Tuesday, July 24, 2012

நித்தலும் நியமம் செய்வோம்



வேதாரம்பம்செய்வதற்குஉயிர்நாடியாகஇருப்பதுஉபநயனம். அவ்வாறு    இருபிறப்பாளர் ஆனபிறகு பிரதிவருஷமும் செய்யப்படும் உபாகர்மா முக்கியத்துவம் வாய்ந்தது.  தேவதர்ப்பணம், ரிஷிதர்ப்பணம்ஆகியவற்றை விஸ்தாரமாக அப்பொழுது செய்யப்படுகிறது. அதிலும்ரிஷிகளுக்கும், பித்ருக்களுக்கும், நதிகளுக்கும், இதிகாச புராணங்களுக்கும் விசேஷபூஜை  செய்யப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ செய்த பாபங்களுக்குப் பிராயச்சித்தம்கோரப்படுகிறது. பிராயச்சித்தம்செய்துவிட்டபடியால், தொடர்ந்து இனியும் பல்வேறு   பாபங்கள் செய்யலாம் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. இனிமேலாவது அவற்றைச் செய்யாமலிருக்க எத்தனை முடியுமோ அத்தனை பிரயத்தனம் பண்ணவேண்டும் என்பதே முக்கியம். நமக்கு ஆத்ம சுத்தியை அளிக்கும் கர்மாவானதால் செய்யும்போது சிரத்தை மிகமிக அவசியம்.

ஒரு சில வருஷங்களில் உபாகர்மாவை என்றையதினம் செய்வது என்று நிர்ணயம் செய்வதில் உடன்பாடு ஏற்படுவதில்லை. இந்த வருஷம் ஸாமோபாகர்மாவை, பாம்புபஞ்சாங்கப்படி இன்றையதினமும் (24.7.2012) ,  வேறுசிலர்,  புரட்டாசி 1-ம் தேதி செய்வதே சிறந்தது என்றும் வேறுசிலர், அக்டோபர் 14-ம்தேதிதான் செய்ய வேண்டும் என்றும் தகுந்த விளக்கங்களோடு நியாயப் படுத்துகிறார்கள். இந்நிலையில், தங்கள் ஸௌகர்யப்படி ஏதாவது ஒருநாள் செய்துவிட்டால் போகிறது என்று ஸாமவேதிகள் வந்துவிடுவார்களோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. கடைசியில் கர்மாவில் சிரத்தை குறைந்துவிடும் நிலைமை வந்துவிடக்கூடாது. ஏற்கனவே, ரிஷிபூஜை, ஹோமம் முதலியவற்றைப் பண்ணாமல் யக்யோபவீதம் மட்டும் செய்து வைக்கும் குழுவோடு உபாகர்மாவைப் பண்ணிவிட்டு ஆபீசுக்கு ஓடுகிறவர்களைத்தான்  பார்க்கிறோமே!  இவர்களால் மற்றஎல்லாவற்றுக்கும்லீவுபோடமுடியும். உபாகர்மாவுக்கு மட்டும் லீவுபோட மனசுவராது! கலியின்கொடுமை என்பதைத் தவிர வேறு என்னசொல்வது?

உலக க்ஷேமத்திற்காகச் செய்யப்படும் ஸந்த்யாவந்தனம், அதில்வரும் அர்க்க்ய ப்ரதானத்தாலும்,  காயத்ரிமந்த்ர ஜபத்தாலும் மகிமைவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வேதநாயகனாகியஸ்ரீபரமேச்வரனைக்காயத்ரிமந்த்ரம் குறிப்பிடுவதாகக் கஞ்சனூர் ஹரதத்தர்,தாம்அருளியஸ்லோகபஞ்சகத்தில் அருளியிருக்கிறார். இந்த ஸ்லோகங்கள் தமிழில், ஸ்ரீமாதவசிவஞான ஸ்வாமிகள் மொழி பெயர்த்துள்ளார். ஒரேவரியில்அவர்,      " உயர்காயத்திரிக்கு உரிப்பொருள்ஆகலின்" என்றுஅற்புதமாகக்குறிப்பிட்டுள்ளார்.

