வரிஞ்சையூர் சிவாலயம் |
சிவனடியார்களை நிந்தித்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற உணர்வுடன் தொண்டாற்றியவர் சத்தி நாயனார். அறுபத்து மூவருள் ஒருவரான இவரை , சுந்தரமூர்த்தி சுவாமிகள், " சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் " என்று பாடுகிறார். தாக்ஷாயணி தேவியார் சிவ நிந்தையைப் பொறுக்காமல் சாபமிட்டாள் . ஆனால் சத்தி நாயனாரோ சிவனடியார்களை நிந்தித்தவர்களையும் தண்டித்தார்.
காவிரி பாயும் சோழ வளநாட்டில் வரிஞ்சையூர் என்ற தலத்தில் வேளாளர் குலத்தில் அவதரித்தவர் நம் நாயனார். திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியிலுள்ள கீழ் வேளூரிலிருந்து கச்சனம் செல்லும் பாதையில் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள தேவூரிலிருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது வரிஞ்சையூர் என்னும் அழகிய கிராமம். தற்போது அதனை வரிஞ்சியூர் என்று அழைக்கிரார்கள்.
சத்தி நாயனார் சன்னதி |
சிவனடியாரை இகழ்ந்தோரை நாயனார் தண்டித்தல்- தாராசுரம் சிற்பம் |
வரிஞ்சையூரில் உள்ள சிவாலயத்தில் சத்தி நாயனாருக்காக தனிச் சன்னதி அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் கூப்பிய கரங்களுடன், சுவாமி சன்னதியை நோக்கியவாறு நாயனார் காட்சி அளிக்கிறார். அம்பிகை சன்னதி தெற்கு நோக்கியது. சுவாமி சன்னதியின் அர்த்த மண்டபத்தில் பெரிய புராணத்தில் வரும் சத்தி நாயனார் புராணத்தைக் கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார்கள். ஒரு கால பூஜையே நடைபெறுகிறது. அர்ச்சகர் வெளியூரிலிருந்து வருகிறார். பிற ஊர்களில் இருந்து வரும் அடியார்களுக்கு உள்ளூர் அன்பர்கள் ஆலய தரிசனம் செய்து வைக்கிறார்கள். ஐப்பசி மாதப் பூச நக்ஷத்திரத்தன்று நாயனாரது குருபூஜை நடைபெறுகிறது. வெளியூர் அன்பர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். மற்ற நாட்களில் உள்ளூர் அன்பர்கள் தங்களால் இயன்ற பணியைச் செய்து வருகிறார்கள் .
தொலை தூரத்திலிருந்து இங்கு வரும் அன்பர்கள் குறைவாக இருந்தாலும் , தேவூர், கீழ்வேளூர், திருவாரூர், சிக்கல், நாகை ஆகிய ஊர்களிளிருந்தாவது அன்பர்கள் அடிக்கடி இங்கு தரிசிக்க வர வேண்டும். அதனால் ஆலயம் நன்கு பராமரிக்கப் படுவதுடன், அர்ச்சகரையும் ஊக்குவிக்க முடியும். முதிர்ந்த வயதிலும் வெளியூரிலிருந்து வந்து பூஜை செய்து விட்டுப் போகும் அர்ச்சகர் நலனைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை அல்லவா ?
நாயன்மார்கள் அவதரித்த தலத்தை மக்கள் ஒருபோதும் கை விடலாகாது. இயன்ற வகையில் எல்லாம் அக்கோயில்களுக்கு நம்மாலான உதவியையும் பணியையும் செய்ய முன் வர வேண்டும். போக்குவரத்து வசதிகள் நிரம்ப உள்ள இக்காலத்திலும் நாம் புறக்கணித்தால், இனி வரும் சந்ததியர்க்கு முற்றிலுமாக அக்கறை இல்லாமல் போய் விடும். அதற்காகவாவது நாம் வழி நடத்திக் காட்ட வேண்டாமா ? நமது பண்டைய வரலாறுகளும், மரபுகளும், கலைச் செல்வங்களும் பாதுகாக்கப் பட வேண்டாமா ? நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நேரம் இது.