Saturday, October 29, 2016

ஸ்கந்த மஹிமை

ஸ்கந்தனுடைய  மகிமையைக் கேட்பதாலும் படிப்பதாலும் கலியினால் ஏற்படும் பாவங்கள் விலகுகின்றன. " ஸ்கந்தஸ்ய கீர்த்தி மதுலாம் கலிகல்மஷ நாசினீம் "  என்கிறது ஸ்ரீ ஸ்காந்த மஹா புராணம். முதல் கல்பத்தில் வந்த துவாபர யுகத்தில் யாவருக்கும் வேதமோ, அதன் பொருளோ, பிற வித்தைகளோ முறைப்படி தெரியவில்லை. உலகிற்குக் காரணமாக விளங்குவது எது என்பது புரியாமல் இருந்தபோது,  பிரம விஷ்ணுக்கள் கயிலாய மலையை அடைந்து சிவபெருமானிடம் இந்த சந்தேகத்தைத் தீர்த்து வைக்குமாறு வேண்டினர்.

தேவர்களைப் பார்த்து சிவபிரான் கூறினார்: " விஷ்ணுவும் பிரமனும் பூமியில் வியாசராகவும் மனுவாகவும் தோன்றி வேத சாஸ்திர சாரமாகப் புராணங்களையும் ,ரிஷிகளுடன் சேர்ந்து சூத்திரங்களையும் உலகம் உய்யுமாறு அருளுவார்களாக." என்றார்.அதன் படி விஷ்ணுவானவர் வியாசராகத் தோன்றி, பதினெட்டுப் புராணங்களை அருளினார். அவற்றுள் பத்துப் புராணங்கள் சிவபெருமானது மகிமையைப் பேசும் ஸாத்விகங்கள் என்பர் பெரியோர். சைவ புராணங்கள் பத்தில் ஸ்காந்த புராணம் சுகத்தை அளிப்பதாகச் சிறந்து விளங்குகிறது. " ஸ்காந்தம் ஸுகதம் உத்தமம் ஸர்வ வேதாந்த ஸாரஸ்வம் " என்பது இப்புராண வாக்கியம். இதில் ஒரு லக்ஷம் ஸ்லோகங்கள் உள்ளன. அதன் ஐம்பது கண்டங்களுள் ஐந்தாவதான சங்கர சம்ஹிதையில் 30000 ஸ்லோகங்கள் உள்ளன. அதிலுள்ள சிவரஹஸ்ய கண்டத்தில் ஸ்ரீ ஸ்கந்த அவதாரம் விவரிக்கப் பட்டுள்ளது. இச்சரிதத்தை நம்பி வாழ்பவர்கள், நல்ல மனைவி, குழந்தை பாக்கியம், பசுக்கள் முதலிய பேறுகள் அனைத்தும் பெறுவர் என்கிறது இந்தப்புராணம். 

 சூர பதுமனின் துன்புறுத்தல்களுக்காளான தேவர்களின் பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய சிவபெருமானின் நெற்றிக் கண்களிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகள் ஆறு குமாரர்களாக ஆகி அக்னியும் வாயுவும் அதனைச் சுமந்து கொண்டு வந்து கங்கையில் நாணற்காட்டிலுள்ள தாமரை மலரில் விடவும், அப்பொறிகள் ஆறு குழந்தைகள் ஆயின. தேவர்களின் மகிழ்ச்சியைக் கூறவும் வேண்டுமோ? "நாம் கேட்டதோ ஒரு சிவ குமாரன் தானே. நமக்குச்  சிவனருள் தந்திருப்பதோ ஆறு குமார்கள் அல்லவா " என்று குதூகலித்தார்கள். இங்கே, வியாசபகவான் , " ஸ்ரீ பரமேசுவரன் மகிழ்ந்தால் உலகத்தில் எதுதான் கிட்டாது?"  என்கிறார். 

முருகனின் திரு அவதாரம் எதற்காக நடை பெற்றது என்பதைக் கச்சியப்பர் தனது கந்தபுராணத்தில் அருமையாக எடுத்துரைக்கிறார்:

உருவமும் அருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் 

பிரமமாய் நின்ற சோதிப்  பிழம்பதோர் மேனியாகக் 

கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே

ஒரு திரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன்  உலகம் உய்ய. 

