ஸ்ரீ சைலம்- பகுதி-1
ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி ஆலயம்,ஸ்ரீ சைலம் |
குருக்ஷேத்திரத்தில் தானங்கள் செய்தல் , கங்கையில் நீராடுதல் ,
நர்மதைக் கரையில் வாசம் செய்தல் காசியில் வசித்தல் ஆகிவற்றால் ஏற்படும் பலன்களைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிக
பலனை ஸ்ரீ சைல மல்லிகார்ஜுன ஜோதிர் லிங்கத்தைத் தரிசிப்பதால் பெறலாம் என்று
ஸ்காந்த மகா புராணம் கூறுகிறது. ஸ்ரீ சைல சிகரத்தைக் கண்டால் மறு பிறவி இல்லை
என்று சொல்லப்படும்.
அர்ஜுன (மருத)
விருக்ஷத்தைக் கொண்ட தலங்கள் மூன்று. அவையாவன, மல்லிகார்ஜுனம்,புடார்ஜுனம் மற்றும்
மத்யார்ஜுனம் என்பதாம். இதில் மல்லிகார்ஜுனம் என்பது ஸ்ரீ சைலத்தையும், புடார்ஜுனம்
என்பது திருநெல்வேலிக்கு அருகிலுள்ள திருப்புடை மருதூரையும் மத்யார்ஜுனம் என்பது
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவிடைமருதூரையும் குறிக்கும்.
தலத்தின் இருப்பிடம்:
ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் உள்ளது இந்தத் தலம். 384 கி.மீ. பரந்து விளங்கும் இந்த க்ஷேத்திரத்திற்குப் பிரகாசம்
ஜில்லாவிலுள்ள திரிபுராந்தகம் , கிழக்கு வாயிலாகவும், கடப்பா ஜில்லாவிலுள்ள சித்த
வடம் தெற்கு வாயிலாகவும், மெகபூப் நகர் ஜில்லாவிலுள்ள அலம்புரம் ,மேற்கு
வாயிலாகவும், உமாமகேசுவரபுரம் வடக்கு வாயிலாகவும் விளங்குகின்றன.
இதன் தென்கிழக்கில் புஷ்பகிரி க்ஷேத்திரமும்,
தென்மேற்கில் சோமசீல க்ஷேத்திரமும் , வடமேற்கில் சங்கமேசுவர க்ஷேத்திரமும், வட
கிழக்கில் எல்லேச்வர க்ஷேத்திரமும் விளங்குகின்றன.
{ விஜயவாடாவிலிருந்து ஸ்ரீ சைலம் வரும் வழியில் சுமார் 80 கி.மீ. தொலைவில் குமார கிரியில் திரிபுராந்தகேச்வரர் கோயில் உள்ளது.
முற்காலத்தில் ஸ்ரீ சைலத்திற்குக் கால்நடையாகச் சென்ற பக்தர்கள் முதலில் இங்கு
தரிசித்து விட்டுச் செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. முருகப்பெருமான் தாரகாசுரனை
வதம் செய்த இடமாதலால் குமார கிரி எனப்பட்டது. திரிபுராதிகளை வென்ற பரமேசுவரன்,
திரிபுரசுந்தரியோடு இங்கு கோயில் கொண்டுள்ளார். ஸ்ரீ சைல காண்டத்தில் இத்தலத்தின்
பெருமை பேசப்பட்டுள்ளது. இங்கு வடபுறம் உள்ள குன்றில் தாரகாசுரன் பூஜித்த
சிவலிங்கம், தாமிர தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேற்புறக் குன்றில் விஷ்ணு பூஜித்த
சிவலிங்கம், ஜானவி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இங்கிருந்து காசிக்கும்,ஸ்ரீ
சைலத்திற்கும் சுரங்க வழி இருப்பதாகச் சொல்வர்.
ஸ்ரீ சைலத்தின்
தென்வாயிலாகக் கூறப்படும் சித்தவடம் சுமார் 500 கி.மீ. பரப்பளவு
உடையது. அகஸ்த்ய,அத்ரி,ப்ருகு,வசிஷ்டாதி முனிவர்களும், சித்தர்களும் வாழ்ந்த இடம்
இது ஸ்காந்தத்தில் ஸ்ரீ பர்வத காண்டத்தில் இங்கு அனேக வனங்களும், சிகரங்களும்,
நதிகளும்,தீர்த்தங்களும், சிவ லிங்க மூர்த்திகளும் இருப்பது பற்றி விவரிக்கப்படுகிறது.
