Thursday, October 28, 2010

துலா காவேரி புராணம்- 2

நதி தேவதைகளிடம் பிரம்ம தேவர் மேலும் கூறுகின்றார்: "காவேரி மகிமையை கேட்டாலோ நினைத்தாலோ பாவங்கள் அகலும். மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவனும் துலா மாதத்தில் கௌரி மாயூரத்தைஅடைந்து காவிரியில் ஸ்நானம் செய்ய வேண்டும் . ஒரு சமயம் , அத்திரியின் மகனாகப் பிறந்த எனக்கும் ஊர்வசிக்கும் காவேரி மகளாகப் பிறந்தாள்அவளைத்தான் காவேர ராஜனுக்கு மகளாகக் கொடுத்தேன். அவளே இப்பொழுது நதியாக வந்துள்ளாள். நீங்கள் துலா ஸ்நானம் செய்து உங்களிடம் படிந்துள்ள பாவங்களை நீங்கப் பெறுவீர்களாக." என்று அருளினார்.

காவேரி ஸ்நானம் செய்து விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த இரு வேதியர்களிடம் பாவங்கள் பல செய்த ஒரு பெண் , பேய் வடிவம் கொண்டு எதிரில் வரவே, அவளுக்கு நல்ல கதி கிடைக்க வேண்டும் என்ற கருணையோடு, அவ்வேதியர் இருவரும், அவளை துலா மாதத்தில் கௌரி மாயூரம் சென்று காவேரி ஸ்நானம் செய்யச் சொன்னார்கள். அவளும் அவ்வாறு செய்யவே, பேய் உருவம் நீங்கியது.

துலாகாவேரி மகிமையைக் கேட்டவாறே உயிர் நீத்த சந்திரகாந்தை என்ற மகா பாபிக்கும் விஷ்ணு லோகம் கிடைத்தது. அவளது கணவனான வேத ராசி என்ற அந்தணன் புண்ணியசாலி. துலா ஸ்நானத்தைத் தவறாது செய்து வருபவன். அதன் பலனாகத் தேவலோகத்துக்கு அழைத்துச்செல்லப் பட்டான். வழியில், யம கிங்கரர்கள், பாபிகளைக் கட்டி இழுத்துக்கொண்டு போவதையும் கண்டான். அவர்கள் கொடிய பாவங்களைச் செய்தவர்கள். அருணோதய காலத்தில் நித்திரை செய்தவர்கள். கர்மானுஷ்டானங்களைச் செய்யாதவர்கள். பசியுடன் வந்தோருக்கு அன்னம் அளிக்காதவர்கள். செய்யக்கூடாதவைகளை செய்தவர்கள். பித்ரு தர்ப்பணம் செய்யாதவர்கள். தெய்வ கதைகளைக் காது கொடுத்துக் கேட்காதவர்கள். புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்யாதவர்கள். ஸ்தல யாத்திரையும் தான தர்மங்களும் செய்யாதவர்கள். பகலில் நித்திரை செய்தவர்கள். என்னைவிட மேலானவன் யாரும் இல்லை என்று பெரியவர்களை அவமதித்தவர்கள். சத்தியமே பேசாதவர்கள். சிவ பூஜை,விஷ்ணு பூஜை செய்யாதவர்கள். இவர்கள் நரகத்துக்குச் செல்வதைக் கண்டு ,வேத ராசிக்கு அவர்கள் மீது கருணை மேலிட்டது. " நரகத்தை அனுபவிக்கும் உங்களுக்கு எனது ஒரு நாள் துலா ஸ்நான பலனை அளிக்கிறேன் " என்றான். அடுத்த கணமே, நரகம்,சுவர்க்கமாக மாறியது. இதனைக் கண்ட வேத ராசி, பகவன் நாமாக்களைக் கூறிக்கொண்டே ஆனந்தக் கூத்தாடினான். இதனால் கோபத்துடன் வந்த யமனால் வேத ராசியை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், அப்பொழுது அவன் விஷ்ணு கவசத்தைப் பாராயணம் செய்து கொண்டிருந்தான். யமனும்,அவனை வணங்கிவிட்டுத் தனது இருப்பிடத்தை அடைந்தான்.

பாரத்வாஜ மகரிஷியின் அருளால் அவரது ஆசிரமத்தில் இருந்த கிளியும் பூனையும் துலா ஸ்நானம் செய்து,சுவர்க்கத்தை அடைந்தன. அகத்திய முனிவரின் சாபத்தால் பாம்பாகிய நகுஷன் என்பவன், கிருஷ்ணனின் அருளால் துலா காவேரிக்கு சென்று ஸ்நானம் செய்து பழைய உருவம் பெற்றான். வாங்கிய கடனைத் திருப்பித்தராத பாவத்தால் குதிரையாகைப்பிறந்து, வசிஷ்டரின் உரைப்படி, கௌரி மாயூரத்தை அடைந்து, துலா ஸ்நானம் செய்து தேவலோகம் பெற்றது. முற்பிறவியில் கொலை செய்த பாவத்தினால் குள்ள நரியாகவும் , முனிவர்களின் ஆசிரமத்திலிருந்து பழங்களைத் திருடித் தின்றதால் குரங்காகவும் மாறியவர்களைக் கண்டு , காசிப முனிவர் அவர்களைத் துலா காவேரியில் ஸ்நானம் செய்யும்படி அருளினார். அதன்படி செய்ததால், அவை, தேவ உருவம் பெற்றன. சிங்கத்துவஜன் என்ற வேடர் குல அரசன், ஓடி வரும் வழியில், பாரத்வாஜ முனிவர் மீது அவனது கால் படவே, அவனைக் கழுதையாக மாறும் படி அம்முனிவர் சாபமிட்டார். அதன்படி கழுதையாகத் திரிந்த அவனுக்கு எதிரில் பகவான் தோன்றி , காவேரி ஸ்நானம் செய்து சாபம் நீங்கப் பெறுவாய் என்று அருளினார். ஸ்ரீ ராமனிடம், வசிஷ்டர், சுதர்சனன் என்ற அந்தணன் , பாபியாக இருந்தபோதிலும் விதிவசத்தால் துலா காவேரி ஸ்நானம் செய்து, கௌரி மாயூர நாதரையும், அபயாம்பிகையையும் தரிசித்து, இறுதியில் சிவலோகம் பெற்றதையும், தனது தவத்தைக் கெடுத்ததால் விஸ்வாமித்திரர் ரம்பையை கல்லாக்கியதும், பிறகு அக்கல்லை வியாழ பகவான் காவேரியில் இட்டவுடன் பழைய உருவம் பெற்றதையும் விவரமாகச் சொன்னார். அதைகேட்ட ராமனும் , கௌரி மாயூரத்தை அடைந்து, பல தான தர்மங்களைச் செய்து, மாயூரனாதரையும், மயிலம்பிகையையும் வணங்கிவிட்டு, அயோத்திக்குத் திரும்பினார்.

( காவேரி மகிமை தொடரும் )

No comments:

Post a Comment