Wednesday, July 12, 2017

காரைக்கால் அம்மையாரும் மாங்கனித் திருநாள் விழாவும்

காரைக்கால் நகரும், வணிக குலமும் செய்த மாதவத்தின் பயனாகத் , தனதத்தன் என்பவரது மகளாகத்    திருமகளுக்கு நிகரான பேரழகுடன், புனிதவதியார் தோன்றினார். இளமையில் மொழி பயிலும் காலத்திலிருந்தே சிவபிரானிடமும், சிவனடியார்களிடமும் பேரன்பு பூண்டு விளங்கினார். மணப் பருவம் வந்த தனது மகளுக்கேற்ற மணாளனுக்கு மணம் முடிக்கக் கருதிய  தனதத்தன்  , நாகப் பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி என்பவரது மகனான பரம தத்தனே ஏற்றவன் எனக் கருதினான் . முதியோர்கள் பலரும் காரைக்கால் நகருக்கு வந்து, நீ பெற்றெடுத்த மகளைப் பரமதத்தனுக்கு மணம் புரிவாயாக என்றார்கள். அதன்படி, இருவீட்டாரும் சம்மதித்து, மண நாள் நிச்சயமானதும் மண ஓலை மூலம் உற்றார் உறவினர்களுக்கு அறிவித்தனர். 

மயில் போன்ற புனிதவதியாருக்கும்  காளை  போன்ற பரமதத்தனுக்கும் மிகச் சிறப்பாகத் திருமணம் நடந்தேறியது. தனது  அருந்தவப்புதல்வியை நாகைக்கு அனுப்ப மனம் வராத தனதத்தன், தன் மகள் இல்லறம் நடத்துவதற்காகக் காரைக்கால் நகரிலேயே ஒரு அழகிய மாடம் அமைத்து அவ்விருவரையும் அங்கு வசிக்கச் செய்தான். இவ்வாறு திருமணம் இனிதே நடந்தேறியபின்னர் , நிதிபதி, நாகைக்குத் திரும்பினான். புனிதவதியாரும், சிவபெருமான் கழலுக்கு அன்பு செய்தவராக, மனையறத்தின் பண்பு வழுவாமல் இல்லறத்தை இனிது நடத்தி வந்தார்.

சிவனடியார்கள் வந்தால் அவர்களை உபசரித்து,உணவு அருந்தச் செய்து,அவர்களுக்கு ஆடைகளும் ஆபரணங்களும் வழங்குவதை நியமமாகக் கொண்டிருந்தார் புனிதவதியார். அவ்வாறு இருந்து வரும் நாட்களில், ஒரு சமயம், பரமதத்தனிடம் இரு மாங்கனிகளைச்  சிலர்  கொண்டு வந்து தந்தனர் . அவற்றைப் பெற்றுக் கொண்ட பரமதத்தன் அவர்களைத்  தனது மனைக்கு அனுப்பி,அக்கனிகளைப் புனிதவதியாரிடம் கொடுக்குமாறு கூறினான். அதன்படி வந்தவர்களும்,அவ்விரு மாங்கனிகளையும் புனிதவதியாரிடம் கொடுத்து விட்டுச் சென்றனர். 

பன்னகாபரணரான சிவபெருமானது அடியார் ஒருவர் மிகுந்த பசியோடு அவ்வேளையில் புனிதவதியாரின் மனையை வந்தடைந்தார். அவரது பாதங்களை வணங்கி வரவேற்ற புனிதவதியார், அவரது பசியைத் தீர்க்கக்  கருதி, விரைந்து இன்னமுதாக்கி ,  இதனை விடப் பேறு உண்டோ என்று கருதியவராக அடியாருக்கு அமுது செய்வித்தார். பரமதத்தன் கொடுத்தனுப்பிய இரண்டு மாங்கனிகளில் ஒன்றையும் சிவனடியாரது இலையில் படைத்தார். பசி நீங்கிய அடியார், மனமகிழ்ந்து  அவரது செயலை உவந்தவராக அங்கிருந்து நீங்கினார். 


வீடு திரும்பிய பரமதத்தன், நீராடிவிட்டு உணவருந்த வந்தபோது,கற்பில் சிறந்த புனிதவதியார்  அவனுக்கு அமுது செய்விக்கலானார். அப்போது இலையில் இட்ட மாங்கனியை உண்ட வணிகன், தான் அனுப்பிய மற்றொரு கனியையும் இலையில் இடுமாறு பணித்தான். அதனைக் கொண்டு வருவார் போல அகன்ற புனிதவதியார் மனம் தளர்ந்து, இறைவனை வேண்டி நிற்கவே, பெருமான் அருளால் அவரது கைகளில் அதி மதுரமான மாங்கனி ஒன்று வந்தடைந்தது. அதனைப்  பெற்று மிகவும் மகிழ்ந்த புனிதவதியார் உடனே விரைந்து சென்று கணவனாருக்கு அதனைப் படைத்தார். அக்கனியின் சுவை மூவுலகிலும் இருத்தல் அரியது என உணர்ந்த வணிகன், புனிதவதியாரிடம் அக்கனி எவ்வாறு கிடைத்தது என்று உரைக்குமாறு கேட்டான். 

கணவனிடம் உண்மையைக் கூறுவதே முறை என்று எண்ணியவராகப் புனிதவதியார் நடந்தவற்றை எடுத்துக் கூறி, ஈசன் திருவருளே மற்றொரு கனியையும் தந்தது என்றார். அப்படியாயின் அதே போன்ற அதிமதுரக் கனியை ஈசனிடம் மீண்டும் பெற்றுத் தருவாய் என்று பரமதத்தன் கூறினான். அதனைக் கேட்ட புனிதவதியார், இறைவனைத் துதித்து         "எம்பெருமானே, இப்போது தேவரீர் மற்றோர் கனியை வழங்கி அருளாவிட்டால் எனது உரை பொய் என்று ஆகி விடுமே"  என்றார். அப்போது,யாவரும் அதிசயிக்கத்தக்க வகையில், சிவனருளால் ஒரு மாங்கனி அவரது கையை வந்தடைந்தது . அதனைத் தன்  கணவனாரிடம் புனிதவதியார் கொடுத்தவுடன்  பரமதத்தன் அதனைப் பெறக்  கைகளை நீட்டிய போது, அக்கனி மாயமாய் மறைந்தது. அதனைக் கண்ட வணிகன் அஞ்சி நடுங்கினான். புனிதவதியாரை மனைவியாகக் கருதாமல் தெய்வத்தன்மை வாய்ந்த  பெண்ணாகக் கருதி, இனி மேல் அவருடன் கணவனாக வாழ்வது தகாது என எண்ணி , கடல் கடந்து வணிகம் செய்து கொண்டு வருவதாகக் கூறி விட்டு, அங்கிருந்து நீங்கி, சுற்றத்தார் துணையுடன் மரக்கலம் ஒன்றைக் கொண்டு கடல் கடந்து ஒரு நாட்டிற்குச் சென்று பொருளீட்டிய பின்னர்,மீண்டும் நாகைக்கு வந்து சேர்ந்தான். அந்நகரில் மற்றோர் பெண்ணை விவாகம் செய்து கொண்டு ஒரு பெண் மகவைப் பெற்றான். புனிதவதியாரைத்  தெய்வமாகவே எண்ணிய வணிகன் அப்பெண் குழந்தைக்குப் புனிதவதி என்றே பெயரிட்டான். 