 காவிரியின் வடகரையிலுள்ள சிவஸ்தலங்களுள் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும்வழியில் உள்ள கஞ்சனூரும் ஒன்று. கற்பகாம்பிகா சமேத அக்நீச்வரசுவாமியின் ஆலயம் இங்கு பிரசித்திபெற்றது. இவ்வூரில் வைஷ்ணவ குடும்பத்தில் ஸ்ரீமஹாவிஷ்ணுவின்அவதாரமாகஅவதரித்த சுதர்சனன்என்றசிறுவன், மகாசிவபக்தனானதைக் கண்டுஅவ்வூரார்ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் சன்னதியில் உயரத்தில்கட்டியபழுக்கக்காய்ச்சிய முக்காலியின்மீது அவனை அமர்ந்துகொண்டு சிவபரத்துவத்தை நிரூபிக்கச் சொல்லவே, ஸ்ரீஅக்நீச்வரரின் கருணைக்குப் பாத்திரமாகி ஹரதத்தன்என்ற தீக்ஷாநாமமும்பெற்றஅந்தச்சிறுவனும்அவர்கள்சொல்லிய படியே செய்து, ஸ்லோகபஞ்சகம்பாடி, 22 பிரமாணங்களால்சிவபரத்துவத்தைநிரூபணம் செய்தார். மேலும், சுருதி சூக்தமாலை, ஹரிஹரதாரதம்யம்ஆகியகிரந்தங்கள் மூலமாகவும்இந்தமகான்நமக்குஉணர்த்தியுள்ளார்கள். இவர்களதுசன்னதியை  கஞ்சனூர்செல்பவர்கள்அவசியம்தரிசிக்கவேண்டும்.

சரித்திரம்ஒருபக்கம்இருந்தாலும்இவர்கள்நியமத்தோடுவாழ்ந்துகாட்டியதை நாம்கவனிக்கவேண்டும். தினமும்அதிகாலையில்காவிரியில்ஸ்நானம் செய்துவிட்டு,நித்யகர்மானுஷ்டானங்களையும்,பூஜையையும்முடித்துக் கொண்டு, கஞ்சனூர்அக்நீச்வரர்ஆலயத்தைதரிசித்துவிட்டு, திருக்கோடிகா(வல்), வடதிருவாலங்காடு, திருவாவடுதுறை, தென் குரங்காடுதுறை(ஆடுதுறை) , திருமங்கலக்குடி, திருமாந்துறைஆகிய ஸ்தலங்களைத்தரிசித்துவிட்டு, ஏழாவதாகக்கஞ்சனூர்அடைந்து, சப்தஸ்தான தரிசனத்தை முறையாகச் செய்துவந்தார்ஹரதத்தர்.

நாம் தினமும் நியமமாக ஏதாவது ஒரு தெய்வகாரியத்தை செய்கிறோமா என்று நமக்குநாமே கேட்டுக் கொள்ளவேண்டும். குறைந்தபக்ஷமாக நியமத்தோடு அனுஷ்டானமாவது செய்கிறோமா என்றும் கேட்டுக் கொள்ளலாம். இல்லை என்று மனசாக்ஷி சொன்னால்அதற்கு நிவர்த்திசெய்யவேண்டாமா? ஆத்ம சுத்திக்காகத் தானே நியமநிஷ்டைகள்எல்லாம். " நித்தலும்தூயேன்அல்லேன்" என்ற அப்பர்சுவாமிகளது வாக்குநினைவுக்குவருகிறது.

 இதெல்லாம் உலகக்ஷேமத்திற்காக நாம் செய்ய வேண்டிய கடமைகள்என்று தெரிந்தும் அதைக் கைவிட்டுவிட்டுத் தர்மத்தை அனுசரிக்கத்தவறிய பாபத்தை சம்பாதித்து அதற்கான தண்டனையையும்அனுபவிக்கவேண்டியதுதானா? ஞாயிற்றுக்கிழமையிலாவது சஹஸ்ர ஆவர்த்தி காயத்ரியை ஜபித்துப் ப்ராயச்சித்தத்தைத் தேடிக் கொள்ளலாமே.  இதனால், மழை பொய்த்துவிட்டுப் பயிர்களும் உயிர்களும் வாடும் இக்காலத்தில் மழைபொழிந்து சுபிக்ஷம் ஏற்பட நம்மாலானதைச் செய்யலாம் அல்லவா?

 ஊர் நன்றாக இருந்தால் நாம் எல்லோரும் நன்றாக இருக்கலாம். எட்டுமணிக்கு எழுந்திருப்பது; குளிக்காமல்சமைப்பது; பலநாட்களுக்கு சேர்த்து சமைப்பது, கோலம்போடாமல்இருப்பது,  ஆசாரத்தைக்கைவிடுவது,  பாரம்பர்யமான உடைகளை பண்டிகைக்காலங்களில்கூட உடுத்திக்கொள்ளாமல் இருப்பது, பகவானுக்கு அர்ப்பணிக்காமலே சாப்பிடுவது,  போன்ற பாபங்களைச் செய்யாமல் கொஞ்சம் கொஞ்சமாக நம்மைத் திருத்திக் கொண்டு நியமத்தோடு வாழ பிரயத்தனப்பட வேண்டும். அதுவரையில் உபாகர்மா வெறும் சம்பிரதாயமாக மட்டும்இருக்கும். அதற்கான ஞானத்தை ஞானஸ்வரூபனான பரமேச்வரன்  அருளவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

