Saturday, September 5, 2015

ஜீவன்முக்தி வழங்கும் திருப்புனவாசல்

காசிக்கு சமமான சிவஸ்தலங்கள் பலவற்றில் பாண்டிய நாட்டிலுள்ள  திருப்புன வாயிலும் ஒன்று. தற்போது திருப்புனவாசல் என்று மக்களால் அழைக்கப்படும் இத்தலத்தை  விருத்த காசி  என்று  ஸ்தலபுராணம் குறிப்பிடுகிறது. ஊரும் விருத்தபுரி என்றும் பழம்பதி என்றும்  அழைக்கப்பட்டது.

" பாண்டி நாடே பழம்பதி ஆகவும் "  என்று மாணிக்கவாசகரால் போற்றப்படும் பாண்டிய நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் பதினான்கில் இதுவும் ஒன்று. இப்பழம்பதியை வழிபட்டால் ஏனைய பதிமூன்று தலங்களையும் ஒருசேர வழிபட்ட பலன் கிடைக்கும் என்பர்.

காசியில் உயிர் நீப்பவர்களுக்கு முக்தி கிடைக்கும். ஆனால் தன்னிடம் வந்து வணங்குவோரது பாவங்களைத் தீர்த்து ,ஜீவன் முக்தியையே வழங்குவது திருப்புனவாயில் என்பதை, விருத்தபுரி மஹாத்மியம் கூறுகிறது. சிவமஹாபுராணத்தில் ஏகாதச ருத்ர வைபவ காண்டத்தில் விருத்தபுரி மகாத்மியம் கூறப்பட்டுள்ளது. இத்தலத்திற்கு இந்திரபுரம்,சதானந்தபுரம், வஜ்ர துருமவனம், வனமுகம்,கைவல்யபுரம்,விருத்தகாசி, என்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. தசதீர்த்தங்களை உடைய புண்ணியத்தலம் இது. அப்பத்து புண்ணிய தீர்த்தங்களாவன: இந்திர தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், லக்ஷ்மி தீர்த்தம், சூரிய புஷ்கரணி,சந்திர புஷ்கரணி, சக்ர தீர்த்தம், சர்பநதி, வருண தீர்த்தம்,கல்யாண தீர்த்தம் என்பன.   யுகத்திற்கு ஒன்றாக நான்குயுகங்களில் வெவ்வேறு ஸ்தல விருக்ஷங்களைக் கொண்ட சிறப்புடையது இத்தலம். கிருத யுகத்தில் சதுரக்கள்ளியும், திரேதா யுகத்தில் குருந்த மரமும், துவாபர யுகத்தில்  மகிழ மரமும், கலியுகத்தில்  புன்னை மரமும் ஸ்தல விருக்ஷங்களாக அமைந்துள்ளன.

திருப்புனவாயிலைச் சுற்றிலும் உள்ள தலங்களுள் தென்கிழக்கில் தீர்த்தாண்டதானமும், வடமேற்கில் பறையத்தூரும், அதன் வடமேற்கில் கல்யாணபுரமும் ,மேற்கில் வெளி முக்தியும், வடக்கில் வசிஷ்டர்  பூஜித்த தலமும் உள்ளன. இவற்றிலும் விருத்தபுரீச்வரரே அருள் செய்வதாகப் புராணம் சொல்கிறது. விருத்தபுரியின் சுற்றுவட்டாரத்தில் எமதர்மனும் அவனது தூதர்களும் நுழையமாட்டார்கள் எனவும் இங்கு உயிர் விடும் அத்தனை பேருக்கும் சிவலோகம் சித்திக்கும் என்றும் தலபுராணத்தால் அறியலாம்.

வைகாசி புனர்பூசத்தில் கொடியேற்றி ஸ்வாதியன்று தேரோட்டமும், விசாகத்தில் தீர்த்தவாரியும் நடைபெற வேண்டும் என்றும் மாசி மகத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, சர்ப்ப நதியில் (பாம் பாற்றில்) தீர்த்தம் கொடுப்பதாகவும் புராண வாயிலாக அறிகிறோம்.

கஜமுகாசுரனை வெல்ல அருள் வேண்டி விநாயகப் பெருமான் இங்கு வந்து, சிவகங்கையில் நீராடிப் பழம்பதிநாதரின் அருள் பெற்றார். தங்கள் தவறை உணர்ந்த திரிபுராதிகள் இங்கு வந்து வழிபட்டு இறைய ருள் பெற்றனர்.  நாரதர் வாயிலாக இத்தலப் பெருமையை அறிந்த அங்காரகன்  இங்கு வழிபட்டு அருள் பெற்றதால் செவ்வாய்க் கிழமைகளில் வழிபடுவோரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும்படி வரம் பெற்றான். பிரமன் மீண்டும் படைப்புத்தொழிலைப் பெற்றது , சந்திரன் தக்ஷனது சாபத்திலிருந்து விமோசனம் பெற்றது , சுசீலன் என்பவனையும் அவனது மனைவியையும் எமதூதர்கள் கொண்டு செல்ல எத்தனிக்கையில் சிவ கணங்கள் அவர்களை விடுவித்து முக்தி பெற்றது அகத்தியர் திருமணக் கோலம் கண்டது ,வியாக்கிராசுரன் என்பவனை அம்பிகை ,பத்திர காளி உருவில் அழித்தது மகாலக்ஷ்மி பைரவ மூர்த்தியிடம் மகாவிஷ்ணுவைக் காத்துத் தனது மாங்கல்யத்தையும் காக்க வேண்டி வரம் பெற்றது கௌதம ரிஷியின் சாபம் தீர தேவேந்திரன் தீர்த்தம் ஏற்படுத்தி வழிபாடு செய்தது, ராமன் பூஜித்து அருள் பெற்றது ஆகிய வரலாறுகளை இப்புராணம் விரிவாக எடுத்துரைக்கிறது.
தலத்தின் இருப்பிடம்:  புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் வழியாகவும், காரைக்குடியிலிருந்து தேவகோட்டை, ஓரியூர்  வழியாகவும்,மதுரையிலிருந்து சிவகங்கை,திருவாடானை வழியாகவும், ராமநாதபுரத்திலிருந்து தொண்டி , சுந்தரபாண்டிய(S.P) பட்டணம் வழியாகவும் திருப்புனவாசலை அடையலாம்.