கடல் கடந்து வாணிபம் செய்து மீண்ட பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருப்பதாகச் செய்தி வரவே, புனிதவதியாரை அவரது சுற்றத்தார்கள் ஒரு சிவிகையில் ஏற்றி, பரமதத்தன் இருந்த நகருக்குக் கூட்டி வந்தனர். அவரது வருகையை அறிந்து அச்சம் அடைந்த வணிகன், தனது மனைவியுடனும், பெண் குழந்தையுடனும் புனிதவதியாரது இருப்பிடத்தை அடைந்தான். புனிதவதியாரது புனித அடிகளில் மனைவி-குழந்தையுடன் வீழ்ந்து வணங்கி," நாங்கள் வாழ்வது உமது அருளால்" என்றான்.
இவ்வாறு கணவன் ,தன்னை வணங்குவதைக் கண்டு அச்சமடைந்த புனிதவதியார் , சுற்றத்தார்கள் பக்கத்தில் சென்று ஒதுங்கி நின்றார். பரமதத்தனை " இவ்வாறு செய்தல் தகுமோ "  எனக்  கேட்டார்கள்  சுற்றத்தார்கள். அவர்களை நோக்கிய வணிகன், " இவர் மானுடர் அல்லர். பெரும் தெய்வம். ஆகவே அவரது பெயரையே இக்குழந்தைக்கு இட்டேன். நீங்களும் அவரைப் போற்றிப் பணியுங்கள்" என்றான். அதனைக் கேட்ட சுற்றத்தாரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனைக் கண்ட புனிதவதியார், " கணவனுக்கென்றே இவ்வுடலைத் தாங்கி வந்தேன். இந்த வார்த்தைகளைக் கேட்ட படியால், இவ்வுடலின் தசைப் பகுதியைக் கழித்து விட்டுப்  பேய் வடிவம் அடியேன் பெறுமாறு அருள் செய்வாய்" என்று பரமனை வேண்டி நின்றார்.இறைவனும் அவர் வேண்டியபடியே புனிதவதியாரைப் பெண் பேயாக்கினார்  மண்ணும் விண்ணும் வணங்கும் பேய் வடிவத்தை ஈசனருளால் பெற்றார். எங்கும் மலர் மழை பொழிந்தது. தேவ துந்துபிகள் முழங்கின. முனிவர்களும் வணங்கினர். சுற்றத்தார்கள் தொழுது வணங்கியவராக அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

பேய் வடிவம் பெற்றவுடன் இறைவனை, அற்புதத் திருவந்தாதி, இரட்டை மணி மாலை ஆகிய துதிகளால் பரவினார் பேயார். பேய் வடிவைக்கண்டவர்கள் அஞ்சி விலகினார். தனது உருவம் எதுவாக இருந்தால் என்ன, ஆண்ட நாயகனாகிய சிவபெருமான் என்னை அறிவார். அதுவே போதுமானது என்ற சிந்தையுடன், கயிலாயத்தை நோக்கிச் சென்றார் புனிதமான வடிவம் பெற்ற மன நிறைவுடன். கால் நடை தளர்ந்ததும்,தலையினால் நடந்து சென்றார். அவ்வெள்ளி மலையின் மீது அவ்வாறு ஏறி வருவதைக் கண்ட உமாதேவியார், இறைவனை நோக்கி , இவ்வாறு பேய் வடிவில் வருவது யார் என்று வினவ, பெருமான்,    " இவள் நம்மைப் பேணும் அம்மை" என்று உலகெலாம் அறியும் வகையில் அருளிச் செய்தார். இவ்வாறு கயிலாய நாதன் அருளவும், பேயார் , அவ்வருளை வியந்து போற்றி, " அப்பா" என்று பிரானது செம்பொற் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். வணங்கிய அம்மையாரது அன்பு கண்டு மகிழ்ந்த இறைவன், " நீ வேண்டும் வரம் யாது " என்று வினவ, அம்மையார், "  தருமமே வடிவாகிய இறைவா, என்றும் குறையாத பேரன்பு கொண்டு உன்னை வழிபட வேண்டும். பிறவாத நிலை பெற வேண்டும். ஒருக்கால் பிறந்து விட்டாலும் உன்னை என்றும் மறவாமல் இருக்க வேண்டும் . நான் மகிழ்ச்சியோடு உன்னைப் பாடி, நீ ஆடும்போது உனது திருவடியின் கீழ் இருக்க வேண்டும் என்று வரம் வேண்டினார் அம்மை.


" தென்திசையில் உள்ள திருவாலங்காட்டுக்குச் சென்று அங்கு நாம் ஆடும் மாநடம் கண்டு ஆனந்தமயமாகி நம்மைப் பாடுவாய் " என்று இறைவன் கட்டளை இட, காரைக்கால் அம்மை திருவாலங்காட்டைத்   தலையினால் நடந்து சென்றடைந்தார். அங்கு அண்டம் உற நிமிர்ந்தாடும் அப்பனை மூத்த திருப்பதிகம் பாடி வணங்கினார். பின்னர் ஒரு பங்குனி சுவாதி நன்னாளன்று ஆடும் சேவடிக்கீழ் என்றும் இருந்து பாடிக்கொண்டிருக்கும் உயர் நிலையை  இறையருளால் பெற்றார். 


காரைக்காலில் ஆண்டு தோறும் ஆனி  மாதத்தில் மாங்கனி விழா  மிகச் சிறப்பாக நடை பெறுகிறது. ஊரின் மத்தியிலுள்ள சிவாலயத்தில் காரைக்கால் அம்மையாருக்கு ஒரு சன்னதி இருக்கிறது. புராணப்படி, காரைக்கால் அம்மையாரது வரலாறு இவ்விழாவின் போது நடத்திக் காட்டப்படுகிறது. 


புனிதவதியார் ஜனனம், பரமத்தனுடன் திருமணம் ,புனிதவதியாரின் இல்லம் தேடி சிவனடியார் மிக்க பசியுடன் வருதல் போன்ற ஐதீக காட்சிகள் நமக்கு முன்னே தோன்றுகின்றன. பிக்ஷைக்காக பிக்ஷாடனரையே ஊர்வலமாக எழுந்தருளச் செய்கிறார்கள். பவழக் கால் சப்பரத்தில் பெருமான் எழுந்தருளும்போது வழி நெடுகிலும் மக்கள் தீபாராதனை தட்டில் மாம்பழங்களையும் சேர்த்து சமர்ப்பிக்கின்றனர். விழாவுக்கு வரும் பக்தர்களும் மாம்பழங்களைப் பிரசாதமாகப் பெற்று மகிழ்கின்றனர். சுவாமியை நோக்கியவாறே அதிகார நந்திகேசுவரரும் எழுந்தருளுகின்றார்.


அதிகார நந்திகேசுவரர் 
அருகிலுள்ள பிள்ளையார் கோயிலில் பரமதத்தனைத்  தரிசிக்கிறோம். அந்த இடம் காசுக் கடைத் தெரு என்ற வணிகர் வீதியாக அக்காலத்திலிருந்தே வழங்கப்பட்டது. மாலையில் பரமதத்தன் கடல் தாண்டி போவதற்காகப்  பெரிய படகு ஒன்றை ஊர்வலமாக நகரில் எடுத்து வருகிறார்கள். மின் விளக்குகளால் அது அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.  


கடல் தாண்டக் கப்பல் 
இரவில் பரமதத்தனின் இரண்டாவது திருமணத்தை நடத்திக் காட்டுகிறார்கள். செய்தி அறிந்த புனிதவதியார் பல்லக்கில் எழுந்தருளுகிறார். பரமதத்தன், தன்  மனைவி மக்களுடன் அவரை மும்முறை வலம் வந்து வணங்குகின்றனர். விடியற்காலை சுமார் 5 மணி அளவில் காரைக்கால் அம்மையார் யாவரும் போற்றும் பேய் உருவத்துடன், ஊரிலுள்ள சிவாலயத்தை நோக்கி எழுந்தருளும்போது, சுற்றிலும் விளக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன.  மங்கலான தீவர்த்தி ஒளியில் மட்டுமே அம்மையாரைத் தரிசிக்க முடியும்.

 சிவாலயத்தை அடைந்ததும், அம்மையாருக்குக் காட்சி கொடுத்த வைபவம் நடைபெறுகிறது. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்தும் ஏராளமான அன்பர்கள் வந்திருந்து இந்த அற்புதக் காட்சியைக் கண்டு பரவசமாகின்றனர். வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒருமுறையேனும் காணவேண்டிய அற்புத தரிசனம் இது. ஆதி அந்தமில்லா இறைவனின் திருநடனத்தின் போது அருகே இருந்து கீதம் பாடும் பேறு  பெற்ற அம்மையின் மலர்த்தாள் போற்றுவோமாக.  