Thursday, May 3, 2012

காலடி தரிசனம்



நமஸ்தே சாரதே தேவி காலடிபுர வாஸினி  
தக்ஷிணாபிமுகே தேவி சுத்த ஞான ப்ரதாயினி 

மால் அறியா நான்முகனும் காணாத மகேச்வரன், சனாதன தர்மத்தை நிலைநிறுத்த ஆதி சங்கரரைத்தோற்றுவித்த தலம் காலடி என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய விஷயம். ஆனால் அந்த ஊருக்கு அப்பெயர் வந்த விவரம் சுவாரஸ்யமானது. ஒரு காலத்தில் ஊருக்குச் சற்றுத் தள்ளி ஓடிய அந்த ஆற்றுக்கு நடந்தே சென்று , தினமும் ஸ்நானம் செய்யும் வழக்கத்தைக் கொண்டவர் , சங்கரரின் அன்னையான ஆர்யாம்பாள். ஒரு நாள் அப்படி ஆற்றங்கரைக்குப் போகும்போது, களைப்பு மேலிடவே, மூர்ச்சை ஆனார். இதைக் கண்ட ஆதி சங்கரர் ,தமது குல தெய்வமான கிருஷ்ணனை வேண்ட, அந்த ஆறு, திசை மாறி, சங்கரர் காலடி பட்ட இடத்தைப் பின்பற்றி, அவரது வீட்டின் பின்புறமாக ஓடத் தொடங்கியது. அன்று தொட்டு இன்று வரை அந்த நதி சங்கர ஜன்மபூமியை ஒட்டியே ஓடுகிறது. அதன் காரணமாகவே ஊருக்குக் காலடி என் று பெயர் வந்ததாகக் கூறுவார்கள்.

ஒரு நாள் தாயாருடன் ஆற்றுக்குச் சென்ற சிறுவன் சங்கரனின் கால்களை ஒரு முதலை கவ்வியவுடன் ஆர்யாம்பாள் பதறிப்போய் கூக்குரல் இட்டாள். தான் சன்யாசம் மேற்கொள்ள சம்மதித்தால் முதலையிலிருந்து தப்பலாம் என்று சங்கரர் கூறினார். எப்படியாவது தன் குழந்தை முதலையிடமிருந்து தப்பித்தால் போதும் என்று எண்ணிய அன்னை அதற்கு சம்மதித்ததும் முதலை சங்கரரின் காலை விட்டது. சங்கரர் எண்ணியது போலவே சந்நியாச்ரமத்தை மேற்கொள்ள தகுந்த குருநாதரை நோக்கிப் புறப்பட்டார். அன்னைக்கு அந்திம காலம் வரும்போது காலடிக்கு வந்துவிடுவதாகவும் உறுதி மேற்கொண்டார். ஆர்யாம்பாளுக்கு கடைசி காலம் வந்துவிட்டதை உணர்ந்த ஆச்சார்யார் ,நேராகக் காலடி வந்து சேர்ந்து, அன்னையின் ஆன்மா வைகுண்டம் அடையுமாறு பகவானிடம் பிரார்த்திக்க அப்படியே நடந்தது. அந்திமக்கிரியைகளைத் தானே நடத்தியதாகவும் வரலாறு.

ஆர்யாம்பாள் உயிர் நீத்த இடத்தில் தீபஸ்தம்பம் இருந்ததைக் கொண்டு, அதுவே சங்கரரின் ஜன்மபூமி என்று ஊர்ஜிதம் செய்தார்கள்,அப்போது சிருங்கேரி பீடாதிபதியாக இருந்த ஜகத்குரு ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ  நருசிம்ஹ பாரதி ஸ்வாமிகள். அப்போது திருவாங்கூர் மன்னராக இருந்த மூலம் திருநாள் அவர்கள் , அங்கு சிருங்கேரி மடம் அமைக்க நிலத்தை நன்கொடையாக அளித்தார்கள். ஆசார்யாரும் அந்த இடத்தில் சங்கரருக்கும் சாரதா தேவிக்கும் சன்னதிகள் அமைத்தார்கள். பின்னால் வந்த ஆசார்யர்களும் மடத்தை அபிவிருத்தி செய்தார்கள்.