உலகம் உய்ய வேண்டும் என்ற எல்லையற்ற கருணையினால் முருகப்பெருமான் திருவவதாரம் செய்தான் என்றார் கச்சியப்பர். அந்த பரப்பிரமத்தை இப்படிதான் வருணிக்க முடியும். உருவமும் அருவமும் கடந்த கந்தக்கடவுள்  ஆறு முகங்களும் பன்னிரு கரங்களும் கொண்டவனாக உதித்தான். எதிலிருந்து உதித்தான் என்றால், ஜோதிப்பிழம்பிலிருந்துதான். ஆகவே சிவ ஜோதியின் மறு வடிவமே கார்த்திகேயன் என்பது பெறப்படுகிறது. " மூவிரு வடிவும் " அன்னை உமாதேவி அணைத்து எடுத்தவுடன், " ஒன்றாகிக் கந்தன் என்று பேர் பெற்றனன்"  என்று கந்த புராணம் கூறும். இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவில் குமாரக் கடவள் வீற்றிருக்கும் சோமாஸ்கந்தக் கோலம், பகலுக்கும் இரவுக்கும் நடுவில் மாலை அமைந்திருப்பது போலிருந்தது என்கிறார் கச்சியப்பர். 

சிவபெருமானின் திரு வாக்கினாலேயே கந்தனின் பெருமையைக்  கந்த புராணம் மூலம் அறிவிக்கிறார்  கச்சியப்பர்:இருவருக்கும் பேதம் கிடையாது என்பதை உணர்த்தும் அருமையான பாடல் இது:

ஆதலின் நமது சத்தி அறுமுகன் ; அவனும் யாமும் 

பேதகம் அன்றால் ; நம்போல் பிரிவிலன் ; யாண்டும் நின்றான்;

ஏதமில் குழவி போல்வான்; யாவையும் உணர்ந்தான்; சீரும்

போதமும் அழிவில் வீடும் போற்றினர்க்கு அருள வல்லான்.

இந்திரனுக்கும் மற்ற தேவர்களுக்கும் முருகன் விசுவரூபம்  காட்டியபோது அவ்வுருவில் எண் திசைகளும் ஈரேழு உலகங்களும், எட்டு மலைகளும், ஏழு கடல்களும், திருமாலும் சிவபெருமானும் அனைத்து உயிர்களும் தெரிந்தன. இதனைத் தேவர்கள் வாக்காக,

அம்புவி முதலாம் பல் பேரண்டமும் அங்கங்கு உள்ள 

உம்பரும் உயிர்கள் யாவும் உயிரலாப் பொருளும் மாலும்

செம் பதுமத்தினோனும் சிவனொடும் செறிதல் கண்டோம்

எம்பெருமானின் மெய்யோ அகிலமும் இருப்பதம்மா! 

என்பதன் மூலம் அறியலாம். 

பானுகோபனை வென்று திரும்பிய வீரவாகு முருகப்பெருமானிடம் வரம் வேண்டும்போது,  குபேர   வாழ்க்கையையும், இந்திர பதத்தையும், மாலயன் பதத்தையும் வேண்டேன். நின் பாத மலர்களில் அன்பு பூணும் ஒன்றையே வரமாகக் கோருகின்றேன் என்றார். 

போர்க்களத்தில் சூர பதுமனுக்கு முருகப்பெருமான் விசுவரூபம் காட்டியதும், சூரன் தன்னை அறியாமலேயே, நல்லறிவு பெற்றவனாய் , "  இக்குமரனைப் பாலன் என்று அலட்சியமாகக் கருதி விட்டேன். மாலயனுக்கும் ஏனைய தேவர்களுக்கும் மூல காரணமாய் இருக்கும் மூர்த்தி இவன் அல்லவோ? இவ்வடிவின் அழகையும், ஒளியையும் எவ்விதம் சொல்வேன்! இந்த அற்புத வடிவு எங்கும் காண இயலாத ஒன்று அல்லவா? இந்த அற்புதக் கோலத்தைப்  பல தடவைகள் பார்த்தாலும் தெவிட்டவில்லை  யாருக்கும் புலப்படாத இவ் வடிவை தேவர்களும் காண மாட்டார். அழியா வரம் பெற்றதால் மட்டுமே நேரில் நான் பார்க்க முடிந்தது. 