Saturday, May 20, 2017

திருப்புகலூரில் அப்பர் ஐக்கிய விழா

தலத்தின் இருப்பிடம்:சோழ வளநாட்டில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் திருப்புகலூரும் ஒன்று. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் இருப்புப் பாதையில் உள்ள நன்னிலம் ரயிலடியில் இறங்கி அங்கிருந்து  கிழக்கே செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. பேருந்து மூலம் பயணித்தால் கோயில் அருகிலேயே இறங்கிக் கொள்ளலாம். பேருந்து நிலையத்திலிருந்து ஆலய முகப்பு வளைவு வழியாக வடக்கில் சிறிது தூரம் நடந்தால் ஆலயத்தை அடையலாம்.

ஆலயமும் அக்கினி தீர்த்தமும் 
ஆலய அமைப்பு: கிழக்கு நோக்கிய  ராஜ கோபுரத்திற்கு எதிரில் அகழி இருப்பதைப் பார்க்கிறோம். இந்தத் தீர்த்தம், அக்கினி தீர்த்தம் எனப்படுகிறது.அதன் படிக்கட்டருகே சந்திர சேகரர் சன்னதி அமைந்துள்ளது. பாணாசுரன் தனது தாயார் வழிபடுவதற்காக இந்த ஆலயத்தை அடியோடு அகழ்ந்து தோண்ட முற்பட்டும் இயலாமல் போயிற்று. அவன் அவ்வாறு நான்கு புறமும் தோண்டிய பகுதியே அகழி ஆயிற்று. 

அம்பிகை சன்னதி 
ராஜ கோபுர வாயிலைக் கடந்தவுடன் நமது வலப்புறம் தெற்கு நோக்கியவாறு அம்பிகையின் சன்னதியைக் காண்கிறோம். கருந்தாழ் குழலி என்று இந்த அம்பிகை இத்தலத்துத் தேவாரப் பாடலில் குறிப்பிடப்படுகிறாள். வடமொழியில் இந்த இறைவியை சூளிகாம்பாள் என்று அழைக்கின்றனர். இராஜாதி இராஜன் காலத்தில் திருப்பள்ளிக் கட்டில் இந்த அம்பிகைக்கு வழங்கப்பட்டதாகக் கல்வெட்டின் மூலம் அறிகிறோம்.

உள் பிராகாரத்தில் வடபகுதியில் புன்னாக  (புன்னை) விருக்ஷம் உள்ளது. இதுவே இத்தலத்தின் புண்ணிய விருக்ஷம் ஆகும். இதனடியில் செய்யப்படும் தியானம் பல  மடங்கு பலனை அளிக்க வல்லது என்பர். 

இத்தலத்தின் பிரதான மூலஸ்தானப் பெருமான், அக்னீசுவரர். சரண்யபுரீசுவரர், கோணப்பிரான் என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. இந்த சன்னதியை ஒட்டி மற்றும் ஓர் சிவ சன்னதி இருக்கக் காண்கிறோம். அங்குள்ள சுவாமிக்கு வர்தமாநீசுவரர்  என்றும் அம்பிகைக்கு மனோன்மணி என்றும் நாமங்கள் வழங்கப்படுகின்றன. இந்தப்பெருமானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்தவர் முருக நாயனார் ஆவார். அக்நீசுவரரைப் பாடிய திருஞானசம்பந்தர் வர்த்தமானீசுவரரையும் ஒரு பதிகத்தால் பாடியிருக்கிறார். அதில் முருக நாயனாரது தொண்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அப்பர் சன்னதி 
உட்ப்ராகார கன்னி மூலையில் தல விநாயகரான வாதாபி கணபதி எழுந்தருளியுள்ளார். வில்வலன்,வாதாபி ஆகிய இருவரும் வழிபட்ட மூர்த்தி இவர். இதைத் தவிரவும்,பூதேஸ்வரர், பவிஷ்யேசுவரர், அகோர லிங்கம், சிந்தாமணீசுவரர் ஆகிய மூர்த்திகளும், ததீசி, பராசரர், பிருகு, புலஸ்தியர்,ஜாபாலி, பாரத்வாஜர், வாமதேவர், ஆகியோர் பிரதிஷ்டை செய்து பூஜித்த சிவலிங்க மூர்த்திகளையும் தரிசிக்கலாம்.  உள் பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் அப்பர் (திருநாவுக்கரசர்) சன்னதியும் உள்ளது. 

திருவாரூரில் தான் தரிசித்த திருவாதிரை நாள் விழாச் சிறப்பைத்  திருப்புகலூரில் திருஞான சம்பந்தரை சந்தித்தபோது, அவர் கேட்கும்படிப்   பதிகமாக அருளினார் அப்பர் பெருமான். பின்னாளில் , இங்கு வந்தசுந்தரர், ஆலயம் மூடியிருக்கவே, களைத்தவராக, அங்கிருந்த  செங்கல்லைத் தலைக்கு வைத்தவாறு  உறங்கி விட்டுக் கண் விழித்த போது ,அக்கல்லானது    செம் பொன்னாக மாறி இருப்பதைக் கண்டு பரவசமாகித் , " தம்மையே புகழ்ந்து .. " எனத் தொடங்கும் தேவாரப் பதிகம் பாடியதாகப் பெரிய புராணம் மூலம் அறிகிறோம். 

இத்தலத்தின் பிரமோற்சவம் வைகாசி விசாகத்தை முன்னிட்டுப் பத்து நாட்கள் நடைபெறுகிறது. அப்பர் சுவாமிகள் இந்தத்தலத்தில்தான் சித்திரை மாத சதயத்தன்று சிவமுக்திப் பேறு பெற்றதால் அவரது வரலாற்றை நினைவுறுத்துவதாகப் பத்து தினங்கள் விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடை பெறுகிறது. 

முதல் நாளன்று, சூலை நோய் தீரப்  பெற்ற வரலாற்று நிகழ்ச்சி விழாவும், இரண்டாம் நாள் பல்லவ மன்னன் அவரை நீற்றறையில் இட்ட பொது, " மாசில் வீணையும் " என்ற பதிகம் பாடி சிவானந்தத்தில் திளைத்திருந்ததும், மூன்றாம் நாள் சமணர்கள் ஏவிய யானை இவரைத் தீங்கு செய்யாது வணங்கிச் சென்றதும், நான்காம் நாள் சமணர்கள் இவரைக் கல்லில் கட்டிக் கடலில் இட்டபோது, நமசிவாயப் பதிகம் பாடிக் கரை ஏறியதும், ஐந்தாம் நாள், பெண்ணாகடத்தில் சூலக் குறியும், ரிஷபக் குறியும் தோள்களில் பொறிக்கப் பெற்றதும், ஆறாம் நாள் , திருநல்லூரில் திருவடி தீக்ஷை பெற்றதும், ஏழாம் நாள் திங்களூரில் அப்பூதி அடிகளின்  பாம்பு தீண்டிய  மகனைப் பதிகம் பாடி உயிர்ப்பித்ததும், எட்டாம் நாளன்று  திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றதும், திருமறைக்காட்டில் மூடியிருந்த ஆலயக் கதவைப் பதிகம் பாடித் திறந்ததும், ஒன்பதாம் நாள் பழையாறை வடதளியில் சமணர்களால் மூடப்பட்டிருந்த ஆலயத்தைப் பதிகம் பாடித் திறந்ததும், கயிலை யாத்திரை செய்து, திருவையாற்றில் கயிலைக் காட்சியைக் கண்டதும், பத்தாம் நாள் காலையில் திருப்பைஞ்ஞீ லியில் கட்டமுது பெற்றதும்  ஆகிய நிகழ்ச்சிகள் ஐதீக விழாக்களாக நடைபெறுகின்றன. 

பத்தாம் திருநாளான சித்திரை சதயத்தன்று மாலை அப்பர் பெருமான் ,ப்ராகாரத்திலுள்ள கட்டமுது மண்டபத்திலிருந்து புறப்பாடாகிப்  பிராகாரத்தில் எழுந்தருளுகிறார். அவர் உழவாரப் பணி செய்ததை நினைவு கூறுவதாகப்  பிராகாரத்தில் உழவாரப் பணி செய்யப்படுகிறது. 

