Thursday, May 3, 2012

காலடி தரிசனம்



நமஸ்தே சாரதே தேவி காலடிபுர வாஸினி  
தக்ஷிணாபிமுகே தேவி சுத்த ஞான ப்ரதாயினி 

மால் அறியா நான்முகனும் காணாத மகேச்வரன், சனாதன தர்மத்தை நிலைநிறுத்த ஆதி சங்கரரைத்தோற்றுவித்த தலம் காலடி என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய விஷயம். ஆனால் அந்த ஊருக்கு அப்பெயர் வந்த விவரம் சுவாரஸ்யமானது. ஒரு காலத்தில் ஊருக்குச் சற்றுத் தள்ளி ஓடிய அந்த ஆற்றுக்கு நடந்தே சென்று , தினமும் ஸ்நானம் செய்யும் வழக்கத்தைக் கொண்டவர் , சங்கரரின் அன்னையான ஆர்யாம்பாள். ஒரு நாள் அப்படி ஆற்றங்கரைக்குப் போகும்போது, களைப்பு மேலிடவே, மூர்ச்சை ஆனார். இதைக் கண்ட ஆதி சங்கரர் ,தமது குல தெய்வமான கிருஷ்ணனை வேண்ட, அந்த ஆறு, திசை மாறி, சங்கரர் காலடி பட்ட இடத்தைப் பின்பற்றி, அவரது வீட்டின் பின்புறமாக ஓடத் தொடங்கியது. அன்று தொட்டு இன்று வரை அந்த நதி சங்கர ஜன்மபூமியை ஒட்டியே ஓடுகிறது. அதன் காரணமாகவே ஊருக்குக் காலடி என் று பெயர் வந்ததாகக் கூறுவார்கள்.

ஒரு நாள் தாயாருடன் ஆற்றுக்குச் சென்ற சிறுவன் சங்கரனின் கால்களை ஒரு முதலை கவ்வியவுடன் ஆர்யாம்பாள் பதறிப்போய் கூக்குரல் இட்டாள். தான் சன்யாசம் மேற்கொள்ள சம்மதித்தால் முதலையிலிருந்து தப்பலாம் என்று சங்கரர் கூறினார். எப்படியாவது தன் குழந்தை முதலையிடமிருந்து தப்பித்தால் போதும் என்று எண்ணிய அன்னை அதற்கு சம்மதித்ததும் முதலை சங்கரரின் காலை விட்டது. சங்கரர் எண்ணியது போலவே சந்நியாச்ரமத்தை மேற்கொள்ள தகுந்த குருநாதரை நோக்கிப் புறப்பட்டார். அன்னைக்கு அந்திம காலம் வரும்போது காலடிக்கு வந்துவிடுவதாகவும் உறுதி மேற்கொண்டார். ஆர்யாம்பாளுக்கு கடைசி காலம் வந்துவிட்டதை உணர்ந்த ஆச்சார்யார் ,நேராகக் காலடி வந்து சேர்ந்து, அன்னையின் ஆன்மா வைகுண்டம் அடையுமாறு பகவானிடம் பிரார்த்திக்க அப்படியே நடந்தது. அந்திமக்கிரியைகளைத் தானே நடத்தியதாகவும் வரலாறு.

ஆர்யாம்பாள் உயிர் நீத்த இடத்தில் தீபஸ்தம்பம் இருந்ததைக் கொண்டு, அதுவே சங்கரரின் ஜன்மபூமி என்று ஊர்ஜிதம் செய்தார்கள்,அப்போது சிருங்கேரி பீடாதிபதியாக இருந்த ஜகத்குரு ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ  நருசிம்ஹ பாரதி ஸ்வாமிகள். அப்போது திருவாங்கூர் மன்னராக இருந்த மூலம் திருநாள் அவர்கள் , அங்கு சிருங்கேரி மடம் அமைக்க நிலத்தை நன்கொடையாக அளித்தார்கள். ஆசார்யாரும் அந்த இடத்தில் சங்கரருக்கும் சாரதா தேவிக்கும் சன்னதிகள் அமைத்தார்கள். பின்னால் வந்த ஆசார்யர்களும் மடத்தை அபிவிருத்தி செய்தார்கள்.

பூர்ணா நதிக் கரையில் அமைந்துள்ள சங்கர ஜன்ம பூமி தெய்வ மணம் மாறாது இன்றும் பொலிவுடன் விளங்குகிறது. நுழைவு வாயிலில் ஆச்சார்யர்களின் திரு உருவங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஏழைப் பெண்மணிக்கு இரங்கி,சங்கரர் ,மகாலக்ஷ்மியிடம் கனகதாரா ஸ்தோத்திரம் செய்து தங்க நெல்லிக் கனிகளை வரவழைத்துத் தந்த காட்சி ஒரு புறம் அமைக்கப்பட்டு உள்ளது. பூர்ணா நதிக்கரையில் சங்கரரின் காலை முதலை பற்றும்  காட்சி மறு புறம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த பிராகாரம் முழுவதும் பூத்துக்குலுங்கும் செடிகள். அதற்கு அடுத்த வாயிலைத் தாண்டினால் , மிகப்பெரிய முற்றமும், அதில் சக்தி கணபதியின் சன்னதியும் உள்ளது.

