இன்பங்களில் பல வகை உண்டு. நாம் விரும்பிய பொருளைப் பெறுவதால் ஏற்படும் இன்பம் "பிரமோதம்" எனப்படும். காணாத பொருளை விரும்பி அது கிடைக்கும் எனும்போது தோன்றுவது,"ஆமோதம்" என்பது. விரும்பிய பொருளைப் பெற்று அதனால் வரும் இன்பத்தை அனுபவிப்பது, "சுரானந்தம்" எனப்படும். இந்த மூன்று வகை இன்ப வடிவாக இருந்து, தனது பக்தர்களுக்கு அவற்றை வாரி வழங்கும் தெய்வம் ஸ்ரீ மகா கணபதி ஆவார். அவரை மனத்தினால் தியானிக்கும் போதே ஆனந்தம் ஏற்பட்டு விடுகிறது. ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் அவரை, "கிரீடி,குண்டலி,ஹாரி,வனமாலி" என்று போற்றுகிறது. அவரது வடிவம் கண்ணுக்குள்ளேயே நின்று,"சர்வநேத்ராதி வாச:" என்ற நாமாவுக்கு விளக்கம் தருகிறது. கோபம் கொண்டவர்களையும் அந்தக் கணமே சாந்தமாகவும் குதூகலமாகவும் ஆக்கிவிடுவது அவரது அழகிய பால ரூபம். அப் பெருமான் பரமேச்வரனுக்கே ஹாஸ்யத்தை உண்டாக்குபவர் என்பதை, " சம்பு ஹாச்யபூ:" என்ற நாமமும், அம்பாளுக்கும் ஆனந்தத்தை விளைவிப்பார் என்பதை "கௌரி சுகாவஹா" என்ற நாமமும் தெரிவிக்கிறது.
" சிந்தாமணி த்வீப பதி:கல்பத்ருமவனாலய ரத்ன மண்டப மத்யஸ்த ரத்ன சிம்ஹா-சனாச்ர யா: " என்பதால் சிந்தாமணித் தீவில் அதிபதியாகவும்,கற்பக வனத்தின் நடுவில் ரத்னமண்டப மத்தியில் ரத்ன சிம்ஹாசனத்தில் வீற்று இருப்பவராகவும் ஸ்ரீ கணபதி காட்சி அளிக்கிறார். தீவ் ரா, ஜ்வாலினி, நந்தா, போக்தா ,காமதாயிநீ, உக்ரா, தேஜோவதீ,சத்யா, விக்ன நாசினி, ஆகிய ஒன்பது சக்திகள் , பீட சக்திகளாக விளங்குகிறார்கள். திவ் ரா என்ற பீட சக்தி ஸ்ரீ கணபதியின் பாதங்களைத் தலையால் தாங்குகிறாள். ஐம்பது எழுத்துக்கள் நிறைந்த தாமரை மலரில் சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்னி மண்டலம் என்ற மூன்றின் மேல் சுவாமி அமர்ந்து இருக்கிறார்.
சிவந்த மேனியும் சிவந்த ஆடைகளையும் சிவந்த மாலைகளைத் தரித்தவராகவும் உடைய இம்மூர்த்தி வெள்ளை நிறத்திலும் விருப்பம் உள்ளவர் என்பதை,
"ஸ்வேத ஸ்வேதாம் பரதர: ஸ்வேத மால்ல்ய விபூஷன:
ஸ்வேதாத பத்ரருசிற: ஸ்வேத சாமர வீஜ்ஹித:"
என்பதால், வெண்மையான சரீரத்தையும் வெண்மையான ஆடையையும் மாலைகளையும் வெண் குடையையும் வெண் சாமரத்தையும் உடையவர் என்று பொருள். இவர் ,தும்பிக்கையில் உள்ள தங்கக் கலசத்தில் உள்ள ரத்தினங்களை அடியார்களுக்குக் கருணையோடு பொழியும் தெய்வம் என்பதை,
புஷ்கரச்த ச்வர்ணகடீ பூர்ண ரத்னாபி வர்ஷகாய" என்ற நாமாவளி தெரிவிக்கிறது. இவரது ஆவரண தேவதைகளாக லக்ஷ்மீ நாராயணரும் பூமா தேவியும் ரதி மன்மதர்களும் ,ஆறு கணபதிகளும், அவர்களின் பத்தினிகளும் சங்க நிதி,பத்ம நிதி ஆகியவையும், பீடத்தில் பிராண சக்தியாக ஜெயா முதலான ஒன்பது சக்திகளும் விளங்குகின்றனர்.
இவரது பெருமையை, சஹஸ்ரநாமம் வர்ணிக்கும்போது, சப்த ரிஷிகளால் துதிக்கப் படுபவராகவும், சப்த ஸ்வர வடிவாகவும் சப்த மாதாக்களால் வழிபடப் படுபவராகவும், அஷ்ட மூர்த்தியாக விளங்கும் ஸ்ரீ பரமேச்வரனுக்குப் பிரியமான வராகவும், அஷ்ட ஐச்வர்யங்களையும் வாரி வழங்கும் வள்ளலாகவும் நவ நாராயணர் களால் துதிக்கப்படுபவராகவும் ஒன்பது குரு நாதர்களுக்கு மேலான குருநாதராகவும் உலகுக்கு உயிராகவும் பதினான்கு வகை இந்திரர்களுக்கும் வரம் அளிக்கும் வள்ளலாகவும்பதினான்கு உலகங்களுக்கும் பிரபுவாகவும் பதினெட்டு வகையான தான்யங்களை மக்களுக்கு உணவாகப் படைத்தவராகவும்,பரம தத்துவ வடிவினராகவும், முப்பத்தெட்டு கலைகளோடு கூடிய கடவுளாகவும் அறுபத்து நான்கு கலைகளின் நிலையமாகவும் நான்கு லக்ஷம் முறை தனது மந்திரத்தை ஜெபிக்கும் பக்தர்களிடம் மிகவும் பிரியமானவராகவும், ஏழு கோடி மகா மந்திரங்களின் வடிவமாகவும் துதிக்கப் படுகிறார்.
இவ்வளவு பெருமை வாய்ந்த ஸ்ரீ மகா கணபதி சகஸ்ரனாமத்தைப் பாராயணம் செய்யும் வீட்டை விட்டு மகாலட்சுமி அகல மாட்டாள். துர்தேவதைகளும்,வியாதிகளும் நீங்கும். தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும். இதனால் ஹோமம் செய்தால் கை மேல் பலன் உண்டாகும். பரம தரித்திரனாக இருந்தாலும் மகத்தான ஐச்வர்யத்தைப் பெறுவான் இது பரமேச்வர ஆக்ஞை" என்று மஹா கணபதியே சொல்வதாக சஹஸ்ர நாம பலச்ருதியில் சொல்லப் பட்டிருக்கிறது.
பக்தர்கள் அனைவரும் கணபதி சஹஸ்ரநாம பாராயணம் செய்து எல்லா ஐச்வர்யமும் பெற்று, நீண்ட ஆயுளோடும்,குணவதியான மனைவியோடும், நல்ல புத்திரர்களோடும் ,பிறப்பற்ற வாழ்வு வாழும்படி, "கர்ம கர்த்தா"வாகவும் "கர்ம சாக்ஷி"யாகவும் விளங்கும் கணேச மூர்த்தியின் பாத தாமரைகளைப் பிரார்த்திக்கிறோம்.