அப்போது இறைவன் அவரைச்  சோதிக்க வேண்டி அவ்விடத்தில் பொன்னும்,மணிகளும் தோன்றச் செய்தபோது, நாட்டம் எதுவும் கொள்ளாமல் அவற்றைப்  பருக்கைக் கற்களோடு கோயிலுக்கு வெளியில் அகற்றிய  வரலாறும் நடத்திக் காட்டப் படுகிறது. 

அரம்பையர் நடனம் 
அப்பரது பெருமையை உலகறியச் செய்வதற்காக சிவபெருமான் தேவ லோக அரம்பையர்களை அவருக்கு முன்னே தோன்றி நடனமாடச் செய்தபோது, ஐம்புலன்களையும் வென்ற நாவுக்கரசர்,  " பொய்ம்மாயப் பெருங் கடலில்.. " எனத் துவங்கும் பதிகத்தைப் பாடியவுடன் அவரது உறுதியைக் கண்ட அரம்பையர்கள் அங்கிருந்து அகன்ற வரலாற்றைப்  பிராகாரத்தில் செய்து காட்டுகிறார்கள். சிறுமியர்கள் நடனம் ஆடிவிட்டுப் பிறகு அப்பர் பெருமானை வலம் வந்து திருநீறு பெற்றுக் கொண்டு செல்வதாக நடத்திக் காட்டுகிறார்கள். இந்நிகழ்ச்சிகள், இவ்வாலயத்தை நிர்வகிக்கும் வேளக்குறிச்சி ஆதீன கர்த்தரின் முன்னிலையில் நடை பெறுகிறது. 

பிறகு இரவு 12 மணி அளவில் ப்ராகாரத்திலுள்ள அப்பர் சன்னதியில் மூலவருக்கும் உற்சவ மூர்த்திக்கும்  சிறப்பாக அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் உற்சவ மூர்த்திக்கு அலங்காரமாகி வீதி புறப்பாடு நடைபெற்று,மீண்டும் கோயிலுக்குக் காலை  சுமார் 5 மணிக்கு வந்து சேர்ந்தவுடன், அப்பர் சுவாமிகள் நேராக அக்னீசுவரப் பெருமான் சன்னதிக்கு,          "எண்ணுகேன் " எனத் தொடங்கும் திருத்தாண்டகம் பாடியவாறு வந்தடைகிறார். சுவாமி சன்னதிக்குள் சென்றதும் நாம் காண்பது ஒளிப் பிழம்பு மட்டுமே. " அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார் " என்று இந்த நிலையை சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில்  குறிப்பிடுவதை நேரில் காணும் பொது நாம் என்ன பேறு பெற்றோமோ என்று நினைக்கிறோம்.  

நித்திய பூஜைகள் நடைபெறுவதே சிரமாக ஆகி வரும் இந்நாட்களில் இது போன்ற பத்து நாள் உற்சவங்கள் நடத்துவது இன்னமும் சிரமாக இருக்கிறது. ஆலயத்துக்கு வர வேண்டிய வருமானம் முழுவதும் வராவிட்டால் விழாக்களை எவ்வாறு நடத்த முடியும்? உபயதாரர்களை நம்பியே பல ஊர்களில் விழாக்கள் நடை பெறுகின்றன. அவர்களும் பின் வாங்கிவிட்டால் உற்சவம் நின்று போகும் நிலை உருவாகும். அதற்கு ஒருபோதும் இடம் தரக் கூடாது. ஆன்மீக அன்பர்கள் இதுபோன்ற விழாக்களை நேரில் கண்டு ( ஆயுளில் ஒரு முறையாவது) மற்றவர்களையும் அனுப்பி வைத்தால் தான் இவற்றைத் தொடர்ந்து நடத்த முடியும். தரிசனம் செய்யவும் வாண வேடிக்கை பார்க்கவும் மட்டும் போகாமல் நம்மால் இந்த சிவ தர்மத்திற்குச்  சிறிதாவது உதவ முடியுமா என்று ஒவ்வொருவரும் சிந்தித்துச்  செயல் படுவது நல்லது. 

Monday, March 27, 2017

புதுப் பொலிவு பெறும் வைப்பூர் சிவாலயம்

வைப்பூர் என்ற ஊரின் பெயரை அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களைத்தவிர மற்றவர்கள்  கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர் சரித்திரம்  வாசித்தவர்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். மயிலாடுதுறையிலிருந்து ஆண்டிப்பந்தல் வழியாகத் திருவாரூர் சென்றால்  கங்களாஞ்சேரி என்ற ஊர் வரும். அங்கிருந்து கிழக்கே நாகூர் செல்லும் வழியில்தான் வைப்பூர் என்ற ஊர் இருக்கிறது. அதிகப் போக்குவரத்து இல்லாத அமைதியான சாலை. வழி நெடுகிலும் கிராமங்களே உள்ளன. 

இந்த சாலையில் சென்றால் பல சிவத்தலங்களைத் தரிசிக்கலாம். அவற்றில் முக்கியமானது, விற்குடி ஸ்ரீ வீரட்டானேசுவரர் ஆலயம். இது அஷ்ட வீரட்டானங்களில் ஜலந்தராசுர வதம் செய்த வீரச் செயல் நடந்த தலம். சம்பந்தரின் பதிகம் பெற்றது. நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கருங்கல் திருப்பணி செய்திருக்கிறார்கள். 

விற்குடியைத் தரிசித்த பிறகு மீண்டும் நாகூர் சாலைக்கு வந்து மீண்டும் கிழக்கு நோக்கிப் பயணிக்கிறோம். வழியில், சனைச்சரன்  சிவ வழிபாடு செய்த ஈசுவர வாசல் வருகிறது. மூங்கில் மரங்கள் சூழப்பெற்ற ரம்மியமான சூழலில் ஆலயம் அமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரில் சிறு வாய்க்கால். மூங்கில் பாலம் மூலம் கடக்க வேண்டும். சிறியதும் பழமையானதுமான இக்கோயில் உடனடியாகத் திருப்பணி செய்யப்பெற்றுக் கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. அர்ச்சகர் வீடு அருகிலேயே உள்ளது.


பின்னர் பயணம் தொடர்கிறது. வைப்பூர் கடைத்தெருவை அடைந்ததும் இடப்புறம் திரும்பினால் தெருக்கோடியில் ஆலயம் அமைந்துள்ளது. அதற்கு அப்பால் வயல்களே உள்ளன. கோயிலுக்கு எதிரில் அழகான திருக்குளமும் ஸ்தல விருக்ஷ மேடையும் இருக்கின்றன. நாம் முதல் முறையாக இக்கோயிலைத் தரிசித்தபோது கண்கள் குளமாயின. காணக் கூடாத காட்சிகள். சுற்று மதில்  இல்லாததால் உள்ளூரில் சிலர் பிராகாரத்தை மிகவும் அசுத்தப் படுத்தியிருந்தனர். மூக்கைப் பிடித்துக் கொண்டே வலம் வர வேண்டியிருந்தது. 


அரைகுறையாகத் திருப்பணி நடை பெற்றுக் கை விடப்பட்டதோடு, நடந்து வந்த ஒரு கால பூஜையும் நின்று போயிருந்தது. கதவுகளே இல்லாத சன்னதிகள். பிரதிஷ்டை செய்யப்படாத பரிவார மூர்த்திகள், வேரூன்றிப் பிளவு பட்டிருக்கும் விமானங்கள் ஆகியவற்றைப் பார்த்தால் கல் மனமும் கரைந்தே தீரும். உள்ளூர்வாசிகள் ஓரிருவரே தினமும் விளக்கேற்றி வந்தனர்.  ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் சேக்கிழார் பெருமானது வாக்கில் வந்துள்ள இவ்வூருக்கு இந்த நிலை வரலாமா? சைவ சமய ஆர்வலர்கள் எங்கே போயினர்? பெரிய ஊர்களில் கயிலாய வாத்திய முழக்கமும் முற்றோதுதலும் செய்து விட்டால் போதும் என்று நினைக்கிறார்களா? இப்பழமை வாய்ந்த தலங்களைப் பற்றி யார்தான் கவலைப் படப் போகிறார்கள் என்றெல்லாம்  யோசிக்க வேண்டியிருந்தது. 

