ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள்-இராமேசுவரம் III
சிவபாதசேகரன்
இராமலிங்கப் பிரதிஷ்டை |
தனுஷ்கோடி மகிமை :
நர்மதை நதிக் கரையில் தவம் செய்தால் கொடிய பாவங்களும் விலகும்.
கங்கைக் கரையில் மரணம் சம்பவித்தால் முக்தி கிடைக்கும். குரு க்ஷேத்திரத்தில்
செய்யும் தானம் ப்ரமஹத்யாதி பாவங்களைப் போக்கும் தனுஷ்கோடியில் செய்யும் தானமும் தவமும்
பாவங்களை நீக்கி முக்தி அளித்து, விரும்பிய எல்லாவற்றையும் தரும். உலகிலுள்ள எல்லா
தீர்த்தங்களும் தனுஷ்கோடி தீர்த்தத்தில் அடக்கம். அனைத்துத் தேவர்களும் இதில்
குடிகொண்டிருக்கிறார்கள். புண்ணிய காலங்களில் இங்கு ஸ்நானம் செய்வதால் அதிக
பலன்கள் பெறலாம். இங்கு பித்ருக்களுக்குப் பிண்டம் போட்டால் பித்ருக் கடன் நீங்கி
அவர்களது ஆசியையும் பெறுவர். இதனைப் பார்த்தாலே முக்தி கிட்டும் என்பதால் ஸ்நான
பலனை எப்படி வர்ணிப்பது என்று கேட்கிறது புராணம்.
துரோணரது மைந்தனான அச்வத்தாமன் , தனது தந்தை வஞ்சனையால் கொல்லப்பட்டதை
அறிந்து பாண்டவர்களைப் பழி வாங்க எத்தனிக்கையில், கண்ணனது அருளால் பாண்டவர்கள்
காப்பாற்றப்பட்டனர். ஆனால் இரவில் உறங்கிக்கொண்டிருந்த திருஷ்டத்யும்னனையும்
பாண்டவ குமாரர்களையும் அசுவத்தாமன் கொன்றான்.அக்கொலைப்பழி நீங்குவதற்கு வியாஸரை
அணுகினான். அதற்கு அவர், “ உறங்குபவரைக் கொன்றால் அப்பழிக்குப் பிராயச்சித்தம்
கிடையாது. இருப்பினும் தனுஷ்கோடி தீர்த்தத்தில் ஒரு மாதம் ஸ்நானம் செய்து
இராமநாதரை வழிபட்டால் பழி நீங்கும் “என்றார். அவ்வாறே செய்த அச்வத்தாமனும் பழி
நீங்கப்பெற்றான்.
சந்திர வம்சத்தில் பிறந்த நந்தன் என்ற அரசனது குமாரன் தர்மகுப்தன்
என்பவன் நம்பிக்கை துரோகம் செய்த குற்றத்திற்காக சித்த சுவாதீனம் இழந்து
திரிந்தான். பின்னர் ஜைமினி ரிஷியின் சொற்படி தனுஷ்கோடி தீர்த்த ஸ்நானம் செய்து
இராமநாத சுவாமி தரிசனம் செய்ததும் சித்தம் தெளியப்பெற்றான். எனவே சித்தப்பிரமை
மட்டுமல்லாது,எல்லா நோய்களையும் நீக்கவல்லது இந்த தீர்த்தம்.
ப்ரஹத்யும்னன் என்ற மன்னன் செய்த வேள்விக்கு ரைப்ய மகரிஷி புரோஹிதம்
செய்தபோது, அவரது பிள்ளைகளான பராவசுவும் அச்வாவசுவும் தந்தைக்கு உதவியாக
இருந்தனர். ஒரு நாள் மான் தோல் போர்த்துக்கொண்டு உலவிய ரைப்யரைத் துஷ்ட மிருகம்
என்று கருதி பராவசு, ஆயுதத்தால் கொன்று
விட்டான். அச்வாவசு தவம் செய்து தந்தை உயிர் பெறவும், தமையன் பிரமஹத்தி தோஷம்
நீங்கப்பெறவும் வரம் வேண்டினான். தேவர்கள் அருளியபடித் தமையனைத் தனுஷ்கோடி
தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்தான். அதனால் பராவசுவின் பழி நீங்கியது. ரைப்ய
மகரிஷியும் உயிர் பெற்று எழுந்தார்.