இங்கு வாசம் செய்து,பினாகினி நதியில் நீராடி சித்தேசுவரரைத் தரிசித்தால் ஜீவன்
முக்தி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. சித்தேசுவரர், பால சித்தேசுவரர், கண்டா
சித்தேசுவரர், கன்யா சித்தேசுவரர், இஷ்ட சித்தேசுவரர், வியாம சித்தேசுவரர், பஸ்ம
சித்தேசுவரர், பிக்ஷா சித்தேசுவரர், பில சித்தேசுவரர், புரா சித்தேசுவரர், ஜல
சித்தேசுவரர், ஆகிய சித்தி தர வல்ல லிங்கங்களை இங்குக் காணலாம். காசிக்குச் சமமான இங்கு வாசம் செய்வதாலும்,
உயிர்நீப்பதாலும் லிங்க ஸ்வரூபத்தை அடையலாம் என்று ஸ்காந்தம் விவரிக்கிறது. வட
பெண்ணை நதிக்கரையில் உள்ள சித்தவடத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி பிரபலமானது.
கர்நூலிலிருந்து
ஹைதராபாத் செல்லும் வழியிலுள்ள அலம்புரம் ரயிலடிக்கு 9 கி.மீ. தொலைவில் யோகாம்பிகா சமேத பால ப்ரம்மேசுவரர் ஆலயம் உள்ளது. நவ
பிரம்மாக்களின் சன்னதியோடு கூடிய இக் கோயிலில் யோகாம்பிகா தேவி சக்தி பீட
நாயகியாகக் காக்ஷி அளிக்கிறாள். பயங்கர வடிவுடன் காட்சி அளிக்கும் இத்தேவியைப்
பக்தர்கள் நேராகத் தரிசனம் செய்யாமல் பக்க வாட்டில் இருந்தே தரிசிக்கிறார்கள். தக்ஷிண
காசியாகச் சொல்லப்படும் இத்தலத்தில் ப்ரம்மேசுவரரே காசி விச்வநாதர்.; துங்க
பத்திரையே கங்கை. காசியைப் போலவே இங்கும்
கணபதி, கால பைரவர் சன்னதிகளும் 64 படித்துறைகளும்
உள்ளன.
ஸ்ரீ சைலத்தின் வடக்கு வாயிலாகத் திகழும் உமாமகேசுவரபுரம், ஹைதராபாத்
செல்லும் வழியில் மன்னனூர் அல்லது ரங்காபுரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.மலை மீதும் அடிவாரத்திலும் இரு சிவாலயங்கள்
உள்ளன. இங்குள்ள ருத்ர தாரகையில் நீராடி, சுவாமி தரிசனம் செய்பவர்களைப் பத்து
தலைமுறையினர் வணங்குவார்கள். இங்கு செய்யும் தானங்களின் பலன் அளவிட முடியாதது.
அந்திம காலத்தை இங்குக் கழிப்பவர்கள், ஈசுவரனோடு இரண்டறக் கலப்பர். குபேரனால்
காக்கப்படும் இந்த ஸ்தலத்தை வழிபடுவதற்கு, ரிஷிகளும் சகல தேவதைகளும் மகா
சிவராத்திரியன்று வருகிறார்கள் என்று புராணம் கூறும். இங்குள்ள மாமரத்தின்
பழத்திலுள்ள வண்டினை நீக்கிவிட்டுப் பாலுடன் கலந்து 21 நாட்கள் உண்டு வந்தால் தேகம் வஜ்ரம் போல் ஆகும் என்றும் இங்கிருந்து
காத தூரத்திலுள்ள பத்மாவதி குகையிலுள்ள மிருதங்கத்தை வாசித்தால் அம்பிகை தோன்றி,
அமிர்தம் வழங்கி தேவ பதவியை அளிப்பாள் என்று ரத்னாகரம் என்ற நூல் கூறுகிறது.