பிறர் என்ன செய்கிறார்கள் என்று வினா எழுப்புவதை விட, நாம் நம்மால் முடிந்த அளவில் என்ன செய்யப்போகிறோம் என்று யோசித்ததில் நமது அமைப்புக்கு வழி காட்டும் நல்லன்பர் ஒருவரின் பெருந்துணை இறையருள் காரணமாக வெளிப்பட்டது. திருப்பணிகள் துவங்கலாயின. அதன் விவரங்களை அறியும் முன்பாக  இத் தலப் பெருமையையும் இங்கு அறிந்து கொள்வோமாக.

வைப்பூரில் தாமன் என்பவன் இருந்தான். அவனுக்கு ஏழு புதல்விகள். அவர்களில் மூத்தவளைத் தனது மருமகனுக்கு வாழ்க்கைத் துணைவியாகத் தருவதாக வாக்களித்திருந்தான். ஆனால்  ஆசை காரணமாகத் தன வந்தன் ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டான்.இப்படியே மற்ற ஐந்து பெண்களையும் தனவந்தர்களுக்கே மணம் செய்து கொடுத்தான். ஏழாவது பெண் ஒருத்திக்கே மணம் செய்ய வேண்டியிருந்தது. தன்னையும் மற்ற சகோதரிகளுக்கு நேர்ந்தது போலத்  தந்தை  வேறு ஒரு வரனுக்குக்  கொடுத்துவிட்டால் வாக்கு மீறிய பெரும் பழி வந்து விடுமே என்று அஞ்சித்  தனது முறைப் பையனையே மணக்கத் துணிந்தாள் அப்பெண் . 


அக்கன்னியும் அவளது  முறைப்பையனும் வைப்பூரை விட்டுக் கிளம்பினர். இரவு நேரம் வந்து விட்டபடியால் திருமருகல் என்ற ஊரில் உள்ள மாணிக்க வண்ணரது ஆலயத்தை ஒட்டியிருந்த மடத்தில் உறங்கினர். அப்போது அவ்வணிகப் பிள்ளையை ஒரு பாம்பு கடித்து விட்டதால் விஷம் தலைக்கேறி உடனே அவன் மாண்டு விட்டான். 

துணை யாரும் இல்லாத அந்த அபலைப்பெண் மருகல் பெருமானது திருக்கோயிலை நோக்கிய வண்ணம் கதறலானாள். கடல் நஞ்சை உண்ட பெருமானே, மாலயனாலும் காண முடியாத கடவுளே, சாம்பலாக ஆகுமாறு நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்த பின்னர், அவனது மனையாளாகிய ரதி தேவி வேண்டியதற்கு இரக்கப்பட்டுக்  காமனை மீண்டும் உயிர்ப்பித்த கண்ணுதற் பெருமானே. அந்தணச் சிறுவனது உயிரைக் கொள்ள வந்த காலனைக் காலால் கடந்து அப்பாலகனுக்கு அருளிய பன்னகாபரணா, இவ்வணிகனது உடலில் ஏறிய விஷம் இறங்குமாறு காத்து அருளுவாய் என்று கண்ணீர் விட்டுக் கதறினாள் அப்பெண். 

சிவனருள் அப்பெண்ணுக்குச் சித்திக்கும் பேறு  அப்போது வாய்ந்தது. சிவத் தல யாத்திரையாக அங்கு எழுந்தருளிய திருஞான சம்பந்தப்பெருமானது திருச் செவிகளில் அப்பெண்ணின் அழு குரல் கேட்கவே, மனமிரங்கிய சீகாழி வள்ளல், அவளை நோக்கியவராகப் , " பயப்படேல் நீ " என்று அபயம் தந்தருளினார். அவளுக்கு நேர்ந்ததை அறிந்த ஞான சம்பந்தர், அப்பெண்ணுக்குக் கருணை காட்டியவராகப் , பாம்பின் விஷம் நீங்கி வணிகன் மீண்டும் உயிர் பெறுமாறு மருகல் பெருமானை வேண்டியபடி , " சடையாய் எனுமால் " எனத் துவங்கும் தேவாரத் திருப்பதிகம் பாடியருளினார். 


                                                                                 படம் உதவி: shaivam.org         
பெருமானே, இரவும் பகலும் கண் துஞ்சாது உன்னையே வழிபடும் இவ்வபலைக்குத் துயரம் ஏற்படுவது தகுமோ என்று பாடியருளினார்.  பதிகம் நிறைவு பெற்றதும் வணிகன் விஷம் நீங்கி உயிர் பெற்று எழுந்தான்.  இருவருமாகக் காழிப் பிள்ளையாரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அவ்விருவருக்கும் முறைப்படி விவாகம் செய்து வைத்தருளினார் சம்பந்தர். திருமருகல் ஆலயத்தில் கோடைக்கால பிரமோற்சவத்தில் ஒரு நாள் செட்டிப் பெண் விவாக ஐதீக நிகழ்ச்சி, கோயிலின்   பிராகாரத்திலுள்ள வன்னி மர  மேடைக்கருகில் விமரிசையாக ஆண்டு தோறும் நடை பெறுகிறது. 

வைப்பூர்  பெண்ணுக்கு  முதலில் சோதனை ஏற்பட்டாலும், அவளது தளராத சிவபக்தியின் காரணமாக சம்பந்தரின் வருகையும் அற்புதமும் நடை பெற்று , அவளுக்குப் பெருங்கருணை கிடைக்க ஏதுவாயிற்று. இப்போது சொல்லுங்கள்.  வைப்பூர் சிவாலயம் சிதைவடைவது தகுமோ? 

இதனைக் காக்க வேண்டும் என்று திருவருள் உணர்த்தியது. முன்னர் நடை பெற்ற திருப்பணியின்போது விமான வேர்கள் முழுமையாக எடுக்கப்படாததால் அப்பகுதியில் மீண்டும் ராட்சச வேர்களுடன் மரங்கள் முளைத்து விட்டன. அவற்றை முழுமையாகக் களையாமல் மேலெழுந்தவாரியாகப் பூசி மூடி விட்டால் திரும்பவும் அவ்விடம் மரம் முளைக்கவே செய்யும். ஆகவே, மிகக் கவனத்துடன் பாதிக்கப்பட்ட பகுதியைப் பிரித்துத்  தடித்த வேர்கள் அகற்றப்பட்டன. சுவாமி அம்பாள் சன்னதிகளில் இவ்வாறு நடந்த பின்னர் உள்ளூர் வாசிகளின் வேண்டுகோளின் படி, விநாயகர், முருகன் சன்னதிகளில் தளம் போடப்பெற்றது. ஆலயத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப் பட்டது. 

அருகிலுள்ள திருப்பயற்றூர் என்னும் தேவாரத் தல ்அர்ச்சகர்  தினமும்வந்து பூஜை செய்கிறார். கும்பாபிஷேக ஏற்பாடுகளை உள்ளூர் வாசிகள் பெரும்  முயற்சி செய்கிறார்கள். 

திருப்பணியும் கும்பாபிஷேகமும் நடந்து விட்டால் மட்டும் போதாது. தினசரி பூஜைகள் முறைப்படி செய்விக்கப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். உள்ளூர் மற்றும் வெளியூர் அன்பர்கள் தரிசிப்பதோடு, இந்த ஆலயத்தைப் பராமரிக்கத்  தங்களால் ஆன உதவிகளைச் செய்வதன் மூலம் சிவ புண்ணியம் பெறலாம். அதுவே, நம் குடி முழுவதையும் காப்பதோடு,நமது சமயத்தையும் காத்து நமது சந்ததிகளுக்கு நல் வழி காட்டும். 