பூர்ணா நதிக் கரையில் அமைந்துள்ள சங்கர ஜன்ம பூமி தெய்வ மணம் மாறாது இன்றும் பொலிவுடன் விளங்குகிறது. நுழைவு வாயிலில் ஆச்சார்யர்களின் திரு உருவங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஏழைப் பெண்மணிக்கு இரங்கி,சங்கரர் ,மகாலக்ஷ்மியிடம் கனகதாரா ஸ்தோத்திரம் செய்து தங்க நெல்லிக் கனிகளை வரவழைத்துத் தந்த காட்சி ஒரு புறம் அமைக்கப்பட்டு உள்ளது. பூர்ணா நதிக்கரையில் சங்கரரின் காலை முதலை பற்றும்  காட்சி மறு புறம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த பிராகாரம் முழுவதும் பூத்துக்குலுங்கும் செடிகள். அதற்கு அடுத்த வாயிலைத் தாண்டினால் , மிகப்பெரிய முற்றமும், அதில் சக்தி கணபதியின் சன்னதியும் உள்ளது.

சற்று உயர்ந்த சன்னதியில் சாரதாம்பாள் தெற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறாள். எதிரில் பூர்ணா நதியின் ரம்யமான காட்சி. தன்னை வழிபடுபவர்களுக்கு சுத்த ஞானத்தை அளிக்கும் பரமேச்வரி இவள். இந்த அம்பிகைக்குச் சூட்டப்படும் மாலைகளின் அழகும், பூஜைகளும் ,சன்னதியின் அழகும் காண்பவர்கள், மீண்டும் மீண்டும் இத்தரிசனம் கிடைக்க ஏங்குவதில் வியப்பு ஏதும் இல்லை. சாரதையின் வலப்புறம் சங்கர பகவத் பாதரின் அழகிய சன்னதி அமைந்துள்ளது. குருநாதரும் தெற்கு நோக்கியவாறு தரிசனம் தருகிறார். எவ்வளவு பெரிய மகானின் தரிசனம்! உண்மையிலேயே நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இந்த சன்னதி தரிசனத்தால் ஞானம் கண்டிப்பாகக் கிட்டும். அருகிலேயே அன்னை ஆர்யாம்பாளின் பிருந்தாவனம். தீபஸ்தம்பமும் அருகிலேயே இருக்கிறது.

சங்கர ஜெயந்தி அன்று ஊரே திருவிழாக்கோலம் பூண்டு தோற்றம் அளிக்கிறது. பகவத் பாதரின் சன்னதியில் கலசங்கள் அமைக்கப்பட்டு வேத பாடசாலைக் குழந்தைகள் மகன்யாஸ ருத்ர ஜபம் செய்கிறார்கள் . ஆசார்யருக்கு அப்போது அபிஷேகம் செய்யப்படுகிறது.

தினந்தோறும் வித்வான்களின் சதஸ் நடைபெறுகிறது. மணிக்கணக்கில் சம்ஸ்க்ருதத்திலேயே உரையாடல் நடக்கிறது. அதே சமயம் அவர்களின் ஆழ்ந்த மொழியறிவும் ,ஆராய்ச்சியும் வெளிப் படுகிறது. நிறைவாக நடைபெறும் தீபாராதனையையும் , வேத ஒலியையும் நேரில் காண்பவர்கள் பாக்கியசாலிகள். வைசாக பஞ்சமியன்று மாலையில் ஆதி சங்கரரின் உற்சவ மூர்த்தியை தேரில் எழுந்தருளச் செய்கிறார்கள்.வேத கோஷத்தோடு, பாடசாலைக் குழந்தைகள் அத்தேரை இழுத்து வருவது அற்புதமான காட்சி.

அருகிலுள்ள க்ருஷ்ணன் கோவிலிலும் பத்து நாட்கள் விழாக் கோலம் தான். மூலவரும் தினமும் ஒரு அவதாரக் கோலத்துடன் ,பத்து நாட்களில் தசாவதாரக்  காட்சி அளிக்கிறார். வெளிப் பிராகாரத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டு அதில் மஹா லக்ஷ்மி யந்திரத்திற்கு முப்பத்திரண்டு நம்பூதிரிகள் கனகதாரா ஸ்தோத்திரத்தால் அர்ச்சிக்கிறார்கள். இந்த ஸ்தோத்திரம் பத்தாயிரம் முறை சொல்லப்படுகிறது.

