Friday, June 20, 2014

திருத்திலதைப்பதி (திலதர்ப்பணபுரி) தல புராணம்

                                                                              ௨

                                    திருத்திலதைப்பதித்  தலபுராணம்

கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னோடு கூவிளம்
செங்கண் நாகம் விரிசடையில் வைத்த விகிர்தன் இடம்
செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்தழகார் மதிமுத்தமே.
                                                         ---திருஞான சம்பந்தர் தேவாரம்

படம்: நன்றி:templesonnet.com

தெய்வப்பொன்னி நதியின் இருகரைகளிலும் சோழ வள நாட்டில் அமைந்துள்ள புண்ணியத்    தலங்கள் பலவற்றுள் , திருத்திலதைப்பதி என்ற சிறந்த சிவஸ்தலம் ஒன்று உள்ளது. ஆதியில் "மந்தாரம்" என்று வழங்கப்பட்ட இத்தலம், திருஞான சம்பந்தரின் திருப்பதிகம் பெற்றது.இச் சிவாலயம், "மதிமுத்தம்" என்று அத்திருப்பதிகத்தில் திரு ஞானசம்பந்தரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனைத் தற்காலத்தில் கோயில்பத்து என்றும் திலதர்ப்பணபுரி என்றும் வழங்குகிறார்கள்.

இருப்பிடம்:  மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்குக் கிழக்கே நாச்சியார்கோயில் செல்லும் பாதை பிரிகிறது. இதில் சிறிது தூரத்தில் மற்றும் ஒருபாதை பிரிந்து, நம்மை சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்திற்கு அழைத்துச் செல்கிறது. கோயிலின் தென்புறம் சந்திர தீர்த்தமும்,வடபுறம் அரசலாறும் உள்ளன.

இப்பழமையான சிவாலயம், ஒரு பிராகாரம் மட்டுமே கொண்டது. நாட்டுக்கோட்டை நகரத்தாரால் திருப்பணி செய்யப்பட்டது. சென்ற ஆண்டு மீண்டும் திருப்பணிகள் செய்விக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் விமரிசையாக  நடந்தேறியது. கோயிலுக்கு அண்மையில் நரமுக விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. மனித முகம் கொண்ட இவர், யானை முகம் கொள்வதற்கு முன்னமே இவ்வாறு தரிசனம் தருவதால் இவரை ஆதி விநாயகர் என்று அழைக்கிறார்கள். சங்கடஹர சதுர்த்தி போன்ற நாட்களில் ஏராளமான அன்பர்கள் வந்து தரிசிக்கிறார்கள்.

சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியது. அம்பிகை தெற்கு நோக்கியவாறு  அழகிய வடிவுடன் காட்சி அளிக்கிறாள்.சுவாமிக்கு முக்தீஸ்வரர், மந்தார வநேச்வரர், ஆகிய பெயர்களும், அம்பிகைக்கு சுவர்ணவல்லி, மலர்க்கொடி ஆகிய பெயர்களும் வழங்கப்படுகின்றன. ராம பிரான் இத்தலத்தில் தனது தந்தையாகிய தசரதருக்குத்  திலதர்ப்பணம் செய்ததால், பிராகாரத்தில்,   அந்த ஐதீகத்தைக் காட்டும் சன்னதி இருப்பதைக்காணலாம். கன்னி மூலையில் உள்ள  கணபதிக்கு அருகிலுள்ள மண்டபத்தில் ராம-லக்ஷ்மணர்கள் மண்டியிட்ட நிலையில் மண்டியிட்டுப் பிண்டம் போடும் நிலையில் உள்ளனர்.இதனை அடுத்து, முருகன், கஜலக்ஷ்மி ஆகியோரது  சன்னதிகள் உள்ளன. தலமரமாகிய மந்தாரை, வடக்குப் பிராகாரத்தில் உள்ளது. எனவே, அமாவாசை தர்ப்பணம் செய்வது இங்கு விசேஷமாகக் கருதப்படுகிறது.