Monday, February 27, 2017

அதிசய ஆலயம்

தேப்பெருமாநல்லூரில் நாகம் வழிபடுதல் 
திருக்கோயில்களில் மக்கள் கூட்டம் பரிகாரங்கள் செய்யவோ அல்லது அங்கு நடந்த அதிசயம் பற்றி அறிந்ததாலோ வரத் துவங்கியுள்ளது. அப்படியாவது கிராமக் கோயில்களை நாடி மக்கள் வருகிறார்களே என்று ஆறுதல் அடைய வேண்டியுள்ளது. 

அதிசயம் அநேகம் நடைபெற்ற கோயில்களில் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள தேப்பெருமாநல்லூரும் ஒன்று. கடந்த 2010 ம் ஆண்டில் இங்குள்ள விசுவநாத சுவாமி கோயிலில் உள்ள வில்வமரத்திலிருந்து வில்வத்தைப் பறித்து வந்து கருவறையின் கோமுகம் வழியாக நுழைந்து இறைவனின் திருமுடிமீது ஒரு நாகமானது அர்பணித்ததைப்  படம் எடுத்து வெளியிட்டிருந்தார்கள். அதைக் கண்டவுடன் வெளியூர் அன்பர்கள் ஏராளமாக வரத் துவங்கினர். சூரிய கிரகணத்தின்போது இவ்வாறு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இது வழக்கமாக நடைபெறுவது என்றாலும், மக்கள் மத்தியில் பிரபலம் அடையத் துவங்கியது அந்த ஆண்டு முதல் தான்! அப்போதெல்லாம் கிரகணத்தன்று வழக்கத்திற்கு மாறாகக் கோயில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்றும் தற்போது மூடி வைக்கப்படுவதாகவும் அறிகிறோம். ஆனால் கிரகணம் முடிந்து கோயிலைத் திறந்தால்  சன்னதியில் பாம்புச் சட்டைகள் காணப்படுவதாகக் கூறுகின்றனர்.


கும்பகோணத்திலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தொலைவிலுள்ளஇந்த ஆலயத்திற்குச் செல்பவர்கள்  திருநாகேஸ்வரம் வரைசென்று அங்கிருந்து இரண்டு கி.மீ. பயணிக்கலாம். ரயில் மூலம்வருபவர்கள் கும்பகோணத்திற்கு அடுத்த நிலையமான திருநாகேஸ்வரத்தில் பாசஞ்சர் வண்டி மூலம் வந்து இறங்கிசுமார் அரை கி.மீ சென்றால் ஆலயத்தை அடையலாம். 
தேப்பெருமாநல்லூரைச் சுற்றிலும் சிறந்த சிவஸ்தலங்கள் அமைந்துள்ளன. திருவிடைமருதூர் (4 கி.மீ.) ,திருவியலூர் என்னும் திருவிசநல்லூர் (5 கி.மீ.) , திருந்துதேவன்குடி என்னும் கர்கடேசுவரர் கோயில் ( 6.5 கி.மீ.) ,தண்டந்தோட்டம் ( 5 கி.மீ.) , ஏன நல்லூர் (6.5 கி.மீ) , திருநறையூர் என்னும் நாச்சியார் கோயில் ( 6.5 கி.மீ) , திருச்சேறை (11 கி.மீ) ,திருமங்கலக்குடி ( 7 கி.மீ.) , கூகூர் (10 கி.மீ), ஆகிய சில ஊர்களை இங்குக்  குறிப்பிடலாம். 

இது ஒரு புண்ணிய பூமி எனலாம். எனவே புண்ணியம் செய்தவர்க்கே இங்கு வந்து தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது. கிழக்கு நோக்கிய இவ்வாலயத்தின் எதிரே திருக்குளம் காணப்படுகிறது. 

சுவாமிக்கு விசுவநாதர் என்றும் அம்பிகைக்கு வேதாந்த நாயகி என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. ஆண்டு முழுவதும் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் திருமேனியின் மீது விழுகின்றன. சுவாமிக்கு ருத்ராக்ஷ கவசம் அணிவிக்கப்படுகிறது. மேலும், ருத்திராக்ஷத்தால் அர்ச்சனை செய்யப்படுகிறது. சுவாமிக்கு ருத்ராக்ஷேசுவரர்  என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இத்தலத்தை வழிபடுவோர்க்கு மறு பிறப்பு இல்லை என்றும் தல வரலாற்றால் அறியலாம். பிரளய காலத்தில் மகா கணபதியே பிரமனுக்கு இத்தலத்தின் மகிமையைக் கூறியது, அம்பிகையே வேத மந்திரங்களின் பெருமையை வெளிப்படுத்தி, வேதாந்த நாயகி ஆனது, பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களும் இங்கு அமைந்தது, யாளி முகம் கொண்ட மகரந்த மகரிஷி, அகஸ்தியரின் அறிவுரைப்படி,ருத்ராக்ஷத்தால் இறைவனை அர்ச்சித்து சாப விமோசனம் பெற்றது, மேதா தக்ஷிணா மூர்த்தியே அன்னதான மகிமையை உரைத்தது ஆகிய வரலாறுகளைத் தல புராணத்தில் காணலாம்.

 பிராகாரத்தில் கன்னி மூலையில் மகா கணபதியின் அருமையான தரிசனம்கிடைக்கிறது. அதற்கு அடுத்த சன்னதியில் முருகன்-வள்ளி- தேவசேனை சமேதராய் காட்சி அளிக்கிறார். மூலவரின் பின்புற கோஷ்டத்தில்சாதாரணமாக லிங்கோத்பவர், அர்த்தநாரீசுவரர்,மகாவிஷ்ணு ஆகிய மூர்த்திகளையே காண முடியும். ஆனால் இங்கு அந்த கோஷ்டத்தில் விநாயகரைக் காண்கிறோம். 

ஆலயத்தின் பல பகுதிகளில் சுதைச் சிற்பங்கள் மிகுந்து காணப்படுகின்றன. அவற்றில் படமெடுக்கும் பாம்பின் உருவமும் காணப்படுகிறது. மூலவரது கருவறை கோமுகத் துவாரத்தின் அருகில் நாகம் படமெடுத்து ஆடுவது போன்ற சுதைச் சிற்பம் காணப்படுகிறது. இதன் வழியாகத்தான் நாகப்பாம்பு உள்ளே நுழைவதாக அறிகிறோம். 

சுவாமியை நோக்கியவாறு உள்ள நந்தி அழகான வேலைப்பாடு உடையது. பிரதோஷ வழிபாடு இவருக்குச்  சிறப்பாக நடை பெறுகிறது. 

சுவாமிசன்னதிக்குச் செல்லும் வழியில் ராகுவுக்கும் கேதுவுக்கும் ஒரு சன்னதி இருக்கிறது. இருவரும் அருகருகே நின்று காட்சி அளிக்கின்றனர். வேதாந்த நாயகியின் சன்னதி தெற்கு நோக்கியது. சுவாமியின் கோஷ்டத்தில்  மேதா தக்ஷிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்.

ஊர்ப்பெயருக்குக்  காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும், இறையருளால் ஓரளவு ஊகிக்க முடிகிறது. தேப்பெருமான் என்பது தேவாதி தேவனாகிய சிவபெருமானைக் குறிப்பது. " தே உறைகின்ற இடைமருது ஈதோ"  என்று திருஞான சம்பந்தர் வாக்கில் வருவது காண்க. இந்தப்பகுதியில் பழமை வாய்ந்த பல ஊர்கள் நல்லூர் என்ற அடைமொழியால் வழங்கப்படுவதால் ( திரு நல்லூர், திருக் கலைய நல்லூர், மணவாள நல்லூர், அவளிவணல்லூர் ஆகிய தலப் பெயர்களை நோக்குக) இதற்கும் தேப்பெருமா(ன்) நல்லூர்  என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். 

இந்த ஊரில் வேத விற்பன்னர்கள் பலர் வாழ்ந்தனர். தேப்பெருமாநல்லூர் அன்னதான சிவம் என்ற பெரியவர்  சிவத்தலங்கள் பலவற்றிற்குச் சென்று ஏராளமான அன்னதானம் செய்தவர். இவரது பெருமையைக்  காஞ்சி காமகோடி பெரியவர்கள் கூறுவதுண்டு. 