காலடிக்குள் நாம் நுழைந்ததுமே நம்மைக் கவர்வது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு மகாபெரியவர்களால் அமைக்கப்பட்ட ஆதி சங்கர கீர்த்தி ஸ்தம்பம். வானளாவி நிற்கும் இந்த ஸ்தம்பம் சங்கரரின் புகழும் என்றென்றும் வானளாவி நிற்கும் என்று சொல்வதுபோல் இருக்கிறது. நுழைந்தவுடன் நம்மைக் கவர்வது பாதுகைகளுக்கு நடைபெறும் பூஜைகள். ஸ்தம்பத்தின் உச்சிக்குச் செல்லப் படிக்கட்டுக்கள் உள்ளன. வழியில் சுவற்றிலும் சன்னதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள சுதை வேலைப் பாடுகள், சங்கரர் வரலாற்றையும், ஷன்மத ஸ்தாபனம் பற்றியும் விளக்குவதாக அருமையாக அமைக்கப்பட்டுள்ளன. தனி சன்னதியில் நான்கு சீடர்களுடன் ஸ்ரீ சங்கரர் காட்சி அளிக்கிறார். அவருக்குப் பின்புறம் ஆதிகுருவான ஸ்ரீ பரமேச்வரன் சனகாதி ரிஷிகளுடன் ஆலமர நீழலில் வீற்றிருப்பதை சுதை வடிவில் அமைத்திருக்கிறார்கள்.மேலேயிருந்து வெளியில் பார்த்தால் இயற்கை அன்னையின் அற்புதக் காட்சி.எங்கு நோக்கினாலும் பசுமையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

கிருஷ்ணன் கோவிலுக்குப் பின்புறம் ராமகிருஷ்ணா மடம் விசாலமாக அமைந்துள்ளது. பிரம்மாண்டமான நாகலிங்க மரம் நம் நாசிகளை அதன் நறுமணத்தால் நிரப்புகிறது. எத்தனையோ வகையான செடிகளையும் மரங்களையும் அழகாக அமைத்திருக்கிறார்கள். புத்தக நிலையமும் இருக்கிறது. சங்கர ஜெயந்தியை தரிசித்துவிட்டு ஊருக்கு எதை எடுத்துப் போவது? சங்கரர் நமக்குத் தந்த ஏராளமான பொக்கிஷங்களில் ஏதாவது ஒன்றையேனும் எடுத்துச் செல்வதே குருநாதரின் காலடிக்கு நாம் செய்யும் உண்மையான பூஜை அல்லவா? அந்த வகையில் நாம் எடுத்து வந்தது அம்மஹானின் அற்புதமான நூலாகிய "விவேக சூடாமணி"யை.

Wednesday, February 22, 2012

வேண்டும் வரம் கொடுக்கும் வெண்காடு


                  "ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீ மாயூரம் மார்ஜுனம்
                   சாயாவனம்ச ஸ்ரீ வாஞ்சியம் காசீ க்ஷேத்ர ஸமாநிஷட் "
என்ற வாக்கியத்தால்  காசிக்குச் சமானமாகக் கூறப்படும் ஸ்தலங்கள் ஆறு என்பதைத்  தெரிந்து கொள்கிறோம். இவை, திருவெண்காடு, திருவையாறு,மயிலாடுதுறை, திருவிடைமருதூர் , சாயாவனம் என்கிற திருச்சாய்க்காடு ,திருவாஞ்சியம்  என்பன ஆகும். இத்தலங்களைக் காசியோடு சம்பந்தப்படுத்திப் பேசுவானேன் என்றால், இவை யாவும் காசியைப்போல் முக்தியைத் தரவல்லவை  என்பதால்தான். இவற்றிலும், மாயூரத்தில் காசி விஸ்வநாதர் ஆலயங்களும் , காசியைப் போலவே டுண்டி கணபதி மற்றும் கால பைரவர் சன்னதிகளும் உள்ளன. மேலே சொல்லப்பட்ட ஸ்தலவரிசை ஆறில், முதலாவதாகச்  சொல்லப்பட்டு இருப்பது, ஸ்வேதாரண்யம்  எனப்படும் திருவெண்காடு ஆகும்.