சேது மாதவ தீர்த்தம் |
இராமேசுவரம் கோயிலுக்குள் காணப்படும் தீர்த்தங்கள் இருபத்திரண்டு
ஆகும். அவையாவன:
மகாலக்ஷ்மி தீர்த்தம்,சாவித்திரி தீர்த்தம்,காயத்திரி
தீர்த்தம்,சரஸ்வதி தீர்த்தம்,சேதுமாதவ தீர்த்தம்,கந்த மாதன தீர்த்தம்,கவாட்ச
தீர்த்தம்,கவய தீர்த்தம்,நள தீர்த்தம்,நீல தீர்த்தம்,சங்கு தீர்த்தம்,சக்கர
தீர்த்தம்,பிரமஹத்தி விமோசன தீர்த்தம்,சூர்ய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்,கங்கா
தீர்த்தம்,யமுனா தீர்த்தம், கயா தீர்த்தம், சிவதீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம்,
ஸர்வ தீர்த்தம்(மானஸ தீர்த்தம்), கோடி தீர்த்தம் என்பனவாம்.
ஸர்வ தீர்த்த ஸ்நானத்தால் சுதர்சனர் என்பவர் பிறவிக் குருடும்,நரை,
திரை,மூப்பு ஆகியனவும் நீங்கப்பெற்றார் எனப்படுகிறது. கோடி தீர்த்தத்தில் நேரடியாக
ஸ்நானம் செய்ய முடியாவிட்டாலும் அதற்கென ஒரு அந்தணர் முகந்து ஊற்றும் நீரில்
ஸ்நானம் செய்யலாம். இதுவே எல்லா தீர்த்தங்களிலும் மேலானதாகக் கருதப்படுவதால் இதில்
ஸ்நானம் செய்து, சுவாமி-அம்பாள் தரிசனம் ஆனபிறகு இராமேசுவரத்தை விட்டுப் புறப்பட
வேண்டும் என்பது மரபு. இஷ்ட சித்தியும் ஞானமும்,முக்தியும் தரும் இந்தத்
தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து கம்ஸனைக் கொன்ற பாவத்தை கிருஷ்ண பகவான் போக்கிக் கொண்டதாகப்
புராணம் கூறுகிறது.
மூன்றாம் பிராகாரத் தூண் வரிசைகளின் அழகு நம்மைப் பிரமிக்க வைக்கிறது
இந்த அழகிய வேலைப்பாடு அமைந்த பிராகாரம் பற்றியும் இதனை நிர்மாணித்த சேதுபதி மன்னர் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் பற்றியும் ஒரு கல்வெட்டு அமைத்திருப்பது காணத்தக்கது .
புராண வரலாறுகள் : இராமலிங்கப் பிரதிஷ்டை , சுந்தர பாண்டியனின் மகளாக அவதரித்த மகாலக்ஷ்மி
,அந்தண வடிவில் வந்த திருமாலை மணந்து சேது மாதவராகத் தங்கியது, பைரவ மூர்த்தியை
இராமபிரான் பிரதிஷ்டை செய்தது, சாகல்ய மகரிஷியை மான் என்று நினைத்து
அம்பெய்தியதால் பிரமஹத்தி பீடிக்கப்பட்ட சங்கர பாண்டியன் இராமேசுவரம் வந்து
ஓராண்டுக்காலம் இராமநாதரை வழிபட்டதால் பாவம் நீங்கப்பெற்றது, ஆகிய வரலாறுகளைத் தல
புராணத்தில் காணலாம்.
இராவணனை சம்ஹரித்தபின் ஸீதா பிராட்டியுடன் இராமபிரான் கடலைத் தாண்டி
வருகையில் நளனால் கட்டப்பட்ட சேதுவையும் அனுமன் வெளி வந்த மைனாகம் என்ற
மலையையும்,மூவுலகாலும் பூஜிக்கத்தகுந்த அழகிய கடலையும், அதன்கண் அமைந்துள்ள சேது
தீர்த்தத்தையும் தேவிக்குக் காட்டினார் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது.