அதிசயங்கள் வெளிப்படும் நேரத்தில் தான் வெளிவரும். அப்படி வெளிவராவிட்டால் மகிமை இல்லை என்று ஆகி விடாது. ஒவ்வொரு ஊருக்கும் தனிச் சிறப்பும் சாந்நித்தியமும் நிச்சயம் உண்டு என்பதை நாம் உணர வேண்டும். எனவே, பரிகாரத்தையோ, அதிசயத்தையோ நாடிச் செல்பவர்கள் அத்தலங்களின் அருகிலுள்ள புராதனமான தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும். அப்படித்  தரிசித்துக் கொண்டே வந்தால், பக்குவ நிலை தானாகவே ஏற்பட்டு விடும். இறைவன் எங்கும் நீக்கமற இருப்பதைக் கண் கூடாகக் காணும் பேறும், அவன் தாள் மலர்களை வணங்குவதால் சித்தித்து விடும்.

Sunday, February 26, 2017

சூல விரதமும் சூல மங்கையும்

சூல மங்கலம் கோபுர வாயில் காட்சி 
விரதம் என்பது மனதை ஒருமுகப்படுத்துவதற்கும் , பண் படுத்துவதற்கும் ஏற்பட்ட சிறந்த சாதனம் ஆகும். இதைக் கடைப்பிடிக்கும்போது நியமம் அத்தியாவசியமாகிறது. உணவு உட்கொள்லாமலிருந்துவிட்டால்  மட்டும் விரதம் பூர்த்தியாகிவிடாது. உணர்வு செம்மை ஆகவேண்டுவதே இதன் உயரிய நோக்கம். விரதம் என்று பெயரளவில் இருந்துவிட்டு, ஒவ்வாத காரியங்களை மேற்கொள்வதால் என்ன பயன் ? பிறரை ஏமாற்றுவதோடு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். அதனால் தான் விரதங்களைக் கடைப்பிடிக்கும் முறைகளைப் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. 

விரதம் இருப்பவர்கள் தான் மட்டும் பலன்களைக் கோருவது ஒரு வகை. பிறருக்காக வேண்டுவதும், அவர்களுக்கு உதவுவதும் அதனைக் காட்டிலும் உயர்ந்த வகை. எனவே, விரத தினங்களில் ஆத்ம பூஜை, ஆலய வழிபாடு செய்வதோடு,நமது  சக்திக்கு ஏற்பதான தருமங்களை மேற்கொள்வது சிறப்பு என்று அறிகிறோம். 

விரத தினத்தன்று வழக்கமாகச்  செய்யும் எல்லாச் செயல்களையும் முடிந்த அளவிலாவது குறைத்துக் கொள்ள வேண்டும். பொய் பேசுவது, பொறாமைப் படுவது, கோபப்படுவது , நாள் முழுவதும் கிடைத்ததை எல்லாம் உண்பது போன்றவை இதில் அடங்கும். பெரிய தியாகம் எதுவும் செய்ய முடியாவிட்டாலும், தினசரி நாம் மேற்கொள்ளும் பாதையைச் சிறிதாவது செப்பம் செய்திருக்கிறோம் என்று நமது மன சாட்சி சொல்லும்போது விரதம் மேற்கொண்டதற்கு ஓரளவாவது திருப்தி கிடைத்து விடும். 

சிவபெருமானின் அருள் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் விரதங்களில், சோம வார விரதம், மகா பிரதோஷ விரதம்,கேதார கௌரி விரதம்,மகா சிவராத்திரி விரதம் போன்றவை அதிகமாக  மேற்கொள்ளப் பட்டு வருபவை. அஷ்ட மகா விரதங்களில் ஒன்றான சூல  விரதம் என்பதும் சிறந்த பலன்களைத் தர வல்லது. தை அமாவாசையன்று இவ்விரதம் மேற்கொள்ளப் படுகிறது. அன்றையதினம் விடியற்காலையில் துயில் எழுந்தவுடன் நீராடி, விபூதி ருத்திராக்ஷம் தரித்து, சிவபூஜை செய்து விட்டு, சிவாலயத்திற்குச் சென்று தரிசனம் செய்து, ஏழை-எளியவர்களுக்கு  முடிந்த அளவில் தான தருமங்கள் செய்ய வேண்டும். ஒரு வேளை  மட்டுமே உணவு மேற்கொள்ளுவது சிறப்பு. இவ்வாறு விரதம் மேற்கொள்பவர்கள், பகை , வியாதி ஆகியவை நீங்கப்பெற்று, விரும்பிய பலன்களை எல்லாம் பெறுவர் என்று புராணம் கூறுகிறது. 

சூல மங்கை சிவாலயப் பிராகாரம் 
சூல  விரதத்தன்று , சூல  தேவரால் பூஜிக்கப்பெற்ற பெருமை வாய்ந்த சூல  மங்கைக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ அலங்கார வல்லி சமேத ஸ்ரீ  க்ருத்திவாசேசுவரர்  ஆலயத்தை வழிபாட்டு அங்கு நடைபெறும் ரிஷப வாகனப்  புறப்பாட்டைக் கண்டு களித்துத் தீர்த்தவாரியையும் தரிசிக்கலாம்.  

சூல தேவர் 
சூல  மங்கை என்று தேவாரத்தில் குறிப்பிடப்படும் இத்தலம் , தற்போது சூல மங்கலம் என்று வழங்கப்படுகிறது. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியிலுள்ள ஐயம் பேட்டை என்ற ஊரிலிருந்து சுமார்  2  கி. மீ. தொலைவில் உள்ளது. ஐயம் பேட்டையிலிருந்து ஆட்டோ வசதி இருக்கிறது. மூன்று நிலை ராஜ கோபுர வாயிலுக்கு எதிரில் சூல  தீர்த்தம் அமைந்துள்ளது.கோபுர வாயிலைக் கடந்தால் விசாலமான பிரகாரத்தை அடைகிறோம் நந்தி பலிபீடம் ஆகியவை முன்னால் அமைந்துள்ளன. அடுத்த வாயிலின் அருகில் சூல  தேவர் காட்சி அளிக்கிறார். அவரது சிரத்தின் மீது திரிசூலம் காட்டப்பட்டிருக்கிறது.இருகைகளையும் சேர்த்துக் கோர்த்த வண்ணம் அருட்காட்சி வழங்குகிறார் இவர். பிராகாரத்தில் கணபதி,கந்தன்,கஜலக்ஷ்மி, சண்டிகேசுவரர் ஆகியோரது சன்னதிகள் உள்ளன. சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும் அம்பிகை சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. 

இத்தலத்தில் சூல விரதத்தை அனுஷ்டித்த திருமாலானவர் நோய் நீங்கப்பெற்றும், காலநேமி என்ற அசுரனை வெல்லும் வலிமை பெற்றும், சிவனருள் பெற்றார். பரசுராமரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுக் கார்த்த வீர்யார்ஜுனனை வென்றார். பிரமனும் இங்கு வழிபட்டுத் தனது தீராத வாயிற்று வலி நீங்கப்பெற்றான். சுதன்மன் என்பவன் இவ்விரத மகிமையால், மரணத்தை வென்றான். மேகாங்கன் என்ற மன்னன் கல்வி அறிவில் சிறந்த மக்களைப் பெற்றெடுத்தான். முடிவில் சிவலோகத்தை அடையும் பேறு பெற்றான். 