வால்மீகி ராமாயணத்தில் ஸ்வேதாரண்யம் குறிப்பிடப்பட்டுள்ளது.இங்கு சிவ சன்னதிகள்  மூன்று: ஸ்வேதாரண்யேச்வரர் (மூலஸ்தானம்), நடராஜ மூர்த்தி, அகோர மூர்த்தி. மூலவரை  தேவேந்திரன், ஐராவதம்  என்கிற வெள்ளை யானை, மஹாவிஷ்ணு, சூரியன், சந்திரன்,அக்னி , ச்வேத கேது, சுவேதன்  ஆகியோர் பூஜித்துள்ளனர். தேவார மூவரும் சுவாமியின் மீது பதிகங்கள் பாடியிருக்கிறார்கள். திருவாசகத்திலும்திருக்கோவையாரிலும்  இத்  தலம் மாணிக்கவாசகரால் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தாலக முனிவரின்  எட்டு வயது குமாரனான ச்வேதகேதுவின்  உயிரைப் பறிக்கவேண்டி யமன் பாசக் கயிற்றை வீசியபோது  சுவாமி வெளிப்பட்டுக்  கால- சம்ஹாரம் செய்ததாக  ஸ்தலபுராணம் சொல்கிறது.

ஆதி சிதம்பரம் என்று இந்த ஊர் குறிப்பிடப்படுகிறது. சபை அமைப்பும் சிதம்பரத்தைப் போலவே இருக்கிறது. அருகில் ச்வேதவனப் பெருமாள் சன்னதியும் இருக்கிறது. நவ தாண்டவங்களை ( ஆனந்த தாண்டவம், காளி ந்ருத்தம், கௌரீ தாண்டவம், முனி ந்ருத்தம், சந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம் , புஜங்க லலிதம், சம்ஹார தாண்டவம், பைஷாடனம்)நடராஜ மூர்த்தி இங்கு  ஆடினாராம். சிதம்பரத்தில் சகுணமாக ஆடி முக்தியைத் தரும் மூர்த்தி, இங்கு நிற்குணமாக ஆடி இம்மைக்கும் மறுமைக்கும்  பலன்களை அளிக்கிறார்.இவரது காலில் பதினான்கு சலங்கைகள் உள்ள காப்பு காணப்படுகிறது. பதினான்கு புவனங்களும் அவர் அசைந்தால் மட்டுமே அசையும் என்பதை இது காட்டுகிறது. இடுப்பில் அணிந்துள்ள  81 வளையங்கள்   உள்ள அரை ஞாண், பிரணவம் முதலான  81 பத மந்திரங்களை உணர்த்தும். 28 எலும்பு மணிகளை அணிந்திருப்பது, 28 சதுர் யுகங்கள்  முடிந்திருப்பதைக்  காட்டுகிறது.கூர்ம- வராக அவதாரங்களை அடக்கி அவற்றின் அடையாளமாக ஆமையின் ஓட்டையும், பன்றிக் கொம்பையும் மார்பில் அணிந்திருக்கிறார். ஜடாமுடி பதினாறு கலைகளை உணர்த்துவதாக உள்ளது. அதில் 15 சடைகள் பின்னால் தொங்குகின்றன.  ஒன்றுமட்டும் கட்டப்பட்டுள்ளது.   திரு முடியில் மயில் பீலியும், கங்கையும்,இளம் பிறைச் சந்திரனும்,  ஊமத்தம் பூவும், வெள்ளெருக்கும்  இருக்கின்றன.  நெற்றிக்கண் அழகாகத் தெரிகிறது. சிதம்பரத்தைப் போலவே, ரஹஸ்யமும், ஸ்படிகலிங்க பூஜையும் நடைபெறுகின்றன.

தேவர்களைத் துன்புறுத்திவந்த மருத்துவாசுரனை  அடக்குவதற்கு சுவாமியின் கோபத்திலிருந்து வெளிப்பட்ட அகோர மூர்த்தியின் சன்னதி பிரபலமானது. அசுரன் மீது போருக்குச் சென்ற ரிஷப தேவர் , காயப்பட்டதால் கோபமடைந்த பரமேச்வரன், அகோர மூர்த்தியாக, சூலம் ஏந்தி வருவதைக்கண்ட  அசுரன் , சரணாகதி அடைந்து தோத்திரம் செய்தான். இவர்  இடது காலை முன்வைத்து, வலது கால்  கட்டை விரலையும்,அதற்கு அடுத்த விரலையும் ஊன்றி, நடக்கும் கோலத்தில்எட்டுக் கரங்களுடன்  காட்சி அளிக்கிறார். கைகளில் வேதாளம்,கத்தி,உடுக்கை,  கபாலம் ,கேடயம், மணி, திரிசூலம் ஆகியவற்றைத் தாங்கியவராக, ஜ்வாலாகேசத்துடன் , நெற்றிக் கண்ணுடனும்,கோரைப்  பற்களுடனும், 14 பாம்புகளைப் பூண்டவராய் ,கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். மாசி மாதம், கிருஷ்ணபக்ஷ பிரதமை, ஞாயிற்றுக் கிழமை, பூர நக்ஷத்திரம் கூடிய நாளன்று அகோர மூர்த்தி தோன்றியதாகக் கூறப்படுகிறது. பிரதி ஞாயிறுகளிலும்- குறிப்பாக கார்த்திகை ஞாயிறுகளில் அகோர பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.மாசி மாத பிரமோத்ஸசவத்தில் , பூர நக்ஷத்திரத்தில் அகோர மூர்த்திக்கு விசேஷ அபிஷேகமும், வீதி உலாவும் நடைபெறுகிறது.
   