ஸ்ரீ சைலத்தின்
தென்கிழக்கு வாசலான சோம சீலம் , நெல்லூர்-கடப்பா வழியில் வடபெண்ணை நதிக் கரையில்
உள்ளது . ஸ்கந்தன் என்ற ரிஷி தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை சோம தீர்த்தக் கரையில்
வைத்து விட்டு நீராடச் சென்றார். இதற்குள் சிவலிங்கமானது அவ்விடத்திலேயே பிரதிஷ்டை
ஆகி விட்டது. அந்த ரிஷியின் பெயரால் சுவாமி ஸ்கந்த ஸோமேசுவரர் எனப்படுகிறார்.
கோயிலின் முன்பு ஓர் ஆலமரம் உள்ளது.
பிரசூனாசலம் எனப்படும்
புஷ்பகிரி ஸ்ரீ சைலத்தின் தென்மேற்கு வாயிலாகக் கருதப்படுகிறது. இது கடப்பா
ஜில்லாவில் பெண்ணை நதிக் கரையில் உள்ளது. ஒருசமயம் கருடன் இந்திரலோகத்திலிருந்து
அமிர்த கலசத்தை எடுத்து வரும்போது அதிலிருந்து ஒரு துளி புஷ்பகிரியில் உள்ள
தடாகத்தில் விழவே, அங்கிருந்த மக்கள் அதை அருந்தி, பிறப்பு இறப்பு இன்றி வாழ்ந்தனர்.
கடைசியில் ஹனுமான் ஒரு பாறையைக் கொண்டு அதனை மூடினான். அம்மலையோ பூவைப்போல அத்
தடாகத்தில் மிதந்தது. மும்மூர்த்திகள் அதனை நிலை பெறச் செய்தனர். இங்கு
ஆதிகேசுவரர், சந்தான மல்லேசுவரர், லக்ஷ்மி, ஹனுமான் சன்னதிகள் உள்ளன.
கர்னூல் ஜில்லா நந்தி
கொட்கூருக்கு 20 கி.மீ. தூரத்திலுள்ள
சங்கமேசுவரம், ஸ்ரீ சைலத்தின் உப த்வாரமாக/
வட மேற்கு வாயிலாக ஸ்ரீ சைல காண்டத்தில்
சொல்லப்பட்டுள்ளது. கிருஷ்ணா, வேணி, துங்கா, பத்ரா, பீமரதி, மால, பவநாசனி ஆகிய ஏழு நதிகளும் இங்கு
சங்கமிக்கின்றன. கிரகண காலத்தில் ஏழு கடல்களும், சகல தீர்த்தங்களும் இங்கு
சங்கமிக்கின்றன. இதுபோன்ற புண்ணிய காலங்களில் இந்த நிவர்த்திசங்கமத்தில் நீராடினால் யாக பலன் கிட்டும்.
கல்மாஷபாதன்,விசுவாமித்திரர்,
சாண்டில்யர், கபிலர் ஆகிய ரிஷிகளும் இங்கு வந்து தவம் செய்துள்ளனர்.
வடக்கு வாயிலான
ஏலேசுவரம், பல படை எடுப்புக்களுக்கு ஆளாகித் தற்போது நாகார்ஜுனசாகர் அணையில்
மூழ்கியுள்ளது. அதனைத தற்காலத்தில் புனர்
நிர்மாணம் செய்துள்ளனர்.}
காலப்போக்கில் அழிந்தவை போக , ஐந்து மடங்கள் ஸ்ரீசைல ஆலயத்திற்குத் தென்மேற்கில் சுமார் 2 கி.மீ. தொலைவில் சிதிலமடைந்து காணப்படுகின்றன. அவையாவன: மிகப் பழமையான கண்டா மடம். இங்கு கண்டா சித்தேசுவரர் சன்னதியும், வற்றாத கண்டா கர்ண தீர்த்தமும் உள்ளன. அருகில் பீமசங்கரர் மடம், வீர பத்திரர் ஆலயம் ஆகியன உள்ளன. மேலும் விபூதி மடம் , ருத்ராக்ஷ மடம் ,சாரங்கேசுவர முனிவர் வாழ்ந்த சாரங்க தாரா மடம் ஆகியவை உள்ளன.