தை அமாவாசையன்று இங்கு சிறப்பு அபிதேக ஆராதனைகள் சுவாமி அம்பாளுக்கும் சூல  தேவருக்கும் நடைபெறுகின்றன. பிறகு, ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் புறப்பாடு நடைபெறுகிறது. வீதி வலம் வந்த பின்னர் தீர்த்தவாரி நடைபெறுகிறது. வெளியூர் அன்பரின் பெருமுயற்சியாலும் அயராத சிவபக்தியாலும் இவ்விழா  ஏற்பாடு செய்யப்பட்டு வருவது அனைவராலும் போற்றப்பட வேண்டியது ஆகும். இவ்வளவு தூரம் முன்வந்து விழாவினை  நடத்துபவருக்கு உறுதுணையாக இனி வரும் ஆண்டுகளில் உள்ளூர் மக்களும் , இந்து அறநிலையத்துறையும் ஒத்துழைத்து பஞ்ச மூர்த்திகளையும் புறப்பாடு செய்ய வேண்டும் என்பது பல அன்பர்களின் விருப்பமும் வேண்டுகோளும் ஆகும். தஞ்சை,குடந்தை அன்பர்களும் முன்வந்து இவ்விழாவைக் கோலாகலமாக நடைபெறச் செய்யலாம் அல்லவா? 

ஆலய வழிபாடு என்பது ஆண்டுக்கு ஒருமுறை விழா நடத்துவதோடு முடிவது அல்ல. நித்தியபூஜைகளும் வழிபாடுகளும் சிறப்பாகவும் நியமத்தோடும் ஆலயத்தில் நடைபெறச் செய்வது அதை விட முக்கியம். இதில் உள்ளூர் மக்களின் ஆர்வமும், பக்தியும்,ஒத்துழைப்பும் மிகவும் தேவைப்படுகிறது. இது இல்லாமல் போகும் பட்சத்தில் தான் ஒருகால பூஜைக்குத் தள்ளப்படும் அவலநிலை ஏற்படுகிறது. பூஜா காலங்களில் கோயில் பூட்டப்பட்டுக் கிடக்கலாமா என்று கிராம மக்கள் சிந்திக்க வேண்டும். எனவே தகுந்த சிவாச்சாரியார்களைக் கொண்டு தங்கள் கிராமத்தில் ஆலய பூஜைகளைத்  தினந்தோறும் , காலம் தோறும் நடைபெறச் செய்ய வேண்டிய கடமை உள்ளூர் வாசிகளுக்கு நிச்சயம் உண்டு. அதேபோல் வெளியூர் அன்பர்களும் அவகாசம் கிடைக்கும் போதெல்லாம் இது போன்ற கோயில்களுக்குச்         சென்று தங்களாலான உதவிகளைச் செய்ய வேண்டும். அந்த எண்ணம் எல்லோரது மனதிலும் உண்டாக வேண்டும் என்று கிருத்திவாசேசுவரப்  பெருமானைப் பிரார்த்திக்கிறோம். 

Monday, February 13, 2017

கஞ்சனூரில் கயிலைக் காட்சி

ஹரதத்தர் ஆலயம், கஞ்சனூர் 
மகான் ஹரதத்தர் பற்றி நீண்டதொரு வலைப்பதிவைக்  கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியிட்டிருந்தோம். அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டிய அற்புத சரித்திரம் அது. அந்த அவதார புருஷர் கஞ்சனூரில் வாசம் செய்து ,பல நூல்கள் மூலம் சிவபரத்துவத்தை நிலை நாட்டியதைக்   குறிப்பிட்டிருந்தோம். கஞ்சனூரில் அக்னீசுவர சுவாமி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஹரதத்தருக்கென்று ஒரு சிறு ஆலயம் கிழக்கு நோக்கியவாறு உள்ளது. ஒரு பிராகாரமே கொண்ட இவ்வாலயத்தின் கருவறையில் அக்னீசுவரரை நோக்கிக் கைகள் அஞ்சலி செய்தபடி ஹரதத்தர் நின்ற வண்ணம் காட்சி அளிக்கிறார். இங்கு தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 

ஆண்டுதோறும் தை மாத சுக்ல பஞ்சமியில் ஹரதத்தருடைய ஆராதனை, பழங்காலந்தொட்டு விமரிசையாக நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடந்து வந்த இவ்வைபவம் நாளடைவில் ஏக தின உற்சவமாக ஆகியது. அக்னீசுவரர் ஆலயத்திலிருந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு ஆகி , ஹரதத்தர் ஆலய வாயிலுக்கு வந்ததும், ஹரதத்தர் மற்றும் அவரது குடும்பத்தார்களுக்குக் கயிலைக் காட்சி வழங்கி,முக்தி கொடுத்த வரலாற்றின் அடிப்படையில் இது நடத்தப்படும். சமீப காலமாகப் பஞ்ச மூர்த்தி புறப்பாடும் நின்று போய், ஹரதத்தரை மாத்திரம் வீதியில் உள்ள அவரது கோயிலுக்கு எழுந்தருளச் செய்து  உபயதாரர் மூலம் இந்த ஆராதனையை நடத்தி வந்தனர் . இந்த ஆண்டு மீண்டும் பஞ்ச மூர்த்தி புறப்பாடு அதே உபயதாரர் மூலம் நடத்தப்படுவது மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. முன்போலவே, இது மூன்று நாள் விழாவாக நடைபெற அக்னீசுவரப்பெருமான் அருள் துணை நிற்க வேண்டும்.

ஹரதத்தரது ஆலய மகாமண்டபக் கூரையில் அவரது வரலாற்றைச் சித்திரமாக எழுதி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சித்திரம் பற்றிய சிறு குறிப்பும் அதன் கீழ் தரப்பட்டுள்ளது. 

அக்னீசுவர சுவாமி ஆலயத்தில் காலையிலேயே பஞ்ச மூர்த்திகள் அபிஷேகமாகி, அலங்காரம் செய்விக்கப்பெற்று மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.  அதே நேரத்தில், ஹரதத்தர் ஆலயத்தில் சுமார் பத்து மணி அளவில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. மூலவருக்குச் செய்யப்படும் புஷ்பாலங்காரத்தைக்  கண்ட கண்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கண் பெற்ற பயனே அதுதானே! 

கயிலைக் காட்சி 
சுமார் பதினோரு மணி அளவில் அக்னீசுவரப்பெருமானும், கற்பகாம்பிகையும் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளுகின்றனர். ஒரு தனி ரதத்தில் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேதரான சுப்ரமண்யர், சண்டிகேசுவரர் ஆகியோரும் எழுந்தருளுகின்றனர். கூடவே,தனிப் படிச்சட்டத்தில் ஹரதத்தர்,தனது குடும்பத்துடன் எழுந்தருளுகிறார். இம்மூர்த்திகளுக்குக் கோபுர வாசலில் தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சன்னதித்தெருவில் உள்ள ஹரதத்தரது ஆலயத்திற்கு மூர்த்திகள் எழுந்தருளுகின்றனர். ஆலயத்தின் உள்ளே சுவாமிக்கும் ஹரதத்தருக்கும் தீபாராதனை நடைபெற்றவுடன், வாசலில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடத்தப்படுவது கண் கொள்ளாக் காட்சியாகும். இவ்வாறு ஹரதத்தருக்குக் கயிலைக்   காட்சி வழங்கியபின் பஞ்ச மூர்த்திகள் திருவீதிக்குச் சென்று விட்டு ஆலயத்தை அடையும்போது சுமார் ஒரு மணி ஆகிறது.

இதெல்லாம் நடந்ததா, ஹரதத்தர் கயிலைக்குச் சென்றபோது கூடவே வந்த நாயையும் தன்னுடன் கயிலைக்கு அழைத்துச் சென்றார் என்பதை எப்படி நம்புவது என்பவர்களுக்காக இங்கு அன்றைய தினம் நடந்த நிகழ்ச்சியைத் தருகிறோம்.  பஞ்ச மூர்த்திகளையும் சுற்றி மக்கள் கூட்டம் இருந்த அந்த வேளையில், அக்கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த ஒரு வெள்ளை நிற நாய் சுவாமிக்கு நேராக நின்று சுவாமியையே பார்த்துக் கொண்டு இருந்ததை மிகச் சிலரே கண்டு ஆனந்தித்தார்கள். அடுத்த கணம் அந்த நாயைக் காண முடியவில்லை. ( யாரும் அதை விரட்டவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது). இதற்கு மேல் எழுத வார்த்தைகள் வரவில்லை.