வெளிப்ராகாரத்தில் வடமேற்கு மூலையில், தனி உள் ப்ராகாரத்துடன் பிரம்மவித்யாம்பிகையின் சன்னதி கிழக்கு நோக்கு அமைந்துள்ளது. பிரமனுக்கு வித்தையை உபதேசித்ததால் இப்பெயர் வந்தது. திருநாங்கூரில் மதங்க முனிவரின் புதல்வியாகத் தோன்றிய அம்பிகை, தவம்  செய்து. ஈச்வரனைத் திருவெண்காட்டில் மணந்து கொண்டதாகப் பாத்ம புராணம் கூறுகிறது. பின் இரு கரங்களில் தாமரையும், அக்ஷ மாலையும் ஏந்தி, முன்னிருகரங்கள் அபய- வரதமாகக் அருட்-   காட்சி வழங்குகிறாள் அம்பிகை.
நவக்ரகங்களுள் ஒருவரும், வித்யாகாரகன்,மாதூலகாரகன், என்றெல்லாம் வழங்கப்படும் புதனுக்குத்  தனி சன்னதி, அம்பாள் சன்னதிக்கு வெளியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கல்வி,புத்திர பாக்கியம் வேண்டுவோர், இங்கு சாந்தி செய்து கொள்கிறார்கள்.

கோயிலுக்கு உள்ளேயே, மிகப்பழமையான மூன்று திருக்குளங்கள் உள்ளன.அக்னி தீர்த்தம், கொடிமரத்தின் அருகில் உள்ளது. இதன் கரையில், சைவ சித்தாந்த நூலான "சிவ ஞான போத"த்தை அருளிய மெய்கண்டாருக்கு சன்னதி உள்ளது. இவரது தந்தை அச்சுத களப்பாளர் என்பவர், நெடுங்காலமாகக் குழந்தைப்பேறு இல்லாததால், திருமுறையில் கயிறு சார்த்திப் பார்த்தபோது, இத்தலத்தின்மீது திருஞான சம்பந்தர் பாடிய, "கண்காட்டு நுதலானும்" என்ற பதிகம் வந்தது. அதில் இரண்டாவது பாடலில், இங்குள்ள முக்குளங்களில் நீராடிப் பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் , இதில் சந்தேகப்பட வேண்டாம் என்று இருந்ததால் , அதன்படியே அவரும் இங்கு வந்து முக்குளத்தில் நீராடி, நியமத்தோடு இறைவனை வழிபட்டதால், மெய்கண்டார் என்ற சிவஞானக் குழந்தையை மகவாகப் பெற்றார். இன்றும் இப்பதிகத்தை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது அனுபவத்தால் கண்ட உண்மை.

அக்னி தீர்த்தத்திற்கு அப்பால் வெளிப் பிராகாரத்தில் சூரிய தீர்த்தமும், அம்பாள் சன்னதிக்கு எதிரில் சந்திர தீர்த்தமும் உள்ளன. மூன்று தீர்த்தங்களைப் போல மூன்று வ்ருக்ஷங்கள் - ஆல், கொன்றை, வில்வம் ஆகியவை உள்ளன. இவற்றுள், ஆல வ்ருக்ஷத்தின் அடியில் ருத்ர பாதம் இருக்கிறது. இது பித்ருக் கடன் செய்ய உத்தமமான இடம். வில்வ வ்ருக்ஷத்தின் அடியில் பிரம்ம சமாதி உள்ளது. மேற்கு ராஜ கோபுரத்தின் அருகில் நூற்றுக்கால் மண்டபமும் அதனுள் சண்முகர் சன்னதியும் உள்ளன.

சுவாமியின் உள் பிராகாரத்தில் வடக்கு நோக்கிய பத்ரகாளியும், மேற்கு நோக்கிய துர்கையும் பெரிய மூர்த்தங்கள். இதைத்தவிர, சோமாஸ்கந்தர் சன்னதி, அறுபத்துமூவர்,பெரிய வாரணப் பிள்ளையார்,பால சுப்பிரமணியர் , அகோரமூர்த்தி (உத்சவர்) ஆகிய சன்னதிகளைக் காணலாம்.

