள் புகுந்து, செல்வத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர். அதன் பிறகு, இருவரும் நல்ல புத்தி வந்தவர்களாய், காவேரி ஸ்நானமும் பூஜையும் செய்து, மீண்டும் ஐச்வர்யங்கள் அனைத்தும் பெற்று, நீண்ட நாட்கள் தான -தர்மங்கள் செய்து வாழ்ந்தனர். இக் கதையை அகஸ்தியரிடம் கேட்ட சித்திரவர்மனும் அதன்படியே நடந்து, இறுதியில் மோக்ஷம் பெற்றான்.
துலா மாதக் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியன்று காலையில் நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு வெந்நீரில் ஸ்நானம் செய்து, அதன் பிறகே, காவேரி ஸ்நானம் செய்ய வேண்டும். தீராத தலைவலி முதலிய உபாதைகளும் இதனால் நீங்கும் என்று பரமசிவனே சொல்லியிருக்கிறார். நரகாசுரனை சம்ஹரித்தவுடன் வீர ஹத்தி தோஷம் ஏற்ப்பட்டதால், சிவபெருமான் அருளியபடி, மகாவிஷ்ணு காவேரி ஸ்நானம் செய்து, அப்பாவத்தைப் போக்கிக் கொண்டார்.
ப்ருகு முனிவரின் புத்திரியாகத் தோன்றிய மகா லக்ஷ்மி , காவேரி ஸ்நானம் செய்து, தன சுய வடிவம் பெற்று, மகாவிஷ்ணுவை அடைந்தாள் . காவேரி ஸ்நானம் செய்த பூமா தேவி, யம தர்மனிடம், " தான தர்மங்கள் செய்யாமலும், பித்ரு கார்யங்களைச் செய்யாமலும் பாவங்களைச் சுமப்பவர்களை உன் உலகத்திற்கு அழைத்துக்கொள். காவேரி ஸ்நானம் செய்தவர்களையும் அதன் மகிமையைக் கேட்டவர்களையும் என்னிடம் விட்டுவிடு." என்று சொன்னவுடன் எமனும் அதன் படியே செய்வதாக வாக்களித்தான்.
தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று கங்கைக்கும் காவேரிக்கும் வாக்கு வாதம் வந்தபோது, காவிரியே சிறந்தவள் என்று பிரம்ம தேவர் தீர்ப்புக் கூறினார்.
இப்படிப்பட்ட காவேரி மகாத்மியத்தை பக்தியுடன் படிப்பவரும்,கேட்பவரும் எல்லாப் பாவங்களும் நீங்கப் பெற்று,மோக்ஷத்தை அடைவார்கள். புத்திர பாக்கியம் , நீண்ட ஆயுள், வியாதி நிவாரணம் , அஷ்ட ஐஸ்வர்யங்கள் எல்லாம் சித்திக்கும் .
" கவேரகன்யே காவேரி, சமுத்ர மகிஷிப் பிரியே
தேகிமே பக்தி முக்தி தவம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி "
ஸ்ரீ காவேரி தேவ்வ்யை நம்:
துலா காவேரி மகாத்மிய சுருக்கம் நிறைவுற்றது.