மேலும், “ யாரொருவன் சேதுவில்
ஸ்நானம் செய்து, இராமநாதரைவழிபடுகிறானோ அவன் பிரமஹத்தி போன்ற பாவங்களிலிருந்து
விடுபடுகிறான். காசிக்குச் சென்று கங்கையில் நீராடி விட்டு, விச்வேசப் பெருமானைத்
தரிசித்து விட்டு , அங்கிருந்து கொண்டுவந்த கங்கை நீரால் இராமநாதருக்கு அபிஷேகம்
செய்பவன் பாவச் சுமையிலிருந்து முற்றிலும் விடுபடுகிறான். இதில் ஐயமில்லை.”
என்றும் கூறினார்.
ராமர் அயோத்திக்குச் சென்று முடி சூட்டிக் கொண்டபின் மீண்டும் தீர்த்த
யாத்திரையாக இராமேசுவரம் வந்ததாக ஆனந்த இராமாயணம் கூறுகிறது. மேலும் அக்னி
புராணம், பிரம்மாண்ட புராணம்,மார்க்கண்டேய புராணம்,கருட புராணம்,விஷ்ணு புராணம்,தேவி
புராணம்,ஸ்காந்த புராணம் பத்ம புராணம், அத்திரி ஸ்ம்ருதி,நாராயண ஸ்ம்ருதி, ஆகியவற்றிலும்
சேது க்ஷேத்திர மகிமை சொல்லப்பட்டிருக்கிறது.
பிரஹ்மாண்ட புராணத்தில் புண்ணிய காலங்களில் இங்கு பொன் முதலிய
தானங்கள் பெறுபவன் ஆயிரம் ஆண்டுகள் அரக்கனாகவும்,கண்ணின்றியும் தாங்குபவரின்றியும் இருப்பான். அதற்குப்
பிராயச்சித்தமாக இங்கு ஒன்பது லக்ஷம் காயத்ரி ஜபிக்க வேண்டும் . கல்பதருவை
தானமாகப் பெற்றால் இருபத்தொரு நரகங்களில் வீழ வேண்டும். இதற்குப் பிராயச்சித்தமாக
எட்டு லக்ஷம் காயத்ரியை ஜபிப்பதும், பெற்ற தானத்தில் ஒரு பங்கை நற்காரியங்களுக்கு
செலவழிப்பதும், பூமியை மும்முறை வலம் வருவதும்,சேதுவில் மூன்று ஆண்டுகள் ஸ்நானம்
செய்வதும் சிவ பூஜையும், இராமநாதப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும் சொல்லப்
பட்டிருக்கிறது. வைத்திய நாத தீக்ஷிதரின் ஸ்ம்ருதி முக்தாபலத்தில் பிராயச்சித்த காண்டத்தில்
இதனை மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.
தலம் பற்றிய நூல்களும் பாடல்களும்: இத்தலத்தின் மீது வடமொழியில்
தலபுராணமும், தமிழில் நிரம்ப அழகிய தேசிகர் இயற்றிய சேதுப்புராணமும், திருஞான
சம்பந்தர் அருளிய இரண்டு தேவாரத் திருப்பதிகங்களும்,திருநாவுக்கரசர்
அருளிய ஒரு தேவாரத் திருப்பதிகமும், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடலும்,
தாயுமான சுவாமிகள்,பர்வத வர்த்தனி பேரில் பாடிய மலைவளர் காதலி
பதிகமும், சொக்கநாதப்புலவர் பாடிய தேவை உலாவும் முத்துவிஜயம் பிள்ளை இயற்றிய
சேதுப்புராண வசனமும், இத்தலத்தின் மீது பாடப்பட்டுள்ளன. சுவாமி-அம்பாள் மீது ஸ்ரீ
ராகவனே செய்த ஸ்ரீ ராமநாதாஷ்டகமும், ஸ்ரீ பர்வதவர்தனி அஷ்டகமும் வடமொழி
சுலோகங்களாக உள்ளன. சுவாமி பேரில் ஸ்ரீ ராமநாத சுப்ரபாதமும் இருக்கிறது. சங்கீத
மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ
முத்துஸ்வாமி தீக்ஷிதர், சுவாமி பேரில்
காமவர்த்தனி இராகத்தில் இயற்றிய ராமநாதம் பஜே ஹம் என்ற கீர்த்தனை சங்கீத உலகில்
பிரசித்தமானது.