பிற செய்திகள்:
சம்பந்தர் இங்கு வந்தபோது, ஊரெல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி அளித்ததால், அம்பாள் அவரைத் தன் இடுப்பில் தாங்கிவந்து சுவாமி தரிசனம் செய்வித்தாள் என்பது செவிவழிச் செய்தி. அதே கோலத்தில் "பிள்ளை இடுக்கி அம்மன்" என்ற பெயரில் அம்பாள் பிரகாரத்தில் நமக்குத் தரிசனம் தருகிறாள் அன்னை.

 அருகிலுள்ள கிராமங்களில் தொற்று நோய் பரவும் போது , யாராவது ஒருவர் மேல் அகோரமூர்த்தி  ஆவேசமாக வந்து, விபூதி கொடுத்தவுடன்  அந்நோய் மறைந்துவிடுமாம்.
 
  சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி திருவெண்காட்டு நங்கையும், அவரது தோழி சந்தன நங்கையும் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்.  

   ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகளாக இருந்த ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இங்கு மணிகர்ணிகா கட்டத்தில் இருக்கிறது.                                                திருவாவடுதுறை ஆதீன எட்டாவது குரு மகா சந்நிதானமாக விளங்கிய மாசிலாமணி தேசிக மூர்த்திகளின் சமாதி , மேல வீதியில் உள்ளது.

   பட்டினத்தடிகள் சிவ தீக்ஷை பெற்ற தலம்.  

   கணபதிவழிபாடாகிய காணாபத்யம் பற்றிய நூல்கள்  மறைந்தபோது,                         க்ஷேத்ரபாலபுரத்தைச்  சேர்ந்த ஸ்ரீ  சாம்பசிவ சாஸ்திரிகளுக்கு மீண்டும் அவற்றை அகோர மூர்த்தியே உபதேசித்து, வெளிக்கொனர்ந்ததால், காணாபத்தியர்களின் குரு அகோரமூர்த்தியே ஆவார்.

இக்கோயிலில் சோழ,பாண்டிய,விஜய நகர அரசர்களின் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன.சோழ அரசர்களோடு,அரசியர்களும் இக்கோயிலுக்கு நிவந்தங்களை அளித்துள்ளனர்.தெய்வத் திருமேனிகள் செய்து வைக்கப்பட்டதோடு விளக்கெரிக்கவும், திருவிழாக்கள் நடைபெறவும், நந்தவனம் அமைக்கவும் ,இசைக்கருவிகள் வாசிப்போருக்கும், வேதம் ஒதுவோருக்கும் நிலங்கள் அளிக்கப்பட்டன. கோயில் நிலங்களை வைத்திருந்தோர் மூவர் , சிவத்ரோகிகளாக மாறியதால், அந்நிலங்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

தேவாரப்பாடல் பெற்ற தலங்களான கீழைத் திருக்காட்டுப்பள்ளி,சாயாவனம், பல்லவனீச்வரம், திருவலம்புரம்,கலிக்காமூர், தலைச்சங்காடு ஆகியவை அதன் அருகில் உள்ளன. மணிக்ராமம் என்ற வைப்புத் தலமும் அருகாமையில் உள்ளது.  
                 
மயிலாடுதுறையிலிருந்து மங்கைமடம் செல்லும் பேருந்துகளில் வந்தால் கீழ சன்னதியில் இறங்கலாம். சீர்காழியிலிருந்து சுமார்  18 கி. மீ. தொலைவிலுள்ள இத்  தலத்தை   பூம்புகார்  செல்லும் பேருந்துகள் மூலமாகவும் அடையலாம்.
"வெண்காடே வெண்காடே என்பீராகில் வீடாத வல்வினை நோய் வீட்டலாமே" என்று அப்பர் ஸ்வாமிகள் பாடியிருக்கிறபடியால், இத் தலத்தின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே தீராத பாவங்களும் தீரும் , வேண்டியது யாவும் சித்திக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக பிறவிப் பிணி தீர்ந்து முக்தி வரம் கிட்டும். மனிதப்பிறவிக்கு இதற்கு மேலும் வேண்டுவது யாது? திரும்பத் திரும்பத் தரிசிக்கவேண்டிய இந்தத் தலத்தை வாழ்நாளில் ஒருமுறையாவது அவசியம் தரிசிக்க வேண்டும். அந்த பாக்கியத்தை அனைவருக்கும் அளிக்கும் வரம் தரும்படி, பிரம்மவித்யாம்பிகா சமேத ஸ்வேதாரண்யேச்வர பரசிவத்தைப் பிரார்த்திப்போமாக.