அரிசில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இத்தலத்தின் பிற பெருமைகளைக் காண்போம். முன்னொருகாலத்தில் திருக்கைலாயமலையில் எல்லாத்தேவர்களும் சிவதரிசனம் செய்துகொண்டிருக்கையில், விதிவசத்தால் பிரமதேவன் தனது கவனத்தை ஊர்வசியின்பால் செலுத்தியதால் சிவபெருமானது சாபத்தால் பூமிக்கு  வந்து அதனைப் போக்கிக்கொள்ளத் தவம் செய்யலானார். அவ்வாறு தவம் செய்த இடமே மந்தார வனமாகும்.அங்கிருந்த புற்றினை அகற்ற முயன்றபோது, பொன்மேனியளாக அம்பிகை காட்சி அளித்து அருளினாள். இதனால் பெருமகிழ்ச்சி அடைந்த பிரமன்,  அழகிய ஆலயம் ஒன்றை நிர்மாணித்தான். பிரமனது பக்திக்கு இரங்கிய பரமசிவனும் பார்வதி தேவியோடு ரிஷபவாகனத்தில் காட்சி அளித்தார். பிரமதீத்தத்தில் நீராடி, ரோகிணியன்று இங்கு வந்து தரிசிப்போர் எல்லா நலன்களும் பெற்று , இறுதியில் ஈசனது திருவடிப்பேற்றை அடையவேண்டும் என்று பிரமன் வரம் வேண்ட, இறைவனும் அவ்வாறே கொடுத்து அருளினான் என்று தல புராணம் கூறுகிறது.  

இத்தலம் நான்கு யுகங்களிலும் முறையே, மந்தார வனம் என்றும், ஹரி க்ஷேத்திரம் என்றும், பிரம நாயகம் என்றும் திலதர்ப்பணபுரி என்றும் பெயர் பெற்றது.

வாலகில்லியர்கள் என்ற குறு வடிவம்கொண்டோர்கள் வைகுண்டம் சென்ற போது, அவர்களது வடிவைக்கண்ட லக்ஷ்மியானவர் நகைக்கவே, அவர்கள் கோபமுற்று, வைகுண்டத்திலிருந்து நீங்குவாயாக என்று சபித்தனர். பின்னர் அவர்களது சொற்படி, லக்ஷ்மிதேவி, தனது நாயகனாகிய மகாவிஷ்ணுவுடன் மந்தார  வனத்தை அடைந்து,சக்ர தீர்த்தத்தை உண்டாக்கித் தன்பெயரால் வைகாசிப் பௌர்ணமியன்று சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, நியமப்படி பன்னிரண்டு ஆண்டுகள் பூசித்ததும் ,   முக்தீசப்பெருமானின் திருவருள் பெற்று, வைகுண்டம் திரும்பினர். அம்பிகையும் முன்னொருசமயம் தனது தந்தை தக்ஷன் செய்த யாகத்திற்குச் சென்ற பழி நீங்க மனதார வநேசனைப் பூசித்து, அப்பழி நீங்கப்பெற்றாள் . வடநாட்டரசன் ஒருவன் இங்கு வந்து நாரதர் சொற்படி பிதிர் தர்ப்பணங்களை இங்கு செய்து தேவ வர்மேச லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூசித்து நற்கதி பெற்றான். எனவே இத்தலத்தில் பித்ரு சிரார்த்தம், அடியார்களுக்கும் அந்தணர்களுக்கும் அன்ன தானம்  ஆகிவற்றைச் செய்தால் பெறும் பலன் அளவிடமுடியாதது.

தேவி தீர்த்தம்,  பிரம தீர்த்தம், சக்கர தீர்த்தம்,வசிஷ்ட தீர்த்தம், அரிசிலாறு ஆகியவை இத்தலத்தின் தீர்த்தங்களாக அமைந்துள்ளன.
 
 அருகில் உள்ள கூத்தனூர்  சரஸ்வதி தேவி ஆலயத்தையும்,. அம்பர்,அம்பர் மாகாளம்,  திருவீழிமிழலை ஆகிய பாடல் பெற்ற தலங்களையும் அன்பர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும்.