தாயுமான சுவாமிகள் நிகழ்த்திய அற்புதம்: தாயுமானவர் இங்கு வந்தபோது
மழை இல்லாமல் மக்கள் துன்பப்படுவதைப் பார்த்துப் பின் வரும் பாடலைப் பாடினார்:
சைவ சமயம் சமயம் எனில் அச்சமயத்
தெய்வம் பிறை சூடும் தெய்வம் எனில் – ஐவரை வென்று
ஆனந்த வெள்ளத்து அழுந்துவதே முத்தி எனில்
வானங்கள் பெய்க மழை.
என்று பாடியவுடன் கருமேகங்கள் திரண்டு வந்து மழை பெய்து மக்களை
மகிழ்வித்தது.
கல்வெட்டுக்கள்: இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் சமஸ்கிருதம், தமிழ்,
கன்னடம் ஆகிய மொழிகளில் உள்ளன. சில செப்பேடுகளும் உண்டு. சேதுபதி
மன்னர்களும்,பாண்டிய மன்னர்களும், மதுரை நாயக்கர்களும் இக்கோயிலுக்கு அளித்த
கொடைகள் பற்றிக் கல்வெட்டுக்கள் மூலமாக அறிகிறோம்.
நித்திய பூஜையும்,விழாக்களும்: விடியற்காலை 4 மணி
முதல் 5 1/2 மணி வரை திருவனந்தல் பூஜை. நடைபெறும் ஸ்படிக லிங்க பூஜையைக் காண
மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் .சூர்ய உதயமானதும் விளா பூஜையும், 9 மணிக்கு
மேல் காலசந்தி பூஜையும், நடுப்பகலில் உச்சிக்கால பூஜையும்,மாலையில்
சாயரக்ஷையும்,இரவு 9 மணிக்கு மேல் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகின்றன.
இங்கு ஆண்டுதோறும் ஆனி ,ஆடி,மாசி மாதங்களில் மூன்று பிரமோற்ச வங்களும், வைகாசியில் வசந்த விழாவும்
நடைபெறுகின்றன. பிரதி வெள்ளிக்கிழமையும் அம்பிகை நவசக்தி மண்டபத்தில் கொலுவீற்றுத்
தரிசனம் தருகிறாள். ஆடியில் திருக்கல்யாணம் நடைபெறும்.
பிதிர்க் கடனை நீக்கவல்ல தலமாதலால் அமாவாசை, கிரஹணம் மகோதய-அர்த்தோதய புண்ணிய
காலங்கள், மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் பெருந்திரளான மக்கள் கடல் நீராடிப்
பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்கிறார்கள். ஆடி அமாவாசை,தை அமாவாசை தினங்களிலும்
முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வருகின்றனர்.
உஜ்ஜைனி மாகாளி கோயில் |
பிற கோயில்கள்: அக்னி தீர்த்தத்தருகில் மேற்கு பார்த்துள்ள உஜ்ஜைனி
மாகாளி கோயில், கந்தமாதன பர்வதம், கோதண்டராமர் கோயில் ஆகியன.
காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் |
யாத்ரீகர்கள் தங்குவதற்கு தேவஸ்தான அறைகளும், காஞ்சி மடம் ,
சிருங்கேரி மடம் , காசி மடம், ஆகியனவும் மற்றும் தனியார் விடுதிகளும் உள்ளன.
மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்து விளங்குவதும்
ஜ்யோதிலிங்க ஸ்தலமும் ஆன இராமேசுவரத்தை தரிசித்து முந்தை வினை முழுதும் நீங்கிப்
,பிறப்பற்ற பெரு வாழ்வு அருளுமாறு ஸ்ரீ இராமலிங்க மூர்த்தியையும் ,ஸ்ரீ பர்வத
வர்த்தனி அம்பிகையையும் வேண்டி உய்வோமாக.