சற்று உயர்ந்த சன்னதியில் சாரதாம்பாள் தெற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறாள். எதிரில் பூர்ணா நதியின் ரம்யமான காட்சி. தன்னை வழிபடுபவர்களுக்கு சுத்த ஞானத்தை அளிக்கும் பரமேச்வரி இவள். இந்த அம்பிகைக்குச் சூட்டப்படும் மாலைகளின் அழகும், பூஜைகளும் ,சன்னதியின் அழகும் காண்பவர்கள், மீண்டும் மீண்டும் இத்தரிசனம் கிடைக்க ஏங்குவதில் வியப்பு ஏதும் இல்லை. சாரதையின் வலப்புறம் சங்கர பகவத் பாதரின் அழகிய சன்னதி அமைந்துள்ளது. குருநாதரும் தெற்கு நோக்கியவாறு தரிசனம் தருகிறார். எவ்வளவு பெரிய மகானின் தரிசனம்! உண்மையிலேயே நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இந்த சன்னதி தரிசனத்தால் ஞானம் கண்டிப்பாகக் கிட்டும். அருகிலேயே அன்னை ஆர்யாம்பாளின் பிருந்தாவனம். தீபஸ்தம்பமும் அருகிலேயே இருக்கிறது.

சங்கர ஜெயந்தி அன்று ஊரே திருவிழாக்கோலம் பூண்டு தோற்றம் அளிக்கிறது. பகவத் பாதரின் சன்னதியில் கலசங்கள் அமைக்கப்பட்டு வேத பாடசாலைக் குழந்தைகள் மகன்யாஸ ருத்ர ஜபம் செய்கிறார்கள் . ஆசார்யருக்கு அப்போது அபிஷேகம் செய்யப்படுகிறது.

தினந்தோறும் வித்வான்களின் சதஸ் நடைபெறுகிறது. மணிக்கணக்கில் சம்ஸ்க்ருதத்திலேயே உரையாடல் நடக்கிறது. அதே சமயம் அவர்களின் ஆழ்ந்த மொழியறிவும் ,ஆராய்ச்சியும் வெளிப் படுகிறது. நிறைவாக நடைபெறும் தீபாராதனையையும் , வேத ஒலியையும் நேரில் காண்பவர்கள் பாக்கியசாலிகள். வைசாக பஞ்சமியன்று மாலையில் ஆதி சங்கரரின் உற்சவ மூர்த்தியை தேரில் எழுந்தருளச் செய்கிறார்கள்.வேத கோஷத்தோடு, பாடசாலைக் குழந்தைகள் அத்தேரை இழுத்து வருவது அற்புதமான காட்சி.

அருகிலுள்ள க்ருஷ்ணன் கோவிலிலும் பத்து நாட்கள் விழாக் கோலம் தான். மூலவரும் தினமும் ஒரு அவதாரக் கோலத்துடன் ,பத்து நாட்களில் தசாவதாரக்  காட்சி அளிக்கிறார். வெளிப் பிராகாரத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டு அதில் மஹா லக்ஷ்மி யந்திரத்திற்கு முப்பத்திரண்டு நம்பூதிரிகள் கனகதாரா ஸ்தோத்திரத்தால் அர்ச்சிக்கிறார்கள். இந்த ஸ்தோத்திரம் பத்தாயிரம் முறை சொல்லப்படுகிறது.

காலடிக்குள் நாம் நுழைந்ததுமே நம்மைக் கவர்வது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு மகாபெரியவர்களால் அமைக்கப்பட்ட ஆதி சங்கர கீர்த்தி ஸ்தம்பம். வானளாவி நிற்கும் இந்த ஸ்தம்பம் சங்கரரின் புகழும் என்றென்றும் வானளாவி நிற்கும் என்று சொல்வதுபோல் இருக்கிறது. நுழைந்தவுடன் நம்மைக் கவர்வது பாதுகைகளுக்கு நடைபெறும் பூஜைகள். ஸ்தம்பத்தின் உச்சிக்குச் செல்லப் படிக்கட்டுக்கள் உள்ளன. வழியில் சுவற்றிலும் சன்னதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள சுதை வேலைப் பாடுகள், சங்கரர் வரலாற்றையும், ஷன்மத ஸ்தாபனம் பற்றியும் விளக்குவதாக அருமையாக அமைக்கப்பட்டுள்ளன. தனி சன்னதியில் நான்கு சீடர்களுடன் ஸ்ரீ சங்கரர் காட்சி அளிக்கிறார். அவருக்குப் பின்புறம் ஆதிகுருவான ஸ்ரீ பரமேச்வரன் சனகாதி ரிஷிகளுடன் ஆலமர நீழலில் வீற்றிருப்பதை சுதை வடிவில் அமைத்திருக்கிறார்கள்.மேலேயிருந்து வெளியில் பார்த்தால் இயற்கை அன்னையின் அற்புதக் காட்சி.எங்கு நோக்கினாலும் பசுமையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

கிருஷ்ணன் கோவிலுக்குப் பின்புறம் ராமகிருஷ்ணா மடம் விசாலமாக அமைந்துள்ளது. பிரம்மாண்டமான நாகலிங்க மரம் நம் நாசிகளை அதன் நறுமணத்தால் நிரப்புகிறது. எத்தனையோ வகையான செடிகளையும் மரங்களையும் அழகாக அமைத்திருக்கிறார்கள். புத்தக நிலையமும் இருக்கிறது. சங்கர ஜெயந்தியை தரிசித்துவிட்டு ஊருக்கு எதை எடுத்துப் போவது? சங்கரர் நமக்குத் தந்த ஏராளமான பொக்கிஷங்களில் ஏதாவது ஒன்றையேனும் எடுத்துச் செல்வதே குருநாதரின் காலடிக்கு நாம் செய்யும் உண்மையான பூஜை அல்லவா? அந்த வகையில் நாம் எடுத்து வந்தது அம்மஹானின் அற்புதமான நூலாகிய "விவேக சூடாமணி"யை.

No comments:

Post a Comment