Sunday, May 18, 2014

கண்டறியாதன கண்டேன்

தமிழகக் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களில்  சித்திரை மாதத்தில்  திருவையாற்றில் நடைபெறும் சப்த ஸ்தான விழாவும் ஒன்றாகும். திருவையாறு உள்ளிட்ட ஏழு தலங்களின் பல்லக்குகள் ஒரு சேர பவனி வந்து காட்சி தரும் அற்புதக் காட்சியை வாழ்நாளில் ஒவ்வொருவரும் அவசியம் தரிசிக்க வேண்டும். ஏழு ஊர் மக்களும் ஒருங்கிணைந்து நடத்தும் வைபவம் இது.  காவிரியின் வறண்ட படுகையில் கொதிக்கும் மணலில் கால்கள் சுடுவதையும் பொருட்படுத்தாமல் ஆற்றைக் கடந்து  பல்லக்குகளைச் சுமந்து வருவார்கள். கரை ஏறும்போது மிகவும் பிரயத்தனப்பட்ட்டால் தான் , பல்லக்கை ஏற்ற முடியும். சுடுமணலில் தென்னை ஓலைகளைப் பரப்பி வைத்திருப்பார்கள். கரை ஏறியவுடன் வீதிகளில் நீரைத் தெளித்தும் ,பல்லக்குத் தூக்கிகளுக்கு நீரும், மோரும் வழங்கியும் ஊர் மக்கள் தொண்டு செய்வார்கள்.

சப்த ஸ்தான விழாவின் பின்னணியை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். சிலாத முனிவருக்குத் தவப்புதல்வனாகத் தோன்றிய அதிகார நந்திகேச்வரருக்குத்  திருமழபாடியில் தோன்றிய சுயசாம்பிகை என்ற பெண்ணைத் திருமணம் செய்துவைக்கத் திருவையாற்றிலிருந்து ஐயாறப்பரும் தர்மசம்வர்தனி அம்பிகையும் பங்குனி மாதம் புனர்பூசத்தன்று திருமழபாடிக்குப்  பல்லக்கில் எழுந்தருளுகிறார்கள். அன்று இரவே, புதுமணத் தம்பதியரோடு கொள்ளிடத்தைக் கடந்து, திருவையாற்றை அடைகிறார்கள்.  
புது மணத் தம்பதியரை அழைத்துக் கொண்டு ,சித்திரை மாதத்தில் பவுர்ணமியை ஒட்டி வரும் விசாகத்தன்று திருவையாற்றை விட்டுக் கண்ணாடிப் பல்லக்கில் புறப்பட்டு, அதைச் சுற்றிலும் உள்ள ஆறு ஊர்களுக்கு எழுந்தருளி அவர்களை ஊர் மக்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதே இவ்விழாவின் அடிப்படை. நோக்கம்.

திருவையாறு பல்லக்கு முதலில் கும்பகோணம் செல்லும் சாலையில்  சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள திருப்பழனத்தை அடைகிறது. இது திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் ஆகியோரின் தேவாரப் பாடல்களைப் பெற்ற தலம். இத்தலத்து இறைவரான ஆபத்சகாயர் , அம்பிகையுடன் பல்லக்கில்; எழுந்தருளி வீதி வலமாகத் திருவையாற்றுப் பல்லக்குடன் , திருவேதிகுடியை அடைகிறார். வேதங்களால் வழிபடப்பெற்ற வேதபுரீஸ்வரரும் தமது பல்லக்கில் மற்ற இரு பல்லக்குகளுடன் சேர்ந்துகொள்கிறார்.

மூன்று பல்லக்குகளும் திருச்சோற்றுத்துறையை அடைகின்றன. மூவர் பாடலும் கொண்ட இத்தலம்  , கண்டியூருக்குக் கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோயிலில் அண்மையில் புதியதாகச் செய்யப்பெற்ற கண்ணாடிப்பல்லக்கில், ஒதனவநேச்வரரும்,அன்னபூரணி தேவியும் எழுந்தருளுகிறார்கள். தலத்தின் பெயருக்கு ஏற்ப அன்னதானம் செய்யப்படுகிறது. ஊரே விழாக்கோலம் பூண்டு விளங்குகிறது.

நான்கு பல்லக்குகளும்  அஷ்ட வீரட்டத்துள் ஒன்றான திருக்கண்டியூரை வந்து அடைகின்றன. அங்கு பிரம்ம சிர  கண்டீஸ்வரர் அம்பாளுடன் பல்லக்கில் எழுந்தருளி, வீதி வலமாகத் திருப்பூந்துருத்தி என்ற பாடல் பெற்ற தலத்தை  அடைகிறார். அப்பர் பெருமான் பல காலம் தங்கி, சிவப்பணி செய்த இத்தலத்திலிருந்து ஆறு பல்லக்குகளும் காவிரிக்கரையில் உள்ள திரு நெய்த்தானத்தை வந்து சேர்கின்றன. தில்லைஸ்தானம் என்று தற்காலத்தில் வழங்கப்படும் இப்பாடல் பெற்ற தலத்தில் ஏழு பல்லக்குகளையும்  கோயிலுக்குள் காணலாம். பாலாம்பிகையும் க்ருதபுரீஸ்வரரும் பல்லக்கில் எழுந்தருளி, ஏனைய ஆறு பல்லக்குகளுடன் திருவையாற்றை நோக்கிப் புறப்படும்போது தீபாராதனை, வாணவேடிக்கைகள் ஆகியன நடைபெறுகின்றன.

ஏழு பல்லக்குகளும் திருவையாற்று வீதிகளில் எழுந்தருளி , ஐயாறப்பரின் திருக்கோயில் வாயிலை அடைந்தவுடன் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் பிற தலங்களில் இருந்து வந்த பல்லக்குகள் தமது ஊருக்குத் திரும்புகின்றன.

கண் பெற்ற பயன் கண்ணாடிப் பல்லக்கைத் தரிசிப்பது தான். அது உண்மை என்பதை இவ்விழாவை நேரில் கண்டு களித்தவர்கள் உணர்வார்கள். ஒரே நேரத்தில் ஏழு தலத்து மூர்த்திகளையும் தக்ஷிண கயிலாயமான திருவையாற்றில் காணும்போது நம் கண்கள் நீர் பனிக்க,  அப்பர் பெருமானின் வாக்கான " கண்டேன் அவர் திருப்பாதம் ; கண்டறியாதன கண்டேன்" என்ற பாடல் வரிகளை இசைத்து,  சிந்திப்பரிய ஐயாறன் அடித்தலத்தை மீண்டும் மீண்டும் தரிசிக்கிறோம். கண்கள் அத்திருவடிகளை விட்டு அகல மறுக்கின்றன. 

1 comment:

  1. கரை ஏறும்போது மிகவும் பிரயத்தனப்பட்ட்டால் தான் , பல்லக்கை ஏற்ற முடியும்.....ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே.....என்ற திரு நாவுக்கரசு சுவாமிகளின் திருத்தாண்டகத்தை நினைவு படுத்தியதற்க்காக உங்கள் வரிகளுக்கு நன்றி..

    ReplyDelete