கண் இல்லாதவரும் கண்ணில் குறைபாடு உள்ளவரும் படும் வேதனை கொஞ்சநஞ்சமல்ல. திருவொற்றியூரை நீங்கேன் என்று சபதம் செய்துவிட்டு, மகிழ மரத்தடியில் சங்கிலியாரை மணந்த சுந்தரர் , திருவாரூர் வசந்தோற்சவம் காண வேண்டி ஒற்றியூர் எல்லையை நீங்கியபோது இரு கண் பார்வையை இழந்தார். மீண்டும் ஒற்றியூர் பெருமானிடமே வந்து ஒரு பதிகம் பாடுகிறார். அதில், கண் இழந்தவன் ,பார்வை உள்ளவனது துணையுடன் ஒரு கோலைப் பற்றியபடி மெதுவாகப் பின்பற்றிச் செல்லும்போது, கண்ணுள்ளவன் அவனைக் கறகற என்று இழுத்துச் செல்வதுபோன்ற நிலை எனக்கு வந்துவிடாதபடி அருள்வாய் என்று பெருமானிடம் விண்ணப்பிக்கிறார். வீட்டில் உள்ள பெண்டிர்களை அழைத்தால் ," போ குருடா " என்பார்களாம். அடியேனுக்கு அந்நிலை வர விடலாமா என்று இறைவனைத் துதிக்கிறார் நம்பியாரூரர்.
இக்காலத்தும் கண் நோயால் பாதிக்கப்படுவோர் எத்தனையோ பேர் உளர். பலருக்குத் தீர்வு காண முடியாதபடி வேறு பல உடற்கோளாறுகள் தடை செய்கின்றன. அவர்கள் இப்படி எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் இறைவன் ஒருவனே நம்மைக் கை விடான் எனத் துணிந்து அவனைச் சரண் அடைகின்றனர். கண் நோயைத் தீர்த்து நலம் தரும் ஆலயங்களை நாடுகின்றனர். சிலர் வீட்டிலிருந்தபடியே, ஆதித்ய ஹ்ருதயம் , சூர்ய சதகம் ஆகிய வடமொழி சுலோகங்களையும், சம்பந்தர் அருளிய புறவார் பனங்காட்டுப் (பனையபுரம்) பதிகத்தையும், சுந்தரர் கண் பெற வேண்டி அருளிய காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் தலத்துப் பதிகங்களையும் பாராயணம் செய்வது வழக்கம்.
தான் பெற்ற குழந்தை கண் பார்வை இல்லாதது கண்ட ஒரு பெண் , தனது கண் பார்வையை எடுத்துக் கொண்டு குழந்தைக்குப் பார்வை அளிக்குமாறு இத்தலத்து இறைவனை வேண்ட, அதற்கு மனமிரங்கிய இறைவன், அக்குழந்தைக்குப் பார்வை தந்து அருளினான் என்பது தல வரலாறு. அதனால் சுவாமிக்கு நயன வரதேசுவரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து சுவாமி,அம்பாள்,சூரியன் ஆகியோருக்கு அபிஷேகம்,அர்ச்சனை செய்து நலம் பெறுவோர் பலர்.
பாண்டியர்களும்,சோழர்களும் இக்கோயிலைத் திருப்பணி செய்திருக்கிறார்கள்.
திருவெண்காட்டைப் போலவே,இங்கும் சித்திரைப் பரணியன்று அமுது படையல் உற்சவம் நடைபெறுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டுவோர் அன்றையதினம் இங்கு வந்து வழிபட்டுத் திருவருள் பெறுகிறார்கள்.
உயரத்தில் அமைந்துள்ள சன்னதியில் அம்பாள்,தேவநாயகி என்ற பெயருடன் காட்சி தருகிறாள். சுமார் ஐந்தரை ஆடி உயர சுயம்பு மூர்த்தியாகப் புகழாபரணீ ச்வரர் , சுவாமி சன்னதிக்கு நேர் பின்புறம் தனிச் சன்னதியில் காட்சி அளிக்கிறார். இவரை வழிபட்டால் நல்ல ஆற்றலும், செல்வமும்,நோய் நீக்கமும் பெறலாம் என்பது நம்பிக்கை.
திருக்குளக்கரையில் உள்ள ஆத்தி மரம் |
பலகாலமாக இக்கோயில் மேடிட்டும் இடிந்தும் முட்புதர்களுடனும் காணப்பட்டது. கல்வெட்டு ஆர்வலர்களின் முயற்சியால் மேடிட்ட பகுதிகளை அகற்றி,ஆழ்ந்து பார்க்கும்போது பாண்டியன் குலசேகரனது ஆட்சிக் காலக் கல்வெட்டு ஒன்று முப்பத்திரண்டு அடி நீளமுள்ள வரிகளுடன் இருப்பது காணப்பட்டுப் படி எடுக்கப்பட்டது. ஒவ்வொரு வரியும் 24 அடி நீளத்துடன் பத்து வரிகளைக் கொண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்துக் ( கி.பி. 1185 ) கல்வெட்டும் படி எடுக்கப்பட்டது. 2004 ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டுத் திருப்பணிகள் செய்விக்கப்பெற்ற இவ்வாலயம் , வரும் ஏப்ரல் மாதம் 3 ம் தேதி அன்று குட முழுக்கு விழாக் காண இருக்கிறது. மேலும் தகவல்களைத் திரு கண்ணன் அவர்களிடமிருந்து ( 9443135129) பெற்று இவ்வைபவத்தில் பங்கேற்கலாம்.
உலகிற்கே கண்ணாக இருந்து காப்பவனைக் காண வேண்டாமா? கண்டு தொழுது கண் கொடுத்த கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? அவனைக் காணக் கண் அடியேன் பெற்றவாறு என்று எண்ணி எண்ணி நெக்குருக வேண்டாமா? அதோடு நின்று விடாமல், நாம் பெற்ற இந்த அற்புத தரிசனம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்ட வேண்டும் அல்லவா? அதற்காக நயன வரதீச்வரனின் கோயிலை நாடுவோம். அனைவரும் நலம் பெற வேண்டுவோம்.
Very very nice. Packed with lots of information.
ReplyDeleteThanks Sivane !
Vidyasagar
Very very nice. Packed with lots of information.
ReplyDeleteThanks Sivane !
Vidyasagar