கோயில் அமைப்பு: கிழக்கு நோக்கிய ராஜ கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. அதன் இருபுறமும் வல்லப கணபதி சன்னதியும் தண்டபாணியின் சன்னதியும் விளங்குகின்றன. திருவாயிலைக் கடந்தவுடன் சூரிய சந்திரர்களையும், கால பைரவரையும் தரிசிக்கிறோம். பெரிய வடிவில் நந்திகேசுவரர் காட்சி தருகிறார்.  மகாமண்டபத்தைத் தாண்டியதும் பிரமாண்ட வடிவில் விருத்தபுரீச்வரர் காட்சி அளிக்கிறார். பாணத்திற்கு மூன்று முழமும் ஆவுடையாருக்கு முப்பது முழமும் உள்ள வஸ்திரம் அணிவிக்கப்படுகிறது. உள்ளத்தை நெகிழ வைக்கும் அற்புத தரிசனம். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய மகாலிங்க மூர்த்தி . இவருக்குப் பின்புறம் எப்போதும் அகஸ்திய முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். தினமும் அர்த்த ஜாம பூஜைக்குப்பிறகு, இந்திரன் வழிபடுவதாகவும் ஸ்தல புராணம் கூறும். இந்த சன்னதியின் மேல் அமைந்துள்ள விமானமும் பிரம்மாண்டமானது.

தேவகோஷ்டங்களில் நர்த்தன கணபதி, ஏழடி உயரம் உள்ள வீராசன தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன் , துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். இப்பிராகாரத்தில் மிகப் பழமையான புன்னை விருக்ஷம் உள்ளது , மகிழ விருக்ஷத்தின் கீழ் ஐந்து விநாயக வடிவங்களையும், கபிலர் பூஜித்த சதுர்முக லிங்கத்தையும், கன்னிமூலையில் இந்திரன் பிரதிஷ்டை செய்த ஆகண்டல கணபதி சன்னதியும் அறுபத்து மூன்று நாயன்மார்களையும், விஸ்வநாதர்-விசாலாக்ஷியையும், முருகனது சன்னதியையும் இரண்டு சண்டிகேச்வரர்களைக் கொண்ட சன்னதியையும் தரிசிக்கலாம். சுவாமி பிராகாரம் வலம் வருகையில் சுவாமிக்கு இடது புறத்தில் பெரிய நாயகி சன்னதியையும் அதன் எதிரில் உக்ராகாளியின் சன்னதியையும் தரிசிக்கிறோம். வரப்ப்ரசாதியான காளி தேவி உக் ர வடிவில் இருப்பதால் கண்ணாடியை மட்டுமே காணலாம்.குடைவரைக் காளி என்ற பெயரோடு அடியார்கள் வேண்டிய யாவற்றையும் வழங்கும் தேவி இவள்.

திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டு யாத்திரை செய்தபோது இங்கு வந்து வழிபட்டுப் பதிகம் பாடியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. சுந்தரரும் இத்தலத்து இறைவனைத் தரிசித்துப் பதிகம் பாடியுள்ளார். அதில் " பத்தர் தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி " என்று அருளியுள்ளதால் இதன் பழமையும் பெருமையும் நன்கு விளங்கும்.

இத்தனை பெருமைகள் வாய்ந்த இத்திருக்கோயிலுக்கு 3.9.2015 அன்று மகாகும்பாபிஷேகம் எட்டு கால யாகசாலை பூஜைகளின் நிறைவாக மிக விமரிசையாக நடை பெற்றது. ஏராளமான அன்பர்கள் தரிசித்துக் கண் பெற்ற பயன் பெற்றனர். ராமேச்வர யாத்திரை செல்லும் அன்பர்கள் இத்தலத்தையும், தீர்த்தாண்டதானத்தையும் திருவாடானையையும் ஆவுடையார் கோயிலையும்  உத்தர கோச மங்கையையும் தவறாது தரிசிக்க வேண்டும்.   

1 comment:

  1. en solla, en solla, sollarkku ariyanai, sollil vadithorkalai - Best effort taken - Recalling Eternal Lyrics - Bring before us "Kali Sambanthar, Arur Arasar, Sorrunai Vethiyar and Arumsol Manickkar -
    Poruntha kaitholuthu vilunthu vanangukiren

    ReplyDelete