ஆயிரம் கோடி மன்மதர்களின் உருவெல்லாம் ஒருசேரத் திரண்டு ஒன்றாக வந்தாலும் இக்குமரனின் திருவடிகளது அழகிற்கு நிகராகாது என்றால், இம்முழு வடிவிற்கு எதனை உவமையாகக் கூற முடியும்? எனது கண்களில் நீர் பெருகுகின்றது. எனது கால்கள் இவனை வலம் வர வேண்டும். கைகள் இவனைத் தொழ வேண்டும். தலை தாழ்ந்து வணங்க வேண்டும். நாவினால் துதித்துக் கசிந்துருகி விழி நீர் பெருக்க வேண்டும். என் எலும்புகள் மெழுகு போல் உருகுகின்றனவே! எனது தவப்பயனாய் இவ்வடிவம் கண்டும் , மானம் ஒன்றால் தடுக்கப்பட்டு விட்டேனே" என்று ஒரு கணம் உருகி செயலற்று நின்றான். 

பகைவனுக்கும் அருளிய பரம கருணையாளனான பன்னிருகை வேலனின் நாமம் நம்மைக் கரையேற்ற வல்லது. " படிக்கின்றிலை பழனித் திருநாமம் படிப்பவர் தாள் முடிக்கின்றிலை; முருகா என்கிலை " என்பார் அருணகிரி நாதர். " மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்" என்பது கந்தர் அலங்காரம். ஆலகால விஷத்தைக்   குடித்து அனைத்து உயிர்களையும் அழியாமல் காத்த  நீலகண்டனின் மைந்தன் நமக்கு என்றும் துணையாய் இருப்பான். இதனை அருணகிரியார், கந்தர் அலங்காரத்தில்,

" ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன் 

வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே. " 

என்று அருளிச் செய்துள்ளார். மயிலேறிய மாணிக்கமாம் வள்ளி மணாளனின் திருவருள் என்றென்றும் தழைப்பதாக. 

6 comments:

  1. A truly inspired presentation,dear Sekar! Only true devotion can express itself in such words!

    ReplyDelete
  2. இங்கு எனது இல்லம் சமீபத்தில் உள்ள மடிப்பாக்கம் சத்சங்கத்தில் ஸ்காந்தபுராணம் இரண்டு நாட் களாக கேட்டு வரும் வேளையில் இந்த பதிவு நல்ல ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது.நன்றி.

    ReplyDelete
  3. What a movng article on the highly beloved Sivakumaran! Dear Sekhar, I was particularly moved when reading your account of Soorapadman getting fascinated by the handsome appearance of the darling of all Tamils in the world!

    ReplyDelete
  4. அன்பரே!சிவபுராணங்கள் பத்தல்ல ஆறென்றும்
    அவை தாமஸங்களே என்றும் அவை தள்ளத்தக்கவையென்றும் கந்தபுராணத்தில் விஷ்ணு சம்ஹிதை என ஒன்று இருப்பதால் அந்த விஷ்ணு சம்ஹிதை மட்டும் கொள்ளத்தக்கதென்றும் ருத்ரமூர்த்தியாகிய சிவபிரான் தாமஸி என்றும் வைஷ்ணவ சுதர்சனம் என்னும் நூல் பிதற்றுகிறது.

    அந்நூல் சிவபுராணங்கள் ஆறுதான் என்று
    பத்மபுராண ஸ்லோகத்தை ஆதாரமாகவும் ருத்ரமூர்த்தி தாமஸியென்று 18 புராணங்களிலும் உள்ள ஸ்லோகங்களை வைத்து ஆதாரமாகக் காட்டுகிறது.

    அதனால் குழப்பமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இது சிவ துவேஷம் அன்றி வேறில்லை. விடை சொல்லப் போனால் விஷ்ணு துவேஷி என்பார்கள்.சர்ச்சையில் நேரத்தை வீண் ஆக்காமல் இருப்பது நல்லது.

      Delete
    2. அன்பரே அது சரி இருக்கட்டும்.அடியேன் தெளிவை அடைவதற்காகவாவது தாங்கள் விடை கூற வேண்